குஜராத்தில் உள்ள 1,017 கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் 233 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. “தங்கள் தொழிலாளர்களின் தேர்தல் பங்கேற்பை” கண்காணிக்கவும், வாக்களிக்காதவர்களின் பெயர்களை தங்கள் இணையதளங்கள் அல்லது அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளது.

இது குறித்து குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி பி.பாரதி கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை செயல்படுத்த உதவும் 233 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். குஜராத்தில் முதல் முறையாக, 1,017 கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களின் தேர்தல் பங்கேற்பை நாங்கள் கண்காணிக்க உள்ளோம் என்றார்.

இந்தாண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதிலிருந்து தேர்தல் ஆணையமும் பாசிசமயமாவது தெரிகிறது.

இதையும் படியுங்கள்: தேர்தல்களை கடந்து இந்துராஷ்டிராவை நோக்கி பாஜக!

கடந்த ஜூன் மாதத்திலேயே 500 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை தேர்தல் நாளன்று விடுப்பு எடுத்தும் வாக்களிக்காத தொழிலாளர்களை அடையாளம் காண அதிகாரிகளை நியமிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரி பாரதி கூறுகையில், “எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதற்காக 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கக் கூடிய நிறுவனங்களில் தொழிலாளர்கள் வாக்களிக்கிறார்களா என்பதை கண்காணிக்க முடிவு செய்தோம். அதனடிப்படையில் மனிதவள அதிகாரிகள் ( HR) கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுள்ளனர். வாக்களிக்காத ஊழியர்களின் பட்டியலைத் தயாரித்து, தங்கள் வலைத்தளங்கள் அல்லது அறிவிப்புப் பலகைகளில் வெளியிடுவார்கள்” என்றார்.

இதேபோல் ”பொதுத்துறையில் பணியாற்றக்கூடியவர்களும் மாநில அரசு துறைகளில் பணியாற்றக்கூடியவர்களும் கண்காணிக்கப்படுவார்கள்” என்றார்.

ஒன்றிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறும் போது, “2019 பொதுத் தேர்தலின் போது குறைந்த வாக்கு சதவீதமுள்ள ஏழு மாவட்டங்களில், நான்கு பெருநகரங்கள், நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் பொதுவாக குறைவாக உள்ளது, இது ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை குறைக்கிறது. சமகால பிரச்சினைகளை சமூக ஊடகங்களில் விவாதிப்பவர்கள் அத்துடன் நின்றுவிடாமல் வாக்களிப்பதின் முலம் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 135ஆ இன் படி, எந்தவொரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம் அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் பணியமர்த்தப்பட்டு, நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வாக்காளருக்கும் இந்த நோக்கத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். 1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்குரிய சட்டத்தின் பிரிவு 25-ன் படி வாக்குப்பதிவு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினமாக மாநில மற்றும் மத்திய அரசுகள் எப்போதும் அறிவிக்கின்றன.

சமீபத்திய குஜராத் பயணத்தின் போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார், கட்டாய வாக்களிப்பை அமல்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் வாக்களிக்காத தொழிலாளர்களை அடையாளபடுத்த வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்களின் துணையுடன் மறைமுகமாக கட்டாய வாக்களிப்பை அமல்படுத்துகிறது தேர்தல் ஆணையம். குஜராத் தேர்தல் முன்னோட்டம் தான் இது இந்தியா முழுவதும் கூடிய விரைவில் அமல்படுத்த படலாம்.

தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் மீதும் நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் அவ்வளவு அக்கறையா? இல்லை. இளைஞர்கள் தேர்தல் பாதையை தவிர்த்து வேறு பாதையில் சென்று விடுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். அப்படி போகாமல் இருக்க தனது அதிகாரத்தை கேடாக பயன்படுத்திக் கொண்டு இது போன்ற வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அள்ளிவிடும் பொய்யான வாக்குறுதிகளையும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் கண்காணிக்க துப்பில்லாத தேர்தல் ஆணையம் தான் உழைத்து வாழும் தொழிலாளர்களை கண்காணிக்கிறது. வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் குளறுபடிகளையும், தில்லுமுல்லுகளையும், கட்சிகளுக்கு கள்ள ஓட்டை பகிர்ந்தளிப்பது இவ்வளவையும் செய்வது தேர்தல் ஆணையம் தான்.

இப்பேற்பட்ட தேர்தல் ஆணையம் தான் தொழிலாளர்களை கார்ப்பரேட் முதலாளிகளின் மூலம் அச்சுறுத்துகிறது. ஏற்கனவே பாசிசத்தின் பிடியில் சிக்கியுள்ள நீதித்துறை, ஊடகம் பாசிஸ்டுகளின் அடியாள் போல செயல்படுகிறது. தற்போது அதில் இணைந்துள்ளது தேர்தல் ஆணையம். வாக்களிக்காதவர்களை அதிகார பலத்தின் மூலம் அச்சுறுத்த நினைக்கும் தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மூலம் பதிலளிப்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here