அகதி என்ற மனித வாழ்க்கை பேரவலம்! தீர்வு எப்போது?

ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களற்ற, சமாதானமான உலகம் இருக்காது என்பதே நிதர்சனம்.

0
64

அகதி என்ற மனித வாழ்க்கை பேரவலம்! தீர்வு எப்போது?


லகம் முழுவதும் 10 கோடி பேர் அகதிகளாக மாறி சொந்த நாட்டை தாய் மண்ணை விட்டு வெளியேறி, பிற நாடுகளிலும் தனக்கு இனம், மொழி புரியாத இடங்களிலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
நாடுகளுக்குள் நடக்கும் இனக்கலவரங்கள், மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள், நாடு பிடிக்கும் ஆசையில் நடக்கும் போர்கள், குறிப்பிட்ட மதம், இனம் சார்ந்த மக்களை இனப்படுகொலை செய்கின்ற வன்முறை வெறியாட்டங்கள் இவற்றுடன் வேலை வாய்ப்பு வசதி இல்லாத காரணத்தினால் நாடுவிட்டு நாடு கடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளிகள் என்று அகதிகள் வரிசையில் அணிதிரண்டு நிற்கின்றனர் 10 கோடி மக்கள்.

ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களற்ற, சமாதானமான உலகம் இருக்காது என்பதே நிதர்சனம்.

ஒரு மனிதனை அவன் பிறந்த மண்ணில் வாழ்வதற்கு உத்திரவாதமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்காத ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பை காறி உமிழ வேண்டும்.ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களற்ற, சமாதானமான உலகம் இருக்காது என்பதே நிதர்சனம்.

தன்னுடைய அகண்ட சந்தைகாகவும், அரசியல் மற்றும் புவிசார் கண்ணோட்டத்தில் தனக்கு சாதகமான செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குகின்ற, தன்னாலும் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை விற்பனை செய்வதற்கு, லாப வேட்டைக்கு பொருத்தமான இடங்களை உருவாக்குவதற்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகள், போர்கள் மூலம் உலகின் ஏதாவது ஒரு மூலையில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்துகொண்டுதான் உள்ளது.

இதில் தற்போதைய உலக நிலைமையில் ஆப்பிரிக்க கண்டம் முதல் இடத்தை பெறுகிறது. ஆப்பிரிக்காவின் எகிப்து, நமீபியா, சாயர், எத்தியோப்பியா சோமாலியா போன்ற நாடுகளும், ஆசிய கண்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளும் அமைதியாக வாழ வழியில்லாத கலவர பூமியாக மாறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணங்களில் புதிதாக வேலையில்லாத் திண்டாட்டம் சேர்ந்துள்ளது. சொந்த மண்ணில் உழைத்து வாழ்வதற்கு பொருத்தமான வேலை இல்லாத காரணத்தினால் நாடோடிகளாக, புலம் பெயர்ந்த தொழிலாளிகளாக, சுருக்கமாக சொன்னால் அகதிகளாக மாறி பல கோடி பேர் உலகம் முழுவதும் குறுக்கு, நெடுக்காக வேலை தேடி அலைந்து கொண்டுள்ளனர்.

குடும்பம் ஓரிடத்தில், தகப்பன் தாய் ஓரிடத்தில் என்று தினந்தோறும் பெற்றவர்கள் முகத்தை காணமுடியாமல் பாசத்திற்காகவும், உறவிற்காகவும் ஏங்கித் தவிக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி வீட்டு குழந்தைகள் இந்த அகதிகள் வாழ்வின் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

இவை அனைத்தையும் விட கொடுமையாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்ட பூர்வமாக செல்வதற்கு வழி இல்லாததால் காற்று இல்லாத இடங்களிலும், கப்பல்களின் அடிபகுதிகளிலும் பதுங்கி உயிர் பிழைத்தவர்கள் வேறு ஒரு நாட்டிற்கு அகதிகளாக சென்று சேர்வது மனித அவலத்தின் உச்சம் ஆகும்.

தனது லாப வெறிக்காக உலகைச் சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை நிரந்தரமாக சவக்குழிக்கு அனுப்பாமல் அகதிகள் பிரச்சனையை தீர்க்க முடியாது.
அது உருவாக்குகின்ற ஒவ்வொரு சிக்கல்களை தனித்தனியாக எதிர்த்துப் போராடுவதை காட்டிலும் அனைத்திற்கும் மூல காரணமான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்பும் சோசலிச பாதைக்கு திரும்புவது மட்டுமே அகதிகள் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்கும்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here