கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 3


”சுரங்கத்த மூடினப்போ எனுக்கு மொத்தம் இருவத்தஞ்சி வருசம் சர்வீசு”

“சுரங்கம் மூடப்பட்டது உங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கிறதா?”

“நல்லா ஞாபகம் இருக்கு சார். 2001-வது வருசம் மார்ச் 1-ம் தேதி காலைல நாங்கெல்லாம் வழக்கம் போல வேலைக்குப் போனோம். எங்கள கேட்லயே தடுத்து நிப்பாட்டிட்டாங்க. என்ன ஏதுன்னு புரியலை. வெளியே நின்னு பாத்தோம். கேட் திறக்கறா மாதிரி தெரியலை. எல்லாரும் கொஞ்ச நேரத்துல கூச்சல் போட ஆரம்பிச்சோம். சங்க தலைவருங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினோம்”

“அப்புறம் என்ன நடந்தது?”

“ரொம்ப நேரம் கழிச்சி ஆபிசருங்க வந்தாங்க. சுரங்கம் குளோஸ்னு சொல்லிட்டு எல்லாரையும் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. சங்கத் தலைவருங்க எழுதிக் கொடுக்க சொல்லி கேட்டாங்க. அதுக்கு ஆபீசருங்க, இன்னும் உத்தரவு வரலைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க”

“சுரங்கம் மூடப்போவது பற்றி உங்களுக்கு தெரியவே தெரியாதா?”

“ரொம்ப வருசமா இதோ மூடுவோம், இப்ப மூடுவோம்னு சொல்லினே இருந்தாங்களே ஒழிய மூடலை. எப்ப மூடுவோம்னு தெளிவா சொல்லவும் இல்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச வருசம் ஓடும்னு தான் நாங்க நம்பிட்டு இருந்தோம்”

”அப்புறம் என்ன செய்தீங்க?”

“என்னா செய்யிறது…போராடிப் பார்த்தோம். ஆனா ஒன்னும் நடக்கலை, பத்து மாசம் வரைக்கும் இப்படியே தெனைக்கும் போயி கையெழுத்து போடறதும்,

வீட்டுக்கு வார்றதுமா போச்சி. பத்து மாசம் கழிச்சி தான் லாக் அவுட் பத்தி அறிவிப்பே வந்திச்சி..”

“தொழிற்சங்கமெல்லாம்….”

“திருட்டு …. நாயிங்க சார். எல்லா நாயும் அன்னிக்கு எங்க முன்னாடி சூடா பேசுனானுங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது எல்லாரும் மேனேஜ்மெண்டு கிட்ட காசு வாங்கிட்டு எங்க கழுத்த அறுத்த விசயம். தோ.. நான் இப்ப பெங்களூர்ல செக்கூரிட்டி வேலை பார்க்கிறனே அப்பார்ட்மெண்டு.. இதுக்கு கூட ஒரு தொழிற்சங்க தலைவரு தான் சார் ஓனரு. தோ.. இங்கெ ஊரிகான்ல தான் அவனும் இருக்கான். இங்க பாத்தா பிச்சக்காரன் மாதிரி சுத்துவான். அந்த ஆறுவிளக்கு ஏரியாவுக்கு அந்தாண்ட போயிட்டான்னா பெரிய கார்ல தான் போறது வர்றது எல்லாம்.. அவனும் நம்பள மாதிரி தொழிலாளின்னு நம்பி தலைவரா கொண்டாந்தோம்.. ப்ச்சு.. எல்லாம் போச்சி சார். இனிமே பேசி இன்னா ஆவப்போவுது?”

”…..”

“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார். ஆனா.. எனக்கு ரெண்டுமே பொட்ட புள்ளிங்க சார்.. என்னா செய்யறது. அந்த ஆண்டவன் தான் சார் இவனுங்களுக்கு கூலி கொடுக்கனும்”

கோலார் தங்க வயலில் தங்கம் எப்போதிருந்து கிடைக்கத் துவங்கியது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் சொல்லப்படுகின்றன. கி.பி 77-ல் இப்பகுதியில் பயணம் செய்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் ப்ளைனி என்பவர் இங்கே தங்கம் கிடைத்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். வட இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த ஏறக்குறைய அதே காலகட்டத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களை அசுத்தப் பரிசோதனைக்கு (impurity check) உட்படுத்திய போது அவை கோலாரில் இருந்து வடக்கே சென்றிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோழர் காலத்திலும், திப்பு சுல்தானின் காலத்திலும் கோலார் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.

1880-ல் தான் முதன் முறையாக ஜான் டெய்லர் நிறுவனத்தாரால் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு தங்கம் வெட்டியெடுக்கும் பணி துவங்கியது. அன்று துவங்கி சுரங்கம் மூடப்பட்ட நாள் வரை சுமார் நூற்றி இருபது ஆண்டுகளில் கோலார் தங்க வயலில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 800 டன். இது தற்போது இந்தியா ஒருவருடத்தில் நுகரும் ஒட்டுமொத்த தங்கத்தின் அளவை விட குறைவானது!

கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது. இதில் எது ஒன்றையும் தனியே பிரித்து புரிந்து கொள்ளவே முடியாது. கோலாரின் மக்கள் இன்றைக்கு வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றியும், அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொள்ள சுரங்கம் மூடப்பட்டதைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுரங்கம் மூடப்பட்ட பின்னணியில் இருந்து துவங்குவோம். வாருங்கள், துள்ளத் துடிக்க நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை ஒன்றைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள் – இந்தக் கதை எங்கோ யாருக்கோ நடந்தது மாத்திரமல்ல; நம்மைச் சுற்றிலும் நாமே அறியாமல் நமக்கோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நித்தமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இன்றைக்கு எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திற்கும் என்ன நடந்து வருகிறதோ அதே தான் கோலார் தங்க வயலுக்கும் நேர்ந்தது. இது ஒரே நாளில் நடந்த கொலை அல்ல; ஹிட்லரின் ஜெர்மனியில் இறுக்கமான அறைகளுக்குள் யூதர்களைப் பூட்டி மெல்ல மெல்ல உள்ளே புகையை நிரப்பி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மூச்சுத் திணற வைத்து கொன்ற அதே பாணி தான். 47-ல் ’சுதந்திரம்’ வாங்கிய உடனேயே கோலார் தங்க வயலுக்கு நாள் குறித்தாகி விட்டது.

வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததே வியாபாரத்தின் மூலமும் அரசியல் அதிகாரத்தின் மூலமும் இங்குள்ள வளங்களைச் சுரண்டிச் செல்வதற்குத் தான் என்பது நாம் ஏழாம் வகுப்பில் படித்த வரலாறு சொல்கிறது. ஆனால், சிறுவர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை அன்றைய தலைவர்களுக்குத் ‘தெரியாமல்’ போய் விட்டது. 47-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் வெள்ளையர்களின் வியாபார, வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது சுதந்திரத்தை இழக்கவில்லை. கோலார் தங்க வயலை நடத்தி வந்த ஜான் டெய்லர் கம்பேனியார் 1956-ம் ஆண்டு வரை எந்த சிக்கலும் இன்றி தங்கத்தைச் சுரண்டியே வந்தனர்.

1956-ல் ஜான் டெய்லர் நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை மைசூர் அரசுக்கு கைமாற்றிக் கொடுத்த பின்னரும், வெள்ளைக்காரன் மனம் புண்பட்டு விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவன் காலில் விழுந்து “பொறியியல் ஆலோசகர்” என்ற பொறுப்பு வழங்கப்பட்டு 1971-ம் ஆண்டு வரை நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டனர்.

ஜான் டெய்லரின் கையிலிருந்து மைசூர் அரசாங்கத்துக்கு கைமாற்றப்பட்ட சுரங்கம் ஆறாண்டுகளுக்குப் பின் மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது, பின் 71-ம் ஆண்டு மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துறையின் கீழும், பின் 72-ம் ஆண்டு பாரத தங்க சுரங்க நிறுவனம் என்ற பொதுத்துறையின் கீழும் செல்கிறது.

ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம். அந்த அதிசயத்தை சுரங்க நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் சாதித்துக் காட்டியது.

1956-ல் இருந்து 62-ம் ஆண்டு வரை சுரங்கத்தில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் அளவிடப்பட்டது – ஆனால், இதிலிருந்து சல்லிக் காசு கூட சுரங்கத்தைப் பராமரிக்க திருப்பி விடப்படவில்லை. ஜான் டெய்லரின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் தங்க படிமங்கள் அதிகமாக உள்ள பல பகுதிகளை முறையான காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் முத்திரையிட்டு மூடிச் (Sealed off) சென்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கு வரும் இந்திய அதிகார வர்க்கமோ, அவை முத்திரையிடப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆராயவும் இல்லை அதற்கான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

அடுத்ததாக, கோலாரின் மேற்கே 40 கிமி தொலையில் இருந்து கோலார், குப்பம், தர்மபுரி வழியாக சேலம் வரை பூமிக்கடியில் தங்கப் படிமங்கள் வேர் போல் பரவிச் செல்வதை ஆங்கிலேய சர்வேயர்கள் ஆராய்ந்து மதிப்பிட்டு வைத்திருந்தனர். மேலும், கோலாரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் குறிப்பாக எந்தெந்த இடங்களில் எவ்வளவு அடர்த்திக்கு தங்க படிமங்கள் இருக்கின்றன என்பது குறித்தும் ஓரளவுக்கு ஆராய்ந்து சர்வே ரிப்போர்ட்டுகளாக தயாரித்து வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிலத்தடி சர்வே பழைய வகைப்பட்டது என்பதோடு அவர்கள் எடுத்திருந்த சர்வே பரந்து பட்ட அளவில் பொதுவானதாகவே இருந்தது. எந்தெந்த இடத்தில் படிமங்களின் அடர்த்தி அதிகம் அதை அடைவதற்கான வழிவகைகள் என்ற குறிப்பான அம்சங்கள் பருண்மையான அளவில் நவீன விஞ்ஞான முறைகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை. கோலார் தங்க வயல் பகுதியில் மட்டும் ஓரளவுக்கு விவரங்களை சேகரித்து சர்வே ரிப்போர்ட்டுகளாக வைத்திருந்தனர்.

’சுதந்திரத்திற்குப்’ பின் அதிகாரத்திற்கு வந்த இந்திய அதிகாரிகளோ, நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சர்வே எடுக்கவும் இல்லை, ஆங்கிலேய அதிகாரிகள் சர்வே செய்யாத இடங்களை சர்வே செய்யவும் இல்லை. கனிம வளங்களை பூமியிலிருந்து வெட்டியெடுக்கும் சுரங்கத் தொழிலின் அடிப்படையே அறிவியல் ரீதியிலான சர்வேக்கள் தான். இது இந்திய நிர்வாகத்தின் கீழ் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டாக படிப்படியாக ஒரு டன் மூலப் பொருளில் இருந்து சுத்திகரிக்கப்படும் தங்கத்தின் அளவு குறைந்து கொண்டும் நட்டத்தின் அளவு கூடிக் கொண்டும் வந்துள்ளது. சுரங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து பத்தே ஆண்டில் கொள்கை அளவில் ’நட்டத்தை’ காரணம் காட்டி மூடி விடுவது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டது.

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சுரங்கத்தை மூடுவது குறித்த விவாதங்கள் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரிடையே துவங்கி விட்டது. இந்த தகவல் கீழ்மட்ட தொழிலாளிகளை எட்டிய போது அவர்கள் கொந்தளித்து எழுந்தனர். தங்களுக்கு வாழ்வளித்த சுரங்கம் தங்கள் கண் முன்னே கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அனல் கக்கும் போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர்.

கோலார் நகரமே சுரங்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு வகையில் சுரங்கத்தோடு நெருக்கமான இணைப்பைக் கொண்டது. அவர்களது படியளக்கும் ஒரே மூலம் என்ற வகையிலும் நகரத்தின் பெரும்பான்மையினரான தலித்துகளின் சமூக இழிவைத் துடைக்க கைகொடுத்தது என்ற வகையிலும் அந்த மக்களுக்கு சுரங்கத்தோடு உணர்வு ரீதியிலான பிணைப்பு இருந்தது.

மக்களின் கோபாவேசத்தைத் தணிக்க மத்திய அரசு வழக்கம் போல மூன்று வெவ்வேறு கமிட்டிகளை அமர்த்தியது. மத்திய சுரங்கத் துறை உயரதிகாரி கே.எஸ்.ஆர் சாரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், சுசீலா கோபாலன் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், ராமதாஸ் அகர்வால் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும் 1985-லிருந்து தொண்ணூறுகளின் இறுதிக் கட்டம் வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தக் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசைப் பொறுத்த வரையில் இந்தக் கமிட்டிகள் என்பவை சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியங்கள்.

சுரங்கத்தில் நட்டம் ஏற்படுத்திய காரணிகளையும், அவற்றைக் களைந்து கொள்ளும் வழிமுறைகளையும் ஆராய ஏற்படுத்தப்பட்ட இக்கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாராம்சம் – அதிகார வர்க்க நிர்வாக சீர்கேடு.

சாரி கமிட்டியின் பரிந்துரைகளின் படி, கோலாரில் அறவிடப்படும் தங்கம் வெளிச் சந்தையின் விலைக்கு கொள்முதல் செய்யாமல் லண்டன் உலோகச் சந்தையின் மதிப்பில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு பண நோட்டுகள் அச்சிடப்படுவதற்கான பின்புல ரிசர்வாக பயன்படுத்தப்படுவது சுரங்கத்தின் நட்டத்திற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் கோலாரில் இருந்து சில பத்து கிலோமீட்டர்கள் தொலைவில் கருநாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டி தங்க சுரங்கத்திலிருந்து அறவிடப்படும் தங்கமோ வெளிச்சந்தை விலையில் கொள்முதல் செய்யப்பட்டு லாபத்தில் இயங்கி வந்ததையும் சாரி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும், ஜான் டெய்லர் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய பழைய தொழில்நுட்பங்களையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தங்க மகசூலின் அளவு அதிகரிக்காமல், சையனைடு கழிவுகளில் அதிக தங்கம் கலந்து வெளியேறுவதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். பின்னர் அமைக்கப்பட்ட இரண்டு கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாரமும் இவைகளே. இந்த மூன்று கமிட்டிகளின் பரிந்துரை அறிக்கைகளின் காகிதங்களையும் வடிவாக வெட்டிய அதிகார வர்க்கத்தினர், அவற்றை தில்லி சுரங்கத் துறை அலுவலகத்தின் கழிவறையில் மலம் துடைப்பதற்காக தொங்க விட்டனர்.

கழிப்பறையிலிருந்து வெளியேறிய கையோடு அதிகாரிகள் செய்த அடுத்த வேலை, சுரங்கத்தை மூடுவதற்கான கோப்புகளை மத்திய தொழிற்சாலைகள் மற்றும் நிதி விவகாரங்கள் மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு (BIFR – Board for Industrial and Financial Reconstruction) அனுப்பி வைத்தது தான். மேற்படி ஆணையம், தொழில் தகறாறு சட்டத்தின் கீழ் சுரங்கத்தை மூடுவதற்கான நிர்வாக ரீதியிலான ஈமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை காலம் கடத்தாமல் உடனடியாக செய்யத் துவங்கியது.

இதற்கிடையே, மத்திய அரசால் சுரங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு நியமித்து அனுப்பப்பட்ட அதிகாரிகளும் தங்கள் எஜமானர்களின் விருப்பத்தை குறிப்பாலறிந்து செயலாற்றத் துவங்கினர்.

பூமியைக் குடைந்து தங்கத்தைத் தேடி முன்னேறும் போது நீரோட்டப் பகுதிகளையும் கடந்து செல்ல வேண்டும். இதன் காரணமாக சுரங்கத்தின் உள்ளே பல இடங்களில் நீர்க் கசிவு இருக்கும். இதைச் சமாளிக்க சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும். இந்த அணைகள் தொடர்ச்சியாகவும் முறையாகவும் பராமரிக்கப்பட வேண்டும். என்பதுகளில் இருந்தே நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இந்தப் பணியைத் திட்டமிட்டுப் புறக்கணித்தனர். 94 – 96 காலகட்டத்தில் பல அணைகள் சதித்தனமாக உடைக்கப்பட்டன.

இதன் காரணமாக சுரங்கத்தின் ஆழமான பகுதிகள் நீரில் மூழ்கி விலை மதிப்பு வாய்ந்த பல கருவிகள் மீட்கப் படவியலாத படிக்கு நிரந்தரமாக மூழ்கிப் போயின. வேலை செய்யத் தகுந்த ஆழத்தின் அளவும் படிப்படியாக சுருங்கி ஒரு கட்டத்தில் 2500 அடிகளுக்கு மேல் தொழிலாளர்களால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

சுரங்கத்தை உள்ளிருந்தே கருவருக்கும் வேலை இதோடு நிற்கவில்லை. சுரங்க நிர்வாகத்தின் உயிராதாரமான சர்வே ரிப்போர்ட்டுகள் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டன. பெரும் புகழும் பழமையும் வாய்ந்த சேம்பியன் ரீஃப் சுரங்கத்தின் பதிவேடுகளும், சர்வே வரைபடங்களும் கைவிடப்பட்ட சர்குலர் ஷாஃப்ட் சுரங்கத்தினுள் தேங்கியிருந்த நீரில் வீசப்பட்டு அழிக்கப்பட்டன. கோலார் தங்க வயலில் இருந்த இன்னொரு பெரிய சுரங்கமான மைசூர் சுரங்கத்தின் பதிவேடுகள் ஆவணக் காப்பகத்தோடு சேர்த்து மொத்தமாக கொளுத்தப்பட்டன. இவையணைத்தும் மக்கள் காண அவர்கள் கண் முன்னே போலீசின் துணையோடும், அதிகாரிகளின் முன்னிலையிலும் நிகழ்ந்தேறின.

இதற்கிடையே மீள்கட்டமைப்பு ஆணையம் சுரங்கத்தை லாபகரமாக நடத்தும் மாற்று வழிகள் இருப்பின் அவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க சுரங்க நிர்வாகத்தையும் தொழிலாளர் தரப்பில் தொழிற்சங்கங்களையும் கோரியது. சுரங்கத்தை மூடுவது என்று முடிவெடுத்த பின், இந்தக் கோரிக்கையே கூட வெறும் சம்பிரதாயமான நடவடிக்கை தான் என்றாலும், அன்றைக்கு சுரங்கத் தொழிலாளர்களிடையே செயல்பட்டு தொழிற்சங்கங்கள் தமக்குள் மோதிக் கொண்டு மீள்கட்டமைப்பு ஆணையத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விட்டன.

தொழிலாளர்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதையே சுரங்கத்தை மூடுவதற்கு போதுமான காரணமாக காட்டி தொழில் தகராறு சட்டத்தின் கீழ் ஈமக் கிரியைகளைத் துவக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியது மீள்கட்டமைப்பு ஆணையம்.

சுரங்க நிர்வாகமும் கைவிட்டு தொழிற்சங்கங்களும் துரோகமிழைத்து விட்ட நிலையில் தொண்ணூறுகளின் இறுதியில் சுரங்கம் முதுகில் குத்தப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டது. எந்த நேரமும் சுரங்கம் மூடப்படலாம், எந்த நேரமும் தொழிலாளிகள் தெருவில் வீசியெறியப்படலாம் என்கிற நிலையில் தொழிலாளிகள் தங்கள் உயிருக்கு நிகரான சுரங்கத்தைக் காப்பதற்கான இறுதி முயற்சி ஒன்றை எடுத்தனர்.

இரண்டாயிரமாவது ஆண்டின் துவக்க மாதங்களில் மாதாந்திர சுத்திகரிக்கப் பட்ட தங்கத்தின் உற்பத்தி அளவு 45 கிலோவாக இருந்த நிலையில் தொழிலாளர்கள் தங்களால் முடிந்த அசுர உழைப்பையே இறுதி ஆயுதமாக ஏந்திக் களம் புகுந்தனர். தங்க ரிசர்வ் குறைந்ததால் உற்பத்தி குறைந்தது; உற்பத்தி குறைந்ததால் லாபமில்லை; லாபமில்லாததால் மூட வேண்டும் என்கிற பச்சைப் பொய்யை தங்கள் உழைப்பால் தவிடு பொடியாக்கினர் தொழிலாளிகள். அடுத்த சில மாதங்களில் மாதாந்திரம் ஐந்து கிலோ என்கிற வகையில் உற்பத்தியை பெருக்கி அதிகபட்சமாக 86 கிலோ என்கிற அளவை எட்டிப் பிடித்தனர்.

இத்தனைக்கும் படிப்படியாக சுரங்கங்கள் மூடப்பட்டு செயல்பட்டில் இருந்த சுரங்கத்தின் வேலைத் தளமும் 2500 அடி ஆழமாக சுருங்கிப் போய், நிர்வாகத்தின் எந்த ஒத்துழைப்பும் இல்லாத நிலையிலேயே இதைச் சாதித்தனர் தொழிலாளிகள். கிட்டத்தட்ட செத்த மாட்டில் பால் கறந்த சாதனை அது. துரோக அரசியலின் சூது வாது அறியாத அந்த எளிய அப்பாவிகளால் தங்கள் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி எழுதிக் காட்டிய உன்னதமான வீரகாவியம் அந்த 86 கிலோ தங்க உற்பத்தி.

சுரங்கத்தை நட்ட கணக்கு காட்டி மூடி விட்டு சர்வதேச டெண்டர் என்கிற பெயரில் அதைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்தே தீருவது என்று ஏற்கனவே ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் முடிவு செய்து விட்ட பின் தொழிலாளிகளின் உழைப்பையும் அது உணர்த்திய செய்தியையும் மலத் தொட்டியில் போட்டு அமிழ்த்தினர் மக்கள் விரோதிகள். தங்கள் கையாட்களாக சுரங்க நிர்வாகத்தில் அமர்த்தி வைத்திருந்த அதிகாரிகளை வைத்து கடைசியாக பிழைத்தெழ சுரங்கம் காட்டிய உயிர்மூச்சை திட்டமிட்டு நிறுத்தினர்.

பணியில் இருந்த தொழிலாளிகளுக்கு வெடி மருந்து சப்ளையை முதலில் நிறுத்தி வைத்தனர்; தொழிலாளிகளோ ஏற்கனவே உடைக்கப்பட்ட பாறைப் படிவங்களைச் சேகரித்து உற்பத்தி சரியாமல் பார்த்துக் கொண்டனர். பணிக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்தனர்; இருப்பதைக் வைத்து சமாளித்துக் கொண்டு தொழிலாளர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். கடைசி அஸ்திரமாக செயற்கையாக மின் தடைகளை உருவாக்கினர் – உடலின் ஒவ்வொரு பாகமாக வெட்டப்பட்டு வந்த போதும் தங்கியிருந்த உயிர், இறுதியில் தலையை வெட்டிய பின் பிரிந்தது, உற்பத்தி குலைந்து போனது.

அதிகார வர்க்கம் திட்டமிட்டு சதித்தனமாக வீழ்த்திய உற்பத்தியையே நட்டத்திற்கான காரணமாக மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு காட்டிய சுரங்க நிர்வாகம், ஆலை மூடலுக்கு உத்தரவிடக் கோரி பரிந்துரையும் செய்தது. இறுதியில் ஆளும் வர்க்க வஞ்சக சூழ்ச்சிகள் வென்று தொழிலாளிகள் வீழ்த்தப்பட்டனர்; சுரங்கம் மூடப்பட்டது.

பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன. சுரங்கத்தோடு எந்த விதமான உணர்வு ரீதியான பிணைப்பும் இல்லாமல், தில்லியிலிருந்து நியமிக்கப்பட்டு நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் அனைவரும் முன்கூட்டியே விருப்ப ஓய்வை அறிவித்து கணிசமான தொகையுடன் வெளியேறியிருந்தனர். சுரங்கத்தையே நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையோ சொல்லொணாத் துயரத்தில் விழுந்தது.

தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்காமலேயே 2001-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சுரங்கம் மூடப்பட்டது. வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக வேலை செய்த இடத்துக்குள் இனிமேல் தங்களால் நுழைய முடியாது என்கிற யதார்த்தத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லாத நிலையில் வேறு எந்த வேலைகளுக்கும் செல்லாமல் மூடப்பட்ட சுரங்கத்தின் வாயிலை கைவிடப்பட்ட குழந்தைகள் போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தனர்.

சுரங்கம் மூடப்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2008-ம் ஆண்டு கருநாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவர்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக சுரங்கம் மூடப்பட்டும் பணிப் பரப்பளவு சுருக்கப்பட்டும் வந்ததன் விளைவாக முப்பதாயிரத்துக்கும் மேல் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மூடப்பட்ட போது வெறும் மூவாயிரமாக சுருங்கியிருந்தது.

தொழிலாளர்களில் பலர் தங்களது நடுத்தர வயதைக் கடந்திருந்தனர். சுரங்கப் பணிகளைத் தவிற வேறு எந்த வேலையும் தெரியாத அவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் அந்த ஏழாண்டுகள் அனுபவித்த துன்பம் என்பது இது வரை யாருமே எழுதாத, இனிமேலும் எவராலும் எழுதப்பட முடியாத, நாம் யாரும் கண்டும் கேட்டுமிராத கொடும் துயரங்கள்…

நாங்கள் வேலு என்ற தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருந்தோம்

“வேலை போச்சி.. யார்ட்ட போயி என்னா வேலை கேட்கறதுன்னே தெரியலை அப்டியே சுத்தினு இருந்தோம்..”

“நீங்க எப்படி வேற வேலைக்கு முயற்சி செய்தீங்க”

“இன்னா முயற்சி செய்யிறது? யார்னா பெங்களூருக்கு போனா சொல்லி அனுப்பிட்டு காத்திருப்போம். எனக்கெல்லாம் பெங்களூர்ல எவனையும் தெரியாது வேறெ..”

”சாப்பாட்டுக்கு…?

”ஊட்ல உலை கொதிச்சி வாரக் கணக்குல ஆகிருக்கும். அக்கம் பக்கத்துல கைநீட்டி எப்படியோ புள்ளைங்கள பட்டினி போடாம காப்பாத்தினோம்… வேலைக்கு சொல்லி வச்ச எவனாவது வந்து எதுனா நல்ல சேதி சொல்லுவானான்னு கூரைய பாத்துனே குந்தினு இருப்போம்”

“அதுவரைக்கு எப்படி சமாளிச்சீங்க?”

“ஏதோ கெடச்ச வேலை.. கெடச்ச கூலி..”

தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

இனி தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து, அந்த மக்களின் தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும்…

(தொடரும்)

முந்தைய பதிவுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here