பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து அன்று, இந்தியாவில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் போராடிய போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தன்னெழுச்சியாக போராடி பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை விரட்டியடிப்பதற்கு தனது இன்னுயிரை தியாகம் செய்ததையும் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக “இம்” என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என்ற அளவில்தான் கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டு இருந்தது. கடும் அடக்குமுறை மற்றும் சிறைச்சாலையில் தள்ளி ஒடுக்குவது, போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மண்டையை பிளப்பது, சுட்டுக் கொல்வது, தூக்கிலிடுவது போன்ற அரச பயங்கரவாத வழிமுறைகளில்தான் பிரிட்டன் மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது.

விடுதலைப் போராட்டத்தின் வீரமரபை உயர்த்தி பிடித்து காந்தியும் – காங்கிரசும் செய்த துரோகத்தை திருத்தி எழுத வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களும், மார்க்சிய லெனினியவாதிகளும் முன்வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மொத்த வரலாற்றையும் திரித்து புரட்டி, சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளைக்காரனின் காலை நக்கி சிறைகளில் இருந்து தனக்கு மட்டும் விடுதலையை கோரி கடிதங்களை எழுதி, மக்களின் தேசபக்த எழுச்சியை காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ்-சாவர்க்கர் வகையறாக்கள் இன்று திடீரென தேசபக்தர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களின் வரலாறு இந்தியாவின் வரலாறாக திருத்தப்படுகிறது.

இந்திய விடுதலைப் போராட்டம் என்று சொன்னால் இளம் வயதில் தூக்கில் ஏறிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சந்திரசேகர் ஆசாத் போன்ற சோசலிசத்தை கனவு கண்ட புரட்சியாளர்களும், “கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தம் ஒன்று வருகுது பார்” என்று அகிம்சை கூச்சலிட்ட காந்தியும் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறார்களே ஒழிய சுதந்திர போராட்டத்தில் எள்ளளவும் கலந்து கொள்ளாமல் துரோகம் இழைத்த ஆர்எஸ்எஸ் முன்னோடிகளான பார்ப்பன கும்பல் மற்றும் சனாதனிகளின் பங்கு குறித்து யாரும் பேசுவதில்லை.

சுதந்திர போராட்டதில் நாறும் இவர்களின் யோக்கியதையை எப்பேர்ப்பட்ட தடுப்பரண்களை போட்டு மூடினாலும் நாற்றம் அடிக்கிறது என்பதால் இளைய தலைமுறையை மூளைச்சலவை செய்யும் வகையில் பாடத்திட்டங்களை திருத்துகிறார்கள். அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கர் தேசபக்தியின் காரணமாக புல் புல் பறவையில் ஏறி அன்றாடம் நாட்டை வலம் வந்தார் என்று பூணூலில் கயிறு திரிக்கிறார்கள்.

இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்னால் தீபகற்ப கூட்டமைப்பு, தென்னிந்திய கூட்டமைப்பு என்றெல்லாம் உருவாக்கி விடுதலைப் போராட்டத்தில் முன்னே நின்ற தீரன் சின்னமலை, சின்னமருது திப்புசுல்தான் போன்றவர்களின் இணையற்ற விடுதலைப் போராட்ட தியாக வரலாற்றில் இருக்கும் போது ஒன்றுக்கும் உதவாத, நயவஞ்சக நரிகளான, எட்டப்பர்களின் கூடாரமான ஆர்எஸ்எஸ்-பாரதிய ஜனதாவின் விடுதலைப் போராட்ட பங்கேற்பு என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டமுடையது என்பது மட்டுமின்றி அயோக்கியத்தனமானது, சதிகாரத்தனமானது என்பதே வரலாற்று உண்மை.

மண்டையை குடையும் இந்த வரலாற்று உண்மையை, வரலாற்றின் பக்கங்களை திரித்து புரட்டுவதன் மூலமும், உண்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்வதன் மூலமும், போலியான வரலாற்றை உருவாக்க துடிக்கிறது ஆர் எஸ் எஸ்.


இதையும் படியுங்கள்: சாவர்க்கரை காப்பாற்ற இந்திய கோயபல்ஸ்கள் அண்டப்புளுகு!


தேசபக்தி, சுதந்திரம், தற்சார்பு, சுயமரியாதை போன்ற சொற்களுக்கு சிறிதும் தொடர்பற்ற காட்டிக் கொடுத்தல், அடிமைப்புத்தி, அந்நிய மோகம், வெட்கமற்று பிரிட்டனின் காலை நக்குவது போன்ற ஏகாதிபத்திய அடிமைத்தனமும், பார்ப்பன சாதியின் மேலாதிக்கத்தின் கீழ் பிற சாதிகளை அடக்கி ஒடுக்கும் சனாதனத்தை வலியுறுத்திய கொள்கை-கோட்பாடுகளையும் கொண்ட ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் பிரபல தலைவர்கள் சாவர்க்கர், கோல்வால்கர் உள்ளிட்ட ஏகாதிபத்திய கைக்கூலிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் நாம் வரலாற்று உண்மைகளை மீள் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் உண்மை செய்திகளுக்கு மாற்றாக பொய்ச் செய்திகளுக்கு (FAKE NEWS) முன்னுரிமை தரப்படுகிறது என்பது மட்டுமின்றி 14 வரிக்குள் எழுத வேண்டும்; மூன்று நான்கு வரிகளில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட வேண்டும்; ஒன்று, இரண்டு வரிகளில் மீம்ஸ் போட வேண்டும் என்று திருக்குறள் கணக்கில் கருத்தை சுருக்கி கூறுவதன் மூலம் பல லட்சம் பேரிடம் சென்றடைந்து விட முடியும் என்று போலியான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.

ஒரு பொருளைப் பற்றிய துவக்க நிலை அறிமுகத்தை மட்டுமே மேற்கண்ட குறுத்தரித்த குறள் வகையிலான செய்திகள் உதவும், ஆனால் வரலாற்றை புரிந்து கொள்வதற்கு பெரும் கதையாடல்கள், தொடர் கட்டுரைகள் அவசியம் என்ற புரிதலின் அடிப்படையில் சாவர்க்கரும் ஆர்.எஸ்.எஸ்-சும் துரோகிகளின் வரலாறு என்ற இந்த தொடரை துவங்குகிறோம்.

“காலகாலமாகவே இந்தியா ஒரு இந்து நாடுதான். ஆனால் அது இந்துக்களின் நாடு. பிற மதத்தவர் குறிப்பாக இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்தியா என்கின்ற நாட்டில் நில எல்லைக்குள் வாழ்ந்தாலும் அவர்கள் இந்தியர்கள் அல்ல” என்பதுதான் சாவர்க்கரின் கலாச்சார தேசியவாதம்.

இந்தியாவில் பிறந்து பார்ப்பன (இந்து) மதத்தின் சாதிய வருணாசிரமக் கொள்கைகளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதைக்காக, தன்னையும் மனிதரில் ஒருவராக நடத்த வேண்டும் என்ற உணர்ச்சிதான் இசுலாமிய மதத்தையும், கிறித்தவ மதத்தையும், புத்த-சமண மதத்தையும் தழுவச் செய்தது. பார்ப்பன (இந்து) மதக் கொடுங்கோன்மையிலிருந்து சூத்திர, பஞ்சம சாதிகளை விடுவிக்க, போராடிய கேரளத்தின் நாராயணகுரு, அய்யன்காளி, தமிழகத்தில் அய்யா வைகுண்டர், வள்ளலார், தந்தை பெரியார், கர்நாடகாவில் பசவண்ணர், மராட்டியத்தில் பூலே தம்பதியினர், டாக்டர் அம்பேத்கர் போன்ற எண்ணற்ற போராளிகளின் சமூக சீர்திருத்தவாதிகளின் வழிமுறைகளை கடைபிடிக்க வைத்தது. அவர்களின் தொடர் போராட்டங்களினால் தான் நாம் இன்று மனிதனாக மதிக்கப்படுகிறோம்.


இதையும் படியுங்கள் : ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பதிலடி கொடுப்போம்!


ஆனால் இந்த உண்மைகளை மறைத்து காலங்காலமாக அடக்கி வைத்து கையாண்ட சனாதன இந்தியாவை ஒரு இந்து நாடு என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமையுள்ளது.

“இந்துக்களாகிய நம்மை ஒன்றாக கட்டி வைத்திருப்பது, ஒரு பொதுவான தந்தை நாட்டின் மீது நமக்கு இருக்கும் நேசம் நமது நாளங்களில் பாய்ந்து, நம்முடைய இதயத்தை துடிக்க வைத்து, நம் தேசத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பொது ரத்தம் மட்டுமல்ல, நமது நாகரிகத்திற்கு, நமது இந்து கலாச்சாரத்திற்கு நாம் செலுத்தும் பொது மரியாதை தான் நம்மை ஒன்றாக பிணைத்து இருக்கிறது. இதை சான்ஸ்க்ருதி என்ற சொல்லை விட வேறு ஒரு சிறப்பாக விளக்கி விட முடியாது. இது சமஸ்கிருதத்தை குறிக்கிறது. அதுதான் அந்த கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், பாதுகாக்கவும் நமது இனத்தின் மீது மிகச்சிறந்தவற்றையும் காக்கப்பட வேண்டியவற்றையும் உணர்த்தும் சொல். நாம் ஒரு தேசம், ஒரு இனம், ஒரு பொதுவான சான்ஸ்கிருதிக்கு சொந்தக்காரர்கள் என்பதால் தான் நாம் ஒன்றாக இருக்கிறோம்” என்று இந்துத்துவம் யார் இந்து? என்ற புத்தகத்தில் 1923 இல் சாவர்க்கர் முன் வைத்தார்.

இந்த இந்து–இந்தி-இந்தியா என்ற வரலாற்றுப் புரட்டை எப்படி புரிந்து கொள்வது என்பதை பார்ப்போம்.

(வரலாற்று புரட்டுகளை மறுப்போம்)

  • நன்னிலம் சுப்புராயன்

புதிய ஜனநாயகம்.
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here