“எழுதி வச்சுக்கோங்க! தமிழக மின்சார துறையை மூனே மாசத்துல எங்க தலைவர் விஜய் எப்படி கட்டமைக்க போறார்னு பாருங்க. உங்களால 30 வருஷம் செய்ய முடியாததை எங்க தலைவர் செய்வார். நிலக்கரி இறக்குமதில எவ்வளவு ஊழல் அப்படிங்கறது கூடிய சீக்கிரம் அமைச்சர் சொல்லப் போறாரு. மின்சாரத் துறையில பணியிடங்கள் காலியாக இருக்குது. பாதிக்கு மேல நிரப்பவே இல்லை.” – இதெல்லாம் ஆதவ் அர்ஜுனா உதிர்த்த முத்துக்கள்.
அமைச்சரா? ஆக்டிங் CMஆ?
தவெக ஆட்சியில் எந்த துறை குறித்து கேள்வி எழுப்பினாலும் நீங்கள்தான் பதில் சொல்கிறீர்கள். அதை காரணமாகக் கொண்டு உங்களை “ஆக்டிங் CM” என்று ‘மரியாதையாக’ சொல்கிறார்கள். நாங்கள் வெறும் அமைச்சரே என்று வரம்போடு நிறுத்திக் கொள்கிறோம். எங்களின் ‘குற்றத்தை’ பொறுத்தருள்க.
தமிழக மின்சாரத் துறையில் தற்போது 65,921 காலிப்பணியிடங்கள் இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறையில் வெறும் 343 பணியாளர்கள் மட்டுமே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் 20,000 பேருக்கு மின்துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார் அமைச்சர் நிர்மல்குமார். தனது மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீட்டிலும் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முதல்வர் விஜய் எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியுள்ளார். இந்த நியமனங்கள் தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு தீர்வு காணும் ஒரு அதிரடி நகர்வாகக் த.வெ.க.வால் முன்னிறுத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆட்சியில் பணி ஆணை வழஙிவிட்டு, அடிப்படை நேர்மையற்று, “லஞ்சம் வாங்காமல்” பணி வழங்கியதாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்.
மின்சாரத் துறையில் தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளதாகவும், வருவாய், செலவு மற்றும் கடன் சுமை அனைத்தும் உயர்ந்தபோதிலும், பணியாளர் நியமனங்கள் குறைவாக உள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மாற்று திட்டம் என்ன வைத்துள்ளீர்கள் ஆதவ் அவர்களே.
ஊழலின் ஊற்றுக்கண்!
திருடனுக்கு தான் கொள்ளைக்காரனுக்கு தான் ஆள்காட்டிகள், கையாட்கள் தேவை. மின் உற்பத்தி துறையில் களமிறங்கியுள்ள கார்ப்பரேட் முதலாளிகளில், நிறுவனங்களில் யாரெல்லாம் ஊழல் செய்பவனோ, அதாவது மக்கள் மொழியில் திருடன், கொள்ளைக்காரனோ, (அனைவருமே திருடர்களாக இருப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகம்) அவனுக்கு அரசாங்கத்திலும் அதிகார வர்க்கத்திலும் கையாட்கள் இருந்தாக வேண்டியுள்ளது. அதாவது அவனுக்கு நண்பர்கள் இருந்தாக வேண்டியுள்ளது.
நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதிலும், அந்த நிலக்கரியை வாங்கி மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும், உற்பத்தி செய்த மின்சாரத்தை அநியாயமாக விலையை ஏற்றி இந்திய மக்களின் தலையில் கட்டுவதற்கும் பின்னால் நிச்சயம் மிகப் பெரும் ஊழல்கள் அரங்கேறி இருக்கும்; அரங்கேறி இருக்கிறது. இந்த ஊழலை ஒழிக்க தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும். ஆனால், உங்கள் மின் துறை அமைச்சரோ மின் உற்பத்தி வெளிப்படையான முறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்கிறார். அப்புறம் எப்படி ஊழலை ஒழிப்பது
பாஜகவின் நயவஞ்சகம்!
ஏற்கனவே உதய் மின் திட்டத்தை மாநில மின் துறையைச் சிதைத்த மோடி அரசு, அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்டவற்றை மொத்தமாக மத்திய அரசு வாங்கி, அதை மாநிலங்களுக்கு பிரித்து தருவதாக புதிய நடைமுறையை மோடி புகுத்தியுள்ளது.
அதாவது தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்திற்கும் மின்சாரம் தேவைப்பட்டாலும், அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நேரடியாக நாம் வாங்கிவிடக்கூடாது. தமிழ்நாட்டில் இருக்கும் மின் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அரசுக்கு தான் மின்சாரத்தை விற்பார்கள். ஒன்றிய அரசு தான் மீண்டும் நமக்கு அந்த மின்சாரத்தை அனுப்பி வைக்கும்.
மேலும் படிக்க: மின்சார சட்ட திருத்த மசோதாவை அனைத்து மக்களும் ஏன் எதிர்க்க வேண்டும்?
தமிழ்நாட்டில் ஆலை அமைத்து தொழில் செய்து வரும் மின் உற்பத்தியாளர்களிடம் நாம் அதாவது தமிழக மின்சார வாரியம் யூனிட்டுக்கு என்ன விலை என்று பேரம் பேச வாய்ப்பே கிடையாது. அதாவது நாம் வாங்கும் அனைத்து மின்சாரமும் ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு விற்கப்படுபவைதான். இப்படி தலையைச் சுற்றி காதை தொடும் முடிவுகள் எடுக்கப்பட்டது ஏன்?
“எங்கள் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதிக்கும் நடைமுறையை நாங்கள் ஏற்க மாட்டோம். மின்சார வாரியத்தின் கடன் சுமையை கூட்டும் இத்தகைய முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நேரடியாக நாங்களே கொள்முதல் செய்வோம்”-என்று சொல்வதற்கு முதல்வர் விஜய்க்கு, த.வெ.க. அரசாங்கத்திற்கு துணிச்சல் உள்ளதா? அப்படி துணிந்து நின்றால் நிச்சயமாக தமிழக மக்கள் த.வெ.க. அரசை ஆதரிப்போம்.
மின் துறையில் கால் பதித்துள்ள கார்ப்பரேட்டுகளுக்கு பொதுத் துறை வங்கிகளில் இருந்து வங்கி கடன் வழங்கி, ”ரைட் ஆப்” என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகள் தாராளமாக தானம் செய்யப்பட்டதிலும் ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பங்கு போனதா என ஆராய்வீர்களா?
எங்கள் ஊரில் எங்கள் வளங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து விட்டு, எங்கள் மக்கள் பணத்தில் ஆலையை அமைத்துவிட்டு, யூனிட்டுக்கு 10 ரூபாய், 15 ரூபாய் என்ற உங்கள் விருப்பத்திற்கு விலை வைக்கிறீர்களா? ஒழுங்காக குறைந்தபட்ச விலையை, நாங்கள் நிர்ணயிக்கும் விலையை ஏற்றுக் கொள்ளுங்கள்! -என்று நிர்பந்திப்பதற்கு தமிழக அரசுக்கு நெஞ்சுரம் தேவை.
திருட்டுப் பணத்தில் பகட்டு!
மோடி சாப்பிடும் இறக்குமதி காளான் விலை லட்சங்களில் உள்ளதாமே. இதைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ஆதவ். அவரின் கோட் சூட்டு உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் சந்தி சிரித்துள்ளது. இதற்கும் ஊழலுக்கும் ஓர் இணைப்பு உள்ளது.
அதானியின் தொழில் பெருக்கத்திற்கும், அது அரசாங்கத்தில் அதிகார வர்க்கத்தில் உருவாக்கியுள்ள ஊழல்வாதிகளுக்கும் இணைப்பு இல்லாமலா இருக்கும். நெல்லுக்கு (BJP) பாய்வது புல்லுக்கும் (மோடி) புசிந்துள்ளது. திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதில்லை பாசிஸ்ட்டுகள். துணிந்து பகிரங்கமாகவே அனுபவித்து மினுக்கித் திரிகிறார்கள். இது பற்றியெல்லாம் பேசுவீர்களா?
மேலும் படிக்க: மின்சார கொள்முதல் ஏலம்: பாஜக ஆளும் மாநிலங்களின் ஊழல் அம்பலம்!
இந்தியாவில் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து கோடிகளை குவித்ததில் முதலிடத்தில் இருக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். இந்தியாவின் மின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் மோடியின் நண்பரான கௌதம் அதானி தான். அவரின் விமானத்தில் மோடி உலகம் சுற்றியதை நாம் பார்த்துள்ளோம் தானே.
எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் முறைகேடாக அடிக்கும் கொள்ளையில் நிச்சயம் தனது நண்பர்களுக்கும் அடியாட்களுக்கும் பங்கை பிரித்து தந்தே இயங்குகிறது. கார்ப்பரேட் முதலாளியே அரசியல்வாதியாகவும் இருக்கும் பட்சத்தில், அந்த ஒரு கமிஷன் வேண்டுமானால் ரத்தாகலாம். அதிகார வர்க்கத்திற்கு உரிய பங்கு நிச்சயம் போயிருக்கும். அரசியல் கட்சிகளுக்கு எலெக்ட்டோரோல் பாண்டுகளாக அனுப்பப்பட்டிருக்கும். இப்படி உங்கள் மாமனார் லாட்டரி மார்ட்டின் திமுகவுக்கு வாரி வழங்கி உள்ளது கூடவா தெரியாதா பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களே?
மாமுல் வசூலில் No.1 கட்சியாக பாஜக!
கடந்த 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் பாரதிய ஜனதா கட்சி (BJP) மொத்தம் ரூ.6,060.51 கோடி மதிப்பிலான நிதியைப் பெற்றுள்ளது. இது கட்சிகள் மொத்தமாகப் பெற்ற தேர்தல் பத்திர நிதியில் சுமார் 47.5% ஆகும். லாட்டரி அதிபர் மார்டின் ரூ.1,300 கோடி வாரி வழங்கியுள்ளாராம் ஆதவ். அவர் உங்கள் அமைச்சரவை பதவியேற்பிலும் விருந்தினராக வந்திருந்தாரே.
கார்ப்பரேட்டுகள் எதற்காக பாஜகவுக்கு மிகவும் தாராளமாக வாரி வழங்கியுள்ளனர்? பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கும், திமுக போன்ற மாநில கட்சிகளுக்கும் கார்ப்பரேட்டுகள் நன்கொடைகள் தந்திருப்பது ஏன்? இவை அனைத்தையும் நோண்டிப் பார்ப்பதற்கு நேர்மை வேண்டும். அந்த அளவு நேர்மையானவர்களா நீங்கள் என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.
வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தால், நாளை மக்களைச் சந்திக்கும் போது உங்களை ‘நம்பி வாக்களித்த ‘ அவர்கள் ‘நையப் புடைப்பார்கள்’. எச்சரிக்கை அமைச்சரே.
இளமாறன்





