பாசிச பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை என்ற எண்ணிக்கையான 372 இடங்களை பெறவில்லை என்பதும் அதனால் கூட்டணி என்ற பெயரில், கொள்கை கோட்பாடற்ற கிரிமினல் அரசியல் பேர்வழிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்துள்ளது என்பதையும் நாடே அறியும்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜக கட்சியைத் தவிர போட்டியிட்ட பிற கட்சி வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு பல்வேறு கீழ்த்தரமான வழிமுறைகளை செய்தது என்பதை அந்தக் காலகட்டத்திலேயே புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தியே வந்தனர். தேர்தல் ஆணையத்தின் துணையுடன் 79 இடங்களில் 4.6 கோடி வாக்குகள் அதிகமாக பதிவு செய்து மோசடி செய்துள்ளனர் என்பதை சமீபத்தில் TN VOICE என்ற அமைப்பும் அம்பலப்படுத்தி உள்ளது.
2014 முதல் இந்திய ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடித்துள்ள ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார கும்பல், ’பிற கட்சிகளைப் போல தாங்கள் இல்லை, நேர்மையாக ஆட்சி நடத்துபவர்கள் என்றும்; தங்களுக்கு கொள்கை கோட்பாடு உள்ளது’ என்றும் பீற்றிக் கொண்டனர். இதனால் இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக அனைத்து சலுகைகளையும் பெற்று வருகின்ற பார்ப்பனர்கள் ஆதிக்க சாதிகள், மற்றும் வர்க்க ரீதியாக அனைத்து வசதிகளையும் அனுபவிக்கின்ற முதலாளிகள், நிலவுடமையாளர்கள், படித்த மேட்டுக்குடியினரில் பெரும் பிரிவினர் அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி ஆதரித்து வந்தனர். தற்போதும் ஆதரிக்கின் றனர்.
ஏனென்றால் பிற கட்சிகளைப் போல சாதி அரசியல், வாரிசு அரசியல், கிரிமினல் அரசியல் போன்ற வழிமுறைகளை பாஜக கடைபிடிக்கவில்லை என்றும், அது ’நாட்டுக்காக தன்னலமின்றி உழைக்கின்ற தேசபக்தர்களின் இயக்கமான’ ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இயங்குகிறது என்பதால் நேர்மையான அமைப்பு என்றும் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இரண்டாவது முறையாக 2019 ஆட்சியைப் பிடித்த பிறகு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் முடக்குவது; தனக்கு எதிராக செயல்படுகின்ற கட்சியை விலை பேசி வாங்குவது; பேரம் படியாத நிலையில் அந்தக் கட்சியில் உள்ள ஒரு கும்பலை பல ஆயிரம் கோடி செலவு செய்து தன் பக்கம் இழுப்பது; இவை எல்லாவற்றுக்கும் மேல் இதற்கெல்லாம் பணியாத எதிர்க்கட்சியினர் மீது வருமான வரி துறையை ஏவுவது; பல்வேறு பொய் வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது; நீதிபதிகள் மூலம் உடனடியாக ஜாமீன் கிடைக்காத வகையில் நீண்ட காலம் சிறையில் அடைப்பது; எதிர்த்து கேள்வி கேட்கின்ற ஊடகங்களை மிரட்டுவது அல்லது விலைக்கு வாங்குவது; ஜனநாயகத்தின் தூண்கள் என வர்ணித்துக் கொள்ளும் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது என்று அனைத்து வகையான சதித்தனங்களையும் மேற்க் கொண்டனர். சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்பதால், அவர்களை நிபந்தனையின்றி ஆதரித்த ஒரு பிரிவு அவர்களின் மேல் எரிச்சல் அடைந்துள்ளனர் நம்பிக்கை இழந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிராவில் சிவசேனா என்ற இந்து மதவெறி அமைப்பை இரண்டாகப் பிளந்தது பதவி ஆசை காட்டி அதில் உள்ளவர்களை தன் பக்கம் இழுத்து கட்சியின் நிறுவனரான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போட்டியிடுவதற்கு தூண்டியது.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அமைச்சர் ராஜ் குமார் ஆனந்தை தன் பக்கம் இழுப்பதற்கு முயற்சித்தது. அவர் தற்போதைக்கு பாஜகவின் B டீமான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார்.
படிக்க:
♦ அரவிந்த் கெஜ்ரிவால் கைது: எதிர்கட்சிகளை அழிக்கும் பாசிஸ்டுகளின் நடவடிக்கை!
♦ 2024 நாடாளுமன்றத் தேர்தலும்! ஜனநாயகத்துக்குக் கட்டப்பட்டுள்ள கல்லறையும்!
காஷ்மீரில் நீண்ட காலமாக காங்கிரசில் செயல்பட்டு வந்த குலாம் நபி ஆசாத் என்பவரை தன் பக்கம் இழுக்க முயற்சித்து முதல் படியாக அவருடன் 64 முக்கிய தலைவர்களை வெளியேற்றி தனிக் கட்சி துவங்க செய்தது.
இவ்வாறெல்லாம் பிற கட்சிகளில் செயல்படுகின்றவர்களை இழுப்பதற்கு பல்லாயிரம் கோடி செலவு செய்வதும், அவ்வாறு இழுக்கின்ற கீழ்தரமான கிரிமினல் நடவடிக்கைகளையே தனது ஊடகங்களின் மூலம் ’ராஜதந்திரம்’ என்று மெச்சிக்கொள்ள செய்தது.
அந்த வரிசையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த சம்பை சோரன் என்பவரை அவர் இதுவரை செயலாற்றி வந்த ஜார்கண்ட் முத்தி மோர்சாவிலிருந்து வெளியேறச் செய்து தனி கட்சி ஆரம்பிப்பதற்கு ஆதரவளித்துள்ளது. இந்த சம்பை சோரன் பீகார் மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் பிரிக்கப்பட வேண்டும் என்று தனி மாநில அந்தஸ்து கோரிய ஜார்கண்ட் முத்தி மோர்சாவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1995 முதல் 5 முறையாக சராய் கேலா சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்த காலத்தில் பிப்ரவரி 2004 முதல் முதலமைச்சராகவும் இருந்து பணியாற்றியவர் என்பதும், பதவி சுகத்தை அனுபவித்து ’ருசி கண்ட பூனை’ என்பதும் குறிப்பிடத் தக்கது.
பீகாரில் இருந்து ஜார்கண்ட் மாநில அந்தஸ்து கோரிய காலகட்டத்தில், ’ஜார்கண்டின் புலி’ என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்ட சம்பை சோரன், தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ”தனக்கு தீங்கிழைத்து விட்டதாகவும், தான் முதலமைச்சர் பதவியில் இருந்த போது தன்னை பல்வேறு வழிகளில் அவமானப்படுத்தியதாகவும்” போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
நேரடியாக பாஜகவிற்கு சென்றால் அது பாஜகவின், ’நாணய அந்தஸ்துக்கு’ கேடு விளைவித்து விடும் என்ற காரணத்தினால், இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநிலம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், தனி கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும், அந்த கட்சியின் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தின் உரிமைகளுக்கு போராடப் போவதாகவும் கதையளந்து கொண்டுள்ளார்.
இது கட்சி துவங்குபவர்களின் சீசன் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் சினிமா நடிகராக ஒரே பார்முலாவில் பல படங்களை வெளியிட்டு கல்லா கட்டிய விஜய் என்ற நடிகர் தமிழகத்தில் நடந்த எந்த முக்கிய போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. தமிழகத்தின் எந்த உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்ததே இல்லை என்ற போதிலும், நேரடியாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் துவங்கியுள்ளார் என்பதும், கொள்கைகளோ, விழுமியங்களோ ஏதுமற்ற அரை பாட்டாளிகளில் ஒரு பிரிவினர் விஜய் கட்சியில் சேர்ந்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சி 3.0 என்று அவர்கள் பெருமை பெற்றுக் கொள்கின்றனர். ஏற்கனவே மோடி 1.0 விலும், மோடி 2.0விலும் என்னென்ன கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்களோ அதையேதான் மோடி 3.0 விலும் மேற்கொண்டுள்ளனர் என்பதும், அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழலில் அதைவிட பல மடங்கு மோசமான அரசியல் கிரிமினல் குற்றச் செயல்கள், குதிரை பேரங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், எதிர்க்கட்சியினரை முடக்குவது, எதிர்க்கட்சியில் இருந்து ஆட்களை கொண்டு வருவது, கட்சிகளை உடைப்பது, கட்சிகளையே விலை பேசி வாங்குவது, பணியாதவர்களை பல்வேறு அரசு இயந்திரங்கள் மூலம் மிரட்டி பணிய வைப்பது, சிறையில் அடைப்பது என்று தனது ஆட்டத்தை துவங்கியுள்ளனர்.
ஆனால் ஊடகங்களிலோ ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பை சோரன் புதிய கட்சி துவங்கப் போவதை பற்றி ஏதோ அவர் சுயமாக முடிவு செய்ததைப் போலவும், தற்போது அவர் செயல்பட்டு வரும் ஜார்கண்ட் முக்தி மோர்சாவில் ஏதோ சிக்கல் இருப்பதைப் போலவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றனர். அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன் வைத்துள்ள ’உருட்டுகளை’ அப்படியே வாந்தியெடுக்கின்றனர். பதவியை ருசித்த பூனையின் நாக்கு ஓய்வெடுக்காது என்பது தான் நியதி.
பாசிச பாஜக நினைத்தால் தனது ஊடக எடுபிடிகள், கோடி மீடியாக்கள், சமூக வலைதளங்களின் மூலமாக தனது பாசிச கொள்கைகளையும், ஆதரவு கருத்தைகளையும் 12 நிமிடங்களில் நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை உருவாக்கி வைத்துள்ளது என்பதும், அதனை ஐந்து நிமிடத்திற்குள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளது என்பதையும், பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் மீது அவர்கள் தொடுக்கின்ற தாக்குதலையும் இணைத்து பார்க்கும் போது தான் எந்த அளவிற்கு நாடு பாசிசமயமாகியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
- மருது பாண்டியன்.