பொய்கை அரசூர்
தோழர். மனோகரனுக்கு வீரவணக்கம்.


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்டாரம், பொய்கை அரசூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது-44) மக்கள் அதிகாரம் அமைப்பில் வட்டார ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினராக உள்ளார். குடும்பத்துடன் அரசியலுக்கு வர வேண்டும் என்ற விவசாயிகள் விடுதலை முன்னணியின் கொள்கைக்கு இணங்க, தோழரது குடும்பமும் 80 களில் இருந்து அமைப்புக்கு அறிமுகமாகி அமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் இணைந்து தோழர். மனோகரனும் சிறு வயது முதலே அமைப்பு வேலைகளில் இறங்கி பணியாற்றி வந்தார்.

திருவெண்ணை நல்லூர் வட்டாரத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போராடிய தோழர். காரப்பட்டு ரெங்கநாதனின் அயராத உழைப்பினால் வட்டாரம் முழுவதும் தாழ்த்தப்பட்ட கூலி, ஏழை விவசாயிகள் பண்னை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் போர்க்குணத்தை பெற்றனர். இந்த வட்டாரத்தில் வண்டிபாளையம் சுப்பிரமணியன், இருவேல்பட்டு சுப்பிரமணிய ரெட்டியார், பொய்கை அரசூர் ராமலிங்க நாயுடு, தனியாலம்பட்டு ஜனார்தன ரெட்டி போன்ற நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களின் சாதி ஆதிக்கமும், பண்ணை ஆதிக்கமும் கொடிகட்டி பறந்த காலத்தில் அவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக தோழர் ரெங்கநாதன் போராடிய போது, தோழர் மனோகரனின் குடும்பமும் உடனிருந்து செயல்பட்டது.

பொய்கை அரசூர் ராமலிங்க நாயுடு ஊர் முழுவதும் உள்ள நிலங்களை வேலி போட்டு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது நிலங்களில் வேலை செய்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க இருப்பிட பற்றக்குறை ஏற்பட்ட போதிலும் கூட ஒரு சென்ட் நிலம் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தி வந்தார். வக்கிரமாக அதில் தேக்கு, சவுக்கு போன்ற பணப்பயிர்களை போட்டு அரசுக்கு கணக்கு காட்டினார். சட்டத்தில் இருந்த ஒட்டைகளையும், வாய்ப்புகளையும் கேடாக பயன்படுத்தி வந்தார்.

இந்த கொடுமையை எதிர்த்து விவிமு போராடிய போது தோழர் மனோகரன் குடும்பமும், தோழரும் முன்னணியில் நின்று போராடினர். உள்ளூரிலேயே கங்காணிகளின் துணையுடன் வீடுகள் கொளுத்தப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டன. மக்களின் சிறிதளவிலான உடமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன, நாயுடுவின் அனைத்து அடக்குமுறைகளிலும் அஞ்சாமல் நின்ற தோழர் மனோகரன், பிற தோழர்களுடன் இணைந்து முன்னணி போராளியாக களம் கண்டு வந்தார்.   

1995-96 காலகட்டத்தில் தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை எதிர்த்து இயக்கம் எடுத்த போது, விழுப்புரம் மாவட்டத்தில் மின்னல் ராஜா, புஷ்ப ராஜ் போன்ற திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக போராடினார். அப்போது கடுமையாக தாக்கப்பட்ட போதும் பின் வாங்காமல் உறுதியாக நின்றார். விவிமு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து நடத்திய பல்வேறு சமூக அநீதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடியுள்ளார்.  

அதுபோல சமச்சீர் கல்வி நிறைவேற்றக் கோரிய போராட்டத்திலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும், தில்லையில் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்க வேண்டும் போன்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்களிலும் கலந்துக் கொண்டார். விவிமு மையமாக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துக் கொண்டு சிறை சென்றுள்ளார்.

2015 முதல் மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளராக தன்னை இணைத்துக் கொண்டு, மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த மூடு டாஸ்மாக்கை போராட்டத்திலும், மோடி அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக பல போராட்டங்களிலும் முன்னின்று போராடியுள்ளார். சொந்த வாழ்க்கையிலும் கிராமப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக நின்று புரட்சிகர திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினார். இருப்பினும் கிராமத்தில் நிலவும் பிற்போக்கு பழக்க வழக்கங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சில சடங்குகளில் சமரசம் செய்துக் கொண்டார்.

தற்போது தடுப்பூசி போடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கூட பகுதி மக்கள் வீடு கட்டுவதற்கு ஆற்றுமணல் எடுக்கும் மக்களின் உரிமைக்கு ஆதரவாக, போலீசை எதிர்த்து நின்று போராடி மக்களின் உரிமையை மீட்டுக் கொடுத்தார். இவ்வாறு பொது வாழ்வில் செயல்படும் போது தன்னை முன்னிறுத்திக் கொள்ள வாய்ப்புகள் சில கிடைத்தும், அதனை சொந்த நலனுக்கு பயன்படுத்தாமல் அமைப்புக் கண்ணோட்டத்தை உயர்த்தி பிடித்து இறுதிவரை சிறந்த தோழராகவே வாழ்ந்தார்.  

        தோழர். மனோகரன்  இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 12.09.21-ஞாயிறு அன்று போட்டுக்கொண்டார். ஊசி போட்டுக்கொண்ட மறுநாளில் இருந்தே கை, கால்கள் லேசாக மரத்துப் போவதும் அடுத்த அடுத்த நாட்கள் வலிக்கவும் தொடங்கியுள்ளது. .தொடர் வலியால் தனியார் மருத்துவரிடம் சென்று பிரச்சனையை சொல்லி சிகிச்சை பெற்றார். ஆனால் அதில் முன்னேற்றம் இல்லை.

கைகால் வலி, உடல்வலி அதிகரித்து, அவருக்கு நடப்பதற்கே  சிரமம் ஏற்பட்டதால் விழுப்புரம் முண்டியம்பக்கம் அரசு மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவமனைக்கு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். நடக்கவே முடியாத அளவிற்கு உடல்நிலை பாதிக்கவே உயர்சிகிச்சைக்கு சென்னை ராஜிவ்காந்தி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு கை, இரண்டு கால் உள்ளிட்ட மொத்த உடலும் செயல் இழந்த விட்டது. மருத்துவர்கள் அவருக்கு Gbs (Guillain-barre syndrome) என்ற நோய் தாக்கியுள்ளதாக கூறி அதற்கான சிகிச்சை முறைகளை தொடர்ந்தனர். கொரானா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பிறகே உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு முற்றிலும் நடக்க முடியாத அளவிற்கு அனைத்து உடல் உறுப்புகளும் செயல் இழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி 21-10-2021 அன்று மரணமடைந்தார்.

இளம் வயதில் தோழரின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பகுதி தோழர்களுக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் பெரும் இழப்பாகும். திருவெண்னைநல்லூர் வட்டார மக்களின் நினைவில் அழியாத இடம் பெற்ற தோழருக்கு பெரும் துயருடன் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

                                                                                        மக்கள் அதிகாரம்,
                                விழுப்புரம் மண்டலம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here