‘இஸ்ரேல்’ – பாலஸ்தீனம் இரண்டின் வரலாற்று முரண் மற்றும் மோதல் பற்றி சில அறிமுக வரிகளை கட்டுரை முடியுமிடத்தில் உள்ள குறிப்பைப் படித்துத் தெரிந்து கொள்வது உதவியாக இருக்கும்.

000

பீட்டர் பெயின்ஹார்ட், இதழியல் மற்றும் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் நியூயார்க் டைம்ஸ் ஏட்டில் இந்தக் கட்டுரையை எழுதியபோது கொடுத்த தலைப்பு _ “யூத இனவாத அரசில் ஜனநாயகத்தைக் காப்பாற்றமுடியாது! ”

சமீபத்திய காலகட்டத்தில் ‘இஸ்ரேலி’ல் இதுவரை கண்டிராத அளவு பெருங்குழப்பமும் கலவரமும் பரவிவருகிறது. இதைஒட்டி பேராசிரியர் இப்படி எழுதுகிறார். ‘இஸ்ரேலி’ல் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிரதம மந்திரி நெதன்யாஹூவின் புதிய அரசாங்கம்  ” ‘இஸ்ரேலி’ன் யூத அடையாளத்தையும், ஜனநாயக அரசையும் காப்பாற்றுவதற்குப் பதிலாக சீர்குலைத்துவிட்டது ” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

( நெதன்யாஹூ யூத வலதுசாரி வெறியர் என்பது உலகறிந்த செய்தி. அவரையே ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் பிரதமரின் கறார் இப்போது உள்ளது போதாது, கறாரான வலது அரசியலே இப்போது தேவை என்பதை அவர்கள் கோருகிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். )

சமீபநாட்களாக முன்னாள் பிரதமர்கள் ‘யேர் லாபிடு’ம் ‘நப்தாலி பென்னட்டு’ம் மற்றும் இவர்களோடு சேர்ந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ‘பென்னி காண்ட்ஸூ’ம் ” ஜனநாயகத்தை எப்படியாவது காப்பாற்றியே தீருவது ” என்ற பதட்டத்தை, அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால் பேராசிரியர் பீட்டர் பெயின்ஹார்ட் இவற்றைப்பற்றியெல்லாம் மொத்தமாக வேறுகருத்தைச் சொல்கிறார். உலகின் மற்ற பகுதிகளில் ” மக்கள் நலத் திட்டங்கள்” என்று போலியாக முன்தள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவை மக்களுக்கல்ல, ஆளுகின்ற வர்க்கங்களுக்கானதே என அவற்றை அம்பலப்படுத்திப் பல ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன ;

‘ இஸ்ரேல் ‘ ரகம் வேறுமாதிரி என்கிறார் பேராசிரியர்.

நெதன்யாஹூவின் எதேச்சதிகார நடவடிக்கைகளால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டுவரும் மக்கள் இவர்கள் அல்ல ; இந்த ஆர்ப்பாட்டங்களில் மிகச் சொற்பமான பாலஸ்தீனியர்களே கலந்துகொண்டார்கள் என்பது முக்கிய அறிகுறி.

நெதன்யாஹுவின் வலதுசாரிக் கூட்டணி ஆட்சிஅதிகாரத்துக்கு வருவதற்கு முன்னால் ‘இஸ்ரேலி’ ல் இருந்தது அப்படி ஒன்றும் ‘தாராளவாத ஜனநாயகம்’ கூட அல்ல; அதைத் திரும்பக் கொண்டுவா என்பதே “நெதன்யாவுக்கெதிரான இயக்கத்தின் ” கோரிக்கை.

தற்போதைய குழப்பமும், கலவரமும் எழுவதற்குக் காரணமான இயக்கத்தின் கோரிக்கை ஒன்றே ஒன்று ; அது ‘யூதர்களுக்குப் பலன் தரக்கூடிய தாராளவாத ஜனநாயகம் ‘ என்பதே. தாராளவாத யூத தேசியவெறி ஜியோனிசத்தை அவர்கள் கேட்கிறார்கள். நெதன்யாஹூ ஆட்சியே இந்தக் கதி என்றால் அதற்கு முந்தைய தாராளவாத பிராண்ட் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்கிறார் பேராசிரியர்.

அத்தகைய லாபிடின் நாடாளுமன்றத்தில் ( அதற்கு நெஸ்ஸட் என்று பெயர். ) ” பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒரு பழைய சட்டத்தைத் தொடரவேண்டும் என்று விவாதித்தார்கள்” அந்தச் சட்டம் என்ன சொன்னது ?

” மேற்குக்கரை மற்றும் காஸா மலைத்தொடரில் வாழ்ந்துவரும் பாலஸ்தீனியர்கள், பாலஸ்தீனியக் குடிமக்கள் என்ற தகுதியோடு, இஸ்ரேலியர் கைப்பற்றியுள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் குடும்பமாக வாழக்கூடாது ” என்பதே அந்த உரிமைபறிப்புச் சட்டம். அதைத் தொடரவேண்டும் என நெஸ்ஸட் முழுவதும் ஒரேகுரலில் கூச்சல் போட்டுக் கலவரம் செய்தபோது லாபிட் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் ” பிரச்சினை செய்யவேண்டாம் ” என மன்றாடிக் கெஞ்சினார். இந்த லாபிடின் கோழைத்தனத்தையே நெதன்யாஹூவும் நடைமுறைப்படுத்தி நாடகமாடவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை.

ஆக, மேற்குக்கரை மற்றும் காஸாமலைத்தொடரில் வாழ்ந்துவரும் அனைத்துப் பாலஸ்தீனியர்களுக்குமே ‘இஸ்ரேல் என்பது ஜனநாயகம் அல்ல ‘ என்பதே உண்மை நிலவரம். இதை நெத்திப்பொட்டில் அடித்ததுபோலப் போட்டு உடைக்கிறார் பேராசிரியர். ஏன் ? அத்துமீறிக் கைப்பற்றப்பட்ட எல்லைப் பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் ஓட்டுப் போடவே முடியாது.

பேராசிரியர் வாதத்தின்படி, காசா மலைத்தொடரே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைதான். அங்கு பாலஸ்தீன ஆட்சியாளர் வெறும் துணை ஒப்பந்தக்காரர் மட்டுமே, அது முழு அரசுகூட அல்ல. தங்கள் வாழ்க்கையை உள்ளும் புறமும் முழுதுமாக ஆக்கிரமித்துள்ள இடம் இது என்று சொல்லும் பேராசிரியர், அரசியல் ஒப்பீட்டுக்காக 2018-ல் நடந்த ஒரு சம்பவத்தை ஆய்வு செய்து சொல்கிறார். பேராசிரியர் பிறப்பால் யூதர். அவர் இந்தப் பிராந்தியத்திலேயே வாழவில்லை, ஆனாலும் யூதர் என்ற ஒரே காரணத்துக்காக ‘இசுரேலின் குடிமகன்’ என்ற சலுகை தனக்கு உண்டு என்று சுயபரிசீலனையோடுதான் பார்க்கிறார்; அதனாலேயே இனவெறிக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்துக்காக முன்னணியில் நிற்கிறார். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

2018- ல் அப்படி என்ன நடந்தது ? நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனிய உறுப்பினர்கள் ஒரு சட்டத்தை முன்மொழிந்தார்கள். “அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை” என்பது அந்த முன்மொழிவு. அன்றைய அவைத்தலைவர் விவாதத்துக்கு அனுமதி மறுத்தார். “அப்படி அனுமதித்தால் அரசின் அடித்தளமே ஆடிப்போய்விடும்” என்றுகூட எச்சரித்தார்.

ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம் என்று விவாதித்தாலே ஆபத்து என்றது நாடாளுமன்றம் ; அதாவது, பாலஸ்தீனியர்களுக்கு, ‘இஸ்ரேலியக்குடிமக்கள் என்ற அடையாளம் பெற்ற ஒருசில அதிருஷ்டம் அடைந்தவர்கள் ‘ கூட சமஉரிமை கோரமுடியாது. ஏன் ? நாடு முழுவதும் யூதர்களுக்கு மட்டுமானதாம். இதை எப்போது யார் தீர்மானித்தார்களாம்?. நெதன்யாஹூ ஆட்சிக்கு வருவதற்கு ரொம்ப காலம் முன்பே அப்படித்தானாம். பேராசிரியரின் கட்டுரை முத்தாய்ப்பாக என்ன சொல்லவருகிறது ? ” தாராளவாத யூதமதவெறியர்களான ஜியோனிஸ்டுகள் காப்பாற்ற விரும்பியதெல்லாம் இந்த ‘ துடிப்பான ஜனநாயகத் ‘தைத்தான்.

குடியிருப்புச் சோதனைகளின்போது ஜனநாயகம் :

வாய்வீச்சு ஜனநாயகம் நிலவுகிற யூதர்களின் இந்த வலது ஆதிக்க அரசின்கீழ் நடந்த சம்பவங்கள் இதோ:

‘ டெல் அவிவ் ‘, ‘ அல் – குட்ஸ் ‘ என்ற இரு இடங்களில் போராட்டம் நடந்தது. இஸ்ரேலில் ஆக்கிரமிப்புப் பாதுகாப்பு காபினெட் அங்கீகாரம் இல்லாமல் ஒன்பது இஸ்ரேலி முகாம்களைச் ‘சட்டபூர்வமாக்க’ முயற்சி நடந்தது. சுமார் 10,000 ‘குடியேற்ற வீடுகள்’ அமைக்க ஊக்குவிக்கப்பட்டது.

( doubt இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் தெரியாது என்று சொல்லப்பட்டது. ) ஐ.நா பாதுகாப்புக் கழகம் ஒரு தீர்மானத்தை முன்மொழியத் திட்டமிட்டது. அதன் சாரம், ‘இஸ்ரேல்’ உடனடியாக முழுமையாக ஆக்கிரமிப்புப் பாலஸ்தீன எல்லையில் குடியேற்றங்கள் அமைப்பதை உடனே நிறுத்தவேண்டும்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத் தகவல்படி, 1967 முதலாகவே பாலஸ்தீன எல்லைக்குள்ளேயே ‘இஸ்ரேலியக்’ குடியேற்றங்கள் அமைக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. அதில் கிழக்கு ஜெருசலேமும் உள்ளடங்கும். சர்வதேசச் சட்டப்படி இவை எந்தவிதத்திலும் செல்லாது.

 

ஆக்கிரமிப்பு இஸ்ரேலியப் படைகள் இனியும் நிலத்தைக் கைப்பற்ற முயற்சித்தாலும் அதற்கும் சேர்த்து உத்தேசத் தீர்மானம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 20 அன்று நிலைமையை நன்கு அறிந்த பல தூதரகப் பிரமுகர்கள் மூலம் அறியவந்துள்ள செய்தி இதுதான் — பாலஸ்தீனியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முன்மொழிந்துள்ள தீர்மானங்களைத் தாமதப்படுத்துவதில் , அமெரிக்கா, முயற்சி செய்து வெற்றியும் அடைந்துள்ளது. ஆம்னஸ்டி அமைப்பு ( பன்னாட்டு மன்னிப்பு அவை ) செமிட்டிசத்துக்கு எதிராகத் திட்டமிட்டுச் சதி செய்வதாக அறிவித்தது.

மேலும், ‘இஸ்ரேல்’ தன் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் பாலஸ்தீனியர் மீது ஒடுக்குமுறை – ஆதிக்கக் கட்டமைப்பையே திணித்துள்ளது ; அதாவது, “இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய எல்லைகளிலும் ( OPT ), யூத இன இஸ்ரேலியர்களுக்காகவே, பாலஸ்தீனிய அகதிகளுக்கு எதிராகவே செயல்படுகிறது” என்று வெளிப்படையாகவே ஆம்னஸ்டி அறிவித்தது ; குறிப்பாக, இது சர்வதேசச் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ள ‘ இனவெறிச் ‘ செயல்பாடு என்றும் குற்றஞ்சாட்டியது.

“பாலஸ்தீனியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் கொடுமையான கட்டமைப்பைத் திணிப்பதற்காகச் சட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகள் — இவற்றின் மூலம் அவர்களைப் பிராந்திய ரீதியாக உடைத்தார்கள் ; அரசியல் ரீதியாகச் சிதறடித்தார்கள் ; அன்றாடம் வறுமையில் தள்ளினார்கள்; அவர்களை எப்போதும் அச்சத்திலும் பாதுகாப்பற்ற உணர்விலும் வைத்தார்கள். இப்படிப்பட்ட இஸ்ரேல் ஜனநாயகமே அல்ல ” — இதை ” அயல் நாட்டுக் கொள்கை ” என்ற ஏட்டுக்கு இஸ்ரேல் அயலுறவுத்துறை அமைச்சர் ஆலன் லீல் வெளிப்படையாகச் சொன்னார். அவர் துறையின் முன்னாள் இயக்குநர். இஸ்ரேல் நிர்வாகம் பாலஸ்தீனியர்களை சமூகத்தின் ஓரத்துக்கே தள்ளிவிட்டது என்று விவாதங்கள் எழுந்தபோது மேலே சொன்ன பேட்டி கொடுக்க அவர் அஞ்சவில்லை.

உரிமைகள் எதுவுமே இல்லாத ஜனநாயகம்

இதையும் படியுங்கள்:

கடந்த பிப்ரவரி 16 அன்று ” பாலஸ்தீனச் சிறைவாசிகளின் தகவல் மையம் ” — ஐந்து சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள்மீது சிறைநிர்வாகமானது மேலும் கடுமையான தண்டனைகளைக் கூட்டிவிட்டதுஎன்பதை உறுதிப்படுத்தியது ;மெகிட்டோ, கில்போவா, நாஃபா, ரேமோன், நெகேவ் ஆகிய ஐந்து சிறைகளே அவை. சிறைவாசிகளுக்கு அன்றாடம் கொடுமையான சித்திரவதை வாழ்க்கை.

” அல் மயாதீன் ” ஆங்கிலப் பதிப்பு ( 1.2.2023 இரவு ) பின்வரும் தகவலை உறுதிப்படுத்தியது : ” பாலஸ்தீனியப் பெண் சிறைவாசிகள் ஒலிவடிவிலான செய்தி ஒன்றை சிறைக் கம்பிகள் தாண்டி பொதுமக்களிடம் சேரும்படி அனுப்பியுள்ளார்கள். சிறை இருக்கும் பகுதி : இஸ்ரேலிலேயே உள்ள”தாமோன்”என்றஇடம் . ” பாலஸ்தீனிய மக்கள்உறுதியாக நின்று தங்கள் உரிமைக்குப் போராடவேண்டும் ” என்று செய்தி கோரியது. இஸ்ரேல் படைகள் வன்முறை வெறிகொண்டு பாலஸ்தீனியரைத் தாக்கின, சிறைவாசிகளைப் பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப் படுத்தின. இதைத் தொடர்ந்துதான் செய்தி அறிவிப்பு வந்தது.”

இஸ்ரேல் ஊடகம்— தீவிரவாத இசுலாமிய போலீஸ் அமைச்சர் இதாமர் பென் குவிர் எடுத்த முடிவுகளை — விவாதித்தது. அந்த முடிவு மிகமிக அற்பமானது , அதேநேரம் கொடூரமானது.

” சிறைவாசிகளுக்கு குளியல் நேரம் குறைக்கப்பட்டு 4 நிமிடம் மட்டுமே அளிக்கப்படும்,” என்பதே புதிய முடிவு. சிறைவாசிகளின் மிச்சமீதிச் சுதந்திரங்களிலும் குறுக்கிட ஆசைப்படுகிற அளவு வக்கிரம்.

பிப்ரவரி 4 அன்று பாலஸ்தீனியச் சிறைவாசிகள்,

” இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள சிறைகளில் இதாமர் பென் குவிர் நடத்திவரும் ஒடுக்குமுறையை எதிர்த்து , சிறைவாசிகள் சார்பாக , பாலஸ்தீனக் குடிமக்கள் பெரும் கலகம் செய்யவேண்டும் ” என்று கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, கோபத்தீ வெடித்துப் பரவியது ; ரம்ஜானை ஒட்டி முதலில் உண்ணாவிரதப் போராட்டம், பிறகு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும்வரை போராட்டம் பலவடிவங்களில் தொடர்ந்து நீடிக்கும் என்று முடிவை அறிவித்தனர்.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்கிறது. அதனை உலக மக்கள் ஆதரிப்பது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பின் அங்கமாகும்.

ஆதாரம் : நியூயார்க் டைம்ஸ்,
22 பிப்ரவரி, 2023.

ஆக்கம் : இராசவேல்

குறிப்பு : 

ஏடறிந்த வரலாற்றுக்கு முன்னால் இருந்த கட்டம் பற்றி பல குழப்பங்கள்உண்டு. பாலஸ்தீனம் — இஸ்ரேல் சிக்கலிலும் இது உண்மை. யூத — ரோமானிய மோதல்களுக்குப் பிறகு அப்பிராந்தியத்திலிருந்து அநேக யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதி ‘ரோமானியப் பிராந்திய சிரியா பாலஸ்தீனா’ என்றே அழைக்கப்பட்டது. பிறகு யூதர்கள் சிறுபான்மையாகவே நீடித்தனர். பிறகு அதே பகுதி இசுலாமிய ஆதிக்கத்தின்கீழ் 1200 ஆண்டுகள் நீடித்த போதும் யூதர்கள் சிறுபான்மைதான் . பிரதான குடிமக்கள் அராபியரே.

யூதவெறுப்பு ஐரோப்பாவிலும் பற்றிஎரிந்தபோது, எதிர்வினையாக ஜியோனிச யூதவெறி கிளர்ந்தது. யூதர்கள் துளித்துளியாக இங்கே சேர ஆரம்பித்தார்கள். முதல் உலகப் போருக்குப் பிறகு இதே நிலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. ” தற்காலிக பாலஸ்தீனம் ” என்று பிரிட்டிஷ் ஆவணத்தில் அழைக்கப்பட்டதே தவிர அங்கு வாழ்ந்த அராபியர்களும் தங்களைப் ‘ பாலஸ்தீனியர்களாக ‘ப் பார்க்கவேயில்லை. சரியாகச் சொன்னால் தங்களைப் ‘ பெரிய சிரியா ‘ என்ற நிலப்பரப்பில் வாழ்ந்த அராபியர்களாகவே கருதினர்.

நவம்பர் 1947 -ல் ஐ.நா இந்த விவகாரத்தில் தலையிட்டு நிலத்தைக் கூறுபோட்டது. ஒன்று, சுதந்திர அராபிய அரசு ; மற்றொன்று, யூத அரசு என்று அழைத்தது. இந்தத் தீர்வை பாலஸ்தீனியர்கள் ஏற்கவில்லை. தனி ராணுவப்படை கொண்டு மோதினர். அமெரிக்காவின் வெளிப்படையான ஆதரவோடு ஜியோனிச யூத வெறி யிஷூவ் கும்பல் 1948 -ல் ‘ இஸ்ரேல் ‘ அரசை அறிவித்தது.78% பாலஸ்தீனியர்கள் அழிக்கப்பட்டனர். 7,00,000பேர் வீடுவாசலற்று வீதிக்கு வந்தனர். மோதலை ‘ சுதந்திரப்போர் ‘ என்று அழைத்தது ‘ இஸ்ரேல் ‘ ; பாலஸ்தீனியர் ‘ அல் – நக்ரா ‘ ( பேரழிவு ) என்றனர். சண்டை தொடர்ந்தது. 1988 – ல் பாலஸ்தீன தேசியக்குழு ( PNC ) சுதந்திரத்தை அறிவித்தது. ஐ.நா இதை அங்கீகரித்தாலும், சபையில் பார்வையாளராக மட்டுமே இடம் கொடுத்தது.

‘ இஸ்ரேல் ‘ அரசு , நெதன்யாஹூ பிரதமராக இருந்த காலத்தில்தான் மேற்குக்கரை, காஸா மலைப்பகுதிகளில் சட்ட விரோதக் குடியேற்றங்களை உண்டாக்கியது ; தவிர,

‘ இஸ்ரேலுக்கு ‘ உள்ளே குடிமக்களாக வாழும் பாலஸ்தீன மக்களுக்கும் உரிமைகளை மறுக்கத் தொடங்கியது.

தற்போது நடக்கும் பாலஸ்தீன உரிமைப் போராட்டங்கள் அனைத்துமே ‘ இஸ்ரேல் ‘ அரசால் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. இதையெல்லாம் மனதில் வைத்தே, வரலாற்றுப் பூர்வமாகவே, மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் கும்பல் என உணர்த்துவதற்காகவே, அந்தப் பாசிச அரசை தன் கட்டுரை முழுவதும் ‘ இஸ்ரேல் ‘ அரசு என்று ஒற்றை மேற்கோள் போட்டே எழுதுகிறார் கட்டுரை ஆசிரியர் பீட்டர் பெயின்ஹார்ட்.

குறைந்த அளவு இந்த அரசியல் வரலாற்றுப் பின்னணியை நாம் மனத்தில்கொண்டு படிக்கும்போதுதான் பாலஸ்தீனியர்களுக்கு ஏன் இந்த அளவு கோபம்? என்பது புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here