பிப்ரவரி 16, ஒன்றிய பாசிச பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுப்பேட்டை (சென்னை) சித்ரா தியேட்டர் அருகில் இருந்து சட்டமன்றத்தை நோக்கி பேரணி தொடங்கியது.

புரட்சிகர அமைப்புகளின் சட்டமன்றம் நோக்கிய பேரணி! 

இப்பேரணியை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் இல.பழனி தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியின் அவசியத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் தோழர்கள் கடந்த மூன்று வாரங்களாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தனர். இன்று பேரணியில் தமிழகத்திலிருந்து மேற்கண்ட அமைப்பின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வயதான தோழர்கள் தொடங்கி இளைஞர்கள் மாணவர்கள் வரை ஒன்றிய பாசிச பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக எழுப்பிய முழக்கம் பார்வையாளர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

பேரணியை 1 கிலோமீட்டரில் தடுத்துநிறுத்திய காவல்துறை நான்கு அமைப்பின் முன்னணி தலைவர்கள் சட்டமன்றத்திற்கு சென்று மனு கொடுக்க அனுமதி அளித்தது. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு கலந்து கொண்டு உரையாற்றினார்.

தோழர் வன்னியரசு பேசுகையில் மகஇக உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் எழுப்பியுள்ள முக்கிய கோரிக்கைகளான விவசாயிகள் விரோத விதைச்சட்டம், தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்புகள், மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் நுழைவுத் தேர்வுகள், தமிழர் கீழடி ஆய்வு முடிவில் தொல்குடி வரலாற்றை அறிவிக்காமல் இருப்பது போன்றவற்றிற்கு எதிராக நடத்தப்படும் இப்பேரணி அவசியமானது என தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் அந்த வகையில் இப்பேரணியை நாங்கள் ஆதரிக்கிறோம் எனப் பேசினார்.

படிக்க:

 பிப்ரவரி – சட்டமன்றம் நோக்கி பேரணி

மேலும், பாசிச பாஜகவின் அடக்குமுறை சட்டங்களையும் அதன் திட்டங்களையும் அம்பலப்படுத்தி பேசினார். இந்த பிரச்சனையை எங்கள் எம்எல்ஏக்கள் மூலம் சட்டமன்றத்தில் எடுத்துரைப்போம் என போராடிய தோழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார் தோழர் வன்னியரசு.

அதன்பின்பு பேசிய தோழர்கள் விவமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அம்பேத்கர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் லோகநாதன், புமாஇமு மாநிலச் செயலாளர் தோழர் அன்பு, விவிமு மாநில பொருளாளர் தோழர் செல்வராஜ் ஆகியோர் பாசிச மோடி அரசையும் அவர்கள் கொண்டுவந்துள்ள மக்கள் விரோத சட்டங்களையும் எவ்வாறு முறியடிப்பது என அம்பலப்படுத்தி பேசினார்கள்.

இதற்கிடையில் மகஇக கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர்களை உற்சாகப்படுத்தினார்கள். சிறப்பாக நடைபெற்ற இந்த பேரணி பாசிஸ்டுகளின் மக்கள் விரோத சட்டங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் தொடக்கமாக அமைந்துள்ளது.

மக்கள் அதிகாரம்
ஊடகக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here