
வீடில்லாதவர்க்கான காப்பகம் அமைப்பது மற்றும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நகரங்களை அழகுபடுத்துவதாகக்கூறி ஏழை மக்களை நகரை விட்டு துரத்தியடிப்பதை எதிர்த்து ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 12/02/2025 தேதியன்று விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் மனுதாரர் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் “பணம் படைத்தவர்களுக்குக் காட்டப்படும் கரிசனம் ஏழைகளுக்கு காட்டப்படுவதில்லை. இங்கு எல்லாமே பணம் படைத்தவர்களின் நலனுக்காகவே நடத்தப்படுகிறது, அவர்களுக்காகவே ஏழைகள் நகரங்களை விட்டு துரத்தியடிக்கப்படுகிறார்கள்” என்று கூறினார். இதைக்கேட்டுப் பொங்கியெழுந்த மகாகணம் பொருந்திய நீதிமானான B.R.கவாய், “உங்களுக்கு என்ன தெரியும்? இதை எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றவேண்டாம். அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்களை வாரி வழங்குகின்றன. (லட்லி பெஹன் – பெண்களுக்கான) மாதாமாதம் உதவித்தொகை வழங்குவதாகக் கூறுகின்றன, ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. அதனால் இவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை, யாரும் உழைக்க விரும்புவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு இருப்பதில்லை. எல்லாவற்றையும் இலவசமாகக்கொடுத்து நாம் ஒட்டுண்ணிகளை உருவாக்கிவருகிறோம்” என்று வர்க்கப்பாசத்தில் பொரிந்துதள்ளிவிட்டார்.
வாழவழியில்லாமல் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு விசிறியடிக்கப்பட்டு தினமும் கூலி வேலைக்காக ஆளாய் பறந்து, ஆண்களென்றால் சராசரியாக 537 ரூபாயும், பெண்களென்றால் 364 ரூபாயும் ஒருநாள் கூலியாக (கோடிக்கணக்கானவர்கள் இதைவிட குறைவான கூலியைப்) பெற்றுக்கொண்டு நகரங்களின் நடைப்பாதைகளிலும், சாக்கடையோரங்களிலும், மழையிலும், பனியிலும், ஒதுங்க இடமின்றி குடிசை வீடுகளிலும், தகரக் கொட்டகைகளிலும், 10×10 அறைகளிலும் வாழும் உழைக்கும் மக்களைத்தான் ஒட்டுண்ணிகள் என்கிறார் இந்த நீதியரசர்.
படிக்க:
🔰 வி.எச்.பி கூட்டத்தில் மதவெறியைக் கக்கிய உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடு!
🔰 சாதிய கட்டுமானத்தை அசைக்கும் போது நீதிபதி சுப்பிரமணியன் போன்றோர் கதறுகிறார்கள்!
தேர்தலின்போது “எல்லோருக்கும்” என்று கொடுக்கப்படும் உதவித்தொகைகளுக்கான வாக்குறுதிகள் பின்னர் பல்வேறு கழித்துக்கட்டல்களுக்குப் பிறகு, தீவிர சரிபார்ப்புகளுக்குப் பிறகுதான் கொடுக்கப்படுகிறது. இப்படி ஆளும்வர்க்கத்தால் ஏழை எளிய மக்களுக்கு ஏதோ போனால் போகட்டும் என்று வழங்கப்படும் சில உதவித்தொகைகளையும், ரேஷன் பொருட்களையும் கண்டு வயிறு எறியும் இந்த நீதியரசர் வருடந்தோறும் கார்போரேட் மற்றும் தரகு முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரி தள்ளுபடிகள், வரி சலுகைகள், வராக்கடன் தள்ளுபடிகள் என்று இலட்சக்கணக்கான கோடிகளில் வாரி வாரி வழங்கப்படும் சலுகைகளைக் கண்டுப் பொங்கவில்லை.
முழுமையாகக் கிடைக்காத வேலையற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கான உதவித்தொகைகள், பாதியிலேயே நிறுத்தப்படும் கல்விக்கான உதவித்தொகைகள், குறைக்கப்படும் 100-நாள் வேலைத் திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு என்று தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட நிலையிலும் நாட்டின் மொத்த GST வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கைத் தரும் உழைக்கும் மக்களைத்தான் நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதில்லை என்கிறார் நீதியரசர். வெறும் 1 சதவீத சொத்துக்களை மட்டுமே உடமையாகக் கொண்டு நாளும் உழைத்துக்கொட்டும் மக்களை ஒட்டுண்ணிகளாகப் பார்க்கும் நீதியரசருக்கு அதிகார வர்க்கத்தின் துணையோடு 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை முறைகேடாகக் குவித்துக்கொண்டு GST வரிவருவாயில் வெறும் 3 சதவீதம் மட்டுமே வழங்கி உழைப்பில் ஈடுபடாமல் ஊதாரித்தனமாக வாழும் 10 சதவீத பெரும் பணமுதலைகள் ஒட்டுண்ணிகளாகத் தெரியவில்லை.
அவ்வளவு ஏன், மாதம் 2.8 இலட்சம் சம்பளம், ஓய்விற்குப் பிறகு மாதம் 1.4 இலட்சம் பென்சன், 20 இலட்சம் பணிக்கொடை. இது தவிர இலவச பங்களா, பணிவிடை செய்ய ஆட்கள், இலவச இன்டர்நெட், இலவச மருத்துவம், இலவச சொகுசு கார், சுங்கச்சாவடிகளில் இலவச அனுமதி, ஏகப்பட்ட அலவன்சுகள், எந்தக்கொம்பனும் கேள்விகேட்க முடியாத அதிகாரம் என்று சகல சுகபோகங்களுடன் வாழ்கிறார் இந்த நீதியரசர். இவையெல்லாம் சட்டரீதியான சலுகைகள் என்றால் ஒவ்வொரு முக்கியத் தீர்ப்புக்குப் பின்னால் கிடைக்கும் கவர்னர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அரசின் துறைகளில் நியமன பதவிகள் என்று தங்கள் ஆயுள் முழுமைக்கும் மாண்புமிகு நீதியரசர்கள் அனுபவிக்கும் சலுகைகளும், இலவசங்களும் தனி இரகம்.
சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்துகொண்டு மேற்சொன்ன எல்லாவசதிகளையும், இலவசங்களைகளையும் உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டே அம்மக்களை பார்த்து சோம்பேறிகள் என்றும், ஒட்டுண்ணிகள் என்றும் ஆணவமாகச் சொல்லும் நீதியரசரே, மிகப்பெரும் கலவரங்களை நடத்தி இரத்த ஆறு ஓடவைக்கும் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராகவும் அக்கலவரங்களைப் பயன்படுத்தி நாட்டின் வளங்களை சூறையாடும் கார்போரேட் பாசிஸ்டுகளுக்கு எதிராகவும் ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் நீங்களும் உங்களை உள்ளடக்கிய அதிகார வர்க்கமும்,ஆளும்வர்க்கமுமே இந்த சமுதாயத்தின் நவீனரக ஒட்டுண்ணிகள்.
- ஜூலியஸ்
நீதிபதி BR.கவாய்-யின் உழைக்கும் மக்களுக்கு எதிரான கொழுப்பெடுத்த வன்மமான பேச்சுக்கு, கட்டுரையாளர் தோழர் ஜூலியஸ் சரியான செருப்படி பதிலை நல்கியுள்ளார். கார்ப்பரேட் -காவிகள் நலன்களை மட்டுமே பேணும் இத்தகையோருக்கு இவ்விதம் பதிலையும் விடவும் கூட கடுமையான சொற்களிலான
‘அர்ஜனை’ தேவைதான்!