ஒன்றிய அரசே!

கீழடி: அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! ஆய்வுப் பணிகளை முடக்காதே!

தமிழக அரசே! கீழடி அறிக்கையை வெளியிட சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்று!

தொல்லியல் ஆய்வுக்கு ரூ. 1 கோடி  போதாது; 100 கோடி ஒதுக்கு! ஆய்வை தொடர்ந்து நடத்து!

வரலாற்றை மீட்டெடுக்க 18.09.2026 மாலை 5.30 மணி அளவில் மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்

***

அனைவருக்கும் வணக்கம்,

நேற்றைக்கு நாங்கள் கீழடி மற்றும் கொந்தகைக்கு போயிருந்தோம். ஒரு வீடு விடாமல் எல்லா வீடுகளுக்கும் போனோம். தற்போது நடைபெறுகிற ஆர்ப்பாட்டம் குறித்தப் பிரசுரத்தைக் கொடுத்தோம். ஆனால் வீடுகளில் ஆட்களே இல்லை. வயதானவர்கள் முடியாதவர்கள் மட்டும்தான் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். தெருக்களில் மாடுகளும் ஆடுகளும் நாய்களும் இருந்தன.

இந்தக் கிராமத்து மக்களெல்லாம் விவசாயிகள். ‘எங்கே ஆளுங்களையே காணோமே?’ என்று அங்கிருந்த ஒரு சிலரிடம் கேட்டபோது ‘எல்லாரும் வேலைக்குப் போய் இருக்காங்க’ என்று சொன்னார்கள். ‘எங்கே?’ என்று கேட்டபோது ‘மதுரைக்கு’ என்றார்கள்.

மதுரையில என்ன வேலை கிடைக்கும்? மதுரைக்குப் போனா என்ன கலெக்டர் வேலையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் வேலையுமா கிடைக்கும்? கூலி வேலைதானே கிடைக்கும்? விவசாயத்தில் வரக்கூடிய வருவாயைக் கொண்டு வாழ முடியாது என்பதனால்தான் அவர்கள் தினக்கூலிகளாக வெளியூர்களுக்கு ஓடுகிறார்கள்.

கொந்தகை என்ற ஊரில் நாங்கள் பிரசுரம் கொடுக்கும் போது ‘தோழர், சாக்கடத் தண்ணி தெருவுல ஓடுது பாருங்க. இங்க சாக்கடை வசதியே இல்லை, எங்க வீட்டு தண்ணிய திறந்து விட்டா அது அடுத்த வீட்டுக்காரங்க வழியாக போனா அவங்க சண்டைக்கு வராங்க‌. இதுதான் இங்க பெரும் பிரச்சனை’ என்று எங்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.  அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. சாக்கடை நீரெல்லாம் தெருவில்தான் ஓடுகிறது. ‘இந்த மாதிரி எங்களுக்கு கஷ்டம் இருக்கும்போது நீங்க கீழடி பக்திப் பேசுறீங்க, ஆதிச்சநல்லூரீங்கிறீங்க, நாகரிகமுங்கிறீங்க, எங்க பிரச்சனை எங்களுக்கு இருக்கும்போது இதுல நாங்க என்ன செய்ய முடியும்’ என்று அவர் கேட்டார். இதுவும் நியாயமான கேள்விதான்.

நேற்று மாலையில் மதுரைக்கு வந்தோம். இன்று இங்கு கடுமையான வெயில். நான் வேலூர்காரன்தான். வேலூர் என்றாலே வெய்யிலூருன்னு சொல்லுவாங்க. அதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி மதுரை காயுது. காவிரியில் தண்ணி ஓடல; வைகையில் மட்டும் என்ன வெள்ளப்பெருக்கா இருக்கும்?

பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. அதனால் இங்கே விவசாயம் இல்லை. இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் இதுதான் நிலைமை. இந்த நாட்டில் அதிகமான மக்கள் விவசாயிகள். இதோ பாருங்க, பக்கத்துல நல்லெண்ணெய் கடை, யாராவது வருவாங்களான்னு காத்துக்கிட்டு இருக்கு ஒரு QR Code. அவங்க விக்கிறது நல்ல எண்ணெய்தான். நல்ல எண்ணெயா இருந்தாலும் காசு கையில புரண்டால்லானே வாங்க முடியும்?

இங்கே எண்ணெய் வாங்க யாரும் வரல. ஆனால் சாராயக்கடையில சரக்கு வாங்க வரிசையில் நிக்குது ஒரு கூட்டம். அதேபோல கோயில்கள்ல குங்குமம், விபூதி வாங்க  வரிசை கட்டி நிக்கிறாங்க.

இன்று மக்கள் கையில போதுமான காசு பணம் கையில் இல்ல. மக்கள்  கஷ்டப்படுறாங்க வறுமையில் இருக்காங்க. வறுமையில் இருக்காங்க என்று சொல்வதைவிட தங்களுக்குத் தேவையானதை வாங்க முடியாத நிலையில் இருக்காங்க. வாங்குவதற்கு போதுமான வருமானம் இல்லை. இவங்ககிட்ட போய் கீழடி, சிவகளைன்னு பேசி என்ன ஆவப்போவுது அப்படின்னு ஒரு சந்தேகம் வரலாம்.

இப்ப ஆட்சி மாற்றம் நடந்து ஒரு 100 நாள் கூட ஆகல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அரிசி வாங்க போனேன். 25 கிலோ மூட்டை ரூ.1400. போன மாசம் ரூ.1500. இந்த மாசம் ரூ.1600. மாதத்துக்கு ரூபா 100 அதிகமாகி ரெண்டு மாசத்துல மட்டும் 200 ரூபாய் வெலை கூடிடுச்சு. சர்க்கரை 45 ரூபாயிலிருந்து 65 ரூபாய். 100 நாளைக்குள்ள இவ்ளோ வெலை ஏறி இருக்கு. இதைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லையா? இதுதான் ஜனங்களுக்கு பிரச்சனை. மக்கள் இதைத்தான் பேசுகிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சனையும்கூட. நான் மறுக்கவில்லை.

ஆனால், இங்கே, ‘கீழடியை உயர்த்திப்பிடி, வேதநாகரிகத்தைத் துரத்தி அடி!’ என்கிறோம். அதாவது, கீழடி நாகரிகத்தில் மதம் இல்லை சாதி இல்லை, கடவுள் சிலைகள் இல்லை. மக்களைப் பாகுபடுத்தும் எதுவுமே இல்லை. அதனால்தான் கீழடியை உயர்த்திப்பிடி என முழங்குகிறோம்.  போராடுறோம். நாம்கூட சாதி பேதமற்ற ஒரு சமத்துவமான சமூகத்தை அமைப்பதற்காகத்தானே போராடுகிறோம். நல்லது.

அதே வேளையில், ஏன் வேத நாகரிகத்தைத் துரத்தி அடிக்கணும்? வேத நாகரிகம் என்றால் என்ன? அவன் சொல்லும் வேத நாகரிகம்கூட நம்மிடையே ஊறிப்போயிருக்கு.  நீங்களும், நானும் நம்மை அறியாமலேயே வேத நாகரிகத்தை ஏதோ ஒரு வகையில் பின்பற்றி வருகிறோம். அதுதான் உண்மை.

இப்ப, ஒரு முக்கியமான பிரச்சனை மதுரையில் ஓடிக்கிட்டு இருக்கு.

நேத்து மீனாட்சி கோவிலுக்கு குடமுழுக்கு. தமிழில் மந்திரம் ஓதி குடமுழுக்கு செய்யவேண்டும் என்று தமிழ் ஓதுவார்கள், ஆர்வலர்கள் போராடுகின்றனர்.  வேத நாகரீகத்தை ஏன் துரத்த வேணும் என்பதைப் புரிந்து கொள்ள குடமுழுக்கு என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால் போதும். குடமுழுக்கு பற்றி வேதம் என்ன சொல்லுகிறது? அதைத் தெரிந்து கொண்டால் குடமுழுக்கு நடத்தணுமா இல்லையா என்று முடிவுக்கு வர முடியும்.  நடத்துவது என்பது அப்புறம்.

நண்பர்களே, இந்து மதத்திற்கு வேத சட்ட வழிகாட்டி மனுதர்ம சாஸ்திரம். அது என்ன சொல்லுது? படிச்சு காட்டுறேன். பாருங்க,

“வீடு முதலானவற்றிற்குச் சண்டாள சாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது, விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணை எடுத்து அப்பால் போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படி செய்தல் இவை ஐந்தாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது.” (மனுஸ்மிருதி – 5:124)

சண்டாள என்ற சொல் திரைப்படங்களில் நிறைய பாடல்களில் வந்திருக்கு. இந்த நாட்டில் வாழக்கூடிய பட்டியல் சாதி பறையர்களைக் குறிக்கும் சொல் அது.

கோவிலோ வீடோ கடையோ எந்தக் கட்டுமான  வேலையாக இருந்தாலும் அதில் பலரும் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடுகிறார்கள் என்பதுதானே உண்மை. ஒருசிலரால் அந்த இடம் அசுத்தமாகி இருக்கும். அதாவது தீட்டுப் பட்டிருக்கும். எனவே  அந்த இடத்தை விளக்கி, மொழுகி அதுவும் சாணியைக் கொண்டு மொழுகி, பசு கோமியம் தெளித்து, பசு மாட்டை அங்கு ஓட்டிச் செல்வதால் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது என்கிறது மனு ஸ்மிருதி.

கட்டுமான வேலைகளில் ஈடுபட்டத் தொழிலாளர்களை குறிப்பாக பறையர் சாதி மக்களை இழிவுபடுத்தும் ஒரு செயல்தான் கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகள். இவை அப்பட்டமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கும் வன்செயல்கள். எனவே சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி, கோமியம் தெளித்து, பசுமாட்டை அழைத்துச் சென்று சடங்கு நடத்தும் யாராக இருந்தாலும் மந்திரம் ஓதுவோரையும், சமஸ்கிருதத்தில் ஓதியினாலும் சரி தமிழில் ஓதினாலும் சரி மந்திரம் ஓதும் புரோகிதர்களையும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்த நபர்களையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் குற்றம் குற்றமே.

உழைக்கும் மனிதனை இழிவு படுத்தக் கூடிய இந்தச் செயலை அதுவும் தமிழ் மொழி மூலம் இழிவுபடுத்தக் கோருவதை என்னை பொறுத்தவரை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்து ‘நீ யார்? நான் யார்?’ என்று பெருமை பேசக்கூடியவர்கள் தங்களை ‘ஆண்ட பரம்பரை, அந்தப் பரம்பரை, இந்தப் பரம்பரை’ என்று பீற்றிக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பரம்பரைதான் என்று வரலாறு சொல்கிறது. எல்லோரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவங்கதான். அங்கிருந்து கொஞ்சம் பேர் ஐரோப்பா பக்கம் போனார்கள். கொஞ்சம் பேர் சீனா- திபெத்துப் பக்கம் போனார்கள். கொஞ்சம் பேர் சிந்து சமவெளிக்கு வந்தார்கள். இன்னும் சில பேர் தெற்கு நோக்கி தமிழ்நாடு பக்கம் வந்தார்கள். இதெல்லாம் நடந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. இவர்கள் வாழ்ந்த பகுதிகளின் சீதோஷ்ண நிலை, உழைப்பு அதுக்குத் தகுந்த மாதிரி பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள். அதனால் மனிதர்களின் ‘கலர்’ வேறு வேறு ஆகவும், மூக்கு ‘சைஸ்’ மண்டை ‘சைஸ்’ வேறு வேறாகவும் மாறின.

ஐரோப்பாவின் ஸ்டெப்பி புல்வெளிப் பிரதேசம் பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து மட்டுமே வாழ்ந்தார்கள். அங்கு விவசாயம் கிடையாது. ஆறுகள் கிடையாது. அந்த இடம் தாங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறும்பொழுது அவர்கள் சிந்து சமவெளியை நோக்கி வருகிறார்கள்.  கி.மு 3000 வாக்கில் சிந்து சமவெளி நகர நாகரிகம் அழியத் தொடங்கியது. ஆனால் ஆரியர்கள் இங்கு வந்ததோ கி.மு 1900. சிந்து சமவெளி நாகரிகம் முடிவுப்பெறும் போது அதாவது மிகவும் பிற்காலத்தில் இங்கே வந்தவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தை தங்களுடைய நாகரிகம் எனவும் அதுதான் சரஸ்வதி நாகரிகம் எனவும் வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கிறது சனாதான கும்பல். சிந்து சமவெளி நாகரிகமும் நம்முடைய நாகரீகம்தான் என்பதற்கான தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை இங்கே நாம் மறந்து விடக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய நாகரிகத்தை அவன் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறான் என்பதே உண்மை.

அந்தக் காலத்தில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் பிற்காலத்தில் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளால் எங்கேயோ சென்று விட்டார்கள்.  செயற்கை நுண்ணறிவையே விஞ்சும் அளவிற்கு சீனாக்காரன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் அன்றே நகர நாகரிகம் கண்ட நம்மால், உலகில் முதன் முதலில் இரும்பைக் கண்டுபிடித்து பயன்படுத்திய நம்மால் ஏன் அவ்வாறு முன்னேற முடியவில்லை? அன்றே ஆதன், குவிரன் என்று எழுதத் தெரிந்த நம்மால் பிற்காலத்தில் ‘அ’ ணா ‘ஆ’ வண்ணாகூட தெரியாமல் போனது எப்படி? அன்றே எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்க பின்னாடி ஏன் தற்குறி ஆனார்கள்?

இந்தியாவில் நுழைந்த பிறகு ஆரியர்கள் தங்கள் நயவஞ்சகத்தால் இந்திய மன்னர்களை ஏதோ ஒரு வகையில் மயக்கி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நமது கல்வியைப் பறித்தார்கள்.

அன்று கல்வி என்றால் வேதம் மட்டும்தான். அதையும் சமஸ்கிருதத்தில் மட்டும்தான் படிக்க வேண்டும். இதைப் படிக்கின்ற உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு.

களப்பிரர் ஆட்சி காலம் வரை நம்மிடம் இருந்த கல்வி உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டது. அப்படியானால் அதன் பிறகு யாரும் படிக்கவில்லையா? ஆழ்வார்களும் நாயன்மார்களும் படிக்கவில்லையா என்று கேட்கலாம். வேதங்களையும் புராணக் கட்டுக்கதைகளையும் மக்களிடம் பரப்புவதற்காக அவர்கள் படித்தார்கள். யாருக்குத் தேவை அந்தக் கல்வி?

படிக்க: 

  கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்

  கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல் | பகுதி 2

ஆனால் இங்கு நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, நமது அப்பன் ஏன் படிக்கவில்லை? நமது பாட்டன் முப்பாட்டன் ஏன் படிக்கவில்லை? அவர்கள் ஏன் தற்குறிகளாக ஆனார்கள்? நேற்று வரை அதுதானே நிலைமை.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஆட்சியாளர்களால் நமக்கான கல்வி மறுக்கப்பட்டது. கல்வி இல்லை என்றால் சிந்தனை இருக்காது. சிந்தனை இல்லையென்றால் புதிய கண்டுபிடிப்புகள் இருக்காது.

கல்வி இருந்ததால்தான் பாயில்ஸ் விதிகளையும், ஆர்க்கிமிடீஸ் கோட்பாடுகளையும், ஓம்ஸ் விதியையும் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. கல்விதான் அவர்களை தொழிற் புரட்சிக்கு இட்டுச் சென்றது. ஐரோப்பா முன்னேறியது.

ஆரியர்கள் நமது கல்வியை பறித்தார்கள். அதனால் நாம் முன்னேற முடியவில்லை. ஒரு காலத்தில் முன்னேறிய நகர வாழ்க்கை வாழ்ந்த நாம் பிற்காலத்தில் பின்தங்கிப் போனதற்கு நமக்குக் கல்வி மறுக்கப்பட்டதே காரணம்.

சிவகளையிலும், கீழடியிலும் கிடைத்திருக்கும் வாள், ஈட்டி, அம்பு இவை வெறும் துருப்பிடித்த வரலாற்று நினைவுகள் அல்ல. அவை சனாதனத்தை வெட்டி வீத்த, குத்திக் கிழிக்கக் கிடைத்திருக்கும் போர் ஆயுதங்கள்.  இந்த ஆயுதங்களை மக்கள் தங்கள் கைகளில் ஏந்த வேண்டும். இந்த ஆயுதங்களை நாம் ஏந்தவில்லை என்றால் இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் இப்படியேதான் இருப்போம். சொல்லப்போனால் இன்னும் பின்னோக்கிதான் செல்வோம்.

‘ஏன் இப்படி!’ என்று நாளை நம் பேரப்பிள்ளைகள் கேட்பார்கள். பேரப் பிள்ளைகள் சொன்னார்கள் என்று இன்று ஓட்டு போட்டிருக்கலாம். அதை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவில்லை என்றால் தமிழ்நாடு இன்னும் பின்னோக்கிதான் போய்க்கொண்டிருக்கும்.

தமிழ்நாட்டு மக்களைத் தட்டி எழுப்ப நம்மிடம் அகழாய்வு ஆயுதங்கள் இருக்கின்றன. விடக்கூடாது. பல மாதங்கள் ஆனாலும், சில பல ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆயுதங்களை நான் கையில் ஏந்தியே ஆக வேண்டும்.

சனாதன சக்திகளையும் அவர்களின் எடுபிடிகளையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இதற்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை தமிழ் மக்கள் இசை விழாவின் போது உணர முடிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உலகெங்கிலும் வாழக்கூடிய ஆர்வலர்கள், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை வாழக்கூடிய உணர்வு கொண்ட தமிழ் மக்கள் இப் பிரச்சனைக்கு ஆதரவு  தெரிவித்துள்ளார்கள். அவர்களால் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என்றாலும் நிதி கொடுத்து ஆதரவு தருகிறார்கள்.

எனவே இங்கு வாழக்கூடிய நாம்தான் சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் இதைத் தொடர்ந்து முன்னெடுப்போம். வேறு வழி கிடையாது. அதை நோக்கிப் பயணிப்போம். அதற்கு இந்த ஆர்ப்பாட்டம் உதவும் என்றால் உண்மையிலேயே மகிழ்ச்சிதான்.

தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here