மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு, பல்வேறு போலி ஆவணங்களை உருவாக்கி, டெல்லி பல்கலைக்கழக “பேராசிரியர் ஜி என் சாய்பாபா” உள்ளிட்ட ஆறு பேருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதனால் ஏறக்குறைய உடலளவில் 95 சதவீதத்திற்கும் மேல் மாற்றுத்திறனாளியான பேராசிரியர் சாய்பாபா 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச பயங்கரவாத அமைப்பை சார்ந்த கொலைகாரர்கள், குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள், கும்பல் வன்முறையில் ஈடுபட்ட பொறுக்கிகள் போன்ற அனைவரும் கடந்த ஓராண்டாக அடுத்தடுத்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் கீழமை நீதிமன்றம் துவங்கி செசன்ஸ் மற்றும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாக்பூர் தயாரிப்புகளே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

 கொலையாளிகள் விடுதலை! நிரபராதிகள் சிறைக்குள்! இதுதான் “இராம ராஜ்ஜியம்”!

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறிக் கொண்டாலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசியல், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் தரகு முதலாளிகளுக்கும், நிலப் பிரபுகளுக்கும், ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் சேவை செய்து வருகின்ற சூழலில், மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல், படிப்படியாக நீதிமன்ற கட்டமைப்பு முழுவதுமாக பாசிசமயமாகி விட்டதைதான் மேற்பட்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

பரந்தூரில் அமைய உள்ள விமான நிலைய விரிவாக்கத்திற்கு அதை சுற்றியுள்ள பல கிராமங்களை காலி செய்கிறது மத்திய-மாநில அரசுகள். அதை எதிர்த்து “நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காது, எனவே வீதியில் இறங்கி போராடுங்கள்” என்று அறைகூவல் விடுகிறார் ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன். சட்டத்துறையில் உள்ள விதிவிலக்கான சிலர் சட்டத்தின் யோக்கியதையை புரிந்து கொண்டு அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுமாறு மக்களை அறைகூவி அழைக்கின்றனர்.

நீதிபதி ஹரிபரந்தாமன்

நாட்டின் பெரும்பான்மை மக்களான; உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு முதலாளிகள் மற்றும் வணிகர்கள் துவங்கி தேசிய முதலாளிகள் வரை அனைவருக்கும் சமமான  நீதி கிடைக்குமா என்ற கேள்விக்கு கடந்த 75 ஆண்டுகளாக இந்திய நீதிமன்ற வரலாற்றில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட நக்சல்பாரி அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதே தேசத்துரோகம் என்று ஆளும் வர்க்க ஓநாய்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டின் இயற்கை வளங்களையும், கனிமவளங்கள் காட்டுவளங்கள், நிலவளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்கு தடையின்றி வாரி வழங்குவதற்கு நக்சல்பாரிகள் எதிர்த்து போராடுகிறார்கள்.

இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் துவங்கி மதச் சிறுபான்மையினர் வரை பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாவதை எதிர்த்து நக்சல்பாரிகள் போராடுகின்றனர்.

பாசிச பாஜக-வின் பழங்குடிகள் பாசம்!

1947 இல் பெற்றது போலி சுதந்திரம், இந்தியாவில் வரையப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளிட்ட நீதித்துறை பரிபாலனங்கள் அனைத்தும் ஏழை மக்களை ஒடுக்குவதற்கும், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் கூட்டு சர்வாதிகாரத்தை நிபந்தனையின்றி மக்கள் மீது திணிப்பதற்குமே பயன்படுகிறது என்று அம்பலப்படுத்தி அதற்கு எதிராக மக்கள் நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு போராடுகிறார்கள் நக்சல்பாரிகள்.

போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் கூட்டு சேர்ந்து கொண்டு ஒரு நபரின் மீது பொய்யாக வழக்கை புனைந்து சிறையில் அடைத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களை சிறையிலேயே வைத்து படுகொலை செய்வதற்கு பொருத்தமாக தான் நீதிமன்ற பாசிச கட்டமைப்பு தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு எதிராக சட்டப்பூர்வமான வழியில் போராடிய மக்கள் அதிகாரத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது இது போன்ற நடவடிக்கைகளில் ஒன்று.

நீதிமன்றங்களில் நியாயத்தை எடுத்துப் பேசி நீதிபதிகளுக்கு புரிய வைப்பதை விட நீதிமன்றங்களுக்கு வெளியில் நடக்கும் லாபிகளின் மூலம் தான் அரைகுறை நீதியை பெற முடிகிறது என்பதை கோர்ட்டுகளில் உள்ள சுவர்களும், படிக்கட்டுகளும், ஜன்னல் கம்பிகளும் மௌன சாட்சியமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறு மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் காதுகளில் பேராசிரியர் சாய்பாபாவின் நிலைமையை எடுத்துச் சொல்லி தொடர்ந்து 8 ஆண்டுகள் போராடியதன் விளைவாக பிணை கொடுக்கப்பட்டது.

உடனடியாக மகாராஷ்டிரா மாநில அரசு,அதற்கு எதிராக தடையாணையைப் பெற்று மீண்டும் அவரை சிறையில் அடைத்துள்ளது. அவரைப் பிணையில் விடச் சொன்ன நீதிபதி நியாயமானவரா? அல்லது அவரை உள்ளே வைக்க வேண்டும் என்று மறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் நியாயமானவர்களா? என்பது தான் நாம் ஆராய வேண்டிய கேள்வியாகும்.

2014 ஆம் ஆண்டு பாசிச மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா ஏறக்குறைய 45 கோடி மக்களின் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது. அந்த 45 கோடி மக்களில், மதச் சிறுபான்மையினரான; இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் போன்ற அனைவரும் வருகின்றனர்.

சாய்பாபாவை அடைத்து வைத்துள்ள சிறை கம்பிகளுக்கு வெளியில் அவரை கொண்டு வந்து விட்டாலும், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய திறந்தவெளி சிறைக்கூடங்களில் தான் மீண்டும் அடைபடுவார். எனவே அவரது இறுதி காலம் வரை பெரும்பான்மை மக்களின் நலனிலிருந்து நடத்தப்படும் போராட்டங்கள் ஓயாது என்பதே திண்ணம்.

எனினும் சிறை கம்பிகளுக்கு உள்ளே அவரை அடைத்து வைப்பதற்கு எந்த விதமான நியாய உரிமையும் பாசிச பயங்கரவாத அரசுக்குக் கிடையாது!

அதே சமயத்தில் “நகர்ப்புற நக்சல்கள் வீட்டு காவல் கேட்பது தற்போது ஒரு வாடிக்கையாகிவிட்டது! வீடுகளில் இருந்து அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளிலும் அவர்களால் ஈடுபட முடியும்” என்று பிணைக்கு எதிராக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியுள்ளார்.

இது நகர்ப்புற நக்சல்களுக்கு மட்டுமா பொருந்தும். காவி உடை தரித்த கபட தாரிகள், பசுந்தோலை போர்த்திய பாசிச பயங்கரவாத புலிகள் அனைவருக்கும் பொருந்தும் என்பதே உண்மை.

ஆனால் அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள், உண்மையான தேசபக்தர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here