திருவள்ளூர் அருகிலுள்ள காக்களூரில் இயங்கிவரும் ஆவின் பால் உற்பத்தி நிலையத்தி்ல் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு உற்பத்தியாகி வெளிவரும் பால் பாக்கெட்டுகளை டப்புகளில்
அடைக்கும் பணியில் 20-08-2024 இரவு ஈடுபட்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான உமா மகேஷ்வரி (30) என்ற மூன்று குழந்தைகளுக்குத் தாயான அந்த ஏழைப் பெண்மணி, ஏதோ துப்பட்டா சிக்கி விட்டதாகவும், பின்னர் தலைமுடி சிக்கிக் கொண்டதாகவும், அதன் பின்னர் இயந்திரத்தில் தலை துண்டிக்கப்பட்டு மாண்டு போனதாகவும் நிர்வாகத் தரப்பும், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜூவும் வெளியிட்டுள்ள அறிக்கை பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளதைக்
காண நேர்ந்தது.

முதலில் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்ட அற்ப ஊதியத்தை வழங்கி ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமனம் செய்யும் முறை தனியார் துறையில் மட்டுமல்ல; அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல என்பதற்கு அரசின் ஆவின் நிறுவனமே சாட்சியமாயுள்ளது. இதில் கட்சி பேதமுமில்லை.
எல்லோரும் ஒரே மாதிரிதான்.

இங்கே, காக்களூர் ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் கோரமான முறையி்ல் தலை துண்டிக்கப்பட்டு மாண்டு போன அந்த ஏழைப் பெண்மணி உமாமகேஸ்வரி,
ஏதோ அவரது அஜாக்கிரதையினால்தான் இ‌வ்வாறு இறக்க நேர்ந்தது என்ற பாணியில் நிர்வாகமும், அமைச்சரும் விளக்கமளித்திருப்பதென்பது வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுவது போலுள்ளது. விட்டால், அவரே வேண்டுமென்றே இயந்திரத்தில் தலையைக் கொடுத்துத் துண்டித்துக் கொண்டார் எனக் கூறுவார்கள் போலுள்ளது.

ஆண்-பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான கோட் முறையிலான சீருடை வழங்குவதற்கு இவர்களை யார் தடுத்தார்கள்? இப்போது அமைச்சர் வாய் கிழியப் பேசுவதில் என்ன பொருள் இருக்கிறது?


படிக்க: காக்களூர் ஆவின் பால் நிறுவனத்தில் நிர்வாகத்தின் அலட்சியத்தால்                     பறிப்போன பெண் தொழிலாளியின் உயிர்!

             ♠ ஃபாக்ஸ்கான் ஆலையில் பெண் தொழிலாளர்கள் 8 பேர் பலி!


இப்படிப்பட்ட உற்பத்தி சார்ந்த இடங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாகப் பொருத்தப் பட்டிருந்ததா? CCTV கேமரா பொருத்தப் பட்டிருந்ததா?
எதுவுமே வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

சாவுக்கு ஒருவரைப் பொறுப்பாளி ஆக்கி சஸ்பெண்ட் செய்வதும், ஓரிருவர்மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நோட்டீஸ் வழங்குவதும் முற்றிலும் கண்துடைப்பு வேலையே!

ஏழையின் உயிர் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா?

சம்பந்தப்பட்ட கீழ் மட்ட மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர் வரை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே! நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்!

இவ்வளவு கொடூரமான சாவு நடந்திருக்கும் போது அல்லது கொலை நடந்திருக்கும் போது அப்பெண்மணியின் உடற் கூராய்வு முடிந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் ஆவின் நிர்வாகம் சார்பான எந்த ஒரு அதிகாரியோ, சக ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளர்களோ வீட்டிற்கு வந்து துக்கம் விசாரிக்கக்கூட எவருமே வரவில்லை எனில் இவர்களது கல் நெஞ்சினை என்னவென்று கூறுவது?

ஒரு மிகவும் ஏழ்மையான பெண்மணி 30-வயதில் கொடூரமாகச் சாகடிக்கப் பட்டிருக்கிறார். 10 வயதிற்குள் நண்டும் சின்டுமாக பச்சிளம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டு மிகப் பரிதாப நிலையில் நிற்கிறார்கள். கட்டிய கணவர் மிக மிகக் குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்து கொண்டு, ஒப்பந்தத் தொழிலாளியாக ஆவின் நிறுவனத்தில் சேர்த்துவிடப்பட்ட தன் மனைவியின் மிகக் குறைந்த பட்ச சம்பளமும் ஓரளவு கை கொடுக்குமே என்று எதிர்பார்த்திருந்த கணவர் மனம் உடைந்து மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோமென எண்ணி வெதும்பி கல்லாய்ச் சமைந்து நிற்கிறார். உமாமகேஷ்வரியின் தாயோ நகரத்தில் வீடுகளில் பாத்திரம் கழுவி
வயிற்றைக் கழுவிக் கொண்டருந்த நிலையில், தான் பெற்ற மகளின் சாவினால் மனம் உடைந்து கிறுக்குப் பிடித்தவர் போல சுருண்டு கிடக்கிறார்.

மொத்தத்தில் ஓரிருவர் மட்டுமே பங்கேற்று- ஏறத்தாழ அநாதைப் பிணம் போல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார் உமாமகேஷ்வரி.ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளும் இன்ன பிற நிறுவனங்களும், தொழிலாளி வர்க்கத்தை அத்துக்கூலிகளாக மாற்றி இதே கொடுமைகளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஆவின் நிறுவனம் உட்பட அரசுத் துறை நிறுவனங்களும் தொழிலாளி வர்க்கத்தை அத்துக்கூலிகளாக – கொத்தடிமைகளாக நியமித்து
கொலை செய்து முடிக்கின்றனர்.

சொந்த மாவட்டமான சேலத்தில் பிழைக்க வழி இல்லை என்பதால் பெருநகரம் தேடி வாழ்வை வளமாக்கலாம் எனக் கருதி சென்னையை ஒட்டிய பகுதியில் வாழ்க்கைப் பயணத்தைத் துவக்கியது உமாமகேஷ்வரி குடும்பம். ஆனால் வாழ்க்கை இவ்வளவு கொடூரமாக முடியுமென அவரின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கனவிலும்கூட எண்ணிப் பார்த்திருக்காது.

நிலைமைகள் இவ்வாறிருக்க ஆளும் ‘திராவிட மாடல் அரசு’ இவ்விடயத்தில் துளிகூட அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பெயருக்கு பால்வளத்துறை அமைச்சர் மட்டும் சத்தமில்லாமல் 4 வரியில் ஒரு அறிக்கை கொடுக்கிறார்.அதுவும் இந்த ஏழைப் பெண்மணியே சாவை வரவழைத்துக் கொண்டது போன்ற கேவலமான அறிக்கை. ஏதோ கலெக்டர் நிவாரணம் தருவாராம். ஆம்…பிச்சை போடுவாராம்! அதைப் பொறுக்கிக் கொண்டு போக வேண்டும் அந்த ஏழைக் குடும்பம். எப்படி இருக்கிறது கதை?

எனவே, தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்கம் அனைத்தும் ஒன்று திரண்டு
கொள்கை வழியில் உமாமகேஷ்வரியின் சாவுக்கு காரணமானவர்கள் – ஒப்பந்ததாரர், அதிகாரிகள், அமைச்சர் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப் போராடுவோம்!

தற்காலிகமாக கீழ்க்கண்ட முழக்கங்களை அரசின் முன் – நிறுவனத்தின் முன் – நீதி மன்றத்தின் முன்வைத்து ஆர்ப்பரிப்போம்!

இக்கோர மரணம் ஒரு கொலையே!

எனவே,
இம்மரணம் குறித்து பொது விசாரணை நடத்துக!

உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திடுக!

மூன்று பிள்ளைகளைப் பரிதவிக்கவிட்டு மாண்டு போன உமாமகேஷ்வரியின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!

அப்பெண்ணின் கணவரே ஒரு கூலித் தொழிலாளியாக இருப்பதால் குழந்தைகளை அரசே தத்தெடுத்து இலவசக் கல்வி வழங்கிடுக! அவர்களில் எதிர் கால நல்வாழ்வை உத்திரவாதப் படுத்திடுக!

தற்போது உமாமகேஷ்வரி வாடகைக்கு வசித்து வந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை அவரது குடும்பத்திற்கே உரிமையாக்கிடுக!

இக்கோரிக்கைகளுக்காகத் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பாட்டாளி மக்கள் ஒரு சேரக் குரல் எழுப்புவோம்! அதற்காகப் போராடுவோம்! இச்செய்தியை எட்டுத் திக்கும் பரப்புரை செய்வோம்!

எழில்மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here