பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது தனது ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது ஜெனரல் ஓ டயர், ஜாலியன் வாலாபாக் பகுதியில் நடத்திய படுகொலை வரலாற்றில் இன்னமும் கொடூரமான தாக்குதலாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்ட யாரும் பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடத் துணிய மாட்டார்கள் என்பதுதான் அன்றைய பிரிட்டன் காலனி அரசாங்கத்தின் கண்ணோட்டம்.

அதே போன்றதொரு கொலை வெறியாட்டத்தை தூத்துக்குடியில் நிகழ்த்திக் காட்டியது காலனி ஆதிக்க சட்டதிட்டங்களை இன்று வரை கடைப்பிடித்து வரும் தமிழக போலீசு. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு 100 நாட்கள் தொடர்ந்து போராடிய மக்களின் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது அந்தப் போராட்டத்தை வன்முறையின் மூலம் ஒடுக்குவதற்கு அதிமுக அரசு, ஸ்டெர்லைட், போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட்டு சதியில் ஈடுபட்டது என்பது மீண்டும் ஒருமுறை  தற்போது அம்பலமாகியுள்ளது.

ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து விட்டதாக கூறிக்கொண்டு அதன் 75வது தின கொண்டாட்டங்களில் இந்திய ஆளு வர்க்கங்களும் அதன் கைக்கூலிகளும் ஈடுபட்டிருக்கும் நிலையில் அதன் முகத்திரையை கிழித்தெரியும் வகையில் 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த இரண்டாவது ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலையின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு- படுகொலை சட்டப்படியே ஒரு கிரிமினல் நடவடிக்கை என்று அம்பலமாகியுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றி விசாரணை செய்த சிபிஐ ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாயாக மாறி போராடிய மக்களின் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்க துவங்கியுள்ளது.

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான இந்தியாவின் தேசங்டந்த தரகு முதலாளிகளில் ஒருவரான வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கனிம வளங்களை குறிப்பாக இரும்பு, செம்பு, துத்தநாகம் போன்ற கனிமங்களை பூமியிலிருந்து அகழ்ந்து எடுத்து அதனை தேவைக்கேற்றது போல் தயாரித்து விற்பனை செய்கின்ற கொலைகார கார்ப்பரேட் முதலாளி ஆவார். இந்தியாவில் உள்ள முதல் நிலை வரிசை கொழுத்த பணக்காரர்களில் ஒருவர்தான் இந்த அனில் அகர்வால்.

அனில் அகர்வால்

“ஈட்டி எட்டும் மட்டும் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்ற பழமொழிக்கு ஏற்ப கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான போலீசு மற்றும் அதிகார வர்க்கம் கவ்விய எலும்பு துண்டுக்கு விசுவாசமாக 13 உயிர்களைத் துள்ளத் துடிக்க சுட்டு படுகொலை செய்தது. அந்த துப்பாக்கி தாக்குதல் நடத்திய கொலைகார போலீசு மீது இன்று வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

“துப்பாக்கிச் சூடு நடந்ததை பற்றி தொலைக்காட்சி செய்திகள் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று அப்பட்டமாக புளுகிய அண்ணா திமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அம்பலமான பிறகு நிர்ப்பந்தத்தின் பெயரில்   தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி விசாரிப்பதற்கு நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நான்கு ஆண்டுகள் தனது விசாரணையை மேற்கொண்டு கடந்த மே மாதம், 2022ல் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினிடம்  ஐந்து தொகுதிகள் கொண்ட 3000 பக்கம் உள்ள அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் என்று வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்றத்தில் மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி அருணா ஜெகதீசன், திமுக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

தற்போது பிரண்ட்லைன் இதழின் மூலம் அதன் சில பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முக்கியமாக சட்டபூர்வ கிரிமினல் கும்பலான போலீசு சதித்தனமாகவும், கிரிமினல் புத்தியுடன் போராடிய மக்கள் மீது திடீரென்று தாக்குதல் நடத்தும் வகையில் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அருகில் இருந்த ஹெரிடேஜ் பூங்காவில் ஒளிந்து கொண்டு மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், தொலைவில் இருந்து குறி பார்த்து சுடும் ஸ்நீப்பர் செல் எனப்படும் நவீன ரக துப்பாக்கிகளை கொண்டு குருவி சுடுவது போல சுட்டு தள்ளினார் என்றும், துப்பாக்கிச் சூடு நடந்ததை ஒட்டி கலைந்து சென்ற மக்களின் மீதும் கொலை வெறியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றும், இதில் உச்சகட்டமாக சுடலைக்கண்ணு என்ற போலீசு நான்கு வெவ்வேறு இடங்களில் 17 முறை துப்பாக்கியால் சுட்டார் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல ஐஜி ஆக இருந்த சைலேஷ் குமார் யாதவ் நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

100 நாள் போராட்டத்தை ஒட்டி நூறாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்ட குழு அறிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் தூத்துக்குடியை விட்டு 100 கிலோமீட்டர் வெளியில் உள்ள கோவில்பட்டி என்ற ஊரில் இருந்திருக்கிறார் என்பதை நீதிபதி அருணா ஜெகதீசன் கண்டித்துள்ளார். அது மட்டும் இன்றி தனது வீட்டில் இருந்தபடியே சமாதான கூட்டத்திற்கு தலைமைதாங்க துணை ஆட்சியரை அனுப்பியுள்ளார் என்பதையும் அம்பலப்படுத்தி உள்ளார்.

தேசங்கடந்த தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இந்தியா மிக வேகமாக சென்று கொண்டுள்ளது என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கின்ற வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல கார்ப்பரேட்டுகளின் பாசிச அதிகாரம் தான் ஆட்சி அமைப்பை கட்டுப்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், போலீஸ் துறையில் உயர் அதிகாரியான தென் மண்டல ஐஜி மற்றும் நெல்லை சரக டிஐஜி போன்றவர்களுடன் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய அரசாங்கத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சதி செய்து திட்டமிட்டு நடத்திய படுகொலை தாக்குதல் தான் 13 பேர் மீதான துப்பாக்கிச் சூடு என்பது அம்பலமாகி நாறிக்கொண்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனத்தின் பகல் கொள்ளைக்கு இந்த நாட்டு மக்களை ரத்த பலி கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை தூத்துக்குடி சம்பவம் உலகிற்கே உணர்த்தியது.

கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மக்களோடு சேர்ந்து போராடிய வழக்கறிஞர் ஹரி ராகவன், வழக்கறிஞர் தங்கபாண்டியன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை கடுமையாக ஒடுக்குவதற்கும், படுகொலை செய்வதற்கும் திட்டமிட்டு இருந்தது என்பது தான் கண்டிக்கத்தக்கதும் கவனிக்கத்தக்கதும் ஆகும். இந்த சதி திட்டத்தில் மீண்டும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் எழுந்து விடவே கூடாது என்ற கொடூர நோக்கத்தில் 15 வயதிற்கு உட்பட்ட மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேரை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது கிரிமினல் போலீசு.

ஸ்னோலின்

கார்ப்பரேட் நிறுவனங்களின் பகல் கொள்ளையை எதிர்த்துப் போராடக்கூடிய போராளிகளை திட்டமிட்டு படுகொலை செய்வது இது முதல் முறையல்ல. நைஜீரியாவில் ஷெல் நிறுவனத்திற்கு எதிராக மக்களை திரட்டி போராடிய ஆசிரியர் கென் சரோ வைவா படுகொலை செய்யப்பட்டார். சிலியின் அதிபராக இருந்த அலான்டே அமெரிக்காவின் AT &T என்ற நிறுவனத்திற்கு எதிராக தடை விதித்தார் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார். போபால் விஷவாயு படுகொலையை நடத்திய ஆண்டர்சன் அப்போதைய காங்கிரசு அரசாங்கத்தின் தயவுடன் தனது சொந்த நாட்டிற்கு தப்பி ஓடி வாழ்ந்து மறைந்தார். இறுதி காலத்தில் அற்ப தொகை அவர் மீது நட்ட ஈடாக விதிக்கப்பட்டது. இதற்காக இந்திய மக்கள் பல ஆண்டு காலம் போராட வேண்டி இருந்தது.

இதுதான் கார்ப்பரேட்டுகளின் லட்சணம். தனது ஆலை மூடப்படும் என்ற கொலை வெறியில் வேதாந்த நிறுவனத்தில் அதிபர் அனில் அகர்வால் திட்டமிட்டு கொடுத்தபடி தான் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது மக்கள் அதிகாரம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் குற்றச்சாட்டு ஆகும். நக்கீரன் உள்ளிட்ட தமிழ் பத்திரிகைகள் துவங்கி சர்வதேச ஊடகங்கள் வரை இந்த உண்மையை அப்போதே அம்பலப்படுத்தியது. அந்த நீதியை நிலைநாட்டிய நீதிபதி அருணா ஜெகதீசன் போன்ற ஒன்று, இரண்டு நேர்மையான நீதிபதிகள் இன்னமும் இந்த நாட்டின் மக்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டுள்ளனர்.


இதையும் படியுங்கள்: ஸ்டெர்லைட் வழக்கில் மக்களை குற்றவாளியாக்கும் சிபிஐ | தோழர் வாஞ்சிநாதன் பேட்டி


போலீசு உள்ளிட்ட அரசு கட்டமைப்பின் தோல்வி என்பது நீதிபதி அருணா ஜெகதீசன் குறிப்பிட்டதை போல தனிப்பட்ட சில ஆட்சியாளர்களின் சொந்த பிரச்சனை அல்ல. பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு திட்டமிட்டு சேவை செய்கின்ற ஒரு அமைப்பு முறை (சிஸ்டம்) பற்றிய பிரச்சினையாகும்.

ஆளத் தகுதி இழந்து, தோற்றுப் போய், திவாலாகி, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்ட அரசு கட்டமைப்பு தற்போது பல மடங்கு மிருகத்தன்மை உள்ள கொலை வெறி பிடித்த கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளின் கையில் சிக்கியுள்ளது.


இதையும் படியுங்கள்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு! கார்ப்பரேட்டுக்கு எதிராக மக்கள் எழுச்சி!


இந்த அரசு கட்டமைப்பை அடித்து நொறுக்கி மக்களுக்கு சேவை செய்கின்ற புதிய அரசு கட்டமைப்பை உருவாக்குகின்ற எழுச்சிக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கைகளை பயன்படுத்திக் கொள்வோம்.

சதித்தனமாக போராட்டத்தை ஒடுக்குவதற்கு கார்ப்பரேட்டுக்கு அடியாள் வேலை செய்த கிரிமினல் போலீசு மற்றும் படுகொலைக்குத் துணை நின்ற மாவட்ட ஆட்சியர், துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை பிறப்பித்த தாசில்தார், ஆட்சியாளர்கள் அனைவரையும் நிபந்தனை இன்றி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற தற்காலிக தீர்வில் தொடங்கி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும், தூத்துக்குடியின் உப்பு காற்றை மாற்றி விஷக் காற்றாக வீசச் செய்த கொடூரத்திற்கு உரிய தண்டனையை குற்றம் இழைத்தவர்கள் அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வரை தொடர்ந்து தூத்துக்குடி மக்களின் போராட்டத்துடன் துணை நிற்போம்.

கார்ப்பரேட்டுகளின் பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து மக்களை திரட்டி போராடி வீழ்த்துவோம்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here