‘ஜென்னியின் காதலை’ நேசிக்கிறேன்!

ஆணோ, பெண்ணோ காதல் காலத்தில் சமூகத்தை நேசிப்பவர்களை நேசிக்கிறார்களேயொழிய சமூக மாற்றத்தை நேசிப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் ஜென்னியின் காதலில் இருந்து வேறுபடுகிறார்கள்.

4

ஜென்னி மார்க்ஸ் கம்யூனிசத்தின் தந்தை என உலகம் முழுவதும் உள்ள மக்களால் கொண்டாடப்படும் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் உற்ற துணைவி. வயதில் ஆசான் மார்க்ஸை விட 4 வயது மூத்தவர். 12 பிப்ரவரி 1814 ஆம் ஆண்டு பிறந்த அவர் காரல்மார்க்ஸ் உடன் காதல் மண வாழ்க்கை 38 ஆண்டு காலம் நீடித்தது. 2 டிசம்பர் 1881 அன்று இறந்தார்.

 “அவளைப் போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன்” என்றார்  மார்க்ஸ். ஜென்னி மார்க்ஸ் இறந்த பின்பு அஞ்சலி குறிப்பில் மார்க்ஸ் இவ்வாறு எழுதியிருந்தார். உண்மை தான் தோழர்களே. ஜென்னி, மார்க்ஸை மட்டும் நேசிக்கவில்லை. அவர் நேசித்த பொதுவுடைமை சித்தாந்தத்தையும் நேசித்தார். சமூக மாற்றத்தை விரும்பும் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் வாழ்க்கையையே அதற்கு அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அரசின் நேரடி எதிரியாக கண்காணிக்கப்படுகிறார்கள். நாடு கடத்தப்படுகிறார்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இத்தனையும் தாண்டி மார்க்ஸையும் அவரது சித்தாந்தத்தையும் நேசித்தவர் தான் ஜென்னி மார்க்ஸ். இதற்காக இவர் கொடுத்த விலை அதிகம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் மார்க்ஸை விட்டு விலகவில்லை என்பதே மார்க்ஸ் மீதான அவரது உயரிய காதலுக்கு உதாரணம்.

நாம் பார்த்த காதல் சினிமாக்களை விட ஜென்னி மார்க்ஸ்-ன் காதல் உயர்ந்தது, சிறந்தது, சமூகத்திற்கு எடுத்துக்காட்டானது. ஜெர்மனியில் (அன்றைய பிரஷ்யா) பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் தான் ஜென்னி வான் வெஸ்ட்பாலன். அவரது சுயசரிதையை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் ஜென்னியின் பேரழகிற்காகவும், அவரது செல்வத்திற்காகவும் அன்றைய ஜெர்மனியின் பிரபுக்களும், செல்வந்தர்களும் அவரை மணம்புரிய போட்டியிட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் ஜென்னியோ அவரது பக்கத்து வீட்டில் வசித்த தன்னை விட 4 வயது இளையவரான சிறு வயது தோழனான காரல் மார்க்ஸை மணம் புரிந்தார். எதிர்காலத்தில் உலக முதலாளித்துவத்தை ஆட்டிப்படைக்கும் கம்யூனிச தத்துவத்தை படைப்பார் என்று எந்த அறிகுறியும் இல்லாத பிடிவாத குணம் கொண்ட நபராகவே காரல்மார்க்ஸ் இருந்தார்.

இருவருக்கும் இடையேயான காதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர்களுடைய வாசிப்பு பழக்கம் தான். காரல் மார்க்ஸ் இயல்பாகவே போர்குணம் கொண்ட மனிதர். அவரின் காதலுக்காக 7 ஆண்டுகள் வரை காத்திருந்து தான் திருமணம் செய்துக் கொண்டார் ஜென்னி.

ஜென்னி-மார்க்ஸ்  காதல் ஏன் இவ்வுலகில் அனைவரின் காதலையும் விட உயர்வானதாக பார்க்கப்படுகிறது? இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் உறவுகளிடையே பண உறவே முதன்மையாக பார்க்கப்படுகிறது. காதல் எதிர்பார்ப்பு இல்லாமல் தோன்றினாலும் அது மண வாழ்க்கைக்கு பின்னர் தன்னை இந்த சமூக வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ள சுயநலமாக சிந்திக்க வைக்கிறது. இதில் ஏற்படும் முரண்பாடானது சில நேரங்களில் மணமுறிவை நோக்கியும் செல்கிறது.


படிக்க: மார்ச் 14:காரல் மார்க்ஸ் நினைவு தினம்! மீள்பதிவு


சமூக மாற்றத்திற்காக வேலைப்பார்ப்பவர்களும் காதல் மணத்திற்கு பிறகு அதிலிருந்து விலக வைக்கிறது. இதற்கு அடிப்படையானது முதலாளித்துவ வாழ்க்கை பாணியும் கலாச்சாரமும் என்றாலும் கூட இன்றைய காதல் சுயநலமிக்கதாகவே உள்ளது. ஆணோ, பெண்ணோ காதல் காலத்தில் சமூகத்தை நேசிப்பவர்களை நேசிக்கிறார்களேயொழிய சமூக மாற்றத்தை நேசிப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் ஜென்னியின் காதலில் இருந்து வேறுபடுகிறார்கள்.

‘தத்துவத்தின் வறுமை’ நூலை எழுதிய மார்க்சின் வாழ்க்கையும் வறுமையின் ஊடாகவே சென்றது. பொதுவுடைமை சித்தாந்தத்தை படைத்ததோடு நில்லாமல் சமூக மாற்றத்திற்கான காரணிகளை தொகுப்பதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் அறிவூட்டுவதற்கு தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார். இதனால் பொருளாதார வரவு இல்லாமல் அவரது குடும்பம் வறுமையில் உழலும் நிலை ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் மன்னராட்சிக்கு எதிரான மார்க்ஸ்-ன் பொதுவுடைமை சிந்தனைகள் ஆட்சியாளர்களுக்கு கோபமூட்டியதின் விளைவாக அவர் பிரஷ்யா(ஜெர்மனி), பெல்ஜியம், பிரான்ஸ், பிரிட்டன் என நாடு கடத்தப்பட்டார். எந்த நேரத்திலும் அவரை விட்டு விலகாத ஜென்னி அவருடனேயே சென்றார். வறுமையும் அவர்களுடனேயே பயணித்தது.

செல்லும் இடங்களில் சுகாதாரமற்ற சிறிய வீடுகளும் அன்றாடம் வாழ்க்கையை ஓட்ட வாங்கிய கடன் சுமையும் அவர்கள் வாழ்க்கை நெடுக இருந்தாலும் மார்க்ஸ் ஜென்னியின் காதல் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் விளைவு மோசமாக இருந்தது. ஏழு குழந்தைகள் பிறந்த போதிலும் நாலு குழந்தைகளை வறுமையும் நோயும் கொன்று விட்டன.

1850 ஆம் ஆண்டு லண்டனில் குடியிருந்த போது ஜென்னி தனது நண்பரான வெய்டெமையரிடம்  உதவி கேட்டு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான்காவதாக பிறந்த குழந்தை இந்த உலகிற்கு வந்த நாள் முதல் ஒரு நாள் கூட இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக உறங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே அவன் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதின் விளைவாக எனது மார்பின் தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் ரத்தம் கொட்டியது” என்கிறார். இது போதாதா அவர்களின் வறுமை நிலையை உணர்த்த…

மற்றொரு கடித்தில் “பிறக்கும் போது தொட்டில் இல்லை. இறக்கும் போது சவப்பெட்டி வாங்குவது கூட கஷ்டமாகி போனது” என்று தனது இரண்டாவது குழந்தை இறந்த போது எழுதியிருக்கிறார் ஜென்னி…

இதற்கெல்லாம் காரணம் மார்க்ஸ் தான் என்று எப்போதும் கருதியது இல்லை. ஜென்னி மார்க்ஸ் மீதான காதலும் கொஞ்சம் கூட குறையவும் இல்லை. மார்க்ஸ் தனது சித்தாந்தத்தை கொண்டு செல்வதற்கு எதற்கும் கலங்காமல் தொடர்ந்து இயங்க உறுதுணையாக இருந்தார் ஜென்னி.

அது மட்டுமல்ல மார்க்சின் சமூக போராட்டத்தில் ஜென்னியின் பங்கும் உள்ளது. மார்க்ஸ்-ன் எழுத்துக்களை ஜென்னியே முதலில் படித்து தன் கைப்பட எழுதி பதிப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜென்னி ஓர் அரசியல் சிந்தனையாளரும், எழுத்தாளரும் கூட. மார்க்சுடன் அரசியல்வாதிகள் தத்துவ அறிஞர்கள் நடத்தும் விவாதங்களில் ஜென்னியும் ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார்.

கம்யூனிச ஆசான்களான காரல் மார்க்ஸூம் அவரது நண்பருமான ப்ரெட்ரிக் ஏங்கல்ஸும் இணைந்து 1847 ஆம் ஆண்டு நிறுவிய கம்யூனிஸ்ட் லீக்கில் முதல் உறுப்பினர் ஜென்னி மார்க்ஸ் தான். அதுவே பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது.

மார்க்ஸ் எழுதிய ஒவ்வொரு புத்தகத்திலும் அவர் செலுத்திய உழைப்பிலும் ஜென்னியின்  பங்கு அளப்பரியது. ஆம் ஜென்னி,  மார்க்சை மட்டும் நேசிக்கவில்லை. அவரது கம்யூனிச சித்தாந்தத்தையும் நேசித்தார். உழைக்கும் மக்களின் விடுதலையை நேசித்தார். அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். அவரது நினைவு நாளான டிசம்பர் 2 இன்று நாமும் ஓர் உறுதி கொள்வோம் மார்க்சும் ஜென்னியும் நேசித்த கம்யூனிச சித்தாந்தத்தையும் உழைக்கும் மக்களுக்கான விடுதலையையும் அதற்கான போராட்டத்தை பொறுப்பேற்று கொண்டு செல்வோம். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான விடுதலையை சாதிப்போம்.

  • நலன்

4 COMMENTS

  1. உணர்ச்சிகரமான கட்டுரை இது. ஜென்னியையும், மார்க்ஸையும் பிரித்துப் பார்க்கவே முடியாது! ஜென்னி, அவர்களுடைய குடும்ப தோழன் வெய்டமையருக்கு, தமது குடும்ப வறுமை நிலைமையை எடுத்து விளக்கிக் கடிதம் எழுதுகின்ற பாங்கு வியக்கத் தகுந்தது. வறுமையின் கோரப்பிடி நம் அனைவரையும் கண்ணீர் சிந்த வைக்கிறது. ‘ இப்படி ஒரு கடிதம் தங்களுக்கு எழுதுவதே மார்க்ஸூக்கு தெரியாது; அவர் இது விஷயத்தில் மிகவும் அவமானகரமானதாக கருதக்கூடியவர்; இப்பொழுதும் தங்களிடம் நான் தனிப்பட்ட உதவிகள் எதையும் கேட்கத் துணியவில்லை; மாறாக அங்கே இருக்கின்ற பொழுது எனது கணவர் எழுதி வெளியிட்ட நூல்கள் விநியோகப்பட்ட பத்திரிகைகள் இவற்றின் வாயிலாக கிடைக்க வேண்டிய பணத்தையாவது நிலுவை வைத்துள்ள பலரிடமும் வசூல் செய்து அனுப்புவீர்களேயானால் நான் பெரிதும் நன்றியுடைவளாய் இருப்பேன்…’ என்று எழுதுகிறாள். இப்படி ஒரு மகத்தான பெண்மணி ஜென்னி, ஆசான் மார்க்சிற்கு இணையராக கிடைத்தது மாபெரும் ‘பாக்கியம்’ தான்! ஜென்னியின் மிகப்பெரும் பணக்கார பின்புலத்தை எல்லாம் கடாசி எரிந்துவிட்டு கொள்கைக் கோமானாக விளங்கிய தம்மை விட 4 ஆண்டுகள் இளையவரான மார்க்ஸைக் காதலித்து கரம்பிடித்து வாழ்நாள் முழுவதும் அவரை பிரியாமல் அனைத்து சுமைகளையும், துக்கங்களையும், இன்னல்களையும், சிறைக் கொடுமைகளையும் அனுபவித்த துயரங்கள் பற்றி கட்டுரையாளர் தோழர் நளன் சிறப்பாகவே பதிவிட்டுள்ளார். தோழருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

    • எப்போது ஜென்னியை பற்றி எழுதினாலும் என் கண்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர் ததும்பும் தோழரே. இப்படியெல்லாம் ஒரு பெண்ணால் வாழ முடியுமா என்று. இப்போதும் நம்ப முடியவில்லை. மார்க்சை பார்த்து பொறாமை மேலிட வைக்கிறது. நிச்சயமாக சொல்கிறேன் ஜென்னி என்ற ஒரு பெண் இல்லை என்றால் மார்க்சால் இந்த அளவுக்கு செயல்பட்டிருக்க முடியுமா என்று? மார்க்சுக்கு கிடைத்த நண்பரும் துணைவியாரும் அபூர்வமானவர்களே. யாருக்கு கிடைக்கும் இந்த கம்யூனிச உறவு.

  2. ஆம் நண்பரே, குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படி இருந்தபோதிலும் மார்க்சின் விஞ்ஞான மற்றும் அரசியல் பணியில் ஜென்னி அலுப்படையாமல் உதவி செய்தாள். பல வருட காலம் ஜென்னியே மார்க்சின் காரியதரிசிப் பொறுப்பில் பணியாற்றினாள், அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தாள், கட்சிப் பணிகளில் அவருடைய “தகவலறிவிப்பாளராக” இருந்தாள். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களுடன் அவள் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள்; அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அவள் அக்கறை காட்டி வந்தாள். அவள் தன்னைக் கட்சியின் ஊழியன் என்று பெருமையாகக் கருதினாள். அவள்… அவள்… அவளில்லையேல் மார்க்ஸ் இன்றளவும் பேசப்படும் தத்துவஞானியாக வலம் வந்திருப்பாரா என்பது சந்தேகமே. இதைத்தான் மார்க்சும் குறிப்பிடுகிறார் “அவளைப் போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன்” என்று…
    இது போல் வரலாற்று நினைவுகளை நினைவு கூறும் வகையில் தொடர்ந்து பதிவிட்டால் வாசகர்களாகிய நாங்கள் அதனை பிறருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் எடுத்துரைப்போம்.

    • நிச்சயமாக தோழரே. தொடர்ந்து எழுதுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here