லிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்கள் அனைவரையும் சம்பிரதயமாக இந்தியாவின் பிரதமரான பாசிச மோடி சந்தித்துள்ளார். ஆனால் வினேஷ் போகத் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாகவே இந்த சந்திப்பை அவர் திட்டமிட்டு நடத்தியுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே சமயம் வினேஷ் போகத் இந்தியாவிற்கு வந்த போது டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பும், அதன் பிறகு அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதும், வழியெங்கிலும் மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றதும், அவரது சொந்த மாநிலமான ஹரியானா விழாக்கோலம் கொண்டிருப்பதும் பாசிஸ்டுகளுக்கு உரிய பதிலடியாக மாறியுள்ளது.

இதனால்தான் அரசாங்கம் புறக்கணித்தாலும், மக்கள் மனதை வென்ற வினேஷ் போகத் போன்றவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னுதாரணமான பகத்சிங்கிற்கு இணையானவர்கள் என்று பார்க்க வேண்டி உள்ளது.

இன்றைய கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் மாணவர்கள் இளைஞர்களின் பங்கு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது காந்திய வழிமுறைகளை நிராகரித்து ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலம் தான் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை வீழ்த்த முடியும் என்பதை அறிவித்தவர்தான் பஞ்சாப் தந்த மாவீரன் பகத்சிங்.

தனது 17 வது வயதில் இந்துஸ்தான் குடியரசு கழகம் எனும் அமைப்பில் இணைந்த பகத் சிங், தனது 19 வது வயதில் நவஜவான் பாரத் சபா என்ற அமைப்பை துவக்கியது மட்டுமின்றி அதன் மூலம் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவது எப்படிப்பட்ட போராட்டமாக இருக்க முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டினார்.

இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, விடுதலைப் போராட்டத்தில் குறியீடாகவும் உள்ள பகத்சிங்கின் மண்ணில் வீரம் செறிந்த போர்க்குணமிக்க போராட்ட மரபை விளையாட்டு துறையில் கொண்டு வந்து நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார் வினேஷ் போகத்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் சிங் பாலியல் வக்கிர வெறி பிடித்த நாயாக மல்யுத்த வீராங்கனைகளை கடித்துக் குதறிக் கொண்டு திரிந்த போது எதிர்த்து நின்று போராடி நீதியை நிலை நாட்டுவதற்கு முன்னணியில் நின்றார் வினேஷ் போகத்.

”17,18 மாதங்களாக முறையாக பயிற்சி செய்யாமல் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருந்தால் ஒலிம்பிக்கில் எப்படி பதக்கத்தையும் பெற முடியும்” என்று தனது வெறுப்பை கக்குகிறார் பிரிஜ் பூஷணீன் விசுவாசியான மல்யுத்த கூட்டமைப்பு தவைவராக தேர்வு செய்யப்பட்ட சஞ்சய் சிங்.

பெண் விளையாட்டு வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது அம்பலமான பிறகும் அவனைக் காப்பாற்றுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட பாசிச பாஜக அரசாங்கம் போராட்டங்களை நீட்டிக்க செய்ததற்கு தான்தான் பொறுப்பு என்பதை உணராமல், வீதியில் நின்று நீதி கேட்டு போராடிய வீராங்கனைகள் மீது பழி சுமத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பது மட்டுமின்றி, இதுதான் ஜனநாயக விரோத பாசிச பயங்கரவாதம் ஆகும்.

நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும், நாட்டுப்பற்று போன்றவை சுருங்கி கொண்டே வருகின்ற இந்த காலகட்டத்தில் விளையாட்டு துறையில் தான் சாதிப்பதன் மூலம் இந்தியாவிற்கு பதக்கத்தை பெற்று தர வேண்டும் என்று இறுதி நொடி வரை போராடிக் கொண்டிருந்த வினேஷ் போகத் அற்புதமான முன்னுதாரணம்.

படிக்க:

♦ வினேஷ் போகத்: துவளாதே சகோதரியே! நாட்டு மக்கள் உன் துணை நிற்கிறோம்!

♦ ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டிய வினேஷ்  தகுதிநீக்கம்: ‘சதி இல்லை’ நம்புங்கள்!

படிப்பு முடித்தவுடன் வேலை தேடி செல்வதும், படிக்கின்ற காலத்திலேயே கேரியரிசம் பேசுகின்ற மாணவர்கள்-இளைஞர்கள் மத்தியில், எடுத்துக் கொண்ட இலக்கை நோக்கி எந்த இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று போராடுகின்ற போராட்ட மரபுதான் இளைஞர் களுக்குரியது என்பதை கற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் நமது போற்றுதலுக்குறியவர்.

கடந்த 124 ஆண்டுகளாக இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை வெறும் 40. ஆனால் இந்த ஆண்டு மட்டும் சீனா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 91. எப்படி ஒரு நாடு விளையாட்டு துறையில் முன்னணியாக விளங்குகிறது என்பதற்கு அடிப்படை விளையாட்டை ஊக்குவிக்கின்ற அரசாங்கங்களில் தன்மையை பொறுத்தது தான். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஒலிம்பிக்கிற்கு மட்டும் 470 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனாலும் அவர்கள் பதக்கம் பெறவில்லை என்று வெறுப்பை கக்குகிறது பாசிச பாஜக அரசு..

விளையாட்டு வீரர்கள் தனது திறனை வெளிப்படுத்த வெறும் பணம் மட்டும்தான் அடிப்படையா என்றால் இல்லை. நல்ல மனநிலையில் பயிற்சி பெறுவதும் உரிய ஊக்குவிப்பு செய்கின்ற பயிற்சியாளர்களும் அவசியம்.

பேட்மின்டன் விளையாட்டு போட்டியின் வீரரான அஸ்வினி பொன்னப்பா மற்றும் மற்றொரு வீரரான தனிஷா கிரஸ்டோ இருவருக்கும் தலா ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று இந்திய ஒலிம்பிக் கழகம் செய்தியை வெளியிட்டது.

இந்த செய்தியை மறுத்து தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அஸ்வினி பொன்னப்பா, ”நான் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகின்ற வரை எனது சொந்த செலவிலேயே பயிற்சி மேற்கொண்டேன் என்றும், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகும் தனது பயிற்சியாளரை அழைத்துச் செல்வதற்கு இந்திய அரசு மறுத்து விட்டது என்றும், ஒன்றரை கோடி வழங்கியதாக கூறப்படுவது பொய்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவற்றிற்கு செல்கின்ற விளையாட்டு வீரர்களை விட அதிகாரிகள் கூட்டம் அதிகமாக செல்கிறது என்றும், அவர்கள் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் நகரத்தை சுற்றிப் பார்ப்பதும், தனக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்வதிலும் பொழுதை கழிக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கண்டு கொள்வதே இல்லை. இப்படிப்பட்ட சொரணை கெட்ட கும்பல் தான் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு 470 கோடி ரூபாய் தொகையை ஒதுக்கி உள்ளோம் என்று கூசாமல் புளுகுகிறது.

விளையாட்டில் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு உடல் திறன் மட்டுமின்றி நாட்டுப் பற்றும் வேண்டும். இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உலக வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியாத சிறிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூட போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை பெறாததற்கும், இந்தியாவில் மாணவர் இளைஞர்களின் நாட்டுப்பற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

நாட்டுப்பற்று என்பது அரசியல் ரீதியாக அரசாங்கத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்ல, பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டுத்துறை, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகிய அனைத்து அம்சங்களிலும் நவீனத்துவத்தை விரும்பாத பிற்போக்கு தன்மை கொண்ட அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதும் நாட்டுப்பற்றுதான் என்றே நாம் கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை சொந்த முறையில் முயற்சித்து முன்னேறி வருகின்ற இளம் விளையாட்டு வீரர்களை பல்வேறு லாபிகள் செய்து பின்னுக்கு தள்ளி விடுகிறார்கள் ஆதிக்க சக்திகள். வினேஷ் போகத் இப்படிப்பட்ட நபர்களில் ஒருவர்தான்.

”தான் உண்டு, தன் வேலை உண்டு” என்று வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று பொழுதை கழிக்கின்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் தன் மீதும் சக தோழிகள் மீதும் பாலியல் வன்முறை ஏவப்பட்டதை கண்டித்து துணிச்சலுடன் வெளியில் வந்து போராடிய வினேஷ் போகத்துகள் தான் இன்று நமது சமூகத்திற்கு தேவை.

காலனியாதிக்கப் போராட்ட காலத்தில் தனது மண்ணின் மீது நேசத்துடன் போராடிய பகத்சிங் போல, கார்ப்பரேட் காவி பாசிசம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு வினேஷ் போகத் போன்ற வீராங்கனைகளின் முன்னுதாரணம் நமக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் வினேஷ் போகத் போன்றவர்கள் போற்றுதலுக்குரிய கடைவிடிக்க வேண்டிய முன்னுதாரணமான இளைஞர்கள்.

கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here