ழ.நெடுமாறனால் பங்கரில் புதைக்கப்பட்ட உண்மைகள்!

15/5/2009 ல் பழ.நெடுமாறன், ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் “இலங்கையின் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன” என அறிவித்தார்.

அத்துடன், “போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக வெளியுறவுத் துறைக்கு வழங்கியுள்ளது”. அதில் “போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்கக் கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்” என்கிறது, அந்த அறிக்கை.

இதேபோல் கடைசி வரை ஐ.நா.வைச் சேர்ந்த விஜய நம்பியாரும், (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.அவர் இந்த நாட்களில் இலங்கை சென்றார். “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற தூண்டில் புலிகளுக்கு வீசப்பட்டது.

அதற்கு முன்பு புலிகளிடம் இருந்த வாய்ப்பு ,சண்டை இட்டு சாவது அல்லது சைனைடு கடித்து சாவது. மேற்கண்ட நிகழ்வு சரணடைதல் என்ற முடிவை நோக்கி அவர்களை தள்ளவே நடத்தப்பட்டது.

அதன்படி மே 17 அன்று ,தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், “நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கிச் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்.”

நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் சனிக்கிழமை (16.05.09) மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹனா, பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். “இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன், பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடைய வேண்டும் என நான் கூறியிருந்தேன்” என்கிறார் கொஹனா. “அவ்வாறு அவர்கள் சரணடைந்தால், உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதுதானே?” என்று கேட்டு நார்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் கொஹனா அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார். (அப்படி சரணடைந்த நபர்களும் கொல்லப்பட்டனர் )

சிறீலங்கா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹனா

இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், ‘ இறுதிப் போரில் புலிகள் மற்றும் அவர்களின் தலைமை தப்பிச் செல்ல வழி இல்லாத முட்டு சந்தில் சிக்கிய நிலையில் இருந்தார்கள்’ என்பது புலப்படும்.

கடல் வழியில் கடற்புலிகளின் படகுகளை முற்றாக அழித்து, இலங்கை கடற்படை காவல் காத்தது. மேலும் சர்வதேச சாட்டலைட் , ரேடார் கண்காணிப்பும் இருந்தது. கடலின் மேல்மட்டதிலோ அல்லது நீர்மூழ்கி கப்பல் மூலமாகவோ யாரும் தப்பி செல்ல இயலாத நிலையே இருந்தது.

அதன் பிறகே மே 21 அன்று ,பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியும்,உயிரற்ற உடல் இருக்கும் புகைப்படமும்இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற கட்டுரையை புதிய ஜனநாயகம் வெளியிட்டது .அந்த பத்திரிக்கையை விற்பனைக்கு கொண்டு சென்ற தோழர்களை, சில இடங்களில் ‘புலி ஆதரவு கும்பல்’ தாக்க முற்பட்டது. தோழர் தியாகு “போராளிக்கு வீரசாவு என்பது பெருமை” என்று பிரபாகரன் மரணம் பற்றி கூறியதற்காக, அவரை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தனர்.

இதையும் படியுங்கள்: இலங்கை போராட்டம்: தமிழினவாதிகளின் வெற்றுக் கூச்சல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மே இறுதியில் BBC க்கு அளித்த பேட்டியில் ” தலைவர் வீர சாவு அடைந்து விட்டார் ” என்றார். உடனே அவரை துரோகி என்று முத்திரை குத்தினார்கள்.

அதாவது புலி ஆதரவாளராக இருந்தாலும், தான் பேசுவதற்கு எதிர் கருத்து பேசினால் அவர்கள் துரோகிகள் , எட்டப்பர்கள். இப்படிப்பட்ட பட்டங்களும் இவர்களின் சொந்த சரக்கு அல்ல ! பிரபாகரனின் சரக்கு ! ஒருவேளை அவர் போல இவர்களும் ஆயுதம் தரித்து இருந்தால் பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொல்பவர்களும் இறக்கடிக்கப்பட்டு இருப்பார்கள்

இந்த பொய்க்கு , பாசிச செயல்பாட்டுக்கு சூத்திரதாரி தான் பழ.நெடுமாறன்

ஒல்லியான உயரமான உருவம், அமைதியான பேச்சு, உள்ளுக்குள் ஜனநாயக மறுப்பு ,பாசிச மனநிலை என கலந்த கலவை தான் பழ.நெடுமாறன் .

பழநெடுமாறன் ஏதோ தவறுதலாக பா.ஜ.க வலையில் விழுந்து விட்டது போல இந்த அறிக்கை வந்ததும் பலர் குறிப்பிட்டனர்.

முதலில் பழ. நெடுமாறன் அரசியலை கவனிப்போம். இந்திரா காந்தி அவசரநிலை பிறப்பித்து ஜனநாயத்தை ஒடுக்கி சர்வாதிகாரியாக நின்ற பொழுது அவரை ஆதரிப்பதில் இருந்து தான் அவர் அரசியல் தொடங்கியது. அவர் கொல்லப்பட்ட பிறகு மரம் தேடும் கொடியாக நெடுமாறன் வேறு ஒரு கொடி தேடிய பொழுது அவருக்கு பிரபாகரன் கிடைத்தார் . முஸ்லீம்கள் கொலை, சகபோராளி இயக்கங்களை சார்ந்தவர்களின் கொலைகள் , ராஜானி, கவிஞர் செல்வி , சரோஜினி போன்ற பெண் ஆளுமைகளின் கொலைகள், தன் இயக்கத்திலேயே எதிர்த்தவர்கள் கொலை , பொதுமக்கள் கொலை என பிரபாகரன் சர்வாதிகாரியாக வளர வளர நெடுமாறன் என்ற கொடியும் ஊட்டத்தோடு படர்ந்து வளர்ந்தது. பின் 2009 ல் அவரும் கொல்லப்பட்டதும் அந்த கொடி அடுத்த சர்வாதிகாரியை தேடுகையில், அருகிலேயே பா.ஜ.க இருப்பதை உணர்ந்து அதில் பற்றிப் படர்ந்தது இயல்பே!

இதில் நெடுமாறன் குற்றம் என்ன? அவரைப் பற்றி தவறாக மதிப்பிட்டவர்கள் மீது தானே குற்றம்!

சரி இறுதிப் போர் காலத்தில் என்ன நடந்தது என புலிகளின் சர்வதேச ஆயுத கொள்முதல் பிரிவில் இருந்த KB சொல்வதை கேட்போம்.

அவர் அளித்த பேட்டியில், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி தங்களது குடும்பத்தை காப்பாற்றும் படி கேட்ட பொழுது ஹெலிகாப்டர் மூலம் ஒரு காப்பாற்றும் நடவடிக்கையை திட்டமிட்டு தலைமையிடம் ஒப்புதல் வாங்கிய பிறகும் சர்வதேச நிதி தலைமை அதற்கு நிதி தராமல் சாகவிட்டனர் என குற்றம் சாட்டினார்.

யார் இந்த சர்வதேச நிதி பொறுப்பாளர்கள்?

புலிகள் தங்கள் சொத்துகளாக கப்பல் நிறுவனம், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள், வணிக நிறுவனங்கள், என பல கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி வைத்து இருந்தனர். இதை நிர்வகித்த கூட்டம் 2008 காலத்திலேயே புலிகள் தோல்வி அடையப் போகின்றனர் என கணித்து உள்ளனர் . எனவே பிரபாகரன் உள்ளிட்ட தலைமை குடும்பத்துடன் இறந்ததும்சொத்துக்களை தங்களுடையதாக மாற்ற திட்டமிட்டனர். மறுபுறம் நெடுமாறன் உள்ளிட புலி ஆதரவு கும்பலோ தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் போதும் போரை நிறுத்திவிட முடியும் என இங்கே பேசியதோடு இல்லாமல் புலிகளையும் தவறாக வழிநடத்தினர்.

2009 ல் பிராபகரன் இறப்புக்கு பின்பு சொத்தை கைப்பற்றிய கும்பலும் , தவறான வழிகாட்டி சாகடித்த கூட்டமும்தாங்கள் தப்பிக்க சொன்ன வார்த்தை தான் “ பிரபாகரன் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் “ என்பதும் இதை எதிர்த்து உண்மையை சொல்பவர்களை”துரோகி” என்பதும்!

இப்போது அதானி ஊழல், பி.பி.சி ஆவணப்படம் என அம்பலப்பட்ட சூழ்நிலையில் அதை திசை திருப்ப எய்த அஸ்திரம் தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது!

இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது நமக்கு மெட்ராஸ் படத்தில் வரும் வசனம் தான் நினைவுக்கு வருது. “இந்த செவுரு இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?” என்பார்கள்.

அது போல இந்த ஈழத்து பொய்கள் இன்னும் எத்தனை உண்மை செய்திகளை காவு வாங்கப் போகுதோ?

(தொடரும்)

  • கவிஞர் செல்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here