
“ஒடிசாவின் கந்தர்பால் மாவட்டம் துமேரிபடா கிராமத்தைச் சேர்ந்த பாலமது மாஜியை கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு கடித்துள்ளது. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அந்த கிராமத்துக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாததால், 8 கி.மீ. தொலைவில் உள்ள சாராமுண்டி கிராமத்திலேயே ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது.
இதை அறிந்த பாலமதுவின் மகள் ரஜனி மாஜி, வேறு வழியின்றி தனது தாயை தோளில் சுமந்தபடி கரடுமுரடான பாதையில் 5 கி.மீ. தூரம் நடந்து சென்றுள்ளார். பின்னர் இருசக்கர வாகனம் மூலம் 3 கி.மீ. பயணித்து ஆம்புலன்ஸ் வாகனம் இருந்த இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து துமுடிபந்த் சுகாதார மையத்தில் அனுமதித்துள்ளனர்.
நிலைமை மோசமாக இருந்ததால், அங்கிருந்து பலிகுடா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாலமதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என்று இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்காவிற்குப் பிறகு, உலகில் இரண்டாவது பெரிய பழங்குடி மக்களை கொண்ட நாடு இந்தியா. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பழங்குடி மக்கள் தொகை சுமார் 8.9% ஆகும்…. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடி ஆகும்.
இந்தியாவில் மட்டும் சுமார் 750 வகையான பழங்குடி மக்கள், இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலே சொல்லப்பட்ட ஒடிசாவில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மலைக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான பழங்குடிகள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தனது கடும் உழைப்பினால் காடுகளில் கிடைக்கின்ற இயற்கையான நறுமணப் பொருட்கள், பழங்கள், அரிய வகை மூலிகை பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்தும், பாதுகாப்பாக அதனை நிலப் பகுதிகளுக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த பழங்குடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு எந்த விதமான பெரிய திட்டங்களும் இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களால் செய்யப்படவில்லை. இவ்வாறு கொடூரமாக ஒடுக்கப்பட்ட சூழலில் தான் அவர்கள் தனது பாதுகாப்பிற்காக, வாழ்க்கை தேவைகளுக்காக மாவோயிஸ்டுகளை தங்களது பாதுகாவலர்களாகவும், தமது உரிமைகளுக்காக போராடுகிறார்கள் என்பதற்காகவும் ஆதரித்து நிற்கின்றனர்.
படிக்க: சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!
சூரிய வெளிச்சம் புக முடியாத அடர்ந்த வனக்காடுகள் தொடங்கி மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத உயர்ந்த பகுதியில் உள்ள மலை கிராமங்கள் வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள் இந்த மண்ணின் பூர்வ குடிமக்களான பழங்குடிகள்.
இந்த மக்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு வக்கற்ற இந்திய ஒன்றிய அரசாங்கம் அவர்கள் சொந்த முறையில் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டு வாழ்வதை அனுமதிக்காமல், வன பாதுகாப்பு சட்டம் என்ற பெயரிலும், காடுகள் பாதுகாப்பு என்ற பெயரிலும் அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றுகின்ற கொடூரமான செயலை செய்து வருகின்றனர்.
மேலே விவரிக்கப்பட்ட ஒடிசாவில் ஒடிசா பட்டியல் பகுதிகள் அசையா சொத்து பரிமாற்றம் (பட்டியல் பழங்குடியினர்) ஒழுங்குமுறை, 1956-ன் (Orissa Scheduled Areas Transfer of Immovable Property (By Scheduled Tribes) Regulation, 1956 – OSATIP) ஒழுங்குமுறை எண் 2-இல் திருத்தம் செய்வதன் மூலம் பழங்குடியினர் தங்கள் நிலங்களை பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு விற்பதற்கு அனுமதியளிக்க ஏற்கனவே ஆண்டு வந்த நவீன் பட்நாயக் அமைச்சரவையால் முடிவெடுக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒடிசா மாநிலத்தின் மக்கள் தொகையில் 95.91 இலட்சம் பழங்குடிகள் உள்ளனர். மொத்த மாநில மக்கள் தொகையில் இது 22.85 சதவிகிதம் ஆகும். அங்கு, 13 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups) உட்பட 62 தனித்துவமான பழங்குடியின மக்கள் குழுக்கள் வாழ்கின்றனர். ஒடிசாவில் மொத்தமுள்ள 314 வட்டாரங்களில் 121 வட்டாரங்கள் பட்டியல் பகுதிகளாக (Scheduled Area) அறிவிக்கப்பட்டுள்ளன; மாநிலத்தின் புவியியல் பரப்பில் சுமார் 44.70 சதவிகிதம் பட்டியல் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் உள்ள ஒடிசாவில் தான் பழங்குடி மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கொடூரம் நிகழ்த்தப்படுகிறது.
பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற மாவோயிஸ்டுகள் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆபரேஷன் காகர் மூலம் பல்வேறு அடக்குமுறைகளும், அதன் உயர்மட்ட தலைவர்களை முழுமையாக கொன்று ஒழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கையில் இந்திய ஒன்றிய அரசாங்கமான ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் நடந்து கொண்டுள்ளது.
படிக்க: பழங்குடிகளுக்கு 24,000 கோடி ஒதுக்கீடு! தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் பாஜகவின் தந்திரம்!
அவர்கள் பழங்குடி மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற போர்வையில் தான் இத்தனை அடக்குமுறைகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் ஒடிசாவில் உள்ள மக்களின் நிலைமையோ இவர்கள் முன்வைப்பதற்கு நேர் எதிராக உள்ளது. ஒடிசா மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற பழங்குடி மக்களின் நிலைமை இதுதான்.
பழங்குடி மக்களையும் சம உரிமை கொண்ட மனிதர்களாக மதிப்பதற்கு முதல் படியாகவே தற்போதுள்ள கார்ப்பரேட் – காவி பாசிச பயங்கரவாத ஆர் எஸ் எஸ் பாஜகவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும்.
பழங்குடி மக்கள் மட்டுமின்றி இந்த நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கு ஜனநாயக கூட்டரசு ஒன்று நிறுவப்பட வேண்டும்.
- கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






