டெல்லியில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கீழ்க்கண்டவாறு பேசியுள்ளார்:

“கணபதி பூஜைக்காக பிரதமர் எனது இல்லத்திற்கு வந்தார். சமூக மட்டத்தில் கூட நீதித்துறை மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான சந்திப்புகள் அடிக்கடி தொடர்வதால், பிரதமர் மோடி எனது வீட்டிற்கு வந்ததில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் ஜனாதிபதி மாளிகை, குடியரசு தினம் போன்றவற்றில் சந்திப்போம். நாங்கள் பிரதமருடனும் அமைச்சர்களுடனும் அடிக்கடி உரையாடி வருகிறோம். இந்த உரையாடலில் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக ஒருபோதும் பேசியதில்லை. ஆனால் பொதுவாக வாழ்க்கை மற்றும் சமூகம் தொடர்பாக இருக்கும் ஒரு வலுவான இரு அமைப்புகளின் ஒரு பகுதியாக ஒரு உரையாடல் நடந்தது என்பதை மதிக்க வேண்டும். நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பது என்பது இருவரும் சந்திக்கவே கூடாது என்று அர்த்தமல்ல. அயோத்தி ராமர் கோயில் பிரச்சனைக்கு, தீர்விற்காக கடவுளைப் பிரார்த்தனை செய்தது என்பது – நான் மத நம்பிக்கை கொண்டவன் என்ற அர்த்தத்தை மட்டுமே அளிக்கும். நான் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பேன்”

இதுதான் எதிர்வரும் 2024 நவம்பர் 10-ல் ஓய்வுபெற இருக்கும் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திருவாளர் சந்திரசூட் தெரிவித்துள்ள கருத்துக்களாகும்.

வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா அன்று பிரதமர் மோடி தமது வீட்டுக்கு வந்து கணபதி ஹோமம் நிகழ்வில் பங்கேற்றது தவறு இல்லையாம்! அனைவரையும் இல்லாவிட்டாலும்ஏன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மட்டுமாவது கூட அழைத்திருக்கலாமே? அவரும் இந்து தானே? ஏன் விட்டீர்கள்? எந்தச் சட்டம் அதற்கு தடை போட்டது?

குடியரசுத் தலைவர் மாளிகை, சுதந்திர தினம் போன்ற நிகழ்வுகளில் கூட நானும் பிரதமரும் சந்தித்து உரையாடி இருக்கிறோம் என்பதும், விநாயகர் சதுர்த்திக்கு திரு சந்திர சூட் பிரதமர் மோடியை அழைத்து கணபதி ஹோமம் நிகழ்வில் பங்கேற்கச் செய்வதும் ஒன்று தானா என்பதனை சாதாரண பாமரன் கூட இது பற்றி தெளிவான கருத்தைக் கூறுவான்!

ஆனால், ‘எல்லா மதங்களையும் சமமாக பதிப்பவன் தான் நான்’ எனக் கூறும் திரு சந்திரசூட், எந்தெந்த மத நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார்; அல்லது எந்தெந்த மதத் தலைவர்களை தமது வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார் என்பதனை அவர் தான் விளக்க வேண்டும்.

திருவாளர் சந்திர சூட் அவர்களுக்கு மத நம்பிக்கை இருப்பதையோ அல்லது கடவுள் நம்பிக்கை இருப்பதையோ யாரும் கேள்வி எழுப்ப முன்வரவில்லை. அதே நேரத்தில் இந்திய நாட்டின் உச்ச பட்ச நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கென சில சுய கட்டுப்பாடுகளும், சில வரன்முறைகளும் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். அவர் கூறியது போல அனைத்து மக்களுக்குமான பொதுவான நபர் என்பதனை அவர் எந்நேரத்திலும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைவிடுத்து ஒரு பிரதமர் பதவியில் இருக்கும் பாசிசத் தன்மை கொண்ட பாஜகவின் மோடியை வீட்டிற்கு அழைத்து கணபதி ஹோமம் நிகழ்வில் பங்கேற்கச் செய்ததை எந்த வகையிலும் அவர் நியாயப்படுத்த முனைவது சரி ஆகாது; இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


படிக்க:  நீதிபதி டி.ஒய். சந்திரசூட்: நம்பத்தகுந்த நீதிமானா?


அதேபோல, அயோத்தி ராமர் கோயில் பிரச்சனைக்கு தீர்ப்புரை எழுதுவதற்காக ‘நான் கடவுள் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தது என்பது, நான் மத நம்பிக்கை கொண்டவன் என்ற அர்த்தத்தையே அது அளிக்கும்’ என்று அவர் பிதற்றுவதும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தீர்ப்புரைகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, ஒவ்வொரு தனித்தனியான குற்ற செயல்களுக்கும், பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் விசாரணை மேற்கொள்வதும் பல்வேறு விதமான சாட்சியங்களின் அடிப்படையில் எப்பக்கம் முற்று முழுதாக நியாயம் இருக்கிறது; உண்மை இருக்கிறது; குற்ற செயல் இருக்கிறது… என்ற அடிப்படையில் மட்டுமே தீர்ப்புரை வழங்க முடியும்.

அதை விடுத்து ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, குறிப்பிட்ட வழக்கிற்கு தீர்ப்புரை வழங்குவதற்காக கடவுள் முன் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து எவ்விதமான தீர்ப்புரை வழங்குவது என்று வேண்டுவாரேயானால், இது நீதிமன்றமா? அல்லது காவி மன்றமா? அல்லது பஜனை மன்றமா? வெட்கக்கேடாக வல்லவா இருக்கிறது திருவாளர் சந்திர சூட்டின் விளக்கம்.

மேலும், அண்மையில் நீதிமன்றத்திற்கே உரிய சின்னமாக ஏறத்தாழ உலகு தழுவிய வகையில் விளங்கிய கருப்புத் துணியால் கண்கள் மறைக்கப்பட்ட நீதி தேவதையின் உருவத்தையே மாற்றி நெற்றியிலே திலகமிட்டு வேறு அலங்கோலங்களை செய்வதற்கு திரு சந்திர சூட் அவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? இவையெல்லாம் பாசிச சங் பரிவார – இந்துத்துவ – மதவெறி ஆர் எஸ் எஸ் – பாஜக கூட்டத்தின் தூண்டுதலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?


படிக்க: செந்தில் பாலாஜி முதல் உமர் காலித் வரை: நீதித்துறையின் பாசிசம்!


தேர்தலில் தில்லுமுல்லுகள் என்றால், தாமாகவே முன்வந்து வழக்கு தொடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், பல வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் காவிகளுக்கு ஆதரவாக மூடி முடமாக்கி விடுகின்றன நீதிமன்றங்கள்!

மணிப்பூரிலே பாஜக ஆர்.எஸ்.எஸ். கூட்டம் குக்கி இன சிறுபான்மை கிருஸ்தவ மக்களை பல நூறு பேர்களை கொன்றொழித்தது மட்டுமின்றி அவர்கள் வெளிமாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும், அரசின் முகாம்களுக்கும் புலம்பெயர்ந்தார்களே அப்படிப்பட்ட கொடுமைகளின் போதெல்லாம் நீதிமன்றம் என்ன செய்தது?

மணிப்பூரிலே குக்கி இன இளம் பெண்களை முழு நிர்வாணப்படுத்தி அவர்களின் பிறப்புறுப்பில் சங்கிக் காலிக் கூட்டம் கை வைத்தபடியே ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து கொன்றொழித்தார்கள். அப்பொழுதெல்லாம் இந்த நீதிமன்றங்கள் என்ன செய்து கொண்டு இருந்தன? கடவுள் முன் அமர்ந்து இதற்கு ஒரு பரிகாரம் தேட பிரார்த்தனை செய்திருக்கலாமே சந்திர சூட் அவர்களே!

ஆக, நீதிமன்றங்கள் முக்கியமாக தலையிட்டு தீர்க்க வேண்டிய பல்வேறு வழக்குகளை கிடப்பில் போடுகிறார்கள். கர்நாடக மாநில சிறந்த எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் அவர்களை சனாதன் சன்ஸ்தா என்ற காவி கொலைகார கும்பல் சுட்டு வீழ்த்தி கொலை செய்தது. அந்தக் கொடும் குற்றவாளிகளை சிறையில் இருந்து ஜாமீனில் விடுவித்தது நீதிமன்றம். அந்தப் பொறுக்கிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பாஜக இந்துத்துவ மதவெறி அமைப்புக்கள் சால்வை அணிவித்து, நெற்றியிலே குங்குமப்பொட்டிட்டு வாழ்த்து முழக்கங்களோடு ஊர்வலமாக அழைத்துச் செல்கிறது! இவற்றையெல்லாம் நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தனவே யொழிய இந்த அக்கிரமங்களுக்கு எதிராக ஒரு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை.


படிக்க: கௌரி லங்கேஷ் கொலையாளிகள் விடுதலையும், பார்ப்பன பாசிஸ்டுகளின் வரவேற்பும்!


இடதுசாரி சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி போன்றோரும் கௌரி லங்கேஷ் சுடப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பே, இதே பாசிச காவி கூட்டத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அந்த வழக்குகள் எல்லாம் ஒட்டடை மண்டிப் போய் முடங்கிக் கிடக்கின்றன.

இன்னும் எத்தனையோ இடதுசாரி சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் ஊபா (UAPA) போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீண்டகாலமாக அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

அப்படிப்பட்டோரில் மிகச்சிறந்த புரட்சிகர சிந்தனையாளர், கடுமையான மாற்றுத்திறனாளி தோழர் சாய்பாபா அவர்களை பத்தாண்டு காலமாக இந்த மோடியின் பாசிச பாஜக சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததை நாடே அறியும்.

மிக நீண்ட காலம் வழக்கு நடந்து, இறுதியில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின், வெளியே வந்த அந்த புரட்சிகர தோழர் சாய்பாபா அவர்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்பட்டு, சிறந்த மருத்துவ சிகிச்சைக்கு முயன்ற போதும் வெற்றி கிடைக்காமல் அவர் உயிரிழந்தார். இல்லை! அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்பதே சரியானதாகும்.

இப்படி எண்ணற்ற விடயங்களை நீதி பரிபாலான முறையில் நடக்கும் மோசடிகளை, அப்படிப்பட்ட மோசடிகளுக்கு உந்து விசையாக இருக்கும் காவி கூட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்! பக்கங்கள் போதாது!

நாட்டு மக்கள்தான், இப்படிப்பட்ட மோசடிகளைப் பற்றி, ‘நடுநிலைமைகளை’ப் பற்றி ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும். இந்தக் கேடுகெட்ட சமூக அமைப்பில் இவை இப்படித்தான் நீண்டு கொண்டே போகும். ஒரு ஜனநாயகபூர்வமான ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பி மாற்று சமூக அமைப்பை – ஜனநாயக கூட்டரசை நிறுவுவதற்கு நாம் முன்னேறுவதும், அதன் மூலம் பல்வேறு படி நிலைகளைக் கடந்து, புதிய புதிய சமூக கட்டமைப்புக்களை, நாட்டின் உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்நிலை – உழைப்பு நிலை இவற்றிற்கு ஏற்றபடி முன்னேறிச் செல்ல உறுதி ஏற்போம்!

கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை முறியடிப்போம்!
ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்!!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here