இதுநாள் வரை உலக ரவுடியான அமெரிக்காவின் அல்லக்கையாகவும் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளையாகவும் அப்பாவி பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துவந்த சியோனிச இஸ்ரேல் நேற்றுமுன்தினம் இரான் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அந்நாட்டு இராணுவத்தின் தளபதிகளையும், விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேலின் தலைநகரம் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் நோக்கம் ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 60 சதவீதம் வரை அதனிடமுள்ள யுரேனியத்தை செறிவூட்டியுள்ளதாகவும், 90 சதவீதம் செறிவூட்டிவிட்டால் ஈரான் அணுகுண்டைத் தயாரிக்கமுடியும் என்பதால் அதைத் தடுக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது என்று செய்திகள் பரப்பப்படுகின்றன.
தன்னிடம் 5277 அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு, உலகிலேயே முதல் முதலாக அணுகுண்டுகளை வீசி இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்காவும், அதன் அல்லக்கையாக இருந்துகொண்டு 90 முதல் 300 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலும், ஈரான் அணுகுண்டை தயாரிக்கக்கூடாது என்பது வேடிக்கை (நாம் போரையோ அல்லது அணு ஆயுதங்களையோ ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்). அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் ஒருதலைபட்சமாக தயாரித்து வைத்திருக்கும் அணுஆயுத பரவல் சட்டத்தில் பல ஆண்டுகளாக ஈரானை நிர்பந்தித்து வந்தபோதிலும் ஈரான் அதில் கையெழுத்திட மறுத்து தன்மேல் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளாக ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்கினால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடமுடியும் என்று மறுத்துவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபராக இரண்டாம்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாசிச கோமாளி டிரம்ப் மீண்டும் இப்பிரச்சினையை கையிலெடுத்து ஈரானை மிரட்டிவந்தார். ஈரானின் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாத நிலையில் சென்ற வாரத்தில் மீண்டும் ஈரான் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது. அந்நாட்டின் மதத்தலைவரான காமேனி ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவது அணு ஆயுதத் தயாரிப்புக்கானதல்ல, முற்றிலும் மக்களின் பயன்பாட்டிற்கானது என்று உறுதியாகக் கூறினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா தனது அடியாளான இஸ்ரேலை ஈரானைத் தாக்க ஏவியுள்ளது. வீராவேசத்துடன் ஈரானின் மீது தாக்குதல் கொடுத்த இஸ்ரேல், ஈரானின் பதிலடித்த தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளது. சியோனிச இஸ்ரேலின் ரத்தவெறி பிடித்த பிரதமரான பெஞ்சமின் நெதன்யாஹு நாட்டைவிட்டு ஓடிவிட்டதாகவும் அவரது அமைச்சரவை சகாக்கள் நிலவறைகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
படிக்க:
🔰 இஸ்ரேல் இனப்படுகொலைக்கு உதவிய மைக்ரோசாப்ட்! எதிர்த்து முழங்கிய அதன் ஊழியர்!
🔰 அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து போரை நிறுத்திய இந்தியா பாகிஸ்தான்
எண்ணெய்வளமிக்க அரேபிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளால் பூர்வகுடிகளான பாலஸ்தீனர்களின் நிலங்களை பிடுங்கி ஐரோப்பாவிலிருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடான இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் நிலங்களை முற்றுமுழுதாக தனதாக்கிக்கொள்ள அமெரிக்காவின் ஆசியுடன் காசாவில் இனவழிப்பை செய்துவரும் இஸ்ரேலை கண்டிக்கவோ தடுக்கவோ கையாலாகாத அரபு நாடுகளில் ஈரான் மற்றும் ஏமன் நாடுகள்தான் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக எதிர்த்தாக்குதல் தொடுத்தன. இஸ்ரேலைப் பகைத்தாலோ அல்லது அமெரிக்காவைப் பகைத்தாலோ மக்களைத் தூண்டிவிட்டு “வண்ணப்புரட்சிகள்” மூலம் தனது ஆட்சியதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயத்திலிருக்கும் மற்ற அரபு நாடுகளின் முடியாட்சி மன்னர்கள் காஸாவின் மரண ஓலத்தை கண்டும் காணாமல் பாசிச கோமாளியான டிரம்புக்கு சுமார் 3300 /- கோடி ரூபாய் மதிப்பிலான விமானத்தை வழங்கி குஷிப்படுத்தியிருக்கின்றன.
ஏற்கனவே காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டோ அல்லது கொன்றுவிட்டோ அப்பகுதியை தனக்குத் தரவேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில் அதை செயல்படுத்தும் வகையில்தான் போர்நிறுத்ததை மீறி பாலஸ்தீன மக்களின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை கொன்றொழித்து வருகிறது.

இந்நிலையில்தான் இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதலை நடத்தி அந்நாட்டை நேரடி போருக்கு இழுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தையும், மற்ற நாடுகளுக்கும் போர் பரவலுக்கான சூழ்நிலையும் உருவாக்கியுள்ளது. போர் எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதையும், அதனால் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண வெகுமக்கள் என்பதையும் உணர்ந்துள்ள நாம் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கார்ப்போரேட் கூட்டத்தையும், ஏகாதிபத்திய போர் வெறியர்களையும், ஜனநாயகம் என்றால் என்னவென்பதையே அறிந்திராத உல்லாச கூட்டமான அமெரிக்க அடிவருடி அரபு மன்னர்களையும் முறியடிப்போம். போரில்லா உலகத்தைப் படைத்திட உறுதிபூணுவோம்.
– ஜூலியஸ்