இந்தியாவில் இனப்படுகொலை நடப்பதற்கான சூழல் திட்டமிட்டபடி உருவாக்கப்பட்டு வருகிறது ” என்று Genocide Watch-இன் நிறுவனத்தலைவரான கிரிகோரி ஸ்டாண்டன் (Gregory Stanton) எச்சரிக்கிறார்.

கிரிகோரி ஸ்டாண்டன்

அமெரிக்க பாராளுமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, “இனப்படுகொலையை அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறினார். “அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவ்வாறு ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடக்குமானால், இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று கூற வேண்டும்” என்கிறார்.

“The Wire” இணையத்தளத்திற்காக பிரபல ஊடகவியலாளர் கரண் தாபருடன் நடந்த 28 நிமிட நேர்காணலில், தனது அமைப்பான Genocide Watch நாடுகளை தரவரிசைப்படுத்தவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக, இனப்படுகொலைக்கு அதிக வாய்ப்புள்ள இரண்டாவது நாடு இந்தியா என்று அமெரிக்க ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகம் (US Holocaust Memorial Museum) நம்புவதாக ஸ்டாண்டன் தெரிவிக்கிறார்.

“இனப்படுகொலையின் ஆரம்ப அறிகுறிகள் இந்தியாவில் உள்ளன” என்று ஸ்டாண்டன் உறுதியாகக் கூறுகிறார். Genocide Watch-இன் “இனப்படுகொலையின் 10 நிலைகள்” பற்றி குறிப்பிட்டு, அவற்றில் பல இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார். குறிப்பாக:

வகைப்படுத்தல் (Classification) (குறிவைக்கப்பட்ட மக்களை பிரித்து வகைப்படுத்துவது. குறிப்பாக “நாம்” எதிர் “அவர்கள்” என குறிப்பிடுவது).
அடையாளப்படுத்தல் (Identification) (அவர்கள் அணியும் ஆடைகளாலாலும், அவர்களை குறிப்பிட்ட பெயரால் அழைப்பது).
பாகுபடுத்துவது (Discrimination) (குடியுரிமை திருத்தச் சட்டம், etc).
மனித பண்புகள் இல்லாதவர்களாக சித்தரிப்பது (Dehumanization) (முஸ்லிம்களை “கரையான்கள்,” “அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்” என்று இந்துத்துவ பாசிஸ்டுகள் சொல்வது).
துருவப்படுத்தல் (Polarization) (“லவ் ஜிஹாத்” மற்றும் கலப்புத் திருமணத்திற்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள்).
இவை அனைத்திற்கும் மேலாக, இனப்படுகொலைக்கான வெளிப்படையான அழைப்புகள் இந்தியாவில் பரவிவருகின்றன என்று கூறுகிறார். மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் இந்தியா கையெழுத்திட்டுள்ள “இனப்படுகொலைக்கெதிரான மாநாட்டு” தீர்மானங்களின்படி இனப்படுகொலைக்கு ஒத்ததாகும்.

“ஜனநாயக நாடு என்பதால் மட்டுமே அங்கு இனப்படுகொலை நடப்பது சாத்தியமில்லை என்று கூறிவிடமுடியாது.” அதற்கு உலகத்திற்கே ஜனநாயக வகுப்பெடுக்கும் தனது சொந்த நாடான அமெரிக்காவை மேற்கோள் காட்டுகிறார். அங்குதான் பூர்வீக அமெரிக்கர்களுக்கு எதிராகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராகவும் மிகக்கொடூரமான இனப்படுகொலை நடத்தப்பட்டது என்று கூறுகிறார்.

தற்போது இந்தியாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றாலும், இனப்படுகொலைக்கு இட்டுச்செல்லும் கட்டங்கள் நிகழ்ந்துவிட்டன என்பதுதான் அவரது அச்சம். இவைகளைத்தான் முன்எச்சரிக்கை அறிகுறிகள் என்று அவர் கூறுகிறார். “இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ந்து வளர்ச்சியடைந்துவரும் ஒரு செயல்முறை” என்கிறார்.

இனப்படுகொலை நடந்தால், “அது அரசால் நடத்தப்படாது, ஆனால் அரசால் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, வெறியேற்றப்பட்ட கும்பல்கள் அதைச் செயல்படுத்தும்” என்று ஸ்டாண்டன் கூறுகிறார்.

பிரதமர் மோடியைப் பற்றி குறிப்பாகப் பேசும் ஸ்டாண்டன், 2002-ஆம் ஆண்டு குஜராத் படுகொலையை அப்போது முதலமைச்சராக இருந்த மோடி ஊக்குவித்தார் என்றும், தனது அரசியல் அடித்தளத்தை உருவாக்க முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செய்தார் என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறினார். “அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர் மோடிதான், அதனால் அவர்தான் பதிலளிக்க கடமைப்பட்டவர்” என்கிறார்.

ஹரித்வாரில் தர்ம சன்சத் நடத்தப்பட்டு இனப்படுகொலைக்கு வெளிப்படையாக அழைப்புவிடப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் மோடியின் மௌனத்தைப் பற்றி, “அவர் இந்தியாவின் பிரதமர், நாட்டின் தலைவர். இத்தகைய வெறுப்புப்பேச்சைக் கண்டிக்க வேண்டிய தார்மீகக் கடமை அவருக்கு இருக்கிறது.” “வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதிராக மௌனம் காப்பது தலைவர்களுக்கு அழகல்ல” என்று ஸ்டாண்டன் கூறுகிறார்.

ஹரித்துவார் தர்ம சன்சத் கூட்டம்

மோடியின் மௌனத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்றான “யார் எமக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதன் மூலம் மட்டும் அல்ல அவர்களின் மௌனத்தின் மூலமும் நாங்கள் அறிவோம்” என்பதை ஸ்டாண்டன் மேற்கோள் காட்டுகிறார்.

மோடியின் மௌனம் அவரையே கேவலப்படுத்துகிறது என்று கூறுகிறீர்களா என்று கேட்டதற்கு, ஸ்டாண்டன் “நிச்சயமாக” என்று பதிலளிக்கிறார்.

1989-ஆம் ஆண்டில், ருவாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டில் அடையாள அட்டைகளில் இனத்தைக் குறிப்பது இனப்படுகொலைக்கு இட்டுச்செல்லும் என்று ஸ்டாண்டன் முன்னறிவித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு அதுதான் நடந்தது. இந்த இனப்படுகொலையில் ஏறக்குறைய 11,43,225 பேர் கொல்லப்பட்டனர். ருவாண்டா அரசாங்கத்திற்கு ஸ்டாண்டன் கொடுத்த எச்சரிக்கையையும் அதற்கு அந்நாட்டு ஜனாதிபதி அளித்த பதில் பற்றிய விவரங்களையும் நேர்காணலில் அவர் தருகிறார்.

தமிழில்: செந்தழல்

(இக்கட்டுரையானது பத்திரிக்கையாளர் கரண் தாபர் Genocide Watch-இன் நிறுவன தலைவரான கிரிகோரி ஸ்டாண்டன்-னுடன் நடத்திய நேர்காணலின் சாரம் மட்டுமே. இனப்படுகொலையின் தீவிரத்தை உணர்த்த கூடுதலாக சில வார்த்தைகள்/வரிகள் மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டுள்ளது. முழுமையான ஆங்கில நேர்காணல் மற்றும் கட்டுரையை “The Wire” இணையதளத்தில் காணலாம்).

https://m.thewire.in/article/video/watch-us-congress-pass-resolution-warning-india-genocide-gregory-stanton-karan-thapar/amp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here