
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் வெட்டி எடுப்பதற்கான ஏலத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை மதுரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஒன்றிய சுரங்க துறை அமைச்சகம் கடந்த 2024 ஜூலை 24-ல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகை விடுவது தொடர்பான ஏல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜின்க் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக கடந்த வருடம் நவம்பரில் ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியானது.
இதற்கான ஆய்வுகள் நடந்த பொழுதே சூழலியல் ஆர்வலர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக அரிட்டாபட்டியானது பல்லுயிர் பாரம்பரிய தளமாக உள்ளது. இதனை சீரழித்தால் இயற்கையின் சமநிலை கெடுவதும் விவசாயம் அழிந்து போவதும் நடக்கும் என்பதே மக்கள் புரிந்து கொண்டார்கள்.
வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்ததாக அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அப்பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தை துவங்கி விட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இருந்த வேதாந்தாவை விரட்டி அடிப்பதில் உறுதியாக இருந்தார்கள்.
ஆனால் ஒன்றிய அரசு மக்களின் போராட்டத்தை குறை மதிப்பிட்டது. வேதாந்த நிறுவனத்திற்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதின் காரணமாக அதற்கு ஈடாக டங்ஸ்டன் சுரங்கத்தை கொடுப்பதில் பாசிச பாஜக உறுதியாக இருந்தது.
மக்கள் போராட்டம் வலுப்பெற தொடங்கியவுடன், தமிழக அரசு சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறிப்பிட்ட அளவு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது.
ஆனாலும் மக்கள் ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலம் முழுவதுமாக ரத்து செய்யும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தினர். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மேலூரில் இருந்து மதுரை வரை பிரம்மாண்டமான பேரணியை நடத்தினார்கள். இந்த பேரணியில் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு ஒருபுறம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டியது. முதல்வர் ஸ்டாலின் இத்திட்டம் அமலாக விட்டால் நான் முதல்வராக நீடிக்க மாட்டேன் எனப் பேசினார். ஆனால், மறுபுறம் பேரணியில் கலந்து கொண்ட 5000 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இப்படியான அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் போராடியதன் விளைவாகவே, இன்று டங்ஸ்டன் சுரங்கம் ஏல ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு.
அரிட்டாபட்டி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எந்த மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் சுரங்கங்கள் அமைக்க கூடாது என்பது போராடிய மக்களின் விருப்பம். இனி ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழ்நாட்டில் எங்கு அமைத்தாலும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதையே இப்போராட்டம் உணர்த்தியுள்ளது.
படிக்க: டங்ஸ்டன் வெட்ட வரும், வேதாந்தாவை விரட்டி அடிப்போம்!
இதற்கிடையில், தான் தான் ஒன்றிய அரசிடம் பேசி ஏலம் ரத்து செய்ய உதவியது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து ஒன்றிய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்து சென்றது. மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை எல்.முருகன், அண்ணாமலை மற்றும் பாஜக அழைத்துச் சென்ற விவசாயி குழு சந்தித்து பேசியது. இது பாசிச பாஜகவால் நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம்.
பாஜகவிற்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பை மட்டுப்படுத்த, டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் ரத்து செய்யப்பட்டது மக்கள் போராட்டத்தால் அல்ல என நிறுவ முயல்கிறார்கள்.
விவசாயிகள் ஒன்றிய அமைச்சரை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டது போல் மாயை உருவாக்குகிறார் அண்ணாமலை.
ஆனால் தமிழக மக்கள் பாசிச பாஜகவை நன்கு அறிவார்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகமே எதிர்த்து நின்ற நிலையில் அதற்கு கடைசி வரை முழு ஆதரவு அளித்தது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் தான். டங்ஸ்டன் சுரங்கத்திற்கும் வளர்ச்சி என்ற பெயரில் ஆரம்பத்தில் ஆதரவளித்தது இதே கும்பல் தான்.
தூத்துக்குடியில் மக்கள் தங்களது போராட்டத்தின் மூலம் வேதாந்தவை எப்படி விரட்டி அடித்தார்களோ, அதே போல் மதுரை மக்களும் தற்போது வேதாந்தாவை விரட்டியடித்துள்ளார்கள்.
கார்ப்பரேட் கொள்ளை கும்பலிடமிருந்து இயற்கையையும், கனிம வளங்களையும் பாதுகாக்க தூத்துக்குடியை தொடர்ந்து மதுரை மக்கள் போராடி புதிய வரலாறு படைத்துள்ளார்கள். தமிழ்நாடு எப்பொழுதுமே கார்ப்பரேட் – காவி கும்பலுக்கு எதிராக தான் நிற்கும் என் நிரூபித்துள்ளார்கள்.
அநீதிக்கு எதிரான மக்கள் போராட்டம் என்றும் வெல்லும்.
- நந்தன்
மதுரை அரட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களின் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. போர்க்களம் கண்ட மக்களையும் ஜன சக்திகளையும் பாராட்டுவோம்! வாழ்த்துவோம்! இப்படி தியாகபூர்வமான போராட்டக் களம் கண்ட மக்கள் சக்தியை புறந்தள்ளி விட்டு ஏதோ இந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலையும், எடுபிடி எல் முருகனும் எடுத்த முன்னெடுப்பினால் தான் டங்ஸ்டன் சுரங்கப் பணி முற்றாக தடுத்து நிறுத்தி ரத்து செய்யும் ஆணையை ஒன்றிய அரசை நிர்ப்பந்தித்து
பெறப்பட்டது என்பதான (ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுக்கே வழக்கமாக உள்ள புளுகுனித் தனம் மூலமாக) பொய்யை கட்டவிழ்த்து விட்டிருக்கக் கூடிய இழி செயலை கட்டுரையாளர் நன்றாகவே தோலுரித்து அம்பலப்படுத்தி உள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்! அனைத்திற்கும் டங்ஸ்டனை
– வேதாந்தவை ஓட ஓட விரட்டி அடித்த மதுரை மேலூர் வட்ட போர்க் குணம் படைத்த மக்களுக்கு – உணர்வு பூர்வமாக சகல வழிகளிலும் கட்டுரைகள் தீட்டிய, போர்க்களம் கண்ட அனைத்து ஜனநாயக சக்திகள், அறிக்கைகள் வெளியிட்ட இயக்கங்கள், ஊடகங்கள் வாயிலாக பங்களிப்பு செய்திட்ட அனைவரையும் பாராட்டுவோம் !
வாழ்த்துவோம்!