பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன்முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு ‘உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்’ என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் ஒருவர் திப்பு. பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது. காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

”எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்கு பல இடங்களில் நில உடைமை இருந்ததாக மானுடவியலாளர் என அறியப்படும் எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தமது குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப் பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலுக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப்பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித்துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவ தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்” என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பனி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியிருக்கின்றன. பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பிய தொழிற்புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக்கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு, தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்திய கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிக கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்திய கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் கும்பனியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு. அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மது விற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியை தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பனியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின் மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பனிக்காரர்கள். “எகிப்திய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானிய கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கத் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பத்தார்.

கும்பனிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

தொடரும்…

திப்புசுல்தானை கண்டு சங்கிகள் அலறுவது ஏன்?   

தொடர்ந்து படியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here