தென் இந்தியாவின் “மான்செஸ்டர்” என்ற அடையாளத்தை கோவைக்கு தேடித்தந்த பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை என்னவோ வரலாறு நெடுக பெரும் துயரங்களும் துன்பங்களும் தான். சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கற்பகம் மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நூற்பாலையில் சோம்வாரி என்ற 22 வயதுடைய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியை மனித வளத்துறை அதிகாரி முத்தையா இரும்புக்கம்பி கொண்டு தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக் காப்பாளர் லதா இத்தாக்குதலுக்கு துணையாக இருப்பதும், அப்பெண் தொழிலாளியை தாக்கும் முத்தையா அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தைகளில் பேசுவதும் அந்த காணொளியில் பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் நலச் சட்டங்களால் முதலாளிகள் பாதிக்கப்படுவதாகவும் அதனால் புதிய தொழிலாளர் சட்டம் அவசியம் என்று கூறி வரும் நிலையில் தான் மேற்சொன்ன மனிதத்தன்மையற்ற கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
பஞ்சாலைகள் பற்றிய வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்து பலகோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருப்பது ஜவுளித்துறைதான். லாபம் கொழிக்கும் இந்தத் துறை குறித்து ஆங்கிலேயர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். சுற்றுப் புறங்களில் பருத்தி விளைய வேண்டும். விளைந்த பருத்தியை நூலாக நூற்பதற்கு மிதமான தட்பவெப்பம் நிலவ வேண்டும். இப்படி இந்தியாவில் எந்தெந்த பகுதிகள் இருக்கின்றன என துல்லியமாக கணக்கிட்டு 3 பகுதிகளை தேர்ந்தெடுத்தார்கள். அந்தப் பகுதிகளில் சாலைகளையும், இரயில் பாதைகளையும் அமைத்து ஜவுளித்துறை சாதனை மையங்களாக உருவாக்கினார்கள். அப்படி தோன்றியதுதான் ஏ,பி,சி எனப்படும் 3 நகரங்கள். இதில், ஏ – அகமதாபாத்; பி –(பம்பாய்) இன்று மும்பை; ஆகியவை வடமாநிலங்களில் இருக்க, சி – கோயமுத்தூர் மட்டும் தென்னகத்தில் – அதிலும் தமிழகத்தில் இருக்கிறது.
குறைவான கூலியில் பல மணிநேரங்கள் வேலை செய்ய கோவையில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட சர்.ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர், 1888ல் கோவையில் முதல் பஞ்சாலையை தொடங்கினார். ஸ்டேன்ஸ் மில் என்றழைக்கப்பட்ட இந்த பஞ்சாலையை அன்று ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் மக்கள் பார்த்தார்கள். அங்கிருந்த பஞ்சை நூலாக்கும் இயந்திரங்களை ஒரு அணா செலுத்தி மக்கள் பார்க்கலாம் என நிர்வாகம் அனுமதித்தது. அதாவது இந்த வகையிலும் மக்களை சுரண்டியது. அப்படி சென்று பார்த்த ஜி.குப்புசாமி நாயுடு, தானும் ஒரு பஞ்சாலையை தொடங்க விரும்பினார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று பல கிளைகளாக வளர்ந்து நிற்கும் லட்சுமி மில்ஸ்.
ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து 1900-ல் மால் மில், 1906-ல் காளீஸ்வரர் மில், ரங்க விலாஸ் மில், ராதாகிருஷ்ணா மில்… என 1930 – வரை 8 மில்கள் தோன்றின. பைகாரா திட்டத்தின் மூலம் மின்சாரம் கிடைப்பதற்கு முன்புவரை இந்த பஞ்சாலைகள் நீராவி சக்தியினாலேயே இயங்கி வந்தன. 1930- க்கு பிறகு மின்சாரம் முன்பை விட மலிவாக கிடைக்க ஆரம்பித்த பின் பஞ்சாலைகள் வேகமாக வளர்ந்தன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும், இங்கிலாந்தின் உற்பத்தி இலக்குகள் யுத்த சேவையை நோக்கி திரும்பின. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நூலுக்கும், துணிகளுக்கும் உருவான தேவையை கோவை பஞ்சாலைகள் பயன்படுத்திக் கொண்டன.
இதற்கு முன்பாகவே மில் அதிபர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இங்கிலாந்தில் ஜவுளித் தொழில்நுட்பம் கற்க அனுப்பப்பட்டனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து சுரண்டும் கல்வியை – மேலாண்மைத் திறனை, வணிக நுட்பங்களை – அவர்கள் கற்று வந்து கோவையில் அமல்படுத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக 1940-களில், ஆங்கிலேய அரசு, நேசநாடுகளின் இராணுவத்துக்குத் தேவையான ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கவும், உறுதி செய்யவும் இந்திய தரகு முதலாளிகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்கியது.
தமிழக பஞ்சாலைகளில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் நிலையோ படுமோசமாக உள்ளது, சுமங்கலி திட்டத்தின் கீழ் அதிகமாக இளம்பெண்களை பணிக்கு அமர்த்தும் பஞ்சாலைகளில் அரசின் விதிமுறைகள் எவையும் பின்பற்றுப்படுவது இல்லை. மேலும் பணி நேரத்தை தாண்டி வேலை வாங்கப்படும் பெண்களுக்கு அதற்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. பாதுகாப்பான தங்கும் இடமோ, சுகாதார வசதியோ, சரியான உணவோ, மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலேயே தொழிலாளிகள் பணிபுரியும் நிலை உள்ளது. 12 மணி நேர கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிய கொத்தடிமைத்தன வாழ்க்கையே தொழிலாளிகளின் நிலை. நிலப்பிரபுத்துவ வாழ்முறையில் ஊறித் திளைத்திருக்கும் கோவை பஞ்சாலை முதலாளிகளுக்கு அரசைப்பற்றியோ,சட்டங்களைப் பற்றியோ எவ்வித கவலையும் இல்லை. அரசும்,சட்டங்களும் கூட பெரிய அளவில் இவர்களை கண்டு கொள்வதில்லை. எனவே நிகழ்காலத்திலும் பண்ணையார்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
15-ஆம் நூற்றாண்டின் முடிவிலும், 16-ஆம் நூற்றாண்டு முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவெங்கிலும் வேலையற்ற ஊர்சுற்றிகளுக்கெதிராக கொலைகார சட்டங்கள் அமலாயின.
இதுவரை நடந்த போராட்டங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களே. வர்க்கப் போராட்டங்களே வரலாறுகள். மேற்சொன்ன வார்த்தைக்கு சொந்தக்காரரான ஆசான் மார்க்ஸ் 1867 – ல் வெளியிட்ட தமது மூலதனம் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் “பிரபுத்துவ பணியால் பரிவாரங்களை கலைத்ததன் விளைவாகவும், மக்களிடமிருந்து நிலவுடமையை வலுவந்தமாக பறித்ததன் விளைவாலும் படைக்கப்பட்டதாகும் பாட்டாளி வர்க்கம்” புதிதாய் பிறந்த பட்டறைத் தொழில்கள் இந்த “சுதந்திர” பாட்டாளி வர்க்கத்தை அது படைக்கப்பட்டு உலகில் விடப்பட்ட அதே வேகத்தில் உட்கிரகிப்பது முடியவில்லை. அதேபோது, வழக்கமான தமது வாழ்க்கை முறையிலிருந்து திடீரென வலிந்திழுக்கப்பட்ட இவர்கள் அவ்வளவு திடீரென புதிய நிலைமையின் கட்டுப்பாட்டுக்குத் தம்மை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஓரளவு மனப்பாங்காலும், மிகப் பெருமளவு சூழ்நிலைகளின் நிர்பந்தத்தாலும் இவர்கள் திரள் திரளாய் பிச்சைக்காரர்களாகவும், கொள்ளையர்களாகவும், வேலையற்ற ஊர் சுற்றிகள் ஆகவும் மாற வேண்டியதாயிற்று. இதனால்தான் 15-ஆம் நூற்றாண்டின் முடிவிலும், 16-ஆம் நூற்றாண்டு முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவெங்கிலும் வேலையற்ற ஊர்சுற்றிகளுக்கெதிராக கொலைகார சட்டங்கள் அமலாயின. இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் தந்தையர்கள் நிர்ப்பந்தம் காரணமாய் வேலையற்ற ஊர்சுற்றிகளாகவும், வக்கில்லாதவர்களாகவும் மாறியதற்காக தண்டிக்கப்பட்டனர். இல்லாது ஒழிந்து போன பழைய நிலைமைகள் இருப்பது போலவும், அவர்கள் விரும்பினால் அந்த பழைய நிலைமைகளில் தொடர்ந்து வேலை செய்திருக்கலாம் என்பது போலவும், இந்த சட்டங்கள் அவர்களை “விரும்பி குற்றம் புரிந்த குற்றவாளிகள்” ஆக தண்டித்தன. எட்டாம் ஹென்றி, திடகாத்திரமான ஊர் சுற்றிகளுக்கு கசையடியும், சிறை தண்டனையும் கிடைக்கும். அவர்கள் வண்டியின் பின்னால் கட்டப்பட்டு, இரத்தம் வழிந்தோடும் வரை கசையடி பெறுவர். பின்னர், பிறந்த ஊருக்கு அல்லது கடந்த மூன்றண்டுகளாய் வாழ்ந்த ஊருக்கு திரும்பிச் செல்வதாகவும், “உழைப்பில் ஈடுபடுவதாவும்” அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொடுக்கவேண்டும். ஊர்சுற்றியாய் இரண்டாவது முறை கைதானால் மீண்டும் கசையடி கிடைக்கும். பாதி காதும் தூண்டிக்கப்படும்: மூன்றாவது முறை கைதானால் அவர் திருத்தமுடியாத குற்றவாளியாகவும், பொது நலனின் விரோதியாகவும் கருதப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
ஆறாம் எட்வர்ட் : இவரது ஆட்சியின் முதலாண்டில் பிறப்பிக்கப்பட்ட சட்டம்,1547.-ல் ஒருவர் வேலை செய்ய மறுத்தால், அவரை சோம்பேறி என்று எவர் குற்றம் சாட்டினாரோ அவருக்கே அவர் அடிமையாகும் படி தண்டிக்கப்படுவார். எவ்வளவு அருவெறுப்பான வேலையாக இருந்தாலும் சவுக்கையும், சங்கிலியையும் பயன்படுத்தி அடிமையாய் வலுவந்தமாய் வேலை வாங்கும் உரிமை அவருக்கு உண்டு. நெற்றியிலோ முதுகிலோ அடிமை என்பதன் சூடு பொறிக்கப்படும். (மூலதனம் முதல் பாகம், இரண்டாவது புத்தகம் – பக்கம் -986-988)
“சமுதாயத்தின் ஒரு துருவத்தில் உழைப்பின் இன்றியமையாத் தேவைகள் மூலதன வடிவில் திரளாய்க் குவிந்திருப்பதும் மறு துருவத்தில் தமது உழைப்பு சக்தி தவிர விற்பதற்கு வேறொன்றுமில்லாத மனித திரள்கள் குழுமியிருப்பது மட்டும் போதாது. தாமே விரும்பி இந்த உழைப்பு சக்தியை விற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்துவதும் போதாது. முதலாளித்துவ பொருளுற்பத்தியின் முன்னேற்றமானது அந்த உற்பத்திமுறை நிலைமைகளை கூறாமலே விளங்கும் இயற்கை விதிகளை கொள்ளும்படியான தொழிலாளி வர்க்கத்தைக் கல்வியாலும், மரபுகளாலும், பழக்க வழக்கங்களாலும் வளரச் செய்கிறது ” (மூலதனம் முதல் பாகம், இரண்டாவது புத்தகம் – பக்கம் -990)
முதலாளித்துவம் சொல்லொண்ணா கொடுமைகளையும், பலாத்காரத்தையும், ஒடுக்கமுறையையும் ஏவியே பாட்டாளி வர்க்கத்தை கூலியுழைப்புக்கு “அதாவது மூலதன அடிமையுழைப்புக்கு” பழக்கப்படுத்தி வருகிறது.
187 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ் தான் வரலாற்று வழியில் ஆய்ந்து எழுதியவை நேற்றைய ஸ்ரீ கற்பகம் மில்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நூற்பாலையில் சோம்வாரி என்ற தொழிலாளியின் சந்ததிக்கும் நடைபெறுவதையே காணவேண்டிய நிலை. முதலாளித்துவம் சொல்லொண்ணா கொடுமைகளையும், பலாத்காரத்தையும், ஒடுக்கமுறையையும் ஏவியே பாட்டாளி வர்க்கத்தை கூலியுழைப்புக்கு “அதாவது மூலதன அடிமையுழைப்புக்கு” பழக்கப்படுத்தி வருகிறது.
இக்கொத்தடிமைத் தனத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் தம்மை விடுவித்துக்கொள்ள வர்க்கமாக திரண்டு எதிர்த்து நின்று போர்த் தொடுக்காது விடுதலை ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே, தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் அமைப்பு. அது தொழிற்சங்கம் மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்துக்கான கட்சி. அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும், அந்தக் கட்சியின் கீழ் திரளுகின்ற தொழிலாளி வர்க்கம் என்ன கோரிக்கைக்காகப் போராட வேண்டும் என்ற பார்வையைத்தான் என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலும், ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலிலும் ஆசான் லெனின் கூறுகிறார்.
வர்க்கமாக ஒன்றிணைவோம்! புரட்சிகர சங்கத்தில் சேர்வோம்!
சுரண்டல், அடிமையுழைப்பு, கூலிக் கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.
👍👍