உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. கணவன் இறந்தவுடன் அவரது மனைவியை விதவை என முத்திரை குத்தி வீட்டின் மூலையில் உட்கார வைப்பது தான் பார்ப்பனியம். அப்படி அவமதிக்கப்படுபவர்களை அழைத்து விழா நடத்தி கின்னஸ் சாதனையையும் செய்ய முயற்சிக்கிறது உ.பி. சங்கி அரசு.
வண்ணமயமான ஹோலியும், வண்ணங்கள் மறுக்கப்படும் கைம்பெண்களும்!
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணனுடன் தொடா்புடைய மதுரா, பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களில் 16 நாள்கள் வரை இப்பண்டிகை கொண்டாடப்படும்.
தமிழகத்தில் திருமண உறவு முறைக்குள் பொருந்துபவர்கள் தமது முறைபையன்கள் பெண்களின் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றிக் கொண்டாடுவதைப்போல் வடிவத்தில் ஒத்ததாய், வடமாநிலங்களில் பல வண்ண பொடிகளுடன் அல்லது பல வண்ண தண்ணீருடன் உற்சாகமாக கொண்டாடப்படுவது தான் ஹோலி.
பார்ப்பனியம் கணவனை இழந்தவர்களை விதவைகள் என முடியை மழித்து, காவி அல்லது வெள்ளுடை போர்த்தி, பொது நிகழ்வில் இருந்து ஒதுக்கி வைத்து, பிறர் முகத்தில் முழித்தாலே அது அபசகுணம் என வெறுக்கப்பட்டு வந்துள்ளதை வரலாறு அறியும்.
வெளிப்படையான புறக்கணிப்புகளும் அவமரியாதைகளும் சற்று பொதுவெளியில் மட்டுபட்டிருந்தாலும், குடும்ப அளவில், பண்டிகை அளவில் நீடிக்க தான் செய்கிறது. பார்ப்பன இந்து மதம் செல்வாக்கு செலுத்தும் அனைத்து இடத்திலும் கணவனை இழந்தவர்களுக்கு கொண்டாட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.
வடமாநிலங்களில் கணவனை இழந்தவர்களை தனியாக உள்ள மடத்தில் சேர்த்து விட்டு குடும்பத்தினர் வந்து விடுவதும், இளமையானவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி பார்ப்பனர்கள் உள்ளிட்ட மேட்டுக்குடியினருக்கு இரையாக்குவதும், மற்றவர்கள் மொட்டை அடித்துக் கொண்டு வாழ்நாள் தண்டனை கைதிகள் போல வாழ்ந்து மறைவதும் தான் பார்ப்பன இந்து மதம் செய்திருக்கும் ஏற்பாடு.
உத்தரப்பிரதேச அரசு முற்போக்கானதா?
கங்கை கரையில் ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் இத்தகைய இழிவுகளை துடைத்து அகற்றவா தற்போதைய யோகி அரசு விரும்புகிறது ? மேலும் அடக்குமுறையையும் அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்த தான் துடிக்கிறது. நடந்து முடிந்த மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கத்தில் புனித நீராட்டத்தை தொடங்கி வைக்க கைம்பெண்களை அழைத்து இருந்தால் அது ஒப்பீட்டளவில் “புரட்சிகரமான” மாற்றமாக இருந்திருக்கும். காவி பாசிச அரசு தான் சீர்திருத்தத்தைக் கூட விரும்பாதே.
இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி கொண்டாட்டத்துக்கு உத்தர பிரதேச சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பல்வேறு ‘சமூக நல அமைப்பு’களுடன் இணைந்து மாநில அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறதாம்.
இது நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனம், பக்தி இசை ஆகியவை இடம்பெறவுள்ளன. சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கைம்பெண்கள் பங்கேற்க வேண்டும். அவா்களை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை உ.பி மாநில சுற்றுலாத் துறை நடத்துகிறது என்கிறது தினமணி.
படிக்க:
🔰 கும்பமேளாவில் குளித்தால் பாவங்கள் போகாது! நோய்களே வந்து சேரும்!
🔰 பார்ப்பன மதத்தின் மூடநம்பிக்கையின் விளைவே கும்பமேளா உயிர் பலி!
கணவனை இழந்தவர்களை கைம்பெண் என முத்திரை குத்தி காலம் காலமாக புறக்கணித்து வந்தது தவறு; கொடும் குற்றம். அதை, இனிமேல் யாராவது செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என என்றாவது சங்கீகள் அறிவித்துள்ளனரா? மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிப்பார்களா? அதுவும் இல்லை.
ஏற்கனவே மகா கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் அழுக்கு தண்ணீரில் மூங்கி எழுந்து உலக சாதனை படைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அதிக அளவில் கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி கொண்டாட்டம் என்ற கின்னஸ் சாதனையை இந்த நிகழ்ச்சி படைக்க இருக்கிறது.

கைம்பெண்களுக்கு ஹோலி கொண்டாட்டத்தில் மட்டுமல்லாது சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் அனைத்து தளங்களிலும் உரிய உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதற்கு பார்ப்பனியம் இடம் தராது.
ஒருவன் கொடை வள்ளலாக வலம் வர வேண்டும் என்றால் ஊரில் நான்கு பிச்சைக்காரர்களை உருவாக்கி பராமரித்தாக வேண்டும். உத்தரப்பிரதேச அரசு முற்போக்கு வேடம் போட்டு கின்னஸ் உலக சாதனையாளராக வலம் வர விரும்புகிறது. அதற்கு கைம்பெண்களை பயன்படுத்துகின்றனர்.
தற்போது, மார்ச் 8 இல் உழைக்கும் மகளிர் தினத்தை உலகம் முழுக்க கொண்டாடியுள்ளோம். பெண்களின் மீதான கொடிய தாக்குதலில் ஒன்றான கைம்பெண் முறையை எதிர்த்தும், விதவைகள் மறுமணத்தை ஊக்குவித்தும், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அனைத்து தளங்களிலும் உறுதிப்படுத்தவும் நாம் இணைந்து போராடுவோம். ஒரு நாள் கூத்துக்களால் முற்போக்கு வேஷம் போட்டுக் கொண்டு ‘சாதனைகளை’ வேண்டுமானால் சொந்தமாக்கிக் கொள்ளலாமே தவிர உரிமைகளை நிலைநாட்ட முடியாது என்பதை சங்கிகளுக்கு இடித்துரைப்போம் .
- இளமாறன்