கத்தர் என்றால் புரட்சி.
தோழர் கத்தர் என்று சொன்னால் ஆந்திரப்புரட்சி இயக்கம் நினைவில் வரும். பொறியியல் கல்லூரியில் மாணவப் பருவத்திலேயே, அவர் தன்னைச் சுற்றியுள்ள சமூகச் சூழல் மாறவேண்டும் என்ற துடிப்பில் இருந்தபோது புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டார்; அரசியல் பயிற்சியோடு, அன்று ஆயுத அரசியல், பண்பாட்டு மாற்றம் பற்றி “விரசம் ” (விப்ளவ ரசயிதள சங்கம் : புரட்சி எழுத்தாளர் சங்கம் ) மூலம் சுழன்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஸ்ரீஸ்ரீ, செரபண்டராஜூ போன்றோரின் தாக்கத்தால் அந்த வட்டத்திற்குள் சங்கமமானார்.
புரட்சிகர இயக்கத்தின் கலைத்துறையாக இயங்கி கிராமங்கள் தோறும் சென்று பணிபுரிந்த தோழர் கத்தர், இயக்கத்தின் ஆயுத தளங்களோடு சென்று 1991 வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அப்போது தோழர் கொண்டபள்ளி சீதாராமையா வழிகாட்டுதலில் ஜனநாட்யமண்டலி (ஜேஎன்எம்) என்ற மையக் கலைக் குழுவாக, தோழர் கத்தர், தளங்களோடும் கிராமங்களிலும் வீச்சான பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “கத்தர் – டப்பு ரமேஷ் – சஞ்சீவி”–
மூவர் கொண்ட குழு காட்டுத்தீப்போல பிரச்சாரம் கொண்டு சென்றது. கடப்பா, கர்நூல், விசாகபட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் வேலை செய்தார். பின் வெளிப்படை வேலைகளுக்கு மாறினார். அந்த அறிவிப்பு நிகழ்ச்சி ஐதராபாத் நிஜாம் திடலில் நடந்தது. சுமார் லட்சத்துக்கு மேல் திரண்ட மக்கள் மத்தியில் கணீரென்று கம்பீரமாக அவருக்கே உரிய முத்திரை அடவுகளோடு மேடையில் ஆடிப்பாடியபோது மக்களும் கூடவே பாடியது ஆர்ப்பரித்த கடல் போலத் தோற்றம் கொடுத்தது.
தோழர் கத்தர் கட்சியின் பல்வேறு மைய இயக்கங்களின் பிரச்சாரத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்தார். அகில இந்தியப் புரட்சிப் பண்பாட்டு மையத்தின் ( AILRC ) செயலாளராகவும் இயங்கினார். பல மாநிலக் கலைக் குழுக்களும் அவரது பாடல்களையே மொழிமாற்றம் செய்தும் அதே மெட்டிலும் பாடியபோது, தமிழக ம.க.இ.க -வைச் சேர்ந்த எமது கலைக்குழுத் தோழர்கள் தமிழக நாட்டுப்புற மெட்டுக்களில் வடிவமைத்து அரசியல் விமரிசனம் கலந்த பாடல்களைப் பாடிஆடியபோது , குறிப்பாக கேரள திருச்சூரில், அரவணைத்து வரவேற்று வாழ்த்திய முதல் கலைஞர் தோழர் கத்தர்.
பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னும் “பார்ப்பன இந்துமதவெறிப் பாசிசத்தை எதிர்த்து நாடுமுழுக்க AILRC சார்பில் ஒரு வீச்சான பிரச்சார ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தவறிவிட்டோம்” என்று நாம் விவாதம் எழுப்பியபோது, அதற்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மையத்திட்டமாகக் கொண்டு செல்லாததை மனம்கொண்டு ஆழமாக விவாதித்தவர் தோழர் கத்தர். AILRC செயலாளராகப் பொறுப்பிலிருந்தபோது செயற்குழுக் கூட்டங்களில் அனைத்து மாநிலக் குழுக்களின் அரசியல் — பண்பாட்டுப் போராட்ட அனுபவங்களைக் கவனமாகக் கேட்டு விவாதித்தார்.
“விரசம்” தோழர்கள் தோழர் கேவிஆர் தலைமையிலும், பிறகு தோழர் வரவரராவ் (விவி) தலைமையிலும் தோழர்கள் சலசானிபிரசாத், குண்டூர் பிரசாத், காவலி சஞ்சய்யா, கத்தர் ஆகியோர் கொண்ட வீரியமிக்க கலை -கலாச்சார டீமாக ஆந்திரத்தில் சுழன்றடித்தது. இன்றும் ஆந்திர கலாச்சார முன்னணியினர் அந்த ஆண்டுகளை நினைவுகொண்டு விவாதிக்க மறப்பதில்லை.
கத்தர் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரிய போராட்டங்களில் புரட்சிகர அமைப்புகளுடனும், ஜனநாயக அமைப்புகளுடனும் இணைந்து தொடர்ந்து போராடினார். போலிமோதல் படுகொலைகளைத் திரைகிழித்தார். இந்தச் சூட்டைத் தாங்காத அரசு பயங்கரவாதம் 1997-ல் நேரே அவர் வீடு சென்று சுட்டுக் கொன்றுவிட முயற்சித்தது. அதில் தப்பித்தாலும் உடல் நலிவுற்றார். கத்தர் பிறகும் போராட்டத்தை நிறுத்தவில்லை. அரசும் அவர் சிந்தனைமீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், இயக்கத் தவறுகள், திசைவழியின் சிக்கல்கள் கத்தரைக் கடுமையாகப் பாதித்தன. எல்லாம் சேர்த்தே அவர் பயணத்தை அளவிடவேண்டும்.
நெருக்கடி இடையே கத்தர் 2010-க்குப் பிறகு இயக்கத்தைவிட்டு விலகிவிட்டார். பல அரசியல் விமரிசகர்கள் இந்தக்கட்டம் பற்றி பல அம்புகளை வீசவே செய்கிறார்கள் :
அதாவது, கத்தர் – ஒரு மைய அமைப்பை விட்டு மட்டுமல்ல, மையக் கொள்கை கோட்பாட்டை விட்டும் விலகிவிட்டார், சறுக்கிவிட்டார் போராட்டமின்றி ஓரமாக நின்றுகொண்டார், இடையில் பார்ப்பனியத்துடன் சமரசத்திற்கு சென்று தடுமாறினார். பின்னர் அம்பேத்கரிய அரசியல் நோக்கிச் சென்றுவிட்டார், சந்தர்ப்பவாத தேர்தல் அரசியலில் சமாதானமாகிவிட்டார், மா – லெ என்ற அடிப்படையிலிருந்து விமர்சனங்களை அவர்மீது வைத்து என்ன பாடம் கற்கப் போகிறோம் என்றும் கேட்கிறார்கள்.
அவர் அப்படி ஏதும் சுயபரிசீலனை செய்யவோ, அறிவிக்கவோ செய்யவில்லை. ஆனால் வெளியே கேட்கப்படுகிற அத்தனைக் கேள்விகளும் நமக்கு உண்டு. முடிவான முடிவு இருக்கிறதா? கத்தர் எத்தனைச் சதம் புரட்சிக்காரர்? எத்தனைச் சதம் புரட்சிப் பாடகர்?
இந்துமதவெறியை எதிர்க்கிறாரா? : ஆம்;
மாற்று சொல்லவில்லை : ஆம் ;
அம்பேத்கர் சிந்தனை என்று மாற்றிக்கொண்டுவிட்டாரா ?: ஆம்;
பாடகர் என்ற முறையில் மக்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்தைக் குறிக்கும் வண்ணம் தனக்கு ஏற்ற அரசியலாக காங்கிரசோடு சாய்ந்து நிற்கிறார், அப்படிப்பட்ட மேடைகளுக்குப் போகிறார், கட்டித்தழுவி ராகுலுக்கு முத்தம் தருகிறாரா, ஆம்; இவற்றை ஆராய்ந்து ஒரு புள்ளியில் நிறுத்திவிட இயலாதபடி ஒருமுடிவு கத்தருடையது. கலவை வாதமா, ஆம் ! அவர் வர்க்கப் பார்வை மாறியது. பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை கைவிட்டு முதலாளித்துவ சித்தாந்தம் அவரை ஆட்கொண்டது. அதன் விளைவு ஆளும் வர்க்கம் அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்தியது.
ஆனால், கத்தர் மக்கள் பாடகராக மக்கள் வாழ்க்கையைப் பார்ப்பதை நிறுத்திவிடவில்லை. பார்க்கிறார், பாடுகிறார். அவரது “கடைசிப் பாடல்” என்று அறிய வருவதில் மிகமிகச் செறிவான, செழுமையான படிமங்களை அவர் எழுதியிருக்கிறார்.அதில் ஒரு வரி,
“தல்லியின் கர்ப்ப சோகத்தை எந்தச் சிசு வெளியே சொல்லப் போகிறது?” என்று ஒருவரி வரும். கத்தர் வெறும் பேச்சாளர் அல்ல ; வெத்துப் பாடகர் அல்ல ; ஆழ்ந்து மக்கள் வாழ்க்கையைக் கற்றுள்ள கவிஞரும்கூட. அந்தப் படிமங்களை தன்தாய் ஊட்டிய பாலுடன் கலந்து பருகியுள்ளார், அவற்றை வடித்து வடிவமாகக் கொடுத்துள்ளார்.
கத்தரின் மொத்த வாழ்க்கையும் எடை போட்டு பார்த்தால் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமாக இருக்கிறது. அவரின் இறுதி காலத்திலான அவரது செயல்பாடுகளை எதிர்மறை படிப்பினையாக கற்றுக்கொள்வோம். அதற்கு முந்தைய, அவரது நீண்ட, அர்ப்பணிப்புமிக்க புரட்சிப் பாதையில் ஒளி ஊட்டி சென்ற அவரது பயணத்தை நேர்மறையாக வரித்துக் கொள்வோம்.
மக்கள் பாடகர் கத்தருக்கு எமது அஞ்சலி!
ஆசிரியர் குழு
மக்கள் அதிகாரம் ஊடகம்.