கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி மரணத்தையொட்டி நடந்த போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்களை விடுதலை செய்!

கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் மனு ! 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி படுகொலைக்கு எதிராக 13,14, 15, 16 தேதிகளில் பொதுமக்களும், மாணவர்களும், ஜனநாயக சக்திகளும், அனைத்து கட்சிகளும் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பெற்றோர்கள், மக்களின் கோபாவேசத்தை, நியாயத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு கடந்த 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்தை மாவட்ட நிர்வாகம்-போலீசு – பாஜக – அதிகார வர்க்கம் திட்டமிட்டு கலவரமாக மாற்றியது.

இந்த கூட்டு கும்பலின் சதியை, அராஜகத்தை, அலட்சியத்தை மறைக்க ஸ்ரீமதி படுகொலை மீதான நியாயத்தை குழி தோண்டி புதைக்க அப்பாவி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம், தபெதிக அமைப்புச் சேர்ந்த தோழர்கள் என் தேடித் தேடி கைது செய்தது போலீசு.

காய்கறி வாங்க வந்தவர், மளிகை சாமான் வாங்க வந்தவர், மருந்து வாங்க வந்தவர், மனைவியை வேலையில் இருந்து அழைத்துச் செல்ல வந்தவர், டிராக்டருக்கு சாமான் வாங்க வந்தவர், கோவிலுக்கு போக வந்தவர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.

பங்காரம் கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டை அடித்து நொறுக்கி பெண்களை தாக்கி அங்குள்ள அருந்ததி இன இளைஞர்களை கைது செய்தது போலீசு.

பல இடங்களில் கொங்கு கவுண்டர் பேரவை சேர்ந்த ரவுடிகள் ரோட்டில் போனவர் வந்தவர் எல்லாம் பிடித்து மடக்கி செல்போனை உடைத்து, வண்டியை நொறுக்கி போலீசுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். ஒரு பகுதியில் வன்னியர் பிரிவு மக்களை பார்த்து இவர்கள் உண்மையான ‘கவுண்டர்கள்’கிடையாது என்று சொல்லி அடித்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

மேலும், தலித் இளைஞர்களாக பார்த்து பார்த்து கைது செய்யும் படலம் தொடங்கியது.உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பாவிகளான மாணவர்கள்- இளைஞர்கள் ஏராளமானோரை கைது செய்தது போலீசு. குறிப்பாக,கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையான இளைஞர்கள் பட்டம் படித்தவர்கள், பாலிடெக்னிக் முடித்தவர்கள், பொறியியல் முடித்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களை திருச்சி, கடலூர், சேலம் வேலூர் மத்திய சிறைகளில் அடைத்தனர். சிறையில் இருக்கும் தனது கணவர்களை பார்க்க வந்த பெற்றோரை, குடும்பத்தினரை ஆபாசமாக பேசி விரட்டியது போலீசு.

ஒவ்வொரு பெற்றோரும் கைது செய்யப்பட்ட மகன் இதோ வந்து விடுவான் அதோ வந்து விடுவான் என்று கோர்ட்டுக்கும் வழக்கறிஞர்களிடமும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

பல வீடுகளில் கர்ப்பிணி மனைவி தனது கணவருக்காக காத்திருக்கிறார். கை குழந்தை வைத்துக்கொண்டு சில பெண்கள் தனது கணவர் வருவார் என குழந்தைகளுக்கு உணவு கூட தர முடியாத நிலைகளில் காத்திருக்கின்றனர். சில வயதான பெற்றோர் தனது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால் உணவுக்கு வழியின்றி காத்து கிடக்கின்றனர்.மொத்தத்தில் மக்கள் சாப்பாட்டுக்கே வழியற்ற நிலைமை என்று சொல்ல முடியாத துயரம் மக்களின் நெஞ்சை அடைத்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த போலீசாரால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்து கொண்டு வீடு, வீடாக சென்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களை, இளைஞர்களை சந்தித்தார்கள்.

அவ்வாறு சந்தித்த அனைவரையும் இன்று (08. 08. 2022) திங்கள் காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வரும்படி அறை கூவல் விடுத்தது. அதன் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மனு கொடுக்க வந்தனர்.பொதுமக்களை அழைத்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சிறையிலிருக்கும் அப்பாவி பேரனுக்கு போராடும் பாட்டி!

வந்திருந்த பெற்றோர்கள் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மாவட்ட ஆட்சியரிடம் கோபத்துடன் முறையிட்டனர்.

தங்களின் நியாயத்தை எடுத்துக் கூறி போராடினார்கள். மாவட்ட ஆட்சியர் நான் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்கிறேன் என்றார்.

மக்களும், மக்கள் அதிகாரமும் இந்த மாவட்டத்திற்கு அரசாங்கமே நீங்கள்தான்! நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அப்பாவிகளை விடுதலை செய்யுங்கள் என்று தொடர்ச்சியாக வாக்குவாதம் செய்து பேசினார்கள்.

தோழர்களுடைய உறுதியான போராட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் நான் அனைத்து மனுக்களையும் விசாரித்து

உரிய முறையில் நடவடிக்கை எடுக்கிறேன், பதில் சொல்கிறேன் என்று பொதுமக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.

அதன் பின்னர் மக்களிடம் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களும் மக்களும் மாவட்ட நிர்வாகத்தை, போலீசின் அடாவடித்தனத்தை விளக்கி பேசினார்கள்..

வருகின்ற பதினொன்றாம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எதிரில் அனைவரையும் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதையும் அறிவிப்பு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில்

தோழர் செழியன்
மாநில துணைச் செயலாளர். மக்கள் அதிகாரம்

தோழர் மோகன்
மாநில தலைமைக் குழு உறுப்பினர்
மக்கள் அதிகாரம்.

தோழர் பாலு.
மாவட்ட செயலாளர் மக்கள் அதிகாரம்.
கடலூர்.

தோழர் கஜேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்
கள்ளக்குறிச்சி.

தோழர் ஏழுமலை
மாவட்ட செயலாளர்
மக்கள் அதிகாரம்
விழுப்புரம்

மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரின் மனைவி உஷா மற்றும் ஏராளமான ஜனநாயக சக்திகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு- புதுச்சேரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here