2025 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து உலகின் மையப் பகுதியான ஆசிய நாடுகளில் போர்த் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேற்கு ஆசியப் பகுதி என்று அழைக்கப்படும் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாதப் போர் பல்லாயிரம் உயிர்களைக் கொன்றொழித்துள்ளது. காஷ்மீரில் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை படுகொலை செய்ததால் உருவான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்; தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நடப்பு செய்தியாக மாறியுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவில் இணைப்பதற்கு உக்ரேனை தயாரிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் போர் தொடர்ந்து கொண்டுள்ளது.
இவ்வாறு உலகின் பல்வேறு முனைகளில் நடக்கின்ற போர்களுக்கு பின்னணியில் உலகின் கொடிய பயங்கரவாதியும், மேல்நிலை வல்லரசுமான அமெரிக்கா உள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிந்த போதிலும், அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் உலகம் எங்கும் வெடிக்கவில்லை.
கடந்த ஜூன் 13ஆம் தேதி திடீரென்று இஸ்ரேல் ஈரான் நாட்டின் மீது தாக்குதலை தொடுத்தது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் முன்னேறி வருவதாகவும், அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எதிரானது என்றும் கூறிக்கொண்டு இந்த தாக்குதல் நடவடிக்கையை துவங்கியது. தனக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இல்லை என்று அமெரிக்கா பித்தலாட்டமாக முன்வைத்து வருகின்ற போதிலும், தற்போது வரை இஸ்ரேலுக்கு ஏவுகணை மற்றும் வெடி மருந்து பொருட்களை வாரி வழங்கி வருகிறது.
ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானில் உள்ள நடான்ஸ், கோண்டாப், கோர்ராமாபாத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி தளங்கள் ஆகிய170 க்கும் மேற்பட்ட இடங்கள், 720 இராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை இலக்காகக் கொண்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஒரே இரவில் தீவிரமடைந்தது
தொடர்ச்சியாக நான்காவது நாளாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இரு நாடுகளின் தலைவர்களும் பதிலடிகள் தொடரும் என்று பேசி வருகிறார்கள். இந்தத் தாக்குதலில் இதுவரை, உயர் அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 14 மூத்த ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெஹ்ரான் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பொதுமக்கள் இறந்ததாக ஈரானிய அரசு தெரிவித்திருக்கிறது. அதே நேரம் ஈரான் இஸ்ரேலை குறிவைத்து சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 100 ட்ரோன்கள் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளமிக்க பகுதிகளை ஒவ்வொன்றாக தின்று செரித்து வரும் அமெரிக்க பயங்கரவாத கும்பல்; முதலில் தென்னாப்பிரிக்கவின் லிபியாவையும், அதன் பிறகு ஈராக்கையும் கைப்பற்றியதை போல தற்போது ஈரானை கைப்பற்றுவதற்கு வெறிகொண்டு அலைந்து கொண்டுள்ளது. இதற்கு மத்தியில் சிரியா, ஏமன் போன்ற நாடுகளின் மீதும் தாக்குதலை தொடுப்பதற்கான காரணம் அதன் அடியில் உள்ள எண்ணெய் வளத்தை சூறையாடுவது தான்.
ஈரானின் வசம் சுமார் 16 ஆயிரம் கோடி பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலக எண்ணெய் வளத்தில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஈரானின் வசம் இருக்கிறது. வெனிசுலா, சவூதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் வரிசையில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நான்காவது நாடாக ஈரான் இடம் பிடித்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் ஈரானை முதலிடத்திற்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. இயற்கை எரிவாயு இருப்பில் ஈரான் முதலிடத்தில் இருக்கிறது. உலக இருப்பில் 18 விழுக்காடு இயற்கை எரிவாயு ஈரான் வசம் உள்ளது. எண்ணெய் உற்பத்தியில் ஈரான் தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஈரானின் வயல்களில் இருந்து எடுக்கப்படுகிறது.
இவை தவிர வளைகுடா நாடுகளில் மட்டும் உலகில் உள்ள எண்ணெய் வளங்களில் 55 சதவீத முதல் 57 சதவீதம் வரை இருக்கிறது. ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் வலுமிக்க ஒரு நாடாக வரலாற்று வேர்களுடன் இருக்கிறது. மக்கள் தொகையிலும் சரி, பரப்பளவிலும் சரி உலக அளவில் 17 வது இடத்திலும், ஆசிய கண்டத்தில் ஆறாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. மற்ற வளைகுடா நாடுகளை விட அதிக அளவு மலைப்பாங்கான பகுதிகளையும் ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதனால் தான் ஈரானை அமெரிக்க, பிரிட்டன், இஸ்ரேல் முக்கூட்டு குறிவைத்து தாக்கி வருகிறதே ஒழிய, அணு ஆயுத தயாரிப்பு என்பதெல்லாம் ஒரு சாக்கு போக்குதான். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒருபுறமிருக்க இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுத்த நடவடிக்கைக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும், புரட்சிகர எண்ணம் கொண்டவர்களும் கூட ஈரானை ஆதரிக்கின்றனர்.
சமகாலத்தில் பாலஸ்தீனத்தை சல்லடையாக துளைத்து லட்சக்கணக்கான மக்களை நிர்கதியாக மாற்றியுள்ள யூத, ஜியோனிச வெறிபிடித்த இஸ்ரேல் மீது இப்படிப்பட்ட ஒரு தாக்குதல் நடப்பதை ஆதரிக்கவும், அதனைக் கண்டு மகிழ்ச்சியுறவும் மக்கள் துவங்கியுள்ளனர்.
ஈரான் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது மேல்நிலை வல்லரசான அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடான பிரிட்டன் இவற்றுடன் பிராந்திய வல்லரசாக உருவாகியுள்ள இஸ்ரேல் ஆகிய மூன்றும் கூட்டு சேர்ந்து நடத்தியுள்ள தாக்குதல்கள்தான் என்பதை முதலில் புரிந்து கொண்டால்தான் இந்த போரின் கோர முகத்தையும், அது ஏற்படுத்தப் போகின்ற அரசியல், பொருளாதார பாதிப்புகளையும் நாம் உணர முடியும்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நமது வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அல்லது இதனை ஒரு வேடிக்கை போல கருதிக் கொண்டு கடந்து போவதும், அரசியல் உணர்வற்ற நிலையில் பாட்டாளி வர்க்கம் பின்தங்கி உள்ளதை நமக்கு காட்டுகிறது.
ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் அணு ஆயுதத்தை தயார் செய்கிறது என்றும் அதற்கு அதற்கான செறிவூட்டுகின்ற பொருட்களை அதிகமாக வைத்திருக்கிறது என்றும் உலகின் மிகக் கொடிய சாவு வியாபாரிகளான கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பூமியில் பல்வேறு நாடுகளின் மீது குண்டு மழை பொழிந்து போர் நடத்தி வருகின்ற போர் குற்றவாளியான அமெரிக்காவும் அதன் இளைய பங்காளியான இஸ்ரேலும் முன் வைப்பது வேடிக்கைதான்.
படிக்க:
🔰 ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
🔰 போர்களைத் தூண்டும் அமெரிக்காவின் அடாவடி, இஸ்ரேலின் போர்வெறி !
”மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, “கடைசி ஐரோப்பிய காலனியான” இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி – இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.
அதற்கு மாறாக, ஷியா – இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப்படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.” என்று விளக்குகிறார் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை பற்றி 2018 வாக்கில் ஆய்வு செய்துள்ள தோழர் கலையரசன்.
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்காவின் துணையுடன் நடத்தி வருகின்ற இந்த தாக்குதல்களை புரிந்து கொள்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சமூக, பொருளாதார நிலைமைகளை புரிந்து கொள்வது ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மத்திய கிழக்கு, மத்திய ஆசிய பகுதி, இஸ்லாமிய நாடுகள், ஆசிய கண்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பிற நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்து நாடுகளில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய பொருளாதார படிவங்களே நீடிக்கின்றன.
பல இடங்களில் இனக்குழுக்கள், பழங்குடி மக்கள், வர்ண இன வம்சாவளியினர் என பிரிவினரான மக்கள் அதையொட்டி இயற்கையை சார்ந்து சுயசார்பு பொருளாதார முறை மேலோங்கி நிற்கின்ற பகுதிகளும் உள்ளன; நிலப்பிரப்புத்துவமே வளராத பகுதிகளும் உள்ளன; இங்கெல்லாம் புகுந்துள்ள ஏகாதிபத்திய காலனியாதிக்கவாதிகள் தங்களது ஒடுக்குமுறை சுரண்டல் நலன்களுக்காக மக்களை மத அடிப்படையிலும், மதப் பிரிவுகள் அடிப்படையிலும், இனக்குழுக்கள் அடிப்படையிலும் பிரிந்து கிடப்பதை வரவேற்று ஊக்குவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவர்களுக்கு பல கோடி டாலர்களை அள்ளிக் கொடுத்து பிளவுபடுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
இந்த மத்திய கிழக்கு நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களோ அல்லது புரட்சிகர கம்யூனிச இயக்கங்களோ இல்லை அல்லது இருந்தாலும் பலவீனமாகவே உள்ளது என்பதன் காரணமாகவே தேசிய விடுதலை உணர்வு, தேசப்பற்று, வர்க்க ஒற்றுமை போன்ற கருத்தாக்கங்கள் அவர்களை ஆட்கொள்ளவில்லை. மாறாக அவர்களுக்குள் பிரிவுகள், பிளவுகள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், மத அடிப்படைவாதிகளின் கையில் சிக்கிக் கொண்டு சீரழிவதும் தொடர்கிறது.
இதனை விரிவாக பார்ப்போம்…
(தொடரும்…)
- நன்னிலம் சுப்புராயன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி