
இந்தியாவின் குடிமக்களான இஸ்லாமியர்களை பங்களாதேஷ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த வந்தேறிகள், ஊடுருவல் காரர்கள், குஸ்பேத்தியாக்கள் என்று தொடர்ந்து ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதுடன் அரசு படைகளை ஏவி இஸ்லாமியர்களை துன்புறுத்துவதுடன் இந்திய நாட்டின் எல்லைக்கு வெளியே பங்களாதேஷ் நாட்டிற்குள் தூக்கி எறிந்து வருகிறார்கள்.
உள்துறை அமைச்சரான அமித்ஷா அண்மையில் அசாமில் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி, பார்பேட்டா, தர்ராங், மோரிகான், போங்கைகான், நாகோன் மற்றும் கோல்பாரா ஆகிய 7 மாவட்டங்களில் மொத்தம் 64 லட்சம் இஸ்லாமியர்கள் பங்களாதேஷ் நாட்டில் இருந்து ஊடுருவி இருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் 20 ஆண்டு கால ஆட்சியில் தான் இந்த ஊடுருவல் நடந்துள்ளதாகவும் பேசியுள்ளார்.
அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதால் அவர் ஆதாரங்களின் அடிப்படையில் தான் 64 லட்சம் இஸ்லாமியர்கள் பங்களாதேஷ் நாட்டில் இருந்து அஸ்ஸாமிற்குள் ஊடுருவியுள்ளதாக கூறியுள்ளார் என்று யாரும் நம்பி விடக் கூடாது.

அமித்ஷா – மோடி வகையறாக்கள் எவ்வித ஆதாரமும் இன்றி எப்பேர்பட்ட பொய்களையும் பரப்பக் கூடியவர்கள். மக்களை குழப்பி, திசை திருப்பி தங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொய்களை பரப்பி கலவரத்தை நடத்துவதையே பாசிஸ்டுகள் தங்களது செயல்முறையாகக் கொண்டவர்கள். பாசிஸ்டுகளின் கூற்றுக்கள் ஆதாரத்தின் அடிப்படையில் தான் இருக்கும் என்று கருதுபவர்கள் நிச்சயம் அரசியல் அறிவு படைத்தவர்களாக இருக்க முடியாது.
இந்திய நாட்டிற்குள் பங்களாதேஷிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் – பாஜகவினர் தொடர்ந்து பேசி வருவதால் அது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் “கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய நாடு முழுவதும் கண்டறியப்பட்ட, கைது செய்யப்பட்ட மற்றும் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?” என்ற புள்ளி விபரங்களை ஆண்டு வாரியாக கொடுக்குமாறு கேட்டு இருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 23, 2026 தேதியிட்ட தனது பதிலில் ‘ஊடுருவல்காரர்களை கண்டுபிடிப்பது, கைது செய்வது மற்றும் நாடு கடத்துவது தொடர்பாக எந்த ஒரு தரவும் தங்களிடம் இல்லை’ என்று கூறிவிட்டது. அதாவது அமித்ஷா தலைமை தாங்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தன்னிடம் இது குறித்து எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது.
இந்த நிலையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில், எங்கிருந்து எடுத்த தரவுகளின் அடிப்படையில் 64 லட்சம் இஸ்லாமியர்கள் வங்காளத்தில் இருந்து அஸ்ஸாமிற்குள் ஊடுருவி வாழ்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேசி வருகிறார்? எந்த அடிப்படையில் அசாமில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படி இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று அமித்ஷாவும் பிற ஆர்.எஸ்.எஸ் பாஜக பாசிஸ்டுகளும் பேசி வருகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
படிக்க:
♦ இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பில் ஊறி திளைக்கும் பி.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ !!
♦ கம்யூனிஸ்டுகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் நசுக்கும் உளவுப்படை!
இவர்கள் மக்களிடையே எவ்வித ஆதாரமும் இன்றி அயோக்கியத்தனமாக இப்படிப் பேசி வருவது மட்டுமின்றி, தாங்கள் ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரை வைத்து அசாம், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என்று முத்திரை குத்தி துன்புறுத்துவது, அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று இந்திய எல்லைக்கு வெளியே பங்களாதேஷ் நாட்டிற்குள் துரத்தியடிப்பது என்பதை செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தல்களின் போதும் இந்துக்களிடையே இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை பரப்புவதற்காக பங்களாதேஷில் இருந்து இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வருவது காரணமாக இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள், இந்துக்களின் சொத்துக்களை பிடுங்கி காங்கிரஸ் இஸ்லாமிய ஊடுருவல் காரர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பன போன்ற அயோக்கியத்தனமாக பொய்யை பரப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட பொய்களை மோடியும் அமித்சாவுமே பொதுவெளியில் பலதரப்பட்டவர்களின் கேமராவிற்கு முன்பாகவே பேசி வருகிறார்கள்.
இதிலிருந்து அவர்கள் இரண்டு விசயங்களை நமக்கு கூறுகிறார்கள். நாங்கள் பேசுவது அயோக்கியத்தனமான பொய்கள் தான் என்றாலும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளால் ஊடகங்களால் எங்களை எதுவும் செய்து விட முடியாது என்றும் நாங்கள் ஆதாரம் இன்றி எப்பேர்பட்ட அயோக்கியத்தனமான பொய்களைக் கூறினாலும் எங்களை நம்புவதற்கு ஒரு பெரும் கூட்டம், இந்துக்கள் என்ற பெயரில், காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்த நாட்டின் குடிமக்களான இஸ்லாமியர்களை ஊடுருவல் காரர்கள் – இந்த நாட்டின் குடிமக்களே அல்ல என்று கூறுவதன் மூலமாக இஸ்லாமியர்களுக்கு குடியுரிமையை மறுப்பதன் மூலமாக அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு விடுகின்றன. இதன் மூலம் இந்து மத வெறி பாசிஸ்டுகள் ஒரு வக்கிரமான மகிழ்ச்சியை அடைகிறார்கள்.

நாட்டைக் காப்பாற்ற இந்து மக்களின் உரிமைகளை காக்க இஸ்லாமியர்களை இப்படி நடத்துவதுதான் சரியானது என்று அப்பாவி இந்துக்களை நம்ப வைத்து தங்களுக்கான மக்களின் ஆதரவை வலுப்படுத்திக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இதன் மூலமாக தங்களுக்கான – பாசிசத்திற்கு ஆதரவான மக்களின் அடித்தளத்தை தொடர்ந்து பராமரித்து வருகிறார்.
பாசிஸ்டுகளின் இந்த செயல் முறையை முறியடிக்க வேண்டுமானால் பாசிசத்தை வேரறுக்க நினைக்கும் ஜனநாயக, முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு மக்கள் மத்தியில் பாசிசத்திற்கு எதிராக பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளுக்கு இடையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியும் பல்வேறு மக்கள் பிரிவுகளை ஒருங்கிணைத்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் அமைக்க வேண்டும்.
இதன் மூலமாகத்தான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக குண்டர் படையை எதிர்கொண்டு வீழ்த்தி நாட்டை பாசிஸ்டுகளிடமிருந்து விடுவிக்க முடியும்.
– குமரன்







தோழரே நீங்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அமித்ஷா கூறுவது காங்கிரஸ் ஆட்சியில் 20 வருடங்கள் என்று கூறுகிறார். சமூக ஆர்வலர் கடந்த 10 வருடம் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் பாஜக ஆட்சியில் ஊடுருவல் நடக்க வில்லை என்று அர்த்தம் ஆகிறது. 64 லட்சம் ஊடுருவல் 10 வருடம் முன்பே வந்துவிட்டது இப்போது இல்லை என்று தோன்றுகிறது. 10 வருடம் முன்பு உள்ள தரவுகளை எடுத்து பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்…
நன்றி…
தோழரே நீங்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அமித்ஷா கூறுவது காங்கிரஸ் ஆட்சியில் 20 வருடங்கள் என்று கூறுகிறார். சமூக ஆர்வலர் கடந்த 10 வருடம் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் பாஜக ஆட்சியில் ஊடுருவல் நடக்க வில்லை என்று அர்த்தம் ஆகிறது. 64 லட்சம் ஊடுருவல் 10 வருடம் முன்பே வந்துவிட்டது இப்போது இல்லை என்று அர்த்தம் ஆகிறது. 10 வருடம் முன்பு உள்ள தரவுகளை எடுத்து பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்…
நன்றி…