காராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்கள் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய மின் உற்பத்தியாளர்களை அழைக்கும் டெண்டர்களை வெளியிட்டுள்ளன. இரண்டு மாநில டெண்டர்களிலும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், உற்பத்தியாளர் சூரிய மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒன்றாக வழங்குவதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

முக்கியமாக, அதானி குழுமத்தின் மின் உற்பத்தித் திறன் மற்றும் திட்டங்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வகையில் ஒரே மாதிரியான ஏல அளவுகோல்களை வடிவமைத்து தன் அதானி விசுவாசத்தை காட்டியுள்ளது ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு பாஜக ஆளும் மாநிலங்கள்,

தற்செயல் அல்ல, திட்டமிட்ட ஊழல்!

மார்ச் 13, 2024 அன்று, மேற்கு மாநிலம் முழுவதும் மின்சாரத்தை விநியோகிக்கும் அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட், மின்சாரம் வழங்குவதற்கான ஏலங்களை அழைக்கும் டெண்டரை வழங்கியது.

மகாராஷ்டிரா 6,600 மெகாவாட்டிற்கு ஏலம் எடுத்தது, அதில் 5,000 மெகாவாட் சூரிய சக்தியிலிருந்தும், மீதமுள்ளவை நிலக்கரியிலிருந்தும் மின் உற்பத்தி செய்யப்படும். டெண்டர் ஆவணம் 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை நாட்டில் எங்கும் நிறுவவும் மற்றும் மாநிலத்திற்கு வெளியில் இருந்து சூரிய சக்தியைப் பெறவும் மின் உற்பத்தியாளரை அனுமதித்தது.

1,600 மெகாவாட் அனல் மின்சாரம் வழங்குவதற்கான ஒதுக்கீட்டை பூர்த்தி செய்ய, டெண்டர் கூறியவை: “டெவலப்பர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு உள்ளேயோ அல்லது அதற்கு வெளியேயோ எந்த இடத்திலும் ஒரு புதிய திட்டத்தை நிறுவலாம்.” இதேபோல், சூரிய சக்தியைப் பொறுத்தவரை, டெவலப்பர் அதை நாட்டில் எங்கிருந்தும் பெறலாம் என்பதே.

இதற்கு பொறுத்தமாகவே இந்த ஆண்டு தொடக்கத்தில் உற்பத்தியைத் தொடங்கிய குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவிலிருந்து மூன்று மாநிலங்களில் – ஒவ்வொன்றும் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் அலகுகளை அமைக்கும் அதானி குழுமத்தின் திட்டங்களுடன் இது சரியாகப் பொருந்துகிறது. மகாராஷ்டிரா டெண்டரில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் அதானி குழுமத்தின் திட்டங்களுடன் சரியாக ஒத்துப்போகிறது என்று சொல்வதற்கு பதில் அதானி குழுமத்திற்கு ஏற்ப டெண்டரை மகாராஷ்டிரா பாஜக அரசு வடிவமைத்துள்ளது என்று சொல்வதே பொறுத்தமாக உள்ளது.

மகாராஷ்டிரா டெண்டரை வழங்கிய பதினைந்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 28, 2024 அன்று, அதானி பவர் தனது நிலக்கரி எரியும் அனல் மின் நிலையத்தை ராஜஸ்தானின் கவாயில் விரிவாக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்தது.

தற்போது இந்த ஆலையில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் உள்ளன – மொத்தம் 1,320 மெகாவாட் – ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குகிறது . அதானி பவர் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட நான்கு புதிய அலகுகளை சேர்க்க விரும்புகிறது. விரிவாக்கப்பட்ட திறன் 3,200 மெகாவாட்டாக இருக்கும், இது தற்போதுள்ள அளவை விட இரண்டு மடங்கு கூடுதலாகும்.

படிக்க:

🌐 புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா ; 2020 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து! மக்கள் மீது கட்டணக் கொள்ளை!

அடுத்து ராஜஸ்தானின் டெண்டரை பொறுத்தவரை, ஏலம் எடுத்தவர் 3,200 மெகாவாட் அனல் மின்சாரத்தையும், 8,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தையும் ஒன்றாக வழங்க வேண்டும். மேலும், மாநில எல்லைக்குள் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் டெண்டர் வழங்கப்படுவதற்கு சற்று முன்பு, அதானி குழுமம் ராஜஸ்தானின் பாரான் மாவட்டத்தில் உள்ள கவாய் கிராமத்தில் தற்போதுள்ள அனல் மின் நிலையத்தை 3,200 மெகாவாட் அளவிற்கு விரிவுபடுத்துவதற்கான பசுமையான ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியது. இதேபோல், மாநிலத்தில் சோலார் பூங்காவை உருவாக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் டெண்டர் அளவுகோலில் மகாராஷ்டிராவில் இருந்து சிறிய மாற்றங்கள் இருந்தன: “டெவலப்பர் ராஜஸ்தானில் எங்கு வேண்டுமானாலும் ஒரு புதிய திட்டத்தை நிறுவலாம்” என்பதே.

இதன் ஒரு தொடர்ச்சியாக அதானி குழுமம், ராஜஸ்தான் மாநிலத்தில் 10,000 மெகாவாட் சோலார் பூங்காவை உருவாக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பது அனைவரின் கவனத்திற்குறியதாகும்.

இந்த ஏல அளவுகோல்கள் ஒரே மாதிரி இருப்பது தற்செயல் அல்ல, இரு மாநில அரசுகள் அதானி நிறுவனத்துடன் திட்டமிட்டுக் கூட்டுச் சதி மூலம் செய்திருக்கும் ஊழல். எந்த ஒரு ஏல அளவுகோலும் அதிகப்படியான போட்டியாளர்களை பங்கேற்க செய்வதாக இருக்க வேண்டும் என்பதே விதி. அதை ஒரு நிறுவனத்துக்குச் சாதகமாக செய்திருப்பது ஊழலே.

மின்துறையில் மாநில அரசுகள் கடன் வைத்திருக்கும் நிலையில் இப்படி பிஜேபி ஆளும் மாநில அரசுகள், டெண்டர்களை குஜராத்தின் கெளதம் அதானி குழுமத்தின் தேவைக்கேற்ப வடிவமைப்பதும், டெண்டர்களுக்கு ஏற்ப புதிய ஒப்பந்தங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிப்பதும் எதிர்கால இந்தியாவை மின்துறை மூலம் கபளிகரம் செய்யும் போக்கு என நாம் எச்சரிக்கை விடுப்பதோடு இல்லாமல், மக்களது பாதிப்புக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், கார்ப்பரேட்டுக்களின் கொள்ளைக்காவே ஆட்சி செய்யும் கார்ப்பரேட் அடிமையான மோடி அரசை வீழ்த்த வேண்டும். இதற்கு மின் துறையை உருவாக்கிய தொழிலாளர்களோடு, மின்சாரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர் மின் நுகர்வோர் என ஒட்டுமொத்த மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அப்போது தான் சுதந்திர ஒளியால் நாடும், மக்களும் பிரகாசிக்க முடியும்.

பரூக்.

செய்தி ஆதாரம்: https://www.reporters-collective.in/trc/two-power-tenders-by-bjp-ruled-states-favour-adani-group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here