உச்ச நீதிமன்ற முதல் உயர் நீதிமன்றம் வரை  எங்கே இருக்கிறது சமூக நீதி?
பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கின்ற ஒரு கேடுகெட்ட சமூகத்தில் ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை படித்து முன்னேறுவதற்கு முன்பாகவே இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் அனைத்தும் சட்டரீதியாக ஒழித்துக் கட்டப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

“நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது.

இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத வகையில் உயர் நீதிமன்றங்களில் பன்முகத்தன்மைப் பற்றாக்குறை உள்ளது.

“உச்சநீதிமன்றத்திலும் – உயர்நீதிமன்றங்களிலும் பல்வேறு சமூக குழுக்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனச் செயல்முறையில் வெளிப்படையான பாகுபாடு காணப்படுகிறது.

2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் OBC, SC மற்றும் ST சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது குறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் வழங்கிய தரவுகளைக் கண்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.

01.01.2021 முதல் 30.01.2026 வரை நியமிக்கப்பட்ட 593 நீதிபதிகளில், 26 பேர் SC சமூகத்தையும், 14 பேர் ST சமூகத்தையும், 80 பேர் OBC சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.

சதவீத அடிப்படையில் பார்த்தால்,

2021 – 2026 (மொத்த நீதிபதிகள்: 593)

SC: 4.38% (26)

ST: 2.36% (14)

OBC: 13.49% (80)

FC: 79.76% (473)

என்று திமுகவின் எம்பியான வில்சன் வெளியிட்டுள்ள பதிவு சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமூக நீதிக் கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை, அது பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று கவலைப்படுகின்ற அல்லது ஆத்திரமடைகின்ற திமுக அதற்கு தீர்வாக ஏற்கனவே இந்தியாவில் நிலவி வந்த போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை மாற்றாக முன்வைக்க விரும்புகிறது.

இதற்கு நேர் மாறாக பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவோ ஏற்கனவே இந்தியாவில் 1947 முதல் நிலவி வந்த போலிஜனநாயக அரசுக் கட்டமைப்புக்கு பதிலாக கார்ப்பரேட் காவி பாசிசத்தை அதாவது இந்துராஷ்டிரம் என்று முன்வைக்கக்கூடிய பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை கொண்ட அரசு கட்டமைப்பை நிலை நாட்ட விரும்புகிறது. இவை இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது என்று சண்ட மாருதம் செய்கின்றனர் சிலர். அரசியல் அறியாமையில் உழலுகின்ற அவர்களின் பிதற்றல்கள் ஒருபுறம் இருக்கட்டும்.

இந்தியாவில் அரசு கட்டமைப்பினால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் கடைசி புகலிடம், அதாவது நீதி வழங்குகின்ற உயர்ந்த பட்ச அமைப்பு என்று கருதிக் கொண்டுள்ள உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகளாக கொலு வீற்றிருக்கும் ‘நீதியரசர்கள்’ பெரும்பாலும் பார்ப்பன மற்றும் மேல் சாதியைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட இந்திய சமூக அமைப்பில் பார்ப்பனரல்லாத பிற சாதியினர் படித்து முன்னேறுவது என்பது மிகவும் கடினமான செங்குத்தான மலைமுகட்டில் ஏறக்கூடிய வகையிலான சிக்கலாகும்.

பார்ப்பனரல்லாத பிற சாதி மக்கள் படித்து முன்னேற்றம் அடைந்து விட்டால் வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் மற்றும் சனாதனம் என்ற புளுகு மூட்டைகளை வைத்துக்கொண்டு பெரும்பான்மை மக்கள் மீது சவாரி செய்ய முடியாது என்ற காரணத்திற்காகவே கல்வி பெறும் உரிமையை பெரும்பான்மை மக்களிடமிருந்து பறித்து வந்துள்ளனர் என்பது தான் வரலாற்று உண்மை.

படிக்க:

 பிரதமரின் வெறுப்புப் பேச்சுகள்! கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்! நீதிமன்றம் அமைதி காக்கலாமா? 

 தேர்தல் ஆணையர் நியமனம்: ‘ஜனநாயகத்துக்கு’ சாவுமணியடிக்கும் பாசிச பாஜக!

இதனையே, “பிறருக்கு கல்வி உரிமையை பறித்ததன் மூலமாக தனது மேன்மையை நிலைநாட்டிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்” என்கிறார் காரல் மார்க்ஸ்.

இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்கின்ற ஒரு கேடுகெட்ட சமூகத்தில் ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை படித்து முன்னேறுவதற்கு முன்பாகவே இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் அனைத்தும் சட்டரீதியாக ஒழித்துக் கட்டப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் உள்ள நீதித்துறை உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் பார்ப்பன மற்றும் மேல் சாதிகளின் மூலம் நிரப்பப்படுகிறது என்பதும் அவர்கள் ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற, ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற இந்துராஷ்டிரக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் எழுதப்படாத விதியாகவே அமல்படுத்தப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு முதல் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகளான ஆர்எஸ்எஸ்-பாஜகவின் குண்டர் படைத் தளபதிகள் அனைவரும் எந்த விதமான தண்டனையுமின்றி சிறையில் இருந்து வெளி வருகிறார்கள் என்பதற்கும், நீதிமன்ற நியமனத்தில் பார்ப்பனர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யாராவது நம்பிக்கொண்டிருந்தால் அவர்களை விட பாமரத்தனமானவர்கள் இருக்க முடியாது.

சமீபத்தில் வட இந்தியாவில் ஸ்டாண்டிங் காமெடி செய்யக்கூடிய குணால் காம்ரா இந்த விவகாரத்தை பற்றி தெரிவித்திருந்தார். “நீதிபதிகள் அனைவரும் பார்ப்பனர்களாகவே இருப்பதன் மர்மம் என்ன?” என்று எழுப்பிவிட்டு, ஒருவேளை என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கை விசாரிப்பவரும் ஒரு பார்ப்பனராக இருக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு அது முன்வைக்கின்ற நியதிகளின் அடிப்படையில் போராடுவது மட்டுமே தீர்வு என்று இன்னமும் ஏமாந்து கொண்டிருக்கும் மெத்தப் படித்த அறிஞர்கள் முதல் உழைக்கும் மக்கள் வரையிலான அனைவருக்கும் நாம் சொல்ல வேண்டிய செய்தி இதுதான்.

இந்த நாட்டின் அரசு கட்டமைப்பு அனைத்தும் பாசிசமயமாகி வருகிறது என்பதும், நீங்கள் நம்புகின்ற அனைத்து ஜனநாயக உறுப்புகளும் பாசிச உள்ளடக்கம் கொண்டதாகவும், அது இயல்பாகவே ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் அரசியல், பொருளாதார நிர்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு மறுகாலனியாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மை பாசிச பயங்கரவாதமாக தலை விரித்ததாடுகின்ற சூழலில் பாசிச உள்ளடக்கம் கொண்ட அனைத்து அரசுக் கட்டமைப்புகளையும் எதிர்த்து முறியடிப்பதற்கு கீழிருந்து மக்கள் எழுச்சியை உருவாக்கும் வகையில் போராட வேண்டும் என்பதுதான் ஒரே வழி.

இவ்வாறு நீங்கள் போராட தயாராகவில்லை என்றால் ஒன்று, இந்தியாவின் திறந்தவெளி சிறைச்சாலையில் வாட வேண்டும் அல்லது மூடப்பட்ட சிறைக்கம்பிகளுக்கு மத்தியில் நீண்ட காலம் அடைக்கப்பட்டு ஒடுக்கப்படுவீர்கள். வழக்கம் போல நீதிபதிகள் என்று அழைத்துக் கொள்ளக்கூடிய பார்ப்பன மற்றும் மேல் சாதியினர் இதனை பார்த்து தன்னுடைய வேலைகளை செய்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே நீதியை, சமூகநீதியை நீதிமன்றங்களுக்கு வெளியில் வீதியில் தேடுகின்ற புதிய வழிமுறைகளை கடைபிடிக்கத் தயாராக வேண்டும் என்பதுதான் நமக்கு முன்னேயுள்ள தீர்வாகும்.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here