பங்களாதேஷில் மாணவர்களின் தீவிரமான போராட்டத்தின் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு ஓடினார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு இட ஒதுக்கீடு காரணமாக சொல்லப்பட்டாலும் வேலையின்மையும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சுமையும் மக்களை கிளர்ந்தெழுந்து போராட வைத்துள்ளது.
ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு பின்பு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசராக முதலாளித்துவத்தின் செல்லப் பிள்ளையான நுண்கடன் நிறுவனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனா மீது கோபம் கொண்ட அந்நாட்டு மக்கள் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளையும் சூறையாடினர். வங்கதேசத்தின் சிறுபான்மை மக்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்களின் வீடுகளையும் உடைமைகளையும் சூறையாடினர்.
இதனை ஒட்டி இரண்டு நாட்கள் பங்களாதேஷின் சிறுபான்மை மக்கள் அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் இணைந்து டாக்கா மற்றும் சிட்டாங்கில் பேரணியை நடத்தினர்.
பேரணியில், இந்துக்கள் மீதான தாக்குதல் பற்றி சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் சிறுபான்மையினருக்கு 10 சதவீத நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பல்வேறு இடங்களில் பங்களாதேஷ் மாணவர்கள் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக நிற்கிறார்கள். அவர்களின் உடைமைகளையும், மத நிறுவனங்களையும் பாதுகாக்கிறார்கள்.
பங்களாதேஷின் 17 கோடி மக்கள் தொகையில் சுமார் 8% இந்துக்கள் உள்ளனர். இவர்கள் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை பாரம்பரியமாக ஆதரித்து வருகின்றனர். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் கோபம் கொண்டு இந்துக்களின் வீடுகளை தாக்கியுள்ளனர். மேலும், ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
வங்கதேச இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் ஆகஸ்ட் ஐந்து முதல் நாட்டில் உள்ள 64 மாவட்டங்களில், 52 மாவட்டங்களில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ்-ன் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊதிப் பெருக்கிய சமூக வலைதளங்கள்!
விவசாயிகள் போராட்ட செய்தியை பதிவிட்டால் violence content என்று நீக்கிவிடும் meta (பேஸ்புக்), பங்களாதேஷ் பற்றிய தவறான செய்திகளை தாராளமாக பரப்பியது. X தளத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாகவும், இந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் வீடியோக்களையும் பரப்பினர். இதனை பல லட்சம் பேர் பார்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட், கள்ளக்காதல் கொலைகளை கூட மதரீதியான கொலைகளாக சித்தரித்து கலவரம் செய்ய துடிக்கும் பாஜக சங்கிகள் வங்கதேசத்தில் நடந்த தாக்குதல்களை மிகைப்படுத்தி தவறான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள். இதன் மூலம் இஸ்லாமிய மத விருப்பத்தை உருவாக்க முயன்றார்கள்.
எடுத்துக்காட்டாக சட்டாகிராமில்(சிட்டகாங்) உள்ள லால் டிக்கியின் கரையில் அமைந்துள்ள நோபோக் ரோஹோ கோவில் தீ வைத்து எரிக்கப்பட்டதாக பொய்யான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர் அந்த கோவில் கமிட்டியின் ஆலோசகர் ரோனி பிஸ்வாஷ் “நாங்கள் கோவிலில் 24 மணி நேரமும் காவலில் இருக்கிறோம் இதுவரை எதுவும் நடக்கவில்லை” என்கிறார்.
மிகைப்படுத்திய Godi மீடியாக்கள்!
இந்தியாவில் உள்ள சில பத்திரிக்கைகளும் மிகைப்படுத்தியே செய்திகளை வெளியிட்டன, பரப்பின.
இந்திய ஊடகங்கள் பங்களாதேஷின் மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி செய்திகள் வெளியிடாமல் இந்து சமூகத்தின் மீது பெரிய தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக அதனை முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளியிடுகின்றன இந்த செய்திகளில் குறிப்பிடப்படும் பல வீடியோக்கள் படங்கள் மற்றும் தகவல்கள் தவறானவை.
மேலும் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் கலவரத்தின் மத்தியில் வசிக்கும் பங்களாதேஷ் இந்துக்களுக்கும் அச்சமூட்டும் வகையில் கோடி மீடியாக்களின் செய்திகள் அமைந்திருந்தன.
இந்திய ஊடகமான சுதர்சன் ஆகஸ்ட் 7 அன்று, இந்துக்களுக்கு சொந்தமான கடைக்கு தீ வைக்கப்படும் வீடியோவை X தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்டுள்ளது. அதில் ஒரு கடையில் தீப்பிடித்து எரிவதையும், சிலர் தீயில் இருந்து பொருட்களை எடுக்க முயற்சிப்பதையும் வீடியோ காட்டுகிறது.
இந்த வீடியோவினை ஆய்வு செய்த Dismislab நிறுவனம், கடந்த ஜூலை மாதம் லக்கிபூரின் மோஜு சவுத்ரிஹார் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் எரிந்து சாம்பல் ஆனது. இந்த வீடியோவை தற்போது நிகழ்ந்ததாக பரப்பி வருகிறது Godi மீடியாக்கள்.
இந்திய மக்களிடம் பரப்பப்படும் பொய்யும்! உண்மையும்!
- வங்கதேச கிரிக்கெட் வீரர் ரிட்டன் தாஸ் இந்து என்பதால் அவரது வீடு எரிக்கப்பட்டதாக ஒரு பொய் செய்தி பரப்பப்பட்டது. உண்மை என்னவென்றால் பங்களாதேஷின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டசா அவாமி லீக் கட்சியின் எம்பியாக உள்ளார். அதனால் கோபம் கொண்ட போராட்டக்காரர்கள் அவரது வீட்டை எரித்துள்ளனர். அதனை இந்து கிரிக்கெட் வீரரின் வீடு எரிக்கப்பட்டதாக பொய்யான தகவலை சங்கிகள் பரப்பி வருகிறார்கள்.
- மற்றொரு X பதிவில் இந்து பெண்களை வங்கதேச இளைஞர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக படங்களைப் பரப்பினர் சங்கிகள். இந்த படம் 2023 இந்திய உண்மை சரிபார்ப்பு ஏஜென்சியான Alt News இது இந்தியாவின் பெங்களூருவில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளது.
- பாபா பனாரஸ் என்ற எக்ஸ் கணக்கில் ஒரு வங்கதேச இந்து இளைஞர் கொல்லப்பட்டு சிறையில் தொங்கவிடப்பட்டதாக ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆனால் இறந்த இளைஞர் இந்து அல்ல. 9 போரஹத்தி யூனியன் சேர்மனான ஷாகிதுல் இஸ்லாமின் உடல் என இந்திய ஊடகமான இந்தியா டுடே வீடியோவுடன் செய்து வெளியிட்டுள்ளது.
- அதே X கணக்கில் உள்ள மற்றொரு பதிவில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கிவிட்டதாகவும் இஸ்கான், காளிமந்திர் மற்றும் பல கோவில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் 500 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள மூன்று படங்களுமே பொருத்தம் இல்லாதவை. பொய்யானவை.
இப்படி பல பொய்யான வீடியோக்களும், AI மூலம் தயாரிக்கப்பட்ட படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. ஆகஸ்ட் 5 ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு இந்து முஸ்லீம் மத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் பரப்பப்பட்டதாகவே தெரிகிறது.
சங்கிகள் இந்துக்களின் பாதுகாவலர்களா?
பாஜக சங்பரிவார் கும்பல் ‘பெரும்பான்மை இந்து’க்களின் விரோதி. இந்தியாவில் 10 ஆண்டுகளாக பாசிஸ்டுகளின் கொடூர ஆட்சியில் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். பாசிச கொண்டு வந்த திட்டங்கள் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது இந்திய இந்துக்கள் தான்.
படிக்க:
♦ வங்கதேசத்தில் இந்திய முதலீடுகள் பாதுகாப்பு பற்றி நிர்மலா சீதாராமன் அலறுவது ஏன்?
♦ வங்கதேசம் மாணவர்கள் எழுச்சி: துரோகிகள் தப்பி ஓடுகிறார்கள்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினாலும், வேலையின்மையாலும், வறுமையாலும், பசி பட்டினியாலும் பாதிக்கப்படும் பெரும்பான்மையினர் இந்துக்கள். இதற்குக் காரணமானவர்கள் பாஜக சங்பரிவார் கும்பலும் அவர்களது முதலாளிகளும் தான்.
ஆனால் சங்கிகளோ தங்களை இந்துக்களின் பாதுகாவலர்கள் போல நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
மணிப்பூர் கலவரத்தில் இந்தியப் பெண்கள் நிர்வாணமாக்கபட்டு இழுத்து செல்லப்பட்ட போது அது குறித்து ஒரு வார்த்தை பேசாத மோடி “… இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்து இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புவோம் என்று நாங்கள் நம்புகிறோம்… அமைதி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான எங்கள் இருநாட்டு மக்களின் பகிரப்பட்ட அபிலாசைகளை நிறைவேற்ற வங்காளதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது” என பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து ட்விட் செய்துள்ளார்.
பாசிஸ்டுகளால் வேட்டையாடப்படும் இந்திய சிறுபான்மையினர்!
இந்திய சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாசிஸ்டுகளின் ஆட்சியில் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர்.
தினம் தினம் இஸ்லாமியர்கள், காவி குண்டர்களால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலில் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.
உபியில் இஸ்லாமியர்களின் வீடுகளை இடித்து தனது புல்டோசர் ஆட்சியை நடத்தி வருகிறார் பாஜகவின் யோகி ஆதித்யநாத். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக அல்லது மாடுகளை கடத்தி சென்றதாக இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.
மணிப்பூரில் ஆர்எஸ்எஸ் கும்பலால் நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதும் தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும் நடந்தது. இதுபோல் சிறுபான்மையினர் மீதான பாசிஸ்டுகளின் ஆயிரம் தாக்குதல்களை நம்மால் கூற முடியும்.
வங்கதேசத்தின் அசாதாரணமான சூழ்நிலையை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறது பாசிச பாஜகவும் அடிமை சங்கிகளும். வங்கதேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கிறது.
பாசிச கும்பலின் பொய், பித்தலாட்டங்கள் இந்தியாவில் அம்பலமாக தொடங்கிவிட்டன. அதனால் பங்களாதேஷிலும் எடுபடவில்லை. பாசிஸ்டுகளுக்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் ஒற்றுமையை கட்டியமைப்பதின் மூலமே பாசிச கும்பலுக்கு பாடம் புகட்ட முடியும்.
- நலன்