வேளாண் சட்ட திருத்தங்களை கிழித்தெறி! கார்ப்பரேட்-காவி கும்பலை வீழ்த்து! புதிய ஜனநாயகப் புரட்சியை விரைந்து நடத்து!
தொடர்  கட்டுரை…

மறுகாலனியாக்கமும்
விவசாய பொருளாதாரமும்!

இந்த ’காட்’ ஒப்பந்தத்தின் விளைவாக, 1990-களில் உருவான புதிய விவசாயக் கொள்கை நமது நாட்டு விவசாயத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அப்போது நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் கும்பலால் புகுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கையானது தேசங்கடந்த தொழிற்கழகங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயத்தை விழுங்குவதற்கு வழி வகுத்தது. குறிப்பாக வேளாண் வர்த்தக நிறுவனங்கள் இதில் தனது மூலதனத்தை குவித்து சுரண்டும் பணியில் முன்னே நின்றது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகளின் நோக்கமும்இதுதான்.

மறுகாலனியாக்கத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், ஏழை நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தை மேல்நிலை வல்லரசுகளின் விரிவாக்கப்பட்ட மறுஉற்பத்தியுடன் இணைப்பது என்பதாகும்.இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நாடுகள், தேசங்கள் போன்றவற்றில் எல்லைகளைத் தகர்த்தெறிந்து விட்டு, உலகம் முழுவதையும் ஒரே உற்பத்தி நிலையமாக அதாவது வேளாண்மை உற்பத்தி நிலையமாக மாற்றுவது. அவ்வாறு மாற்றப்பட்ட பின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எப்படி வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இணைக்கப்படுகிறதோ, அதேபோல இத்தகைய உணவு தொழிற்சாலையில் மொத்த உலகிற்கும் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது, அதற்கேற்ப எந்தெந்த நாடுகளில் விளைவிக்க முடியுமோ, அந்தந்த நாடுகளில் விளைவித்து அதனை ஒரு பண்டமாக தேசங்கடந்த வேளாண் தொழிற்கழகங்கள் மூலம் விற்பனை செய்வது, அவ்வாறு விற்பனை செய்வதை அங்கீகரிப்பது மறுகாலனியாக்கத்தின் விவசாய பொருளாதார கொள்கையாகும்.

இறால் பண்ணை

இந்தியாவில் உணவுப் பயிர்களான நெல், கரும்பு, கோதுமை மற்றும் பயிர் வகைகள் ஆகியவற்றை நிறுத்தி வைத்துவிட்டு மாற்றாக இறால் பண்ணைகள், பழத்தோட்டங்கள், அன்று கொய்த மலர்கள் அதாவது கட் பிளவர்ஸ் என்று சொல்லக்கூடிய மலர்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு தொழிற்சாலையாக இந்திய விவசாயத்தை மாற்றுவது என்பது தேசங்கடந்த வேளாண் கழகங்களின் நோக்கமாக உள்ளது. இதைத்தான் காட் ஒப்பந்தம் உறுதி செய்கின்றது. உலக அளவில் தேசங்கடந்த வேளாண் தொழில் கழகங்களின் தேவைக்கு ஏற்ப தனது நாட்டு விவசாயத்தை மாற்றிவிட்டு தனது சுய சார்பை இழந்த நாடுகளில் மெக்சிகோ முக்கியமான நாடாகும்.

அதாவது தனது நாட்டில் விளையும் பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு உணவிற்காக மேல்நிலை வல்லரசுகளிடமும், ஏகாதிபத்திய நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்பது என்பதற்கு மெக்சிகோ ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்தியாவைப் பொருத்தவரை ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பசுமைபுரட்சி திட்டம், விவசாயத்தில் தன்னிறைவு அடைவது என்ற நோக்கத்தின் கீழ் நமது நாட்டில் பாரம்பரியமான விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு நமது மண்ணிற்கும், நிலத்திற்கும் பொருந்தாத விதைகளை இறக்குமதி செய்து அதிக மகசூல் தேவை என்ற கண்ணோட்டத்தில் உற்பத்தி செய்ய வைக்கப்பட்டது. அவ்வாறு மண்ணின் தன்மைக்கு பொருத்தமில்லாத விதைகள் இங்கு பயிரிடப்படும் போது அதனை வளர்ப்பதற்கு தேவையான பொட்டாசியம், யூரியா போன்ற உரங்களான என்.பி.கே என்று சொல்லக்கூடிய உரங்களை  ஏகாதிபத்திய நாடுகள் நமக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டின.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக விளைநிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்த விவசாயத்தை நடத்திக் கொடுப்பதற்கு ஏற்ப மாற்றப்படுவது ஆகும்., ஒன்று முழுமையாக நிலங்கள் விற்பனை செய்யப்படுவது,  இன்றைய நிலையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் இதன் ஒரு பகுதியாகும். அல்லது ஒப்பந்த விவசாயத்திற்கு நிலங்கள் பலியாவது என்பதும் இதன் விளைவாகும். அவ்வாறு விளை நிலங்களில் பயிரிடப்படும் உற்பத்திக்கு தேவையான விதைகளை பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்கடந்த தொழிற் கழகங்களிடமிருந்து வாங்குவதற்கு தயாராவது தேவை. இவை இரண்டும் விவசாயத்தை முழுக்க கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டு செல்வதற்கு வழிவகுத்தது.

படிக்க:

உற்பத்தியில் ஏகபோகம்!
உலக மேலாதிக்கமே நோக்கம்!

தற்போது உலகில் மேலாதிக்கம் செலுத்தும் வேளாண் வர்த்தக நிறுவனங்களை பற்றிய 2018 – ன் படியான விவரங்களை பார்ப்போம்.

  • கார்கில்;

இன்று உலகளவில் வேளாண் வர்த்தக  கழகமாக மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது கார்கில். இது அமெரிக்க நாட்டைச் சார்ந்தது. இதன் ஒரு ஆண்டு வருமானம் 114.7 பில்லியன் டாலர்களாகும். இதில் 1,66,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஏகாதிபத்தியங்கள் – மேல்நிலை வல்லரசுகள், 1986-ல் காட் பேச்சுவார்த்தையில் விவசாயத்தை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட கார்கில் மற்றும் மேக் மில்லன் இரு குடும்பங்கள் சேர்ந்து கட்டுப்படுத்தும் கார்கில் நிறுவனம் முக்கிய காரணமாகும்., அப்போதே இந்த நிறுவனம் உலகின் உணவு உற்பத்தியில் 25% கட்டுப்படுத்தியது. அப்போது வர்த்தக மதிப்பு 3,260 கோடி டாலர்களாகும். இன்று 114.7 பில்லியன் டாலர்களாக வளர்ந்துள்ளது.இந்த கார்கில் விதை விற்பனையில் இருந்து விவசாயத்தின் உள்ளீடு பொருள்கள் உரம், பூச்சி மருந்து, விவசாயத்தில் விளைந்த விளை பொருள்கள், உணவு தானியங்கள், நவதானியங்கள்,பலவகை பயிர்கள் இவை அனைத்தையும் வர்த்தகம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உலக அளவில் முன்னிலை வகிக்கின்றது. இந்த கார்கிலின் மையமான தொழில் என்னவென்றால் உணவு பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் மூலம் உணவு உற்பத்திக்குத் தேவையான உள்ளீடு பொருள்களை உற்பத்தி செய்வது, மேலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களுக்கு வட்டிக்கு விடுவது ஆகியவையே இதன் முக்கியமான தொழில் ஆகும். ஒருகட்டத்தில் கார்கில் என்ற நிறுவனத்தின் சொத்து மதிப்பு சார்க் கூட்டமைப்பு நாடுகளில் உள்ள பத்து நாடுகளின் GDP-யைக் காட்டிலும் ஒரு ஆண்டு வருவாய் அதிகமாக இருந்தது. இப்படிப்பட்ட கார்கில் இன்று வேளாண் உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

  • டெளவ் நிறுவனம்;

இதன் ஆண்டுநிகர வருமானம் 85.97 பில்லியன் டாலர்களாகும். இதில் 98,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இயல்பில் இது ஒரு கெமிக்கல் நிறுவனம் ஆகும். இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். 2016 ஆம் ஆண்டு இந்த டெளவ் என்றகெமிக்கல் நிறுவனம் டூபாண்ட் என்ற நிறுவனமும் இணைந்து டெளவ்டூபாண்ட் என்ற பெயரில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. இதன் முக்கியமான தொழில் பயிர் உற்பத்தி செய்வது மற்றும் விதைகளை நேர்த்தி செய்து பயோடெக் முறையில் உலக அளவில் விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கின்றது. 130 நாடுகளில் விதை உற்பத்தி மற்றும் தயாரிப்பு நிலையங்களை கொண்டுள்ளது. போபால் விசவாயு படுகொலைகளின் சூத்திரதாரியான யூனியன் கார்பைடுடன் கைகோர்த்துள்ள கொலைகார நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆர்ச்சர் டேனியல் மிலன் கம்பெனி;

ஆர்ச்சர் டேனியல் நிறுவனத்தின் ஒரு ஆண்டு வருவாய் 64.34 பில்லியன் டாலர்களாகும். இதில் 32,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலகத்திற்கு தேவையான சமையல் எண்ணெய் உட்பட பல விதமான எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்வது, கோதுமை மற்றும் விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வது,கொள்முதல் செய்வது ஆகியவற்றில் முன்னிலை வகிக்கின்றது. உலகம் முழுவதும் 270 உற்பத்திக் கூடங்களையும், 420கொள்முதல் நிலையங்களையும் கொண்டுள்ளது. தற்போது ஏடிஎம் வேளாண் சேமிப்புக் கிடங்குகளையும் நிறுவி வருகிறது. மேலும் விவசாயப் போக்குவரத்திலும் நுழைந்துள்ளது.

  • பாயர்;

ஜெர்மனியை சேர்ந்தது. இதன் ஆண்டு நிகர வருமானம் 46.7 பில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனத்தில் 1,16,998 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்த பாயர் மருத்துவத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் உயிர்காக்கும் அறிவியல் உபகரணங்கள் அதாவது மருத்துவமனைகளில் பயன்படக்கூடிய லைப் இன்ஸ்ட்ருமென்ட் என்று செல்லக்கூடிய பல வகையான கருவிகளை உற்பத்தி செய்து கொடுக்கிறது இது ஒரு கெமிக்கல் நிறுவனம் ஆகும். குறிப்பாக ஆஸ்பிரின் என்ற மருந்தை உலகளாவிய உற்பத்தி விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனமானது விவசாய அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேளாண் வர்த்தக நிறுவனமும் ஆகும். இது உலகில் 35 ஆராய்ச்சி மையங்களையும், 175 பிரீடிங் சைட்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், விவசாயத்திற்கு தேவையான கெமிக்கல்களை உற்பத்தி செய்து கொடுப்பதில் மான்சான்டோ உடன் இணைந்து உலக ஆதிக்கம் செலுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்ககூடிய ஒரு தேசங்கடந்த வேளாண் வர்த்தக நிறுவனம்.

தொடரும்….

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here