“காந்தி தன்னை கொல்ல; சாவர்க்காரிடம் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தார்”

சாவர்க்கர் பற்றி புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொண்டே இருந்தார். 9 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதிவிட்டார். அவர் அப்படி மன்னிப்புக் கடிதங்கள் எழுதியது காந்தியார் சொன்ன ஆலோசனைப்படிதான் என்று ராஜ்நாத் இப்போது பேசியிருக்கிறார்.

காந்தி மன்னிப்பு கேட்க சொல்லாமலிருந்தால் சாவர்க்கார் வீரத்தோடு சிறைச்சாலை கொடுமைகளை சந்தித்திருப்பார் காந்தி தான் மன்னிப்பு கேட்கச் சொன்னார் என்பது போல சொல்லுகிறாரா ? அல்லது காந்தியின் பேச்சுக்கு மரியாதை தந்து சாவர்க்கார் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்று சொல்ல வருகிறாரா ? ஆனால் எல்லாமே உண்மைக்கு மாறானது. சாவார்க்கார் மன்னிப்புக் கடிதம் எழுதும் படலம் 1913 ஆம் ஆண்டே துவங்கிவிடுகிறது. காந்தி 1915 ஆம் ஆண்டு தான் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கே வருகிறார். தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்தியிடம் ஆலோசனை கேட்டு சாவர்க்கார் 1913 இல் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா ? இராஜ்நாத் சிங் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

source: BBC

சாவார்க்கார் மிகச்சிறந்த தேச பக்தர். அவரது வரலாற்றை திரிக்கப் பார்க்கிறார்கள் என்கிறார் இராஜ்நாத். வரலாறுகள் எல்லாம் விரிவாகத்தான் இருக்கின்றன. அவர் துவங்கிய ‘அபிநவ் பாரத்’ என்ற இரகசிய அமைப்பில் சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள். ஆயுதப் புரட்சி மூலம் இந்தியாவில் இந்து இராஷ்டிரத்தை கொண்டு வருவது மட்டுமே அதன் நோக்கம். அதற்காக சாவர்க்கார் இலண்டன் சென்ற பிறகு இங்கே அந்த அமைப்பைச் சேர்ந்த அவரது சகோதரர் மற்றும் அவரது மாணாக்கர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளை படுகொலை செய்கிறார்கள். இதற்கு சதித் திட்டம் வகுத்துத் தந்தவர் சாவர்க்கார். அந்த அடிப்படையில் அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் மூன்று பேரும்.

1) பிரிட்டிஷ் அதிகாரிகளை படுகொலை செய்கின்ற இந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தை, இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் இந்தியாவின் தேசபக்தி என்று கூறுகிறாரா ? அப்படி என்றால் இன்றைக்கு காஷ்மீரில் துப்பாக்கி ஏந்தி படுகொலை செய்து கொண்டிருக்கக் கூடிய தீவிரவாதிகளையும் தேசபக்தி பட்டியலில் இவர் சேர்ப்பாரா ?

2) சாவார்க்கார் கடவுளை நம்பாத ஒரு நாத்திகர் என்று அவரது சுயசரிதை எழுதிய தனஞ்செய் கீர் கூறியிருக்கிறார். அதே நாத்திக கருத்தை இங்கே பேசினால் இந்து மத விரோதிகள் என்று பேசுகிறார்கள். இந்தக் கருத்தை இராஜ்நாத் சிங் ஆதரிக்கிறாரா ?

3) பசுவைப் பற்றி சாவர்க்கார் கூறியது என்ன ? பசுவை புனிதமாக வனங்குவதை கடுமையாக எதிர்த்தவர் சாவர்க்கார். அவர் இப்படி எழுதினார், ‘பசு யாருக்காவது தாயாக இருக்க முடியும் என்றால் அது எருதுகளுக்குத்தான்; இந்துக்களுக்கு அல்ல. பசுமாட்டின் கால்களைப் பிடித்து தொங்கிக் கொண்டுதான் இந்துத்துவா தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியுமென்றால் அந்த இந்துத்துவா பலமற்றது, சிதைந்து வீழுந்து விடும்’ என்றார் சாவர்க்கார். (ஆதாரம் 1930 இல் வெளிவந்த பாலா மராட்டிய இதழுக்கு சாவர்க்கார் அளித்த பேட்டி. இதன் ஆங்கில வடிவத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஜூன் 9, 2017 இல் வெளியிட்டது.)

காந்தி இந்தியாவிற்கு வந்த பிறகு, காந்தியின் காலைப் பிடித்து விடுதலை ஆகிவிடலாம் என்று கனவு கான்கிறார் சாவர்க்கார். இரண்டு முறை காந்திக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு காந்தியும் பதில் எழுதுகிறார். 1920 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி காந்தி சாவர்க்காருக்கு பதில் எழுதிய ஒரு நான்கு வரி கடிதம் அவரது ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் வெளி வந்து இருக்கிறது. அந்தக் கடிதத்தில் காந்தியார், சாவர்க்காரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே வாருங்கள் என்று சொல்லவே இல்லை. மாறாக, ‘நீங்கள் அரசியல் காரணத்திற்காகவே தண்டனை அனுபவிப்பதாக கூறுகிறீர்கள். உங்களுக்கு ஆலோசனை கூறுவது எனக்கு மிகவும் கடினமானது. இந்த வழக்கை பொது மக்கள் கவனத்திற்கு திருப்புவது மட்டுமே இன்றைய நிலையில் செய்யக்கூடிய ஒன்றாகும். மற்றபடி என்னுடைய வழியில் இந்தப் பிரச்சனையை நான் அனுகுவேன்’. இது தான் காந்தி தந்த பதில். மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வாருங்கள் என்று காந்தி எந்த இடத்திலும் சொல்லவே இல்லை. (ஆதாரம் காந்தியின் கருத்து தொகுப்புகள் 19 மற்றும் 20 ஆவது தொகுதிகளில் இந்தக் கடிதம் இடம் பெற்று இருக்கிறது. )

இனி இராஜ்நாத்சிங் இப்படியும் பேசலாம். 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி “தன்னைக் கொள்வதற்கு சதித் திட்டம் ஒன்றைத் தீட்டி கோட்சேவை அனுப்பி வையுங்கள், அவர் துப்பாக்கியால் சுட்டு நான் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்று காந்தி கூறினார், அந்த அடிப்படையில் தான் சாவர்க்கார் சதித் திட்டத்தை தீட்டினார் என்று கூட இராஜ்நாத் சிங் பேசினாலும் வியப்பதற்கு இல்லை.

நன்றி: விடுதலை ராஜேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here