உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அதன் சிறுபான்மையினருக்கோ வாழ்க்கை மிகவும் வித்தியாசமான ஒன்றாகவே இருந்துவருகிறது.
இந்திய அரசியல் சாசனமானது மக்கள் நலம் பேணும் ஆவணம் என்றும், சம அந்தஸ்தையும் வாய்ப்பையும் அது எல்லாக் குடிமக்களுக்கும் உறுதியளிப்பதோடு, ’ஒடுக்கப்பட்ட’ சமூகங்களின் நிலையை மேம்படுத்த உதவும் என்றும் நெடுங்காலமாகக் கூறப்பட்டு வந்துள்ளது.
இந்துத்துவ அரசியலின் சமீபத்திய எழுச்சி மதச்சார்பற்ற அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுவதோடு, ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்பது பாஜக எதிர்ப்புச் சக்திகளின் கவர்ச்சியான முழக்கமாக ஆகியுள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டத்தின் சில கூறுகளேகூட மதச் சிறுபான்மையினருக்குப் பாரபட்சம் காட்டுவதாக அமைந்திருப்பது அவதானிக்கத்தக்கதாகும்.
கடந்த ஏழு தசாப்தங்களாகப் பல வழிகளில் இந்த அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக 20 கோடி முஸ்லிம்களை, இரண்டாந்தரக் குடிமக்ககளாகக் குறுக்குவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம்களின் வறுமை, கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்த பரிதாபகரமான புள்ளிவிவரங்கள் யாவும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது சிறுபான்மை விவகாரம் தொலைநோக்குடன் அணுகப்படவில்லை என்பதை மிகத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
- மாநிலங்களின் ஒன்றியமாக பாரத நாடு,
- சிறுபான்மையினருக்குச் சட்டப் பாதுகாப்பின்மை,
- இந்து மற்றும் பட்டியல் சாதிகளுக்கான வரையறை
- பசுப் பாதுகாப்பு.
சட்டப்பிரிவு 1: ‘பாரத நாடான இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’
‘பாரதம்’ எனும் சொல்லாடல் பிரத்யேகமாய் இந்திய வரலாறு குறித்த இந்துக் கற்பிதத்தையே பிரதிபலிக்கிறது. வலுவான மையம் ஒன்று தேவை என்று கருதிய (இந்து, மதச்சார்பற்ற) தேசியவாதிகளால் ’கூட்டமைப்பு/கூட்டாட்சி’ (Federation) என்பதற்கு மாற்றாக ‘ஒன்றியம்’ (Union) எனும் சொல் தெரிவுசெய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான மொழியினரையும் இனத்தினரையும் கொண்ட மிகப்பெரும் துணைக்கண்டத்தில் ‘கூட்டாட்சி’ என்பது சிறுபான்மையினரின் குறிப்பிடத்தக்கக் கோரிக்கையாக இருந்தது. வலுவான மையம் ஒன்று இருப்பது சிறு பிராந்தியச் சமூகங்களை அதிலிருந்து தொடர்பற்றவர்களாக ஆக்கும்; அல்லது, குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் அவற்றைப் பலவீனப்படுத்தும். மேலும், இந்து வாக்கு வங்கியில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியால் அந்தப் பிராந்தியத்தின் தேவைகளை எளிதில் புறக்கணித்துவிட முடியும்.
ஜம்மு கஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் ஆகியவை சார்ந்த விவகாரங்களில் இது நிரூபணமாகியுள்ளது. அரசியல் நிர்ணய சபையின் சீக்கிய உறுப்பினரான ஹுகும் சிங், “சிறுபான்மையினர் … தவிர்க்கப்பட்டும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டும் உள்ளார்கள். மாகாணங்களெல்லாம் நகராட்சியின் கிளைகளாகச் சுருக்கப்பட்டுள்ளன… நிர்வாகமானது ஃபாசிச அரசாக உருமாறுவதற்குப் போதிய அளவு முன்னேற்பாடுகள் நம் அரசியல் சாசனத்திலேயே வழங்கப்பட்டுள்ளன” எனக் குற்றம்சாட்டினார்.
சட்டப் பாதுகாப்பு இல்லாமை
அரசியல் நிர்ணய சபை இவ்விவகாரத்தை விவாதித்தது. சட்ட அவைகளிலும் அலுவலகங்களிலும் தனித் தொகுதிகள், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் தனித் தொகுதிமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரிவினைக்குப் பிறகு பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் இதுபோன்ற எந்தச் சட்டப் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள மறுத்துவிட்டனர்.
பிரதமர் பண்டிதர் நேரு அப்போது சொன்னார்: ”எந்தச் சிறு குழுவும் அல்லது சிறுபான்மைச் சமூகமும் ‘நாங்கள் உங்களை நம்பாததால் உங்களிடமிருந்து தனித்திருக்க விரும்புகிறோம்’ என்கிற ரீதியிலான தோற்றத்தை உலகுக்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்கும் ஏற்படுத்துவது மிக மோசமான ஒன்று. ”உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இன்னும் வெளிப்படையாகச் சொன்னார்: “பாகிஸ்தானைக் கொடுத்துவிட்டபிறகாவது மீதமுள்ள இந்தியாவை இரு தேசங்களாக்குவது பற்றிய பேச்சு எழாது எனக் கருதுவோம்.”
முஸ்லிம்களுக்கு எதுவும் வழங்குவதற்கில்லை எனும் மனநிலை சட்ட அவையில் நிலவியது தெளிவாகிறது.
ஹஸ்ரத் மோஹானி (உ.பி.), ஹுசைன் இமாம் (பிஹார்), மஹ்பூப் அலீ பெய்க் (மதராஸ்) உள்ளிட்ட அவை உறுப்பினர்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கோரினர். மாநிலங்களிலுள்ள வரையறுக்கப்பட்ட பிராந்தியத் தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுப்பதும் இதில் அடக்கம். நடப்பிலிருந்த அமைப்புமுறையுடன் இது முரண்பட்டது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எனும் இம்முறையில் சிறிய, சிதறி வாழ்வும் சமுதாயங்களும்கூட தம்முடைய கட்சிகளுக்கு ஓட்டளித்து சட்ட அவைகளுக்கு அனுப்பிவைக்க முடியும்.
சிறிய, சிதறுண்டு வாழ்ந்த முஸ்லிம் சமூகங்கள் மிகவும் அரிதாகவே ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வலுவாக இருந்தார்கள். அதனால் தங்களின் பிரதிநிதியை அவர்களால் தெரிவுசெய்ய முடியவில்லை. குறிப்பாக, இந்த விஷயத்தில் குஜராத், ம.பி., ராஜஸ்தான் ஆகியவற்றின் நிலைமை மிகவும் கவலையளிக்கக்கூடியது. அங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 10 விழுக்காடு, அவர்கள் அம்மாநிலம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிட்டத்தட்ட முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் உ.பி., கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமையும்.
இப்படியான பிரச்னைகளை இனம்கண்டுதான் அப்போது பல முஸ்லிம் அவை உறுப்பினர்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கோரினர். மோஹானி அவர்கள், இதுவொரு வகுப்புவாதப் பிரச்னையல்ல; மாறாக, அரசியல் பிரச்னை என்று வாதிட்டார். சமுதாய அமைப்புகளின் போதாமையை ஒப்புக்கொண்ட அவர், அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கும் ஓர் அரசியல் கட்சியை உருவாக்குமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்தப் பலவீனமான சமுதாயக் கட்சிகளின் நிலைத்தன்மை குறித்தும் கவலைப்பட்டார். அவர் சொன்னார்: “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எனும் இந்தச் சலுகையையும் அவர்கள் வழங்கவில்லை என்றால், உ.பி. தேர்தலில் 35 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற சோசலிசக் கட்சி போன்றவைகூட ஒரு சீட்டும் பெற முடியாது.”
எனினும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சட்ட அவையின் பிளவுக்கும் நிலைத்தன்மையற்ற அரசாங்கங்கள் உருவாகவும் இட்டுச்செல்லும் என்றும், அது மிகவும் சிக்கலானது என்றும் அதற்குக் காரணம் சொல்லப்பட்டது.
நிர்வாகத்திலோ சட்ட அவையிலோ முஸ்லிகளுக்குச் சட்ட ரீதியாக எந்தப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை.
பெரிதும் விதந்தோதப்பட்ட ‘மதச்சார்பின்மை’ எனும் கருத்தாக்கம் எஞ்சிய நம்பிக்கையின் வாசல்களையும் அறைந்து சாத்தியது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்பதால், ஒரு மதச் சமுதாயத்திற்கு எதிராகப் பாகுபாடு காட்டப்படுவது அதற்கொரு பொருட்டு அல்ல. பிரக்ஞைபூர்வமாகவே அது இவ்விஷயத்தில் கண்களை மூடிக்கொள்ளும்.
அரசியல் பிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டி, நிர்வாகத்திலும் ராணுவத்திலும் பல காவல்துறை, துணை ராணுவப் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இல்லை. மேலும், இந்த உறுப்புகள் யாவும் கடந்த ஏழு தசாப்தங்களாக அவற்றின் பெரும்பான்மைவாதச் சார்புநிலையை வெளிக்காட்டிவந்துள்ளன. இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களும் பறிபோயிருப்பது நினைவுகூரத்தக்கது.
– தொடரும்
தமிழில்: நாகூர் ரிஸ்வான்
மூலம்: The Hindu Republic: Seven decades of Muslim exclusion in India