மும்பை ஐஐடியில் சாதிய பாகுபாடு காரணமாக தர்ஷன் சோலங்கி என்ற  தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  இவரின் நினைவாக டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் நடத்த முயன்ற போது ABVP (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) மாணவ குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். இதில் தமிழ்நாடு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மூலக்கூறு மருத்துவத் துறையின் ஆராய்ச்சி மாணவர் தமிழ் நாசர் ABVP  குண்டர்களால் தலையிலும், கழுத்திலும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

ABVP Attacks Tamil Students at JNU, Defaces Portraits of Periyar, Marx; CM Stalin Demands Action

இது குறித்து ஜாமியா மிலியா பல்கலைகழகத்தின் தமிழக மாணவர் இளையகுமார் கூறுகையில்,  “சிவாஜி நிகழ்ச்சிக்காக கூடியிருந்த ஏபிவிபி உறுப்பினர்கள் கம்யூனிஸ்டுகளை தூக்கிலிட வேண்டும், ஷர்ஜீல் இமாம், உமர் காலித் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்று சுவர்களில் எழுதினர். அதனை இடதுசாரி மாணவர்கள் சுவரில் இருந்து அகற்றினர். அதன் பின்னர் ஜானே பி டோ யாரோன்(Jaane Bhi Do Yaaron) படத்தின் திரையிடல் தொடங்கவிருந்த நேரத்தில், ஏபிவிபி உறுப்பினர்கள் மீண்டும் வந்து சிவாஜியின் உருவப்படத்தை அகற்றியதாகக் கூறி மாணவர்களைத் தாக்கினார்கள்” என்று கூறினார்.

பெரியாரை கண்டு அஞ்சும் சங்பரிவார் கும்பல்!

மேலும் அவர் கூறுகையில் “கடந்த ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி JNU  மாணவர்கள் உட்பட எங்களில் சிலர் ‘ரிசர்வேசன் கிளப்’ தொடங்கினோம். அன்றிலிருந்து அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு (EWS) எதிராகவும், இட ஒதுக்கீடு உரிமைகள் குறித்தும் பல நிகழ்வுகளை இந்த கிளப் நடத்தி வருகிறது. அப்போதிருந்து ஏபிவிபி தந்தை பெரியாருக்கு எதிராக பிரச்சாரங்களை நடத்தி வருகிறது” என்று கூறினார்.

தமிழகத்தில் இந்துத்துவ அரசியலை எடுத்துச் செல்ல தடையாக இருப்பது தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களும், பார்ப்பனிய எதிர்ப்புமே. அது மட்டுமில்லாமல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, பகத்சிங், காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் படங்களையும் உடைத்து நாங்கள் சமத்துவத்திற்கு எதிரிகள் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்கள். இவர்கள் எங்களின் கருத்துக்களை பார்த்து அச்சமடைந்துள்ளார்கள் என்பதையே இந்த தாக்குதல் நிரூபித்துள்ளது.

ABVP குண்டர்களின் தாக்குதலினால் காயமடைந்த மாணவர் நாசர் கூறுகையில்  “ரிசர்வேசன் கிளப்புக்கு சென்ற போது அந்த கும்பல் பெரியார், மார்க்ஸ், லெனின் ஆகியோரின் படங்களை உடைத்திருந்தனர். இதை  ஏன் உடைக்கிறீர்கள்? என்று நான் கேட்ட போது அந்த கும்பல் என்னை தாக்கியது” என்று கூறினார்.

நாசரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த ஆம்புலன்சை மறித்தும், துணைக்கு வந்த மாணவர்களையும் தாக்கியுள்ளது ABVP வானர கும்பல், என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

பாசிச கும்பலின் எடுபுடியாக டெல்லி போலீசு!

இதில் கொடுமை என்னவென்றால், இந்த தாக்குதல் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீசாரின் கண் முன்னேயே நடந்துள்ளது. இதனை தடுக்காமல் தாக்குதலை பார்த்து ரசித்துள்ளது பாசிஸ்டுகளின் ஏவல் படை. மாணவர்கள் தடுக்கச் சொல்லி கேட்டதற்கு எங்களுக்கு தடுக்கச் சொல்லி எந்த உத்தரவும் வரவில்லை என்று தங்கள் முதலாளிகளுக்கு விசுவாசமாக வாலை ஆட்டியுள்ளது. இந்த தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக சிவாஜி படத்தை அவர்கள் உடைத்தார்கள், எங்களை தாக்கினார்கள் என்று புதிய கதையை உருவாக்குகிறார்கள் ஏபிவிபி மாணவர்கள். நாங்கள் ஏன் அப்படி செய்ய வேண்டும், அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று மாணவர்கள் கூறினர்.


இதையும் படியுங்கள்: டெல்லி JNU வில் ABVP குண்டர்கள் மீண்டும் வன்முறை! 


ஜேஎன்யூ மற்றும் டெல்லி காவல்துறை ”ஒன்றிய பாஜக அரசு எங்கள் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைக்கு மௌன பார்வையாளராக உள்ளது என்று மாணவர்கள் கூறினார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அரசும் அதன் நிறுவனங்களின் மீதான மாயையையும் புரிந்துக் கொள்ள உதவும். அரசின் அடக்குமுறை கருவிகள் என்றுமே மக்கள் பக்கம் நின்றதில்லை என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.

கல்வி நிறுவனங்களில் இந்துத்துவவாதிகள்

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட சங்பரிவார கும்பலை பதவியில் அமர்த்தி வருகிறது. இதில் JNU  பல்கலைகழகமும் தப்பிக்கவில்லை. JNU பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் சாந்திஸ்ரீ துளிப்டி பண்டிட் இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவரா பல்கலைகழகத்தில் நடக்கும் தாக்குதலை தடுத்து நிறுத்தப் போகிறார்?. தாக்குங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தான் கூறுவார். அந்த தைரியத்தில் தான் இந்துத்துவ கும்பல் தாக்குதலை தொடர்கிறது.

சங்பரிவார் கும்பலின் இலக்கு இடது சாரி மாணவர்கள் தான். ஜே.என்யூ மாணவர்கள் மீது நடக்கும் இந்த தாக்குதல் புதிதல்ல! கடந்த பிப்ரவரி 2022 ராமநவமி அன்று அசைவ உணவு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் தொடுத்தது. இந்த தாக்குதலில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். ஜனவரி 2020 இல், முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும், தடிகள் மற்றும் கம்பிகளுடன், வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதி, மஹி மாண்ட்வி விடுதி மற்றும் பெரியார் விடுதிகளுக்குள் நுழைந்து ஜே.என்.யூ.எஸ்.யுவுடன் இணைந்த  மாணவர்களை தாக்கினர். பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஏபிவிபி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தும் இடதுசாரிகளையும், முற்போக்காளர்களையும், இலக்கு வைத்து தாக்க ஆரம்பித்துள்ளது சங்பரிவார கும்பல். மாணவர்கள் மட்டுமல்ல, ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக களமாடும் அனைவருமே அவர்களின் இலக்கு. JNU மாணவர்கள் மீதான தாக்குதலை பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்த்து குரல் கொடுத்தாலும் பாசிஸ்டுகளுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை உணர மறுக்கிறார்கள்.

காவிப் பிடியில் சிக்கியுள்ள கல்வி நிறுவனங்களை மீட்பதோடு மட்டுமல்லாமல், சங்பரிவார் கும்பலுக்கு எதிராக அனைத்து மாணவர்களும் ஒன்றிணைய வேண்டியதின் அவசியத்தை JNU மாணவர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல் நமக்கு உணர்த்தியுள்ளது.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here