தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம் தாய் ஒருத்தி, தனக்கு பிறந்த குழந்தையை கொன்றிருக்கிறார். இந்த சம்பவம் நேற்று நடந்திருக்கிறது.

பெற்ற குழந்தையை கொன்றுவிட்டாளே? இவள் ஒரு தாயா? கொலைகாரி!

இந்த செய்தியை தினத்தந்தியில் வாசிப்பவர்கள், ஒரு நிமிடம் வசைபாடி, அடுத்த பக்கத்துக்கு சென்று விடுகிறார்கள் .

நம் சமூகத்தில் தாய்மை குறித்து நிறைய மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன . அம்மாவை புனிதமானவளாக மதம், குடும்பம், கல்வி ஆகிய பண்பாட்டு நிறுவனங்கள் கற்பிக்கின்றன .

அம்மா குறித்த மதிப்பீடுகள் பெண்ணை மிகவும் சிக்கலானவளாக மாற்றுகின்றன.

இந்தப் பெண் திருப்பூரில் வேலை செய்பவள். தகாத உறவில் கர்ப்பமானவள். இதனால் கடும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகியிருக்க வேண்டும். தஞ்சை மருத்துவமனையில் வயிற்றுவலி என்று சேர்ந்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் வயிற்றுவலி என கழிப்பறை சென்றவளுக்கு அங்கேயே குழந்தை பிறந்துவிடுகிறது.

தகாத உறவில் பிறந்த குழந்தையை என்ன செய்வது? சமூகம் தூற்றுமே! பெற்ற குழந்தையை ஃப்ளஷ் டேங்க்கில் போட்டுவிடுகிறாள். மருத்துவமனையிலிருந்து ரகசியமாக வெளியேறுகிறாள்.

இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில், கண்காணிப்பு காமிரா வழி புலனாகியிருக்கிறது.

எனக்கு அந்தப் பெண் மீது வெறுப்போ , கோபமோ இல்லை. சாதி வேற்றுமை, மத வேறுபாடு, பொருளாதார சமத்துவம் இல்லாத நிலையில் பல காதல்கள் இப்படி தகாத உறவுகளாக மாறுகின்றன .

இத்தகைய சமூக அழுத்தங்களோடு பிள்ளைப்பேறு உளவியலும் சேர்ந்து, குழந்தைகளைக் கொல்ல காரணமாக அமைகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இத்தகைய உளவியல் சிக்கல்கள் அதிகம் காணப்படுகின்றன .

குழந்தை பிறந்ததும் தாய்க்கு , கருத்தரித்தல், மாதவிடாய், தூக்கமின்மை, போன்றவற்றால் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக தாயிடம் குழந்தையை கொல்லும் எண்ணம் ஒரு நோய்க்கூறாக வளர்கிறது.

இத்தகைய கொலைகளை வளர்ந்த நாடுகள் neonaticide என அழைக்கின்றன. சட்டத்தால் இவர்கள் பரிவோடு அணுகப்படுகிறார்கள். கிரேக்க புராணங்கள், பெற்றவளே குழந்தையைக் கொல்வதை filicide என்கிறது.

வறுமையின் காரணமாக குழந்தையை கிணற்றில் எறிந்து கொன்ற நல்லதங்காளை சிறுதெய்வமாக வழிபடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அர்ச்சுனாபுரத்தில் நல்லத்தங்களாக்கு கோவில் உள்ளது.

திருப்பூர், சேலம், ஈரோடு போன்ற மாநகரங்களுக்கு பெற்றோர்கள்,
குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே தங்கள் மகள்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.

தொடர்ச்சியான சலிப்பூட்டும் வேலைக்கிடையே இத்தகு அபலை சிறுமிகளுக்கு கிடைக்கும் சிறு இன்பம், இத்தகைய விருப்பமில்லாத கருவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்த அறிவியல் பார்வையைத் தராத சமூகம், ஒழுக்கம், தாய்மை குறித்த மதிப்பீட்டை மட்டும் சிலுவையைப்போல் பெண்ணை சுமக்க வைக்கிறது.

பரிணாமவியல் குறித்து பல நாடோடி சமூகங்களை டார்வின் ஆய்வு செய்தார். அதில் ஒரு நாடோடிக் குழுவினர் பஞ்ச காலத்தில் தங்கள் குழுவில் உள்ள கிழவிகளைக் கொன்று தின்றார்கள். எஞ்சிய மாமிசத்தை தங்கள் வேட்டை நாய்களுக்கு போட்டார்கள். டார்வின், மனித உடலை நாய்க்கு போடலாமா? கேட்டார்.

நாய்கள் வேட்டையாடும். கிழவிகளால் என்ன பயன்? என்றார்கள். ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகள் தோன்றாத காலத்தின் நீதியது.

ஆனால், நம் சமூகமோ குழந்தைகளை உயிராகவும் பெண்களை மாமிசமாகவும் கருதுகிறது. தேவையான போது மாமிசத்தை புசிக்கிறது. செரிக்காதபோது நீதியை சோடா போல் குடித்து, பெரிதாய் ஏப்பம் விட்டு , ரிலாக்ஸ் செய்து கொள்கிறது!

  • கரிகாலன்

1 COMMENT

  1. தலைப்பு தாய்மை புனித மா என இருக்கிறது ஆனால் பெண்கள் மாமிசம் போல் பார்கிறார்கள் என்றும் குழந்தையை உயிராக சமுகம் பார்கிறது என்பது எனது புரிதல் ,இதில் தாய்மை பற்றி எங்கு விளக்கம் வந்துள்ளது. குழந்தை (ம) பெண்கள் பற்றி உள்ளது ஆகையால் எளிமையாக புரியும்படி இல்லை இதில் சொல்ல வரும் கருத்து என்ன? என்பது புரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here