தலையங்கம்

கவர்ச்சிவாத பேச்சினால் மக்களை ஏய்க்கும் பாசிஸ்டுகள்! திரை கிழித்துக் காட்டுவோம்.

திர்வரும் 2024 தேர்தலில் 350 பாராளுமன்ற இடங்களை பிடிக்க வேண்டும் என்று தனது கட்சி உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் அமித் ஷா. 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 70 தொகுதிகளுக்கும் மேல் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததாகவும் இதை கவனத்தில் கொண்டு இப்போது இருந்து தொகுதிகளை தேர்வு செய்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது பாஜக தலைமை.

தனது வெற்று கவர்ச்சிகரமான பேச்சுகளினால் (Demogogy) பெரும்பான்மை மக்களை ஈர்த்து வாக்குகளாக மாற்றிக் கொண்டவுடன், பெரும்பான்மை மக்கள் நலனில் இருந்து தனது ஆட்சி அதிகாரத்தை நடத்தாமல் தனது எஜமானவர்களான கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் வகையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர். அவற்றில் சில வகைமாதிரிகளை மீள்பார்வை செய்வோம்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு வேளாண் சட்ட திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கு பொய்யான சில கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை விவசாயிகள் மத்தியில் முன்வைத்து ஓராண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமானது குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்பதுதான். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் தீர்மானிப்பதற்கு பதிலாக, சந்தை தீர்மானிக்கட்டும் என்று ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார கொள்கை வழிகாட்டுதலில் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது பாசிச பாஜக. ஆனால் விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து விட்டதாகவும், மீண்டும் அவர்கள் போராட்டார்கள் என்று ஐந்து மாநில தேர்தல்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுகளை பொறுக்கி கொண்டார்கள்.

தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும் அதற்கு அடிப்படையாக ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும் இந்த ரூபாய் செலுத்தப்படும் என்று கவர்ச்சி பேசினால் ஏழை, நடுத்தர மக்களின் வாக்குகளை பொறுக்கினார் மோடி. இந்த வாக்குறுதியை பற்றி கேட்டவுடன் அமித்ஷா இதெல்லாம் தேர்தல் கால ஜும்லா என்று பதில் சொன்னார்.


இதையும் படியுங்கள் : ஓயாத மோடியின் வாய்சவடால்! சாதித்தது என்ன?


நாட்டை ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட வலுவான நாடாக கட்டியமைக்கப் போகிறோம் என்று கவர்ச்சிகரமாக பல மேடைகளில் முழங்கி தள்ளினார் பாசிச பிரதமர் மோடி. ஆனால் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டு காலத்தில் பொருளாதாரம் மூன்று டிரில்லியனை கூட தாண்டவில்லை என்கிறது பொருளியல் புள்ளி விவரம். ஆனால் தனிப்பட்ட தனது கூட்டாளிகளின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடி உயர்வதற்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல்.

எல்லைப்புறத்தில் இருந்து வரும் அச்சுறுத்தலை எடுத்து விட்டுக்கொடுக்காமல் போராடுவோம் என்று கவர்ச்சிகரமாக தேசிய வெறியூட்டி ஒவ்வொரு தேர்தல் பரப்புரைகளிலும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக மட்டுமின்றி, நாட்டின் பிரதமர் மோடி வாய்ச்சவடால் அடித்து வந்தார். ஆனால் இந்திய-சீன எல்லப்பிரதேசமான காஹு மற்றும் கிப்து ஆகிய அருணாச்சல பிரதேச மாநிலத்தில், சீனா தனது இராணுவத்திற்கு தேவையான கொட்டகைகளை அமைத்து கொடுத்துள்ளது. எல்லை விவகாரத்தில் ‘மேக் மகான்’ எல்லைக்கோடு விவகாரம் முடியாத பட்சத்தில் இந்திய-சீன எல்லை இன்னும் வரையறுக்கப்படாமல் உள்ளது. ஆனால் சீனா 2021 அக்டோபரில் புதிய எல்லைச் சட்டம் ஒன்றை அறிவித்து 2022 ஜனவரி 1முதல் அமுலாக துவங்கி விட்டது. இதனால் சீனா ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி அருணாச்சல பிரதேச எல்லைக்குள் தங்குமிடங்களை கட்டிக் கொடுத்துள்ளது. தேசபக்தி கூச்சல், கவர்ச்சிகரமான பேச்சு எதுவும் சீனாவிடம் எடுபடவில்லை.

அதுபோலவே சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு தடை என்று ஆரவாரமாக அறிவித்தது. பல்வேறு பொருள்களின் பட்டியல்களையும், கணினி தொடர்பான செயலிகளையும் அறிவித்து குதியாட்டம் போட்டது. ஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் தங்காது’ என்பதைப் போல தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்தியாவிற்குள் தாராளமாக கிடைக்கிறது. சீனாவின் உதவியில்லாமல் இந்திய பொருளாதாரத்தை தற்போது உள்ள நிலையில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது என்ற உண்மை முகத்தில் அறைந்த போதிலும், சீன பொருள்களுக்கு தடை என்று வாய்ச் சவடால், கவர்ச்சிகர பேச்சு ஓட்டு வாங்க உதவியதேயன்றி வேறு ஒரு மண்ணுக்கும் உதவவில்லை.

கட்சிக்குள் கிரிமினல் குற்ற கும்பல்கள் அனுமதிக்கப்படாது என்று கவர்ச்சிகரமாக, வாய்ச்சவடால் அடித்தது மோடி கும்பல். ஆனால் வார்டு கவுன்சிலர் துவங்கி மாவட்ட, மாநில, இந்திய ஒன்றிய அளவில் பல்வேறு பொறுப்புகளில் தொழில் முறை கிரிமினல்கள் துவங்கி வெவ்வேறு கட்சிகளில் இருந்த கிரிமினல்கள் வரை பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோடை பகுதியில் இருந்து மாநில துணைத்தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ள கருப்பு முருகானந்தம், மத்தியப் பிரதேசத்தின் குண்டு வெடிப்புகள் புகழ் பிரக்யா சிங், கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமியர் பெயரை வைத்துக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் ஈடுபட்ட எண்ணற்ற நபர்களை இந்த வகையில் நாம் அடையாளம் காட்ட முடியும்.

பார்ப்பன பயங்கரவாத கிரிமினல்களின் கூடாரமாகிய ஆர்எஸ்எஸ்-பாஜக கிரிமினல்களை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கவர்ச்சிகரமாக பேசியதை நம்பி இந்தியாவில் உள்ள நடுத்தர, பணக்கார வர்க்கம் தேர்தலில் ஏமாந்து ஓட்டை போட்டு வெற்றி பெறச் செய்தனர்.

இராணுவ வீரர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று கவர்ச்சிகரமாக தேர்தல் பரப்புரைகளிலும், தனது கொள்கை அறிக்கையிலும் வெளியிட்டுள்ள பாஜக இந்திய இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு அன்னிய நாடுகளிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டுள்ளது. மேலும் நீண்ட காலமாக இயங்கும் இராணுவ தளவாட உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை பார்க்கும் முயற்சியும் கேடுகெட்ட முறையில் இறங்கி உள்ளது தேசபக்தி என்ற வெறி கூச்சலுடன் கவர்ச்சிகரமாக பேசிய பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் மோடியின் முகத்திரை இராணுவ விவகாரத்தில் கிழிந்து தொங்குகிறது.


இதையும் படியுங்கள் : மோடின்னா ப்ராடு! | ஆர்.எஸ்.எஸ் | பிஜேபி


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற இளைஞர்களை ஈர்க்கும் மோடியின் கவர்ச்சி பேச்சு துவண்டு போயிருந்த இளைஞர்களை இவர்கள் ஏதோ செய்து விடுவார்கள் என்ற மாயையை உருவாக்கியது ஆனால் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தரமாக பணிபுரியும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவது துவங்கி அன்றாட தினக் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கை, தொழில் செய்யும் உரிமை, வேலை உரிமை ஆகிய அனைத்தும் பறிக்கப்பட்டு, “அமர்ந்து துரத்து” என்ற அமெரிக்க பாணியிலான பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி மக்களின் வாங்கும் சக்தி அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. ஆனாலும் மோடி கும்பலின் கவர்ச்சி பேச்சு இன்னும் ஓயவில்லை.

கடந்த 8 ஆண்டுகளில் பாசிஸ்டுகளுக்கே உரிய கவர்ச்சிவாதப் பேச்சினால் நாட்டை ஏய்த்து வரும் மோடி கும்பல் கேள்வி கேட்கும் ஊடக நேர்க்காணல்களை எதிர்கொள்வதில்லை. ஒரு வழிப்பாதை என்ற முறையில் பொதுக்கூட்டங்கள், அரசு செலவில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சார மேடைகள், கார்ப்பரேட் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மூலம் துவக்கப்படும் திட்டங்கள், தேர்தல் பரப்புரைகள் என அனைத்திலும் கூச்சநாச்சம் இன்றி வாய்ச்சவடால், கவர்ச்சிவாத பேச்சு என்று ஒட்டுமொத்த இந்திய மக்களை ஏய்த்து வருவதைப் போல இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து 2024-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

அவர்களை வீழ்த்துவதும் பாசிஸ்டுகளை வீழ்த்துவதும் முடியாத செயல் அல்ல.தேசங்கடந்த தரகு முதலாளிகளின் மேல்மட்ட பிரிவினரான அம்பானி, அதானி போன்ற ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளாக செயல்படுகின்ற ஆர்எஸ்எஸ்-பாஜகவை வீழ்த்துவதற்கு கார்ப்பரேட் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்தை நேசிக்கும் தரகு முதலாளிகளில் ஒரு பிரிவினர் உள்ளடக்கிய பரந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்று உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்பது ஒன்றுதான் மோடியின் கவர்ச்சிவாதப் பேச்சுகளுக்கும், அமித்ஷாவின் 350 சீட்டு என்ற கனவிற்கும் பதிலடி கொடுக்கும்.

புதிய ஜனநாயகம்.
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here