
பன்முகத்தன்மை கொண்ட இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில் கலாச்சார மையங்கள் உருவாக்கப்பட்டன.
1986ல் காங்கிரசு கட்சியின் மணிசங்கர் ஐயர் மற்றும் அனந்த மூர்த்தி ஆகியோர் பதவியில் இருந்த காலத்தில் தென்னக பண்பாட்டு மையம் (south zone cultural center) தஞ்சாவூரில் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அந்தமான் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சார்ந்த கலைஞர்கள் பயன்பெறும் வகையில் தென்னகப் பண்பாட்டு மையம் உருவானது.
எந்த நோக்கத்திற்காக தென்னக பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டதோ அதற்கு எதிராக தொடங்கிய நாள்முதல் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அரசு ஒதுக்கும் நிதியை கிராமிய கலைகளுக்கு 92 சதவீதமும், செவ்வியல் கலைகளுக்கு 8 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் (அனந்தமூர்த்தி பரிந்துரை) என்பது தென்னக பண்பாட்டு மையத்தின் விதி. இந்த விதியை மையத்தின் இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒருபோதும் மதித்ததில்லை..
தென்னக பண்பாட்டு மையத்தில், செவ்வியல் கலைஞர்களுக்கு சமமாக நாட்டுப்புற கலைஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டு. செவ்வியல் கலைஞர்களுக்கு இணையான சம்பளம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்காமல் சம்பளத்தை குறைத்துக் கொடுப்பது என்பது நடைமுறையாக இருந்துவருகிறது.
இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிகழ்ச்சிகள் வழங்குவது தொடர் நிகழ்வாக உள்ளது. எதிர்த்து பேசுபவர்களுக்கு தென்னக பண்பாட்டு மையத்தின் நிகழ்ச்சிகள் கிடைக்காது. தரகர்களும், சில தென்னகப் பண்பாட்டு ஊழியர்களும் ஊழல் செய்து நிதியை பங்குபோட்டுக்கொள்வது இங்கு வாடிக்கையான போக்காகும்.
இதற்கு எதிராக கடந்த காலங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டபோது கோப்புகள் தீக்கிரையாகி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வரலாற்று புகழ்பெற்றது தஞ்சை தென்னக பண்பாட்டுமைய அலுவலகம்.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நிகழ்ச்சி வழங்கப்பட்டதை கண்டித்து சுழற்சி முறையில் நிகழ்ச்சிகளை வழங்ககோரி மாநில அளவில் புகழ்பெற்ற கலைமாமணி தேன்மோழி இராஜேந்திரன் அவர்களின் கணவர் கலைநன்மணி இராஜேந்திரன் மற்றும் அவரது சங்க கலைஞர்கள் கேட்டபோது பண்பாட்டு மையத்தின் அதிகார வர்க்கத்தால் அவமரியாதையாக நடத்தப்பட்டனர்.
இதனை கண்டித்தும், தென்னக பண்பாட்டு மையத்தின் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தஞ்சையில் கடந்த 09-12-2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முனைவர் காளீஸ்வரன், மாற்று ஊடக மையத்தோழர்கள் மற்றும் கலைக்குழுகள், சங்கங்களை சார்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
தென்னகப் பண்பாட்டு மையத்தின் கலை நிகழ்ச்சிகள் கிடைக்காது என்ற அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் கலைஞர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் தங்களை இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
படிக்க: ♦ லாவணிக்கலை: விவசாயிகளைப் போலவே ஜீவ மரணப் போராட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள்.
ஆர்ப்பாட்டச் செய்தி பத்திரிகை, தோலைக்காட்சி சமுக ஊடகங்களில் விரிவாக வெளிவந்து பேசுபொருளாகி கலைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டியது. தென்னகப் பண்பாட்டு மையத்தில் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரத்தொடங்கின. குறிப்பாக கலைஞர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகள் இன்னும் முறைப்படி தரப்படவில்லை என்றாலும் பல்வேறு குழுக்களுக்கு கலைநிகழ்ச்சிகள் அளிக்கப்படு விரிவாக்கப் பட்டுள்ளது.
“இது மகஇக – மாற்று ஊடகமையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிர்விளைவு” என்று கலைஞர்கள் பலர் கூறியது மிகையான செய்தியல்ல. அதே வேளையில் கைக்கூலிகள் சிலர், கடைந்தெடுத்த ஊழல் பேர் வழிகளான சீனிவாசன், இரவி ரங்கபாஷ்யம் அகியோரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
“இயக்குனர் நல்லவர், முறைகேடுகள் இல்லை. காழ்ப்புணர்சியில் சிலர் பேசுகின்றனர்” என்று அறிக்கை வெளியிட்டனர். புகைப்படத்துடன் கட் அவுட் வைத்தனர். சில கலைஞர்கள் “எங்களுக்கும் அதற்கும் சம்மந்தம் கிடையாது. சோமசுந்தரம் குருப் ஆட்கள் எங்களது படத்தையும் சேர்த்துவிட்டனர்.” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளிவந்த பத்திரிக்கை செய்திகள், நடைபெற்ற தொடர் விவாதங்களைத் தொடர்ந்து தற்போது கலைஞர்களுக்கு கொடுத்துவந்த 800 ரூபாய் சம்பளம் ரூபாய் 3000 ஆகவும், குழு தலைவருக்கு கொடுத்துவந்த 1000 ரூபாய் சம்பளம் ரூபாய் 6000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பயணப்படி போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறித்து இயக்குனர் (பொருப்பு) வெளியிட்ட செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
படிக்க: ♦ அஞ்சலி குறிப்பு மக்கள் கலைஞர் கத்தரின் வாழ்க்கையும் பாடங்களும்!
தென்னிந்திய பண்பாட்டு மைய இயக்குனரின் இந்த அறிவிப்பு 22-02-2024 அன்று வெளியிடப்பட்டது. இந்த சம்பள உயர்வு வழக்கம்போல செவ்வியல் கலைஞர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. செவ்வியல் கலை பட்டியலில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களுக்கு நாட்டுபுற கலைஞர்களுக்கு தரும் குறைந்த சம்பளமே வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்த பாரபட்சம் தென்னக பண்பாட்டு மைய அதிகாரிகளின் மனநிலை, செயல்பாடு ஆகியவற்றை பறைசாற்றுகிறது.
நாட்டுபுற கலைஞர்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மாற்றுஊடகமையம், அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்ந்த கலைஞர்கள் தொடர்ந்து புரக்கணிக்கபடுகின்றனர். உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள். தர்மநியாயம், சட்டம் பேசாதே என்பதுதான் தென்னக பண்பாட்டு மையத்தில் எழுதப்படாத விதி.
நாட்டுப்புறக் கலைஞர்களின் சம்பள உயர்வு குறித்த தென்னக பண்பாட்டு இயக்குனரின் (பொறுப்பு) அறிவிப்பானது மகஇக தஞ்சை கிளையின் முன்முயற்சி, மாற்று ஊடகமையத்தின் ஒத்துழைப்பு, அச்சமற்ற கலைஞர்களின் சுயமரியாதை உணர்வு ஆகியவற்றிற்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியாகும். நாட்டுபுற கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. தென்னக பண்பாட்டு மையம் பன்மாநில அமைப்பு என்ற வகையில் இது பன்மாநிலங்களுக்கும் பற்றி படரும் ஒரு நிகழ்வும் ஆகும்.
அழிந்துவரும் நாட்டுபுறக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்யவும், தமிழ்நாட்டில் முன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து குரல்கொடுப்போம். ஆதரவளித்த ஜனநாயக சக்திகள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஊடகங்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் சாரபிலும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி.
தஞ்சை இராவணன்
மாநில இணைச்செயலர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
9443157641
22-01-2024
கண்டன ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்
1. நாட்டுப்புற கலைஞர்களை அவமதிக்கும் தென்னக பண்பாட்டு மைய அதிகாரிகள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. நாட்டுப்பற கலைவளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிசெலவுகளில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. தென்னக பண்பாட்டு மையத்தில் செவ்வியல் கலைகளுக்கு தரும்
முக்கியத்துவத்துவத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கிராமிய கலைகளுகும் வழங்க வேண்டும்.
4. பணிஓய்வுபெற்ற ஊழியர்களை பயன்படுத்துவதை நிறுத்தி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
5. கையூட்டுபெற்று கலநிகழ்சி தரும் முறையை கைவிட வேண்டும். கலைகளுக்கு தொடர்பில்லாத நபர்களை வெளியேற்றி இடைத்தரகர் முறையை கைவிடவேண்டும்.
6. கலை நிகழ்ச்சி வாய்ப்புகளை அனைத்து கலைஞர்களுக்கும் முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட கலைக் குழுக்களுக்கு சுழற்சி முறையில் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்
7. கிராமிய கலைஞர்களுக்கான ஊதிய உயர்வை முறையாக உயர்த்தி வழங்க வேண்டும். செவ்வியல் கலைஞர்களுக்கு நிகரான ஊதியம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தரவேண்டும்.
8. கிராமிய கலைகள் பாதுகாக்கவும் வளர்க்கவும் ஆலோசனை குழு அமைத்து, விருதுகள் பெற்ற மூத்த கிராமிய கலைஞர்களையும் உறுப்பினர்களாக்கி ஆலோசனை பெறவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் முறையாக நடத்த வேண்டும்.
9. அழியும் நிலையில் உள்ள கிராமியக் கலைகளை ஏற்கனவே அமல் படுத்தப்பட்ட குரு- சிஷ்ய பயிற்சி திட்டத்தின்கீழ் மூத்த, பயிற்பெற்ற கலைஞர்களைக்கொண்டு பயிற்சி அளித்து மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்
10. வெளியூர், வெளிமாநில நிகழ்ச்சிகளுக்கு செல்லும் கலைஞர்களுக்கு கொடுத்துவந்து நறுத்தபட்ட பயணச் செலவு முன்பணம் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு நிகழ்ச்சிகளுக்கு ரூ 2000/= வெளிமாநிலங்களுக்கு
10. ரூ5000/=வழங்க வேண்டும்.
11. நிகழ்ச்சி முடிந்ததவுடன் காலம் தாழ்த்தாமல் ஊதியத்தை உடனே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
14.வெளியூர், வெளி மாநிலம் செல்லும் கலைக்குழுவோடு தென்னகப் பண்பாட்டு மைய ஊழியர் ஒருவரை உடன் அனுப்பி வழிகாட்டுவதை தொடரவேண்டும்.