தேர்தலில் வென்றாலும், தோற்றாலும், பாஜக தனது இந்துத்துவா கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது!


Avay Shukla (Retired IAS officer) இவரின் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து தருகிறோம்.

டந்த வாரம், பிரபல எழுத்தாளரும், சிவில் சமூக ஆர்வலருமான ஒருவரிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் (EVM) பயன்படுத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) சமர்பிக்கக்கூடிய மனு ஒன்றைப் பெற்றேன். அதை நன்கு படித்த, தற்போதைய ஆட்சியின் கீழ் ஜனநாயகத்தின் நிலை குறித்து அக்கறையும் கொண்ட சுமார் 20 தொடர்புகளுக்கு அனுப்பினேன்.

அவர்களில் நான்கு பேர் மட்டுமே அம்மனுவிற்கு ஒப்புதல் அளித்தனர். மற்றவர்கள் கள்ள மவுனம் காத்தனர். அந்தக் கள்ள மவுனத்தில் ஒரு விரும்பத்தகாத மற்றும் குழப்பமான உண்மை உள்ளது. நாம் அதை எதிர்கொள்ளும் நேரம் இது.

தன்னுடைய ஆட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. “இந்து ராஷ்டிரா”வை அதிகாரப்பூர்வமாக  அறிவிக்க  இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்றாலும், அது மக்கள் மனதில் வடிவம் பெற்று மிக விரைவில் தவிர்க்க இயலாதவகையில் நிறைவேறும். என் நண்பர்கள் 16 பேரின் மவுனம் தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருப்பது பாதுகாப்பானது என்பதற்கான அறிகுறியாகும். அதாவது “என்ன நடக்க இருக்கிறதோ அது நடந்தே தீரும்” என்பதாக.

“இந்து ராஷ்டிரா”வுக்கான போராட்டம் நாடாளுமன்றத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சட்டப்பூர்வமாக்கப்படுவதற்கு முன் மக்கள் மனதில் வெற்றிபெற வேண்டும். இதற்கு ஒரு மும்முனை உத்தி தேவை:

  1. “இந்து ராஷ்டிரா”வை மக்கள் ஆதரிக்க வேண்டிய காரணங்களைப் பட்டியலிடுவது.
  2. “இந்து ராஷ்டிரா” வுக்கான எதிர்ப்புகளைப் புறந்தள்ளுவது.
  3. கருத்தியல் ரீதியாக “இந்து ராஷ்டிரா” வுக்கான பெரும்பான்மையைப் பெறுவதற்கான நிலைமைகளை பக்குவப்படுத்துவது.

இவை தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் செய்யப்பட வேண்டும். பாஐக தேர்தலில் வெற்றி பெற்றால் (பொதுவாக வெற்றி பெறும்), அது ஒரு போனஸ். அது சாத்தியமில்லையென்றால் மற்ற கட்சிகளால் எதிர்க்கவே முடியாத வகையிலான ஒரு இந்தியாவிற்கான தளத்தை அமைத்திருக்கும். பாஐக தனது கவனமாக திட்டமிடல் மற்றும் இரக்கமற்ற செயல்திட்டத்துடன் இந்த வேலையைச் செய்கிறது. அதேசமயத்தில் மற்ற கட்சிகளோ இன்னும் தனிப்பட்ட அகம்பாவத்துடனும், Powerpoint விளக்கக்காட்சிகளிலும் சிக்குண்டு சிதைந்துவருகின்றன.

“இந்து ராஷ்டிரா” பிறப்பதற்கு இந்தியாவின் 80% இந்து மக்களில் பெரும் பகுதியினர் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்ககளை தேசவிரோதிகள் என்றும், அவர்களை அவர்களுக்கான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் உறுதியாக நம்புவது அவசியம். இது சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் இந்துத்துவ லும்பன்களின் மூலம் செய்யப்படுகிறது.

முத்தலாக், ஹிஜாப், மாட்டிறைச்சி தடை, குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), பொதுசிவில் சட்டம் (UCC) ஆகியவை முதல் வகையைச் சேர்ந்தவை. இரண்டாவது வகையில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி முதலான யாத்திரைகள், மசூதிகளுக்கு வெளியே ஆத்திரமூட்டும் முழக்கங்கள், புல்டோசர்கள், தர்மசன்சத்கள், மற்றும் முகத்துக்கு நேரே சொல்லப்படும் ஹனுமான் பாடல்கள் அடங்கும்.

இந்த இடைவிடாத துன்புறுத்தல், ஆத்திரமூட்டல், மற்றும் முழக்கங்களுக்கு சிறுபான்மையினரிடமிருந்து வரும் வன்முறையான எதிர்விளைவுகளை வைத்து அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து நாடுமுழுவதும் பெரும்பான்மை இந்துக்களின் மத்தியில் ஒரு “இந்து தேசத்தின்” அவசியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

சிறுபான்மையினரால் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து என்ற ஒருவிதமான பயத்தை  அல்லது வெறுப்பை உருவாக்குவதன்மூலம் மக்களை மதரீதியாகப் பிரித்து மோதவிடுவதே பாஜக-வின் நோக்கமாகும். குறைந்தபட்சம் பாஜக இதில் வெற்றி பெற்று வருகிறது. இந்தவகையில் ஜஹாங்கிர்புர், கர்கோன், மற்றும் ஜோத்பூர் போன்ற இடங்களில் அக்கட்சிக்கு மிகப்பெருமளவில் அறுவடை கிடைத்தது.

பாஜக தனது வக்கிரமான கனவான “இந்து ராஷ்டிரா”வுக்கான ஆதரவைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இதற்கு சாட்சியமளிப்பது Whatapp-ல் தினசரி பகிரப்படும் வெறுப்பு செய்திகள்; ஊடகங்களின் லட்சணம்; பிரதமரின் நண்பர்கள் என்ற ஒரே காரணத்தின் மூலம் பயனடையும் பெரு மூலதனத்தின் உறுப்பினர்கள்; தினந்தோறும் பிற கட்சிகளில் இருந்து பாஜக-வுக்குத் தாவும் அரசியல்வாதிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்குக் கிடைக்கும் அபரிமிதமான நன்கொடைகள்; லக்கிம்பூர் கேரியில் எட்டு தொகுதிகளிலும் பாஜக பெற்ற வெற்றி மற்றும் பல.

பாஜக-வின் வகுப்புவாத மற்றும் பெரும்பான்மைவாத அரசியலை மக்களில் ஒரு குறிப்பிடத்தகுந்த சதவீதத்தினர் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். மற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் அல்லது தனிப்பட்ட லாபத்திலேயே குறியாக இருக்கிறார்கள். எது எப்படியோ இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் காவி கட்சிக்கு ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மாநில காவல்துறை மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அமைப்புகளின் மூலம்  இந்த மாபெரும் திட்டத்திற்கு எழும் எதிர்ப்புகள் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டு 2,500 மைல்களுக்கு அப்பால் உள்ள வேறு மாநிலத்துக்கு இழுத்துச் செல்லப்படுவார்; ஆகார் படேல் (Amnesty International முன்னாள் தலைவர்) அல்லது ராணா அய்யூப் (குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர்) வெளிநாடு செல்வது தடுக்கப்படும்; பேரரசரை விமர்சிக்கும் தொலைக்காட்சி மற்றும் YouTube சேனல்கள் மூடப்படும்; என்.ஜி.ஓ.க்களின் பதிவு ரத்து செய்யப்படும்; “தவறான” பாடம் கற்பித்ததற்காக ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்; வாக்குறுதியளிக்கப்பட்ட “இந்து ராஷ்டிரா”வுக்கான அணிவகுப்பை எதிர்த்தால் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர்களால் அழிக்கப்படும்.

மோடி தனது சொந்த நாட்டில் எட்டு வருடங்களில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாதது அல்லது வெளிநாடுகளில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கேள்விகளை சந்திக்க மறுப்பது காரணமின்றி இல்லை. சமீபத்திய பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் இந்தியா மேலும் 8 இடங்கள் சரிந்து 150-வது இடத்திற்கு வந்துள்ளது. இவை அனைத்தும் மிகச் சிறிய உதாரணங்கள் மட்டுமே.

தவிர்க்க முடியாத உண்மை என்னவென்றால், பாஜக மற்றும் RSS விரும்பும் திசையில் நாடு சீராக நகர்ந்துகொண்டிருக்கிறது; சிறுபான்மையினர் மற்றும் எஞ்சியிக்கும் ஜனநாயகவாதிகள் மத்தியில் சோர்வு உண்டாகிவருகிறது; எதிர்கட்சிகளும்கூட விரைவில் அமையவிருக்கும் “இந்து ராஷ்டிரா”வுக்கு தக்க தங்களை மறுவார்ப்பு செய்து வருகிறார்கள்.

பீகாரின் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பதற்காக தான் வளர்ந்த ஒவ்வொரு கொள்கையையும் தூக்கிக்கடாசிவிடுவார். ஒடிசாவின் நவீன் பட்நாயக் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்து பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை ஆதரிப்பார். ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி அல்லது தெலுங்கானாவின் கே. சந்திரசேகர ராவ் போன்றோர் கூட்டாட்சி முறைமீது அன்றாடம் நடத்தப்படும் தாக்குதல்கள், இந்தி திணிப்பு, மற்றும் மத்திய அமைப்புகளின் தவறான பயன்பாடு ஆகியவற்றைப் புறக்கணித்து தங்கள் சொந்த மாநிலங்களில் ஆட்சியில் தொடர முடியும். ஆனால் இவையனைத்தும் அவர்களுக்கான குழியை சீராக வெட்டிக்கொண்டிருக்கின்றன.

டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவாலோ நெறிமுறையற்ற, போலித்தனம் மிகுந்த ஒரு சந்தர்ப்பவாதி. மோடிக்கு எதிராக வெளியில் பேசிக்கொண்டே ​​ஷாஹீன் பாக், விவசாயிகளின் போராட்டங்கள், வடகிழக்கு டெல்லி கலவரம், மற்றும் ஜஹாங்கிர்பூர் போன்ற சம்பவங்களில் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் சிறுபான்மையினரை கைகழுவி விட்டுவிட்டார். உண்மையில், ஜஹாங்கிர்பூர் சம்பவத்தில், அவர் பாஜக-வையே விஞ்சும் வகையில் “கலவரத்துக்கு காரணம் ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்காளதேசிகள்” என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படாமல், பிரதமர் நாற்காலிக்கு தனியே ஒரு பாதை அமைப்பதன்மூலம் வரும்காலத்தில் பாஜக-வுக்கு இன்னும் அதிக இடங்களை கெஜ்ரிவால் விட்டுக்கொடுப்பார்.

மிகவும் மோசமான மற்றும் ஆபத்தானது போக்கு என்னவென்றால் பாஜக ஆளாத மற்ற மாநிலங்களும், கட்சிகளும் பாஜக-வின் செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் அவசரம்தான். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் கட்சியினரின் கும்பல் வன்முறை, மகாராஷ்டிராவில் ராணா தம்பதியினர் மீது தேசத்துரோக வழக்கு, குமார் விஸ்வாஸ் மற்றும் அல்கா லம்பாவை வேட்டையாட கெஜ்ரிவால் பஞ்சாப் காவல்துறையைப் பயன்படுத்தியது, ராஜஸ்தானில் புல்டோசர்களின் பயன்பாடு போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

எதிர்க்கட்சிகள் எதிர்த்துப் போராட வேண்டிய தவறான நிர்வாகத்தின் துல்லியமான வடிவங்கள் இவை! ஆனால் அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மாநிலங்களும், முதல்வர்களும் பாஜக-வின் நரித்தனத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறார்கள்.

டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் இடிக்கப்படும் இஸ்லாமியர்கள் குடியிருப்பு

வரவிருக்கும் “இந்து ராஷ்டிரா”வுக்கான நிர்வாகக்களம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தயாராக உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் என்று அழைக்கப்படுபவை உட்பட அனைத்து நிறுவனங்களும் “இந்து ராஷ்டிரா”வுக்கு இணக்கமான மற்றும் விருப்பப்பூர்வமான பங்காளிகளாக மாறியுள்ளன. இஸ்லாமிய கவிஞர்கள், முகலாய வரலாறு, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை வலியுறுத்தும் அனைத்து பாடங்களையும் நீக்கி பாடத்திட்டங்கள் மறுவடிவமைக்கப்பட்டு வருகின்றன.

ஆளும் கட்சியின் நோக்கங்களுக்கு ஏற்ப அகில இந்திய சேவை விதிகள் தொடர்ந்து மாற்றப்படுகின்றன. காஷ்மீரில் அடுத்த காய் நகர்த்த ஷா பைசல் இந்திய நிர்வாக சேவையில் (IAS)ராஜினாமா செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விதிகளை மீறி மீண்டும் சேர்க்கப்பட்டார்.

அனைத்து மத்திய அமலாக்க முகமைகளும் ஆளும் கட்சிக்கு சாதகமாகப் பணிபுரிகின்றன. “நாம் ஒரு போலீஸ் அரசாக மாறிக்கொண்டு இருக்கிறோம்” என்று அசாம் அமர்வு நீதிபதி சமீபத்தில் எச்சரித்தார். இராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியின் (PRO) இப்தார் ட்வீட் அவசரமாக நீக்கப்பட்டதன் மூலம் இராணுவம் கூட வரிசையில் விழுவது போல் தோன்றுகிறது.

நீதித்துறையோ வெளிப்படையாகச் சொன்னால், ஒரு கலவையாக இருக்கிறது. UAPA கீழ் குற்றம் சாட்டப்பட்ட நடாஷா நர்வால் மற்றும் தேவாங்கனா கலிதா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது, பெகாசஸ் உளவு வழக்கு, MediaOne சேனலின் தடையை நிறுத்திவைத்த உத்தரவு போன்ற சில மறக்கமுடியாத தீர்ப்புகளை நமக்கு வழங்கியுள்ளது.

ஆனால் எல்கர் பரிஷத் கைதிகள் உட்பட இதேபோன்ற குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு அந்த UAPA தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. தேர்தல் பத்திரங்கள், காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து, டெல்லி அரசாங்கத்தின் அதிகாரங்கள் போன்ற அடிப்படை, ஜனநாயக விரோதச் சட்டங்களுக்கு எதிரான வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே கிடப்பில் உள்ளன.

நூற்றுக்கணக்கான ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் விசாரணைக்கு வரவில்லை. புல்டோசர்கள் தொடர்ந்து கலவரத்தை நடத்தி வருகின்றன. அரசின் மிருகத்தனமான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரையும் பொறுப்பாக்கவில்லை அல்லது இழப்பீடு வழங்க உத்தரவிடப்படவில்லை. அதற்கு பதிலாக, உமர் காலித் வழக்கில் சமீபத்திய டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு குறிப்பிடுவது போல, நீதித்துறையானது எந்தவொரு விமர்சனத்திலிருந்தும் பிரதமரை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.  அதனால்தான் “ஜும்லா,” “புரட்சியாளர்” மற்றும் “புரட்சி” போன்ற வார்த்தைகளை கேட்டு நீதித்துறை முகம் சுளிக்கிறது.

பேச்சுரிமைக்கான வரையறையை நீதிமன்றங்கள் இப்போது தீர்மானிக்குமா? நீதித்துறை எங்கு செல்கிறது என்பதை மதிப்பிடுவது கடினம், ஆனால் அதற்கான அறிகுறிகள் நிச்சயம் விரும்பத்தகாததாகவே உள்ளன.

நாடு “இந்து ராஷ்டிரா”வை வரவேற்கத்தயாராகி வருகிறது. பாஜக தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறும், அது வெற்றிபெறாத இடங்களிலும் கூட, மேற்கு வங்காளத்தைப் போலவே அதன் வாக்குப் சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தென்மாநிலங்களில் தற்போதைக்கு இது சாத்தியமில்லாமல் இருக்கலாம், ஆனால் அவைகளும் விரைவில் நிதிக் கமிஷன்கள், மறுசீரமைக்கப்பட்ட IAS மற்றும் IPS, பெகாசஸ் 2, GST மூலம் நிதி நெருக்கடி, தேர்தல் பத்திரங்களில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை ஆட்சி கவிழ்ப்புக்கு பயன்படுத்துதல் போன்றவற்றால் வரிசையில் கொண்டு வரப்படும். கூடவே தெருக்களில் திரியும் குண்டர்கள் மீதியைப் பார்த்துக்கொள்வார்கள்.

எனது 16 மவுன நண்பர்களும் தீப்பிழம்புகள் தங்கள் வீடுகளுக்கு எவ்வளவு அருகாமையில் உள்ளன என்பதையும், அந்த மவுனம் எந்தவிதமான எதிர்ப்பு சக்தியையும் அல்லது பாதுகாப்பான பாதையையும் வழங்காது என்பதையும் இப்போது புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆங்கிலத்தில்: Avay Shukla (Retired IAS officer).

தமிழில்: செந்தழல்

Elections Won or Lost, BJP Is Succeeding in Realising its Hindutva Dreams (thewire.in)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here