எச்சரிக்கை: ஐரோப்பிய பாசிச சக்திகள் ஒன்றிணைகிறார்கள்!

பல்வேறு பெயர்களில் உலவுகின்ற பாசிச பயங்கரவாத கும்பல் ஐரோப்பாவில் தங்களை ’ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள்’ (Patriots for Europe) என்று பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள்.

0
ஐரோப்பிய ஒன்றிய தீவிர வலதுசாரி கும்பல்

”உலகைப் பிடித்தாட்டுகின்றது ஒரு பூதம். இந்த முறை அது ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் சுரண்டல் கொள்ளைக்கு உலகை கூறு போட்டுக் கொடுத்து, மனிதக் கறி தின்று, ரத்த வாடை வீசுகின்ற கொடூரமான, லாப வெறி பிடித்த மிருகமான ’ட்ரம்ப்பிசம்’ என்ற பூதமாக உலகைப் பிடித்தாட்டுகிறது.

2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீள முடியாத வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டு எழுவதற்கு பொருத்தமான தருணத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நிதி மூலதனம்; சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள்; கருத்துச் சுதந்திரம்; மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது; சூழலியல் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவது போன்ற சொல்லிக்கொள்ளப்படுகின்ற முதலாளித்துவ பசப்பல்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. அப்பட்டமான, அம்மணமான பாசிச சர்வாதிகாரம்தான் இனிமேல் உலகை ஆட்சி செய்ய முடியும் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க பயங்கரவாத கும்பல்.

இத்தகைய கொடூரமான பயங்கரவாதியின் தலைமையை ஏற்று உலகம் ’புதிய திருப்புமுனையை’ கண்டுள்ளதாக ஆர்ப்பரிக்கிறார்கள் ஐரோப்பாவில் உள்ள படுபிற்போக்க்கான பாசிச வலதுசாரி கும்பல்.

இத்தகைய பாசிச பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் தங்களது நாட்டின் வரலாற்று சூழலுக்கு பொருத்தமான பெயரை சூட்டிக் கொள்கிறார்கள். ஒரு பிரிவினர் தங்களை சோசலிஸ்ட்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்; மற்றொரு பிரிவினர் தங்களை இனத்தூய்மை வாதிகள் என்று அழைத்துக் கொள்கின்றனர்; மற்றொரு பிரிவினர் வெள்ளை நிறவெறியை முன்வைத்து தங்களின் மேன்மையை பறைசாற்றி கொள்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு பெயர்களில் உலவுகின்ற பாசிச பயங்கரவாத கும்பல் ஐரோப்பாவில் தங்களை ’ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள்’ (Patriots for Europe) என்று பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள்.

ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் தீவிர வலதுசாரி சக்திகளை மறுசீரமைத்துள்ளது. கடந்த ஆண்டு விக்டர் ஆர்பன் அதை தொடங்க உதவிய பின்னர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக இது மாறியுள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் சிலாகித்து எழுதுகின்றன..

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலமும், “180 டிகிரி திருப்பத்திற்கு” அழைப்பு விடுத்ததன் மூலமும், உற்சாகமடைந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவிர வலதுசாரி கூட்டணி சார்பில் மாட்ரிட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணிக்கு ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனும், பிரான்சின் மரைன் லூ பென்னும் தலைமை தாங்கினர்.

“நேற்று வரை நாங்கள் மதவெறியர்களாக இருந்தோம். இன்று நாங்கள்தான் பிரதான நீரோட்டம்… நாங்கள்தான் எதிர்காலம்” என்று ஓர்பன் அறிவித்தார், டச்சு இஸ்லாமிய எதிர்ப்புத் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ், இத்தாலிய துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி மற்றும் முன்னாள் செக் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் உள்ளிட்ட பிற முன்னணி தீவிர வலதுசாரி பிற்போக்கு தேசியவாதிகளுடன் இணைந்து இந்தக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியுள்ளார் திருவாளர் லூ பென்.

படிக்க: 

  ஐரோப்பிய ஒன்றியத்தில் தலை விரித்தாடும் பாசிச பயங்கரவாத கட்சிகளின் தேர்தல் வெற்றி!

♦  ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் குழுவும் ஏகாதிபத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையும்!.

“நாம் உண்மையிலேயே உலகளாவிய ஒரு திருப்புமுனையை எதிர்கொள்கிறோம். சூறாவளி டிரம்ப் அமெரிக்கா முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது,” என்று லூ பென் கூச்சலிட்டது மட்டுமின்றி எட்டாம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இசுலாமிய ராஜ்ஜியங்களிடமிருந்து ஐபீரிய தீபகற்பத்தை மீட்டெடுக்க ஸ்பானிஷ் கிறிஸ்தவ மன்னர்கள் நடத்திய போர்களைப் போல, ஐரோப்பாவை “மீண்டும் கைப்பற்ற” அழைப்பு விடுத்தார்.

இதனால்தான் மீள முடியாத நிதி நெருக்கடியில் இருந்து சிக்கித் தவித்த ஏகாதிபத்திய நிதி மூலதனம் வர்த்தக காப்புவாதத்தையும், சுதந்திர சந்தைக்கு பதிலாக கட்டுப்படுத்தப்பட்ட சந்தை என்பதை முன்வைத்தும், புதிய தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்கின்ற கொடூரமான பாசிச சக்திகளை ஆதரிக்கின்றனர்.

பேரணியை நடத்திய ஸ்பானிஷ் கட்சியான வோக்ஸ், வெள்ளிக்கிழமை பேட்ரியாட்ஸ் தலைவர்களுக்கும், தீவிர பழமைவாத அமெரிக்க சிந்தனைக் குழுவான தி ஹெரிடேஜ் அறக்கட்டளையின் தலைவரான கெவின் ராபர்ட்ஸ் கொடுத்த இரவு உணவிற்கு, சுமார் 2,000 பேர் நிகழ்வில் கலந்து கொண்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடைந்தெடுத்த கம்யூனிச விரோதியான ஹெரிடேஜ் பவுண்டேஷனின் கெவின் ராபர்ட்ஸ் கொடுத்த விருந்தில் கலந்துக் கொண்டு வயிறு புடைக்க உண்ட ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கொடூரமான பயங்கரவாதிகளான பாசிச சக்திகள் ’ஐரோப்பாவை முன்னேற்றுவோம்’ என்றெல்லாம் பேசுவது உலகம் முழுவதும் நிதி மூலதனத்தின் சுரண்டலில் உறிஞ்சப்படுகின்ற காலனி, அரைக்காலனி, நவீன காலனி மற்றும் மறுகாலனிய நாடுகளுக்கு விடப்பட்டு சவால்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசும், ஏகாதிபத்திய முதலாளித்துவ பயங்கரவாதிகளும், பாசிச கும்பல்களும் ஒன்றிணைந்து மக்களின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி விட்டார்கள்.

அதனை எதிர்த்து முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்கம் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுப்போம். இந்தியாவை ஆளுகின்ற பாசிச பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் பாஜக மோடிக்கு எதிராக அத்தகைய ஒற்றுமையை சாதிப்பதன் மூலம் உலகம் முழுவதும் திரண்டு நிற்கின்ற பாசிச சக்திகளுக்கு பதிலடி கொடுப்போம்.

  • கணேசன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here