”பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக
உம்முடைய இராஜ்ஜியம் வருக
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக
எங்கள் அனுதின உணவை
எங்களுக்கு இன்று அளித்தருளும்
எங்களுக்குத் தீமை செய்தவர்களை
நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்”
ஆமென்.
என்று இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக பரலோகத்தில் இருக்கும் பிதாவை பூலோகத்திற்கு வரும்படி வருந்தி வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது கிறிஸ்தவ மதம்.
ரோமன் கத்தோலிக் முதல் ஆர்சி கிறிஸ்தவர்கள், பெந்தகோஸ்துகள், பாப்டிஸ்டுகள் வரை பல்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் தங்களின் பிதாவை வரவேற்பதில் வெவ்வேறு அலைவரிசைகளில் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிதாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களின் துன்பங்கள், துயரங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கையை காப்பதற்கும், பாவிகளை இரட்சிப்பதற்கு அந்த பிதாவை வருந்தி வருந்தி அழைத்துக் கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் 260 கோடி மக்கள் கடைபிடிக்கின்ற கிறிஸ்தவ மதம் பூமிக்கு வெளியில் உள்ள அண்டவெளியில் ஏதோ உலகம் இருப்பதாகவும் அங்கிருந்து பிதாவை வரவேற்பதாகவும் காதில் பூசுற்றிக் கொண்டுள்ளனர்.
அண்டம், பேரண்டம், பிரபஞ்சம் அனைத்திலும் பெரியது எமது ’ஈசன் இணையடி நிழலே’ என்று கொக்கரிக்கின்றது சைவ மதம். வானாகி, மண்ணாகி என்று வானையும் மண்ணையும் காக்கும் ஒரே கடவுள் என்று திருமாலினை வழிபடுகிறது வைணவ மதம்.
இந்த மதங்கள் அனைத்தும் இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்று ஏதோ ஒன்று இருப்பதாகவும் அதனை அடைவதற்கு பாவமற்ற பிறவியை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று மூட்டை மூட்டையாய் போதிக்கிறது.
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்கள் தனது உழைப்பினால் உருவாக்கிய பொருட்களின் மீது அவர்கள் பற்று கொள்ளக்கூடாது என்பதற்காக பற்றற்ற வாழ்க்கையை முன்வைத்து பூமிக்கு வெளியில் சொர்க்கத்தை படைத்து அதனை அடைவதற்கு வழியை காட்டிக் கொண்டுள்ளது மதங்கள்.
இந்த மதங்களையும் அதன் வழிபாட்டு முறைகளையும் ஆத்ம சுத்தியுடன் கடைப்பிடிப்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றும், பூலோகத்தில் பலவிதமான பாவங்களை புரிந்தவர்கள் நரகத்தில் வீழ்வார்கள் என்றும் மனித குலத்தை சபிக்கின்றது இந்த மதங்கள்.
இந்த மூடத்தனங்களுக்கும், மவுடீகங்களுக்கும் முடிவு கட்டியுள்ளது விண்வெளி ஆராய்ச்சியின் புதிய பரிமாணம்.
இந்த ஆராய்ச்சியின் பலன்களை ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளும், அமெரிக்க மேல்நிலை வல்லரசும் குறிப்பாக அதன் விண்வெளி ஆராய்ச்சி துறையில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் போன்ற எலான் மஸ்கின் கார்ப்பரேட்டுகள் பெரிய அளவில் ஆதாயமடையப் போகின்றன என்றாலும் மனிதர்களின் மூளையில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ள மத மூடநம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது இந்த விண்வெளி ஆராய்ச்சி. மதங்களால் சொர்க்கம், நரகம் என்று புனைவுகள் எங்கே உள்ளது என்பது அந்த மதக் கடவுளர்களுக்கும், மதவாதிகளுக்கும் மட்டுமே புரிந்த ’உண்மை.’
இந்த கடவுளர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் மனிதர்கள் தங்கள் அறிவியல் அறிவுடன் கண்டுபிடித்துள்ளதுதான் அறிவியல் மையம் ஆகும்.
விண்வெளி மையம் என்பது பூமியைச் சுற்றி வரும் பெரிய, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. இது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழவும் பணியாற்றவும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளவும் வடிவமைக்கப்படுகிறது.
பூமியில் இருந்து செலுத்தப்படும் விண்கலன்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும். ஆனால் விண்வெளி மையம் என்பது பூமியின் சுற்றுவட்டப் பாதையிலேயே நிலை கொண்டிருக்கும். பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இதுவரை இரண்டு விண்வெளி நிலையங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையம். இரண்டாவது, சீனாவின் டியான்கோங் விண்வெளி நிலையம்.
படிக்க:
♦ ஜேம்ஸ் வெப்: பிரபஞ்சவியலில் புதிய பரிமாணம்! அறிவியல் கட்டுரை!
♦ குரங்குகளின் பிடியில் நவீன அறிவியல்!
புவியீர்ப்பு விசை காரணமாக பூமியில் செய்ய முடியாத சோதனைகளை விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் மேற்கொள்கின்றனர். இந்தச் சோதனைகள் உயிரியல், இயற்பியல், பொருள் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
விண்வெளி வீரர்கள் பல மாதங்கள் வரை தங்குவதற்கான ஏற்பாடுகள் இதில் இருக்கும். அதாவது, விண்வெளி நிலையத்தில் ஓய்வறைகள், சமையலறைகள், கழிவறைகள் என அனைத்து வசதிகளும் இருக்கும்.
விண்வெளி மையங்கள் சூரிய ஒளித் தகடுகளால் இயக்கப்படுகின்றன. மேலும் காற்று, நீர் மறுசுழற்சி அமைப்புகளும் இந்த மையங்களில் இருக்கும்.
பூமியில் இருந்து ஏதேனும் பொருட்கள், கருவிகளை வழங்குவதற்கோ அல்லது விண்வெளி வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கோ விண்கலன்கள் வரும்போது, அவற்றைக் கச்சிதமாக விண்வெளி மையத்துடன் இணைக்கக்கூடிய வசதிகள் (docking port) அவற்றில் உள்ளன.
இத்தகைய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்வதற்கு என்று அமெரிக்காவின் நாசா மூலம் அனுப்பப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி வீரர்களின் ஒருவர்தான் சுனிதா வில்லியம்ஸ். இவர் மொத்தம் ஏழு முறை விண்வெளி நடைப்பயணங்களை மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, பெக்கி விட்சனின் முந்தைய 60 மணி நேரம் 21 நிமிட சாதனையை முறியடித்து, அதிக நேரம் விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்ட பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அவரது துணிச்சலும் அர்ப்பணிப்பும் உலகளவில் ஆர்வமுள்ள விண்வெளி வீரர்களுக்கு அவரை ஒரு முன்மாதிரியாக மாற்றியுள்ளது.
கடைசி முறையாக அவர் சென்று 10 நாட்களுக்குள் திரும்பி விடலாம் என்ற சூழலில் 9 மதங்களுக்கு மேலாக தங்கி இருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு பின்னால் பூமிக்கு உயிருடன் திரும்பியுள்ளதன் மூலமாக விண்வெளி மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றை பற்றி மதங்கள் முன்வைக்கின்ற அறிவியலில் மூடத்தனங்களுக்கு எதிராக பல்வேறு உண்மைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
அறிவியலை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற மூடர்கள் கூட்டம் எப்போதும், ’எதுவும் அவன் செயலே’ என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.
ஆனால் அதற்கு எதிராக போராடுகின்ற அறிவியலாளர்கள் இயற்கைக்கு எதிராக போராடி படிப்படியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். பூமியிலிருந்து 15 நிமிடங்களுக்குள் 47 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்லக்கூடிய அதிநவீன விண்கலன்களை தயாரித்து அதில் மனிதர்களை அனுப்புவதற்கு சோதித்து வருகிறார்கள்.
அனேகமாக அடுத்த நூற்றாண்டுக்குள் நிலவையும், பிற கோள்களையும் ஒரு சில நாட்களுக்குள் சென்று திரும்புகின்ற சுற்றுலா மையமாக மாற்றினாலும் அதைப்பற்றி ஆச்சரியப்பட ஏதுமில்லை.
இதன் மூலம் மதம் அறிவியலுக்கு முன்னாள் மண்டியிட்டு கிடக்கிறது.
- பார்த்தசாரதி.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
அறிவியல் சார்ந்த சிறப்பான கட்டுரையை புதிய ஜனநாயகம் இதழில் தோழர் பார்த்தசாரதி படைத்திருக்க கூடிய பாங்கு நேர்த்தியானது. அறிவியல் -விஞ்ஞானத்திற்கு முன்னால் மதவாதம் மண்டியிட்டே தீர வேண்டும் என்பதற்கு சுனிதா வில்லியம்சின் சாதனை அளப்பெரிது! “மதம் மக்களுக்கு அபின் போன்றது” என்றார் ஆசான் காரல் மார்க்ஸ்.
எந்த மதங்கள் ஆனாலும் அவை அறிவியலை புறந்தல்லவே செய்கின்றன.
அதிலும் குறிப்பாக இந்து மதத்தை சொல்லவே வேண்டாம். கிறிஸ்தவ மதத்தின் சீர்கேடுகளை உணர்ந்த இங்கிலாந்து நாட்டின் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய “Why I am not a Christian?” என்ற நூலில் கிறிஸ்தவ மதத்தின் அறிவியலுக்கு புறமான பல்வேறு அம்சங்களை நன்றாகவே தோலுரித்துள்ளார். நாம் அறிவியலை முன்னெடுப்போம்! மத வெறியர்கள் அறிவியலுக்குப் புறம்பான அஞ்ஞானத்தை முன்னெடுத்து வீழ்ந்து தொலையட்டும்!
புதிய ஜனநாயகம் (மா.லெ.)
உட்பட நாம் வெளியிடும் படைப்புக்கள் மற்றும் இவ்விதக் கட்டுரைகளை அடிக்கடி வெளிக்கொணரட்டும்! கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!