“பிபிசி ஆவணப்பட தடை, ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலமாகி நாறும் பாசிச மோடி! கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்! ஜனநாயக கூட்ட அரசை நிறுவுவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கின்ற மக்களை ஒன்று திரட்டுகின்ற வகையில் மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் தோழர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தில் நடத்தப்பட்ட பேரணி- பொதுக்கூட்டங்கள் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னோட்டமாக நிகழ்ந்தது.

கார்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசை நிறுவுவதற்கான பரந்த அளவிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டுவதற்கு நாடு முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு இணையாகவே விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தை ஒன்று திரட்டும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டுகின்ற வேலையையும் புரட்சிகர அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

இந்தக் கண்ணோட்டத்தில் தமிழகத்தில் நக்சல்பாரி அரசியலை முன்வைத்து செயல்படும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இரண்டும் இணைந்து ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக போராட முன் வந்துள்ள தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பெரியாரிய அமைப்புகளை ஒன்றிணைத்து காவி பயங்கரவாதிகளின் கூடாரமான கோவை, சென்னை கும்மிடிப்பூண்டி, புதுச்சேரி ஆகிய மூன்று மையங்களில் பேரணி- பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

கோவை

கோவையில் ஆர்எஸ்எஸ் – இந்து மதவெறியர்கள் பேரணி பொதுக்கூட்டத்தில் கலகம் செய்வோம் என்று மிரட்டியதால் பீதி அடைந்த போலீஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது. தொடர்ச்சியாக போலீசுடன் சட்ட ரீதியாக போராடி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி பெற்று நடத்தப்பட்டது.

கோவையில் நிமிர் பறை இசை குழுவின் நிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக்கூட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகள் இணைந்து நடத்தியது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், புரட்சிகர மாணவர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் அன்பு, மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் பாசிச அதானி, மோடி கும்பலை அம்பலப்படுத்தி பேசினார்கள்.
இந்த பொதுக் கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர இளைஞர் கழகம், மக்கள் சிவில் உரிமை கழகம், திராவிடர் தமிழர் கட்சி ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

சென்னை- கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் குவிந்து இருக்கும் பகுதியை தேர்வு செய்து பாசிசத்திற்கு எதிராக போராட முன்வந்துள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து பேரணி- பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, CITU, AITUC, LTUC, SDPI, INTUC, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கலந்துக் கொண்டு பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தி பேசினார்கள். புரட்சிகர கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கூட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை ஏற்று நடத்தினார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் பெரியாரிய அமைப்புகளை ஒன்றிணைத்து பேரணி-பொதுக்கூட்டத்தை நடத்தப்பட்டது. பேரணியை புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று வழி நடத்தினார். பொதுக்கூட்டத்தை புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தோழர் மகேந்திரன் தலைமையேற்று தொடங்கினார். திராவிடர் கழகம், AICCTU, பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சி.ராஜூ இந்தியாவில் பாசிஸ்டுகளின் அடக்குமுறையை அம்பலப்படுத்தி பேசினார். கூட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து, இந்திய மக்களின் பொது எதிரியாக மாறியுள்ள கார்ப்பரேட்-காவி பாசிச கும்பலை அரசியல் அதிகாரத்திலிருந்தும், சமூகத்தில் இருந்தும் தூக்கி எறிவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட தோழர்கள் எழுச்சி உரையாற்றினார்.

போராட்ட படங்கள் தொகுப்பு

மோடியின் மிருக பலத்திற்கு முன்னால் போராடி வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகவாதத்தை கிளப்புகின்ற பல்வேறு குட்டி முதலாளித்துவ சக்திகள் மத்தியில் பாட்டாளி வர்க்க வைராக்கியத்துடன்,  நக்சல்பாரி அமைப்பு முன் வைத்துள்ள புரட்சிகர அரசியலை ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மத்தியில் வீச்சாக கொண்டு செல்லும் பணியில் களமாட துவங்கியது புரட்சிகர அமைப்புகள்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியும் வரை இந்தப் பயணம் ஓயாது!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தமிழ்நாடு-புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here