பள்ளிப் பாடத்திட்டங்களில் பகவத்கீதையை புகுத்தும் சங்பரிவார் கும்பல்!
மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசானது, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி எனும் ஒற்றைத் தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறது. செத்த மொழியான சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க பல ஆயிரம் கோடிகளை கொட்டுகிறது. சமீபத்தில் பேசிய அமித் ஷா, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்பதை முன்வைக்கிறார். நாட்டை இந்து மயமாக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ள இக்கும்பல் கல்வி பாடத்திட்டங்களில் புராண, இதிகாச குப்பைகளை புகுத்த முயல்கிறது அதன் அபாயங்களை விளக்குகிறது இக்கட்டுரை.
****
இந்து வலதுசாரி சக்திகள், இப்போதுள்ள முழுமையான அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, பகவத் கீதையை தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்ற அவர்களது நீண்டகால கனவை நிறைவேற்ற திட்டமிடுகின்றன. குஜராத் அரசானது வரும் கல்வியாண்டில் இருந்து 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க எடுத்திருக்கும் முடிவானது மிகவும் ஆபத்தானது. இதுகுறித்து குஜராத் கல்வி அமைச்சர் ஜிட்டு வகானியின் அறிவிப்பானது, இந்திய அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவு, அறிவியல் மற்றும் கல்வி மீதான தாக்குதலாகவும் அமைந்துள்ளது.
இது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியிலோ, கல்வியின் படைப்பாற்றல் மற்றும் அதன் சுதந்திரமான செயல்பாட்டு அடிப்படையிலோ சிறிதும் பயன்தர போவதில்லை. இவை இரண்டும் தான் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் மிகவும் முக்கியமானவையாகும். பாடத்திட்டத்தின் இன்றியமையாத நோக்கமானது மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளை அளிப்பதாகவும், அதன்மூலம் சமூகத்துக்கும் இந்த நாட்டுக்குமான உடனடி தேவையை ஈடு செய்வதாகவும் இருக்க வேண்டும்.
மேலும் கல்வியின் பங்களிப்பு என்பது ஒருவரின் சொந்த அறியாமையை களைந்து, சக மனிதர்கள், விலங்குகள் மற்றும் நாம் வாழும் பூமிப் பரப்பை புரிந்து கொள்ள உதவுவதாகவும் இருக்க வேண்டும். மேலும் கல்வியானது சமூக, பண்பாட்டு, மத மற்றும் பிராந்திய பிற்போக்கு மரபுகளுடன் இணைக்கப்பட்ட சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் குருட்டு நம்பிக்கைகள் போன்ற குறுகிய சிந்தனைகளில் இருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும். தம்மை அடிமைப்படுத்தி நிலைநிறுத்தும் காரணிகளை ஆய்வு செய்து புரிந்து கொள்ள உதவ வேண்டும்.
கல்வி பாடத்திட்டங்கள் வெறுமனே பட்டம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் மதிப்பெண்களை பெறுவதற்காக வடிவமைக்கப் படவில்லை. அவை ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ, வணிக மற்றும் முதலாளித்துவ அமைப்புகளால் உருவாக்கப்பட்ட சுரண்டல் நிலைமைகளை புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் உழைப்பு சக்தியை பயன்படுத்தி தனது இலாப சாம்ராஜியத்தை விரிவுபடுத்துவதுதான் முதலாளித்துவ அமைப்பின் நோக்கமாக உள்ளது.
மக்கள் மத்தியில் பசி,வீடற்ற நிலை மற்றும் வறுமை போன்றவை பெருகுவது முதலாளித்துவத்தின் நேரடி விளைவாகும். இது போன்ற தீவிரமான பிரச்சனைகளை முதலாளித்துவம் தீர்க்க முடியாது. ஏனெனில் அவற்றை உருவாக்குவதே அதுதானே! முதலாளித்துவமானது வரலாற்றில் மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இன்றைய சூழலில், அதன் குறைகளை கேள்வி கேட்காத, இணக்கமான ஒரு பண்பாட்டை உருவாக்கும் வகையிலான கல்வி முறையை நடைமுறைப்படுத்த மதவாத, பிற்போக்குக் கும்பல் முயல்கிறது. உழைப்பு, உற்பத்தி மற்றும் நுகர்வு எனும் பொருளாதார அமைப்பின் மூன்று தூண்களை கட்டுப்படுத்தும் வகையிலான கல்வி அடித்தளங்களை உருவாக்கவே மதக் கல்வியானது புகுத்தப்படுகிறது.
இங்குதான் பகவத் கீதையானது முதலாளித்துவ அமைப்புக்கும் அதன் மத கூட்டாளிகளுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பள்ளி பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்துவதே தமது அரசின் நோக்கம் என குஜராத்தின் கல்வி அமைச்சர் கூறுகிறார். குஜராத் அரசின் இந்த முடிவு, இந்தியாவில் முதலாளித்துவம் மற்றும் இந்துத்துவத்தின் தீவிர பக்தராகத் திகழும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் ஒத்துப்போகிறது. மோடி அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கையானது, கல்விப் பாடத்திட்டங்கள், மத மற்றும் பாரம்பரிய நூல்களை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கிறது. இத்தகைய முயற்சிகள் இந்திய அறிவு மரபின் மற்றும் கல்வியின் அடிப்படை, சுதந்திர நோக்கங்களின் அடித்தளத்தையே அழிக்கின்றன.
பகவத் கீதையை மற்ற புராணங்களை போல மக்கள் படிக்கலாம், ஆன்மீக மத நூலாக பயன்படுத்தலாம். ஆனால் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அதை எப்படி சேர்க்க முடியும்? ஏனெனில் பகவத் கீதையில் தனிநபர்களுக்கு வழங்கும் ஆலோசனை என்னவென்றால்,” கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்பதாகும். அதில் கூறப்படும் இத்தகைய கர்மா கோட்பாடு உண்மையாக இருந்தால் டாடா, அம்பானி மற்றும் அதானிகள் செழிப்பாக இருக்க முடியாது. மாறாக பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடி மக்கள்தான் செல்வந்தர்களாக இருக்க முடியும். நமது பூமியும் சமத்துவம் மற்றும் இணக்கமாக இருந்திருக்கும்.
டாக்டர் அம்பேத்கர், இந்து மதம் மற்றும் பகவத் கீதை இரண்டையுமே விமர்சித்தார். காரணம் அவற்றின் சாதி அடிப்படையிலான பார்ப்பனீய இந்து சமூக ஒழுங்கமைப்பு என்பது அதிகார படிநிலைகளுக்கு ஏற்ப கட்டமைப்பை வலியுறுத்துகிறது. மேலும் அது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும், அதற்கேற்ப சுதந்திரம் மற்றும் சொத்துரிமை போன்றவற்றையும் நியாயப்படுத்துகிறது.
பகவத்கீதையும் அதன் ஏகத்துவ தத்துவக் கண்ணோட்டமும், மக்களை அவர்களின் அடுத்த ஜென்மத்தில் விடுதலை பெறுவதற்கான வழிகளைக் காட்டுகிறது. அடுத்த ஜென்மம் (பிறவி) என்பது அமெரிக்க கனவை போன்றது. அதற்கு எந்தவிதமான பொருள் சார்ந்த அல்லது ஆன்மீக அடித்தளமும் இல்லை. சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான மற்ற விளம்பரங்களை போன்றதே இதுவும்!
நல்ல கர்மா (கடமை/செயல்) மற்றும் தர்மம் போன்றவையே செல்வம், சக்தி மற்றும் புகழை வழங்க வல்லவை. இவற்றை பக்தி மூலம் பெற முடியும். மனித உடல் அல்லது உயிர், ஆன்மாவுடன் இணையும் இறுதி நிலையை அடைய கர்மா, பக்தி, தர்மம் போன்றவையே படிகளாகும் என்பதே கீதை கூறும் அறிவுரை. இத்தகைய கருத்துக்களை பரப்பும் வகையில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியானது கீதையை மொழிபெயர்த்து பொதுமக்களுக்கு வழங்கியது. பகவத்கீதையின் லட்சியங்கள் ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கேற்ப இணக்கமான பண்பாட்டை உருவாக்க உதவுகின்றன. எனவேதான் இந்துத்துவ அடிப்படைவாதிகள் கல்வி பாடத்திட்டத்தில் இதைப் புகுத்த முயற்சிக்கின்றனர்.
படிக்க:
♦ ஹிஜாப் தடை: முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பறிப்பு!
♦ பறிக்கப்படும் கல்வி உரிமை!நெஞ்சம் பதறுகிறது!ரத்தம் கொதிக்கிறது!
பள்ளிகளில் படிக்கும் இளம் மனங்களும், கல்லூரிகளில் படிக்கும் வயதுவந்த மாணவர்களும் தங்களை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை அடையவும், தாங்கள் விரும்பியதை படிக்கும் சுதந்திரம் அவசியம். அவர்களின் மனங்களை இருள் மற்றும் நியாயமற்ற திசையில் வடிவமைக்க எந்த அரசுக்கும் உரிமையில்லை. இந்துத்துவ அரசியலின் தர்க்கமானது சந்தைகள் சுதந்திரமாகவும், தனி மனிதர்களின் மனது முதலாளித்துவ சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப இணங்க வைப்பதாகவும் உள்ளது.
கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கல்வி பாடத் திட்டங்களை இந்திய அரசியலமைப்பின் வரையறைக்குள் வடிவமைக்கட்டும். இதுவே இந்திய குடிமக்கள் அறிவியல் மற்றும் மதச்சார்பற்ற கல்வியை பெறுவதற்கான உரிமையை அவர்களுக்கு வழங்கும். கல்வி பாடத்திட்டங்கள் அதன் அத்தியாவசிய மற்றும் சுதந்திரமான கடமையை ஆற்றக் கூடிய ஒரே வழி இதுதான்!
– பாபனி சங்கர் நாயக், அரசியல் பொருளாதார பேராசிரியர்.
கிளாஸ்கோ பல்கலைக்கழகம், இங்கிலாந்து.
கட்டுரை மூலம்:
Dangers of Teaching the Bhagavad Gita in Educational Curriculums
தமிழில் : குரு