”கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில் சமீபத்தில் என்.சி.சி., முகாம் நடந்தது. இதில், 17 மாணவியர் தங்கி பயிற்சி பெற்றனர். கடந்த 8ம் தேதி இரவு அனைத்து மாணவியரும் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் தூங்கியுள்ளனர்.

9ம் தேதி அதிகாலையில் அங்கு வந்த காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் (நா.த.க), 12 வயதான எட்டாம் வகுப்பு மாணவியை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதேபோல் மேலும் நான்கு மாணவியருக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது. ஐந்து மாணவியரும் பள்ளி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தபோது, ‘பெரிதுபடுத்த வேண்டாம்’ எனக் கூறி நிர்வாகம் இதனை அமுக்கப் பார்த்துள்ளனர். இந்த மாணவிகளில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையை நடத்திய காந்திநகரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை கிழக்கு மாவட்ட செயலரும், முதல் குற்றவாளியுமான சிவராமனை தனிப்படை போலீசார் நேற்று கோவையில் கைது செய்தனர். சுதாகர் என்பவரை தேடி வருகின்றனர்.

இந்தக் காமக் கொடூரனான சிவராமன் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லுாரிகளில், என்.சி.சி., முகாம் நடத்தியுள்ளார். அப்போதும் இது போலவே பல மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.” என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

நாம் தமிழர் என்ற பெயரில் தமிழகத்தில் வளர்ந்து வரும் தமிழ் பாசிச அமைப்பான சீமானின் ரசிகர் கூட்டம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், விழுமியங்களும், ஒழுக்க நெறிகளும் அற்ற தறுதலை கும்பல் என்பதை தான் மேற்கண்ட சம்பவம் நிரூபிக்கின்றது.

சமூக ஊடகங்களை திறந்தாலே, ’செந்தமிழன்’ சீமான் மேடைகளில் நான்காந்தர நரகல் நடையில் பேசுவதும், அதனை கீழ் இருக்கும் ரசிகர்கள் கும்பல் கைதட்டி ஆர்ப்பரிப்பதும் தொடர்ச்சியான நிகழ்ச்சி போக்காக மாறியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு எதிரான பல்வேறு அவதூறுகளையும், புளுகு மூட்டைகளையும் மூலதனமாக வைத்து செயல்படுகின்ற, பார்ப்பன ஆதரவு கழிசடை கும்பல் தனக்கு ’நாம் தமிழர்’ என்று பெயர் சூட்டிக் கொண்டு திரிகின்றது.

2012-ல் வெளியான நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் பிரிவு 7 ‘அ’ வில் நாம் தமிழர் பற்றிய அறிமுகம் பின்வருமாறு கூறப்படுகின்றது,

”தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக தமிழரின் இன எதிரியான இந்தியா, தனது எதிரிகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் துணையோடு கூட, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளிய நாடுகளையும், கியுபா, வெனிசுலா போன்ற நிகராண்மை நாடுகளையும் உள்ளடக்கிய அனைத்து உலக நாடுகளையும் ஒத்துழைப்பிற்கு அழைத்துக்கொண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, தமிழர்களின் ஒத்துழைப்பில்லாத இரண்டகத்தால் பேரழிவைச் சந்திக்க நேர்ந்தது; தமிழீழ விடுதலைப் போராட்டம் தன் இலக்கு நோக்கிய தொடர்ச்சியை இழந்து தவிக்கின்றது. தகுதியான எந்த உதவியும், எங்கிருந்தும் இல்லாத வெறுமை நிலவுகின்றது.”

இந்த வெறுமையை உடைத்தெறிந்து, தமிழர், உலக அரங்கில் மானத்தோடு வாழும் நிலையை உருவாக்கிட, விடுதலை வேட்கையும், வீரமும், மானமும், ஈகமும், ஒப்புடைப்புணர்வும், உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், ஒற்றுமைப் பண்பும், தன் விளம்பரத் தவிர்ப்பும், தன்னுறுதியும், இனவிடுதலைப் பற்றும், இனவிடுதலைப் குறிக்கோளில் உறுதியும், உடல் வன்மையும், உளத் திண்மையும், பொறுமையும், போர்மையும், அறிவார்ந்த சிந்தனையும், தகவார்ந்த செயல்திறனும் கொண்ட தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற தன்னிகரில்லாப் பேரியக்கமே “நாம் தமிழர் கட்சி”. அது தமிழர்க்காகத் தமிழர்களால் நடத்தப்படும் தமிழர்களின் கட்சி.” என்கிறது நாம் தமிழர் ஆவணம்.

”தமிழினத்துக்கு எதிரான துரோகங்களால் துயரமாகிப்போன ஈழப் போராட்டங்கள் குறித்து, மேடைதோறும் நரம்பு புடைக்க சீமான் கொந்தளித்த உணர்ச்சிமிகு பேச்சுகள், இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. திராவிட அரசியலில் ஊறிப்போயிருந்த தமிழர்களை `தமிழ்த் தேசிய’ உணர்வுகளால் தட்டியெழுப்பியதுதான் சீமானின் ஆகப்பெரும் சாதனை” என்று அவரது விசுவாசிகள் சிலாகித்து துதிபாடுகின்றனர்.

படிக்க:

♦ சீமான் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது
♦ 100 நாள் வேலைத்திட்டம் குறித்து நம்மாழ்வாரின் பேச்சு! | சீமான் தம்பிகள் கவனத்திற்கு|

ஈழத்தில் இருந்து வெளியேறி உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள், தமது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இரத்த வியர்வை சிந்தி சம்பாதிக்கின்ற பணத்தை கொடுத்து புலித்தலைவர் பிரபாகரனின் விசுவாசி என்ற பெயருடன் உலவி வரும் நாம் தமிழர் சீமானை ஆதரிக்கின்றனர். சீமான் நடத்தி வரும் மேற்கண்ட பித்தலாட்டங்களுக்கு பலியாகி பணம் கொடுத்து ஊக்குவிப்பது மட்டுமின்றி அவரது கழிசடை அரசியலுக்கும் துணை போகின்றனர். தொடர்ந்து இது போன்ற போலித் தமிழ் தேசியவாதிகளை நம்பி ஏமாந்தும் வருகின்றனர்.

கடந்த 19.04.2021 –ல் மயிலாடுதுறை பேராசிரியர் த. ஜெயராமன். கட்டுரை ஒன்றில், “நாம் தமிழர் கட்சி ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இயங்கிவருகிறது. தமிழ்நாட்டை ஐந்து கூறுகளாகப் பிரிக்க சதி செய்கிறது” என்று எழுதியிருந்தார். உடனே நாம் தமிழர் அரம்பர் கும்பல் குதித்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இன்றோ கிருஷ்ணகிரி சம்பவத்தின் மூலம் பொறுக்கிகளின் கூடாரமாக சீரழிந்து ஒருபடி மேலே சென்றுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே சாட்டை துரைமுருகன் மற்றும் அதிலிருந்து வெளியேறிய முன்னணி நிர்வாகிகள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜிவ்காந்தி போன்றவர்கள் சீமானின் ஒழுக்கக் கேடுகள் பற்றியும் அவருடைய தம்பிகளின் ஒழுக்கக் கேடுகளை பற்றியும் விவரிப்பதை சமூக ஊடகங்களில் பார்க்கும்போது காரித் துப்பச் சொல்கிறது.

ஆனாலும் சீமான் போன்றவர்கள் வளர்வதற்கான சமூக அடிப்படை என்ன?

முறையான வேலை வாய்ப்பு வசதியின்றி பல்வேறு தொழில்களை செய்து வாழ்க்கை நடத்துவதற்கு தள்ளப்பட்டுள்ள அரைப் பாட்டாளி வர்க்கத்தில் ஒரு பிரிவு பொதுவாகவே கட்டுப்பாடுகளையும், முறையான வாழ்க்கை அமைப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

”தனது வருவாயில் ஒரு பகுதியை குடிக்கலாம். அதனால் குடியைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது. சாதி ரீதியாக தனது குடிப்பெருமை பேசிக் கொள்ளலாம். அதனால் சாதி, மதமற்றவர்கள் என்று பேசக்கூடாது. பணம் சம்பாதிப்பதற்கு எத்தகைய கேடான வழிமுறைகளையும் கையாளலாம். அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. அதேபோல சமூக வலைதளங்களில் கேடுகெட்ட முறையில் எப்படிப்பட்ட வார்த்தைகளையும் முன்வைத்து விவாதிக்கலாம். அதற்கெல்லாம் வரம்புகள் விதிக்கக்கூடாது” என்று மொத்தமாக விழுமியங்களுக்கு கட்டுப்படாத தறுதலைகளை கொண்ட பிரிவினரையும் அரைப்பாட்டாளி வர்க்கம் தனது வயிற்றுக்குள் சுமந்துக் கொண்டுள்ளது.

இந்த அரைப்பாட்டாளிகளில் தீவிரமான இனவாதம், தீவிரமான சாதியவாதம், தீவிரமான மதவாதம் போன்றவற்றை பேசுகின்ற தறுதலைப் பிரிவினர் படிப்படியாக வளர்ந்து பாசிஸ்டுகளாக உருவெடுக்கின்றனர். இதுபோன்ற பாட்டாளி வர்க்கத்தின் கழிசடை பிரிவினரை பற்றி மார்க்சிய ஆசான்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். இயல்பாகவே இதுபோன்ற கும்பல்கள் பாசிஸ்டுகளுடன் நெருக்கமாக இருப்பதும், அவர்களின் அடியாள் படையாக செயல்படுவதும், பினாமி கும்பலாக மாறுவதும் தவிர்க்க முடியாது.

”வாக்கு அரசியல் திராவிடமோ தில்லிக் கும்பல் போட்ட தாளத்திற்கு ஏற்றவாறு, முன்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பின்பகுதியில் இந்தியம், சிங்களத்தோடு சேர்ந்து குழி தோண்டியது. இந்தியத் தேசியக் கட்சிகள் அனைத்தும், மனுவிய வெறியோடு (வெவ்வேறு அளவுகளில்) தமிழீழ விடுதலையை முற்றாக எதிர்த்து நின்றன, நிற்கின்றன. பகுதிவாதத் தமிழ்க்கட்சிகள் திராவிடக் கட்சிகளின் காலடிகளில் விழுந்து, அவற்றோடு இணைந்து ஈழத்திற்கு இரண்டகம் செய்தன…” என்று தேர்தல் அரசியல் கட்சிகளை பார்த்து சவடாலடித்தது நாம் தமிழர் கும்பல்,

ஆனால் கட்சி துவங்கியவுடன் நடந்த முதல் 2011 சட்டமன்ற தேர்தலில் ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று பேசியதும், ஈழத்தமிழருக்கு எதிரான பாசிச ஜெயாவை ‘ஈழத்தாய்’ என்று புகழ்ந்தது துவங்கி சமீபத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரைகளில், ’இந்த ஒரு தடவை தேர்ந்தெடுங்க’ என்று எந்தளவு கீழிறங்கி ஓட்டுப் பிச்சை கேட்டது என்பது வரை வாக்கு அரசியலில் தம்பிகளே நொந்துக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.

”தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருந்த வெறுமையை உடைத்தெறியப் போவது நாம் தமிழர் கட்சி என்றது அவர்களின் ஆவணம். நாம் தமிழர் கட்சி, ‘தாம் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்படுவோம்’ என்று அறிவித்து செயல்பட துவங்கியது. ஆனால் அவையெல்லாம் வெறும் வெட்டிச் சவடால்கள் என்பதைதான் அவர்களது நடவடிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளது.

தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட மாணவிகளின் பாதுகாப்பை நிராகரித்து தனது பாலியல் வெறிக்கு கேடாக பயன்படுத்திக் கொண்ட, அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிக்கொண்டு திரிந்த பொறுக்கி கும்பலான சிவராமன் போன்றவர்கள்தான் ’நாம் தமிழர்’ என்ற பெயரில் தமிழர்களுக்கு பாதுகாப்பான மாற்று அரசியலை கொடுக்கப் போவதாக கதையளக்கிறார்கள்.

சமூகத்தின் அரசியல் விழுமியங்களுக்கு எதிராகவும், சமூகத்தின் பண்பாடுகளுக்கு எதிராகவும் மாறியுள்ள கேடுகெட்ட சீரழிந்த கும்பலான தமிழ் பாசிஸ்டுகளாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கும்பலையும், அதன் தலைவனான சீமானையும் துரத்தியடிப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை தேர்வு செய்வது தான் தற்போதைய பாசிச எதிர்ப்பில் முன் தேவையாகும்.

ஆல்பர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here