திடீரென்று பெய்கின்ற பேய் மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் அளவிட முடியாத கனமழை, ஆறுகளின் இயல்புகளையும் அதன் போக்குகளையும் மாற்றி புரட்டிப் போடும் வகையிலான வெள்ளங்கள் போன்ற அபாயம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கும் நெருக்கமான தொடர்புடையது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் மெல்ல, மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னார்வ அமைப்பான கிரீன் பீஸ் முதல் ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் இயக்கம் வரை அவர்களின் முழக்கங்களில் இந்த கொடூரமான பருவநிலை மாற்றத்திற்கு காரணமான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை கண்டித்து பேசுவதில்லை என்ற போதிலும் அவர்களை தீவிரவாதிகளை போல நடத்துகின்றது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.
இந்த வகையில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற குழுமத்தைச் சார்ந்த 26 காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவின் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
புதை படிவ எரிபொருள் மூலம் புவியை வெப்பமயமாக்கி வருகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நவீன தொழிற்சாலைகள் மற்றும் அளவுக்கதிகமான காரியமில வாயுவை உமிழும் வாகனங்கள், வானூர்திகள், விண்வெளி ஆராய்ச்சிக்கான நிறுவனங்கள், விண்கலன்கள் ஆகியவை அனைத்தும் பூமியின் வெப்ப அளவை படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.
இதன் உப விளைவாக கடலின் வெப்ப அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும், துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வதற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.
இதற்கு இணையாகவே கடலின் வெப்பநிலை உயர்ந்து அடிக்கடி புயல்கள் உருவாகி நிலப்பகுதியை தாக்குவதும் தொடர்கதையாகி வருவதை நாம் ஏற்கனவே அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதி உள்ளோம்.
இவ்வாறு புவி வெப்பமயமாதலின் விளைவுகளை பற்றி மார்க்சிய லெனினியவாதிகள் மட்டுமின்றி முதலாளித்துவ சமூக அமைப்பிற்குள்ளேயே நேர்மையான முதலாளித்துவத்தை தேடுகின்ற அல்லது அதிகம் சுரண்டலை மேற்கொள்ளாத மனிதாபிமான முதலாளித்துவத்தை எதிர்பார்க்கின்ற சமூக செயல்பாட்டாளர்களில் ஒரு வகை மாதிரியான ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் குழுவினரும் பேசுகின்றனர்.
ஆனால் முதலாளித்துவத்தை உயர்த்தி பிடித்து குதியாட்டம் போடுகின்ற ஐரோப்பா கண்டத்தில் நிலவுகின்ற மனித உரிமைகள் மற்றும் போராடுகின்ற உரிமைகள் ஒடுக்கப்படுவதை அம்பலப்படுத்துகின்ற வகையில் இவர்களின் கைது முக்கியமான இடத்தை வகிக்கின்றது.
எதிர்வரும் 2025 ஜனவரி 30,31 ஆகிய தேதிகளில் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நான்கு குழுக்களின் மூலம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் நிலவுகின்ற ஜனநாயக பசப்பல்களுக்கு இந்த வழக்கும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும். ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கடுமையாக கண்டித்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
தாராளவாத ஜனநாயகத்தை முன்னிறுத்துகின்ற தி கார்டியன், பிபிசி போன்ற ஏடுகள் இத்தகைய செய்திகளை உலகிற்கு எடுத்துக் கூறி வருகின்றன என்ற போதிலும் இந்தப் போராட்டத்தை மனித உரிமை மற்றும் போராட்ட உரிமை என்று சுருக்குகின்ற முயற்சியிலும் ஈடுபடுகின்றன.
பூமியின் மேற்பரப்பில் உள்ள கனிம வளங்களையும், இயற்கை செல்வங்களையும், மலை, காடுகளில் கிடைக்கின்ற அரிய வகை தாதுகளையும் கொள்ளையடித்து ஓய்ந்து வருகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவம் பூமிக்கு அடியில் குறிப்பிட்ட கிலோமீட்டர் ஆழத்திற்கு புதை படிவ வடிவில் உள்ள தனிமங்களையும், கனிமங்களையும் மற்றும் எரிபொருட்களையும் சுரண்டி கொள்ளையடிப்பது என்ற அடுத்த சுற்று சுரண்டலில் இறங்கி பூமியை நாசமாக்கி வருகிறது என்ற கோணத்தில் இவர்கள் அம்பலப்படுத்துவதில்லை.
படிக்க: Cop 27 – பருவநிலை மாநாடு; ஏகாதிபத்தியங்களின் தொடர் நாடகம்!
கட்டுக்கடங்காத பல லட்சம் கோடி கையிருப்புடன் வெறிகொண்டு அலைகின்ற ஏகாதிபத்திய நிதி மூலதன மற்றும் நிதியாதிக்க ஏகபோகங்கள் உலகை சூறையாடுவதற்கு புதுப்புது வகையில் முயற்சிகளை மேற்கொள்வதில் ஒரு பகுதி தான் புதை படிவ எரிபொருள் கொள்ளை. இது பூமியை வெப்பமாக்குவது மட்டுமின்றி இயற்கையை ஒழித்துக் கட்டி பூமியையே நாசமாக்குகின்ற செயலில் ஈடுபடுகிறது.
பாலியல் வெறியாட்டங்கள், கொடூரமான கும்பல் கொலைகள், பாசிச மற்றும் நாஜிச கொள்கைகளை முன்வைத்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், நிற, இன வெறியர்கள் போன்ற குழுக்கள் நிறைந்து சமூக அமைதியை கெடுத்து வருகின்ற ஐரோப்பாவில் ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்று போராடுகின்ற குழுவினர்கள் 42 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடுவது ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஜனநாயக முகமூடியில் முகத்திரையை கிழித்துள்ளது.
இத்தகைய கொடுமைகளுக்கு பெயர் போன ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலகில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்து விடுவிப்பதற்கு அவ்வப்போது மாநாடுகளை நடத்துவதும், தாங்கள் கொள்ளையடித்த பெரும் தொகையிலிருந்து பிச்சைகாசை எடுத்துப் போடுவதும் நிகழ்வுகளாக தொடர்கின்றன.
அமைதியான வாழ்க்கையை அனைவரும் விரும்புகிறார்கள் தான், ஆனால் சமூகமும் நிலப்பரப்பும் அழிந்து கொண்டிருக்கும்போது அவர்கள் விரும்பும் வாழ்க்கை எப்படி அவர்களுக்கு வாய்க்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம்.
புரிய வைப்போம்! அவர்களையும் இணைத்துக் கொண்டு புவிப்பந்தை பாதுகாக்கின்ற போராட்டத்தில் முன்னேறுவோம்.
- ஆல்பர்ட்.