இத்தாலிய கைப்பை உற்பத்தி நிறுவனம் வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் தந்து உற்பத்தி செய்ய வைத்து அதை வாங்கி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்று கொள்ளை அடித்துள்ளது ஊடகங்களில் அம்பலம் ஆகியுள்ளது.
டியோர், ஜியோர்ஜியா; ரத்தம் உறிஞ்சும் அட்டை!
கிரிஸ்டியன் டியோர் நிறுவனமானது ஐரோப்பிய மேட்டுக்குடியினருக்கான நவீன கைப்பைகளை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.
ஆனால் தமது பிராண்டுகளை தானே தயாரிக்காமல், நைக் ஷூ மற்றும் ஆப்பிள் ஐபோன் பாணியில் வெளியில் ஜாப் ஆர்டர் கொடுத்து, கொள்முதல் செய்கிறது.
இப்படி ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கு ஒரு கைப்பைக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்களை மட்டுமே விலையாக தருகிறது. ஆனால் அதே கைப்பைகளை ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் விலை வைத்து விற்று கொள்ளையும் அடித்துள்ளது.
இப்படி கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு பலியிடப்படுபவர்கள் தொழிலாளர்களும் ஊழியர்களும்தான்.
புகழ் பெற்ற உயர்தரத்திலான பிராண்டுகளை உற்பத்தி செய்யும் தமது ஊழியர்களை, மிக சொற்ப கூலிக்கு, வார விடுமுறை கூட தராமல் கசக்கி பிழிந்து உள்ளதையும், சட்டவிரோதமாக அவர்களை சுரண்டி உள்ளதையும் இத்தாலிய வழக்கறிஞர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இதே போல் மற்றொரு நிறுவனமான ஜார்ஜியா, அர்மேனியாவும் தமது பிராண்ட் கைப்பையை வெறும் 8,000 ரூபாய்க்கு ஜாப் ஆர்டர் முறையில் தந்து தயாரித்து வாங்கியுள்ளது. இதை ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் (1,59,000 ரூபாய்) விலை வைத்து விற்பனையும் செய்துள்ளது.
முதலாளித்துவ நாடுகள் என்றாலும் கூட, ஏகாதிபத்திய நாடாகவே இருந்தாலும் கூட, அங்கும் பெயரளவுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.
அந்த சட்டத்தின் படி, தற்போது சட்ட மீறலில் ஈடுபட்டுள்ள, தொழிலாளர்களை சட்ட விரோதமாக சுரண்டி கொழுத்துள்ள கைப்பை நிறுவனங்களை இத்தாலிய நீதிமன்றம் ஓராண்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
இத்தாலிய வழக்கறிஞர்கள்தான் மனசாட்சியுடன் உழைப்பவர்கள் பக்கம் நின்று நீதிக்காக பாடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் தேசம் கடந்த தரகு முதலாளிகளின் குடும்பத்தினர், அல்லது அவர்களது நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவைப் போலவே ஈவிரக்கமற்ற சுரண்டல் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
இந்த தேசம் கடந்த தரகு முதலாளிகள் தமது பணியாட்களை, தமது ஊழியர்களை, சட்டவிரோதமாக அடிமைப்படுத்துவதையும், சுரண்டுவதையும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன.
தமது நாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், தமது சட்டத்தை மீறியதற்காக தண்டித்தும் உள்ளன.
படிக்க
♦ ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது? – பாகம்1
இந்தியாவிலிருந்து இருந்து அழைத்து வந்த வீட்டுப் பணியாளர்களை சட்டவிரோதமாக சுரண்டியதற்காக, ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
முதலாளிகளா – பண்ணையார்களா?
ஏன் இப்படி குறைந்தபட்ச உரிமையைக் கூட தர மறுக்கின்றனர்? ஏனென்றால் இவர்கள் பண்பளவில் முதலாளிகளாக கூட இல்லை; பண்ணையார்களாகவே உள்ளனர்.
தமிழகத்தின் திருப்பூரை எடுத்துக் கொண்டால் அங்குள்ள கார்மெண்ட்ஸ் ஆலைகளிலும் சாயப்பட்டறைகளிலும் நடப்பது முன்னேறிய முதலாளித்துவ உற்பத்தி தான்.
ஆனால், அந்த ஆலைக்கு உரிமையாளராக இருப்பவர் ஒரு முதலாளிக்குரிய பண்பில் இருப்பதில்லை. ஒரு பண்ணையாருக்குரிய திமிரில் தான் இருக்கிறார்.
இத்தகைய பண்ணையார்களுக்கு உரிமை என்று எதையும் கேட்காத அடிமைகளாகவே, வட மாநில தொழிலாளர்கள் வந்து குவிகின்றனர். இவர்களை அடித்து கொன்றாலும் கூட கேட்க நாதியில்லை.
கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பண்ணையார்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை எப்படி சுரண்டி கொழுத்தார்களோ அதே பாணியில்தான் சில தேசங்கடந்த தரகு முதலாளிகளின் குடும்பத்தினரும் ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பண்ணையார்தனம் கடல் கடந்து முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றும் கூட மாறவில்லை.
போலி வேஷம் போடும் ஏகாதிபத்தியங்கள்!
அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் கார்ப்பரேட் சுரண்டல் குறித்தோ அதன் மீது நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை. இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே.
இன்றைய உலகமய சூழலில், தகவல் தொழில்நுட்பத் துறையின் அதீத வளர்ச்சியில், எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனமும் தமது நாட்டிலேயே தமக்கான உற்பத்தியை முழுமையாக முடித்துக் கொள்வதில்லை.
உலகின் எந்த மூலையில் மலிவாக உற்பத்தி செய்ய முடியுமோ,உனக்கு எந்த மூலையில் மூலப் பொருட்கள் மலிவாக கிடைக்கிறதோ அந்த நாடுகளை தேடி ஓடுகின்றன ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள்.
உலகின் பின்தங்கிய நாடுகளில் உள்ள மக்களை மனிதர்களாக அல்ல; புழு பூச்சிகளாக கூட மதித்து நடத்த கார்ப்பரேட்டுகள் தயாராக இல்லை. அதே நேரம் தமது லாப வெறி பிடித்த, மனிதத் தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான உழைப்பு சுரண்டலை, தனது சொந்த நாட்டிலேயே அமல்படுத்துவதைத்தான் ஏகாதிபத்திய அரசுகள் மென்மையாக கண்டிக்கின்றன. தற்போது அம்பலமாகியுள்ள நவீன கைப்பை தயாரிப்பு நிறுவனங்களின் சுரண்டலும், அதற்கு எதிரான நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும் இதையே அம்பலப்படுத்துகிறது.
லாப வெறிபிடித்து அலையும் கார்ப்பரேட்டுகளை முழுதாக வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை.
இளமாறன்.
கௌரவமிக்க பிராண்ட்களாக அறியப்படும் அனைத்து பொருட்களின் லட்சணமும் இதுதான்.