நீதித்துறையில் நிலவும் சீரற்ற தன்மை – இரு வேறு வகையான தீர்ப்புகள்!

மீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் இரு வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆராய்ந்து பார்ப்போம். முதல் வழக்கு 2002 ஆம் ஆண்டு குஜராத்தில், இந்துமத வெறியர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் போது, 68 பேரோடு எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி அவர்களால் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் சென்ற மாதம் ஜூன் 24 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாவது வழக்கு, முகமது நபி குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்தால் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாஜக – வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, தனக்கெதிராக பல்வேறு மாநிலங்களில் போடப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றச் சொல்லி தொடுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 1 அன்று வழங்கப்பட்டது.

ஜாகியா ஜாஃப்ரி வழக்கின் தீர்ப்பு:

குஜராத் கலவரத்துக்கு பின்னால் வகுக்கப்பட்ட சதித்திட்டத்தில் மோடிக்கும் பங்குண்டு, அவரையும் விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு, மோடி உள்ளிட்ட 58 பேர் நிரபராதிகள் என்றும், அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 307 பக்க அளவிலான தீர்ப்பில் தனது பெயரை குறிப்பிடாத நீதிபதி உதிர்த்துள்ள ‘முத்தான’ கருத்துகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

“குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் வசதியாக அமர்ந்து ‘நீதியைத் தேடும் கதாநாயகர்கள்’ இது போன்ற பயங்கரமான சூழலில் அரசு நிர்வாகத்தின் தோல்விகளை இணைப்பதில் வெற்றி பெற நினைக்கலாம். இத்தகைய ‘நீதிக்கான வேட்கையின் கதாநாயகர்களின்’ மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அது எப்படி அவர்களைத் தவறாக வழி நடத்தியது என்பதையும் இந்த நீதிமன்றம் அறிந்திருக்கிறது.”

“மேல்முறையீடு செய்பவர் வெளிப்படையாக யாரோ ஒருவரின் ஆணையின் கீழ் செயல்படுகிறார் என்று நீதிமன்றத்திற்கு தெரியும். இந்த உண்மையை வெளிப்படையாக இந்த மாண்புமிகு நீதிமன்றம் விளக்க வேண்டிய அவசியமில்லை”

இதையும் படிக்க: குஜராத் படுகொலை! நீதிக்காக போராடிய வழக்கறிஞர் தீஸ்தா, டி.ஜிபி சிறீகுமார் கைது ! காவி பாசிசத்தின் பிடியில் நீதித்துறை !

” புதிய நபர்களை குற்றவாளிகளாக குறிப்பிடுவதோடு, இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல என வலியுறுத்தும் தைரியம் மேல்முறையீட்டாளருக்கு உள்ளது. மேலும் அவர் பிற வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்தும் மறைமுகமாக கேள்வி எழுப்புகிறார்”

” இந்த வழக்கு முழுவதிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாகவே நமக்கு தோன்றுகிறது. அந்த பொய்கள் அனைத்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரின் விசாரணை முடிவில் அம்பலமாகியுள்ளது.”

“இந்த வழக்கு அனைத்திலும் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேர்மையுடனும், சீரிய நோக்குடனும், எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் இந்த மிகப்பெரிய பணியை செய்து முடித்து, இந்த நீதிமன்றத்தை திருப்திப்படுத்தியுள்ளனர். ஆனால் மேல்முறையீட்டாளரின் வாதமானது, புலனாய்வுக் குழு உறுப்பினர்களின் பொறுப்பையும் நேர்மையையும் குறை மதிப்பீடு செய்வதாக உள்ளது. சவாலான சூழலில் சிறப்புப் புலனாய்வு குழுவினர் செய்த அயராத பணியை நாங்கள் பாராட்டுகிறோம்.”

“இந்த மேல்முறையீடு தகுதியற்றது என நாங்கள் கருதுவதால் இதை தள்ளுபடி செய்கிறோம்” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், “யாரோ ஒருவரின் கட்டளையின் கீழ் மனுதாரர் இப்படி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது. இந்த மேல்முறையீட்டு மனுவின் கணிசமான பக்கங்கள் பொய்யால் நிரம்பியதாக கண்டறியப் பட்டுள்ளது. இத்தகைய முறைகேடான புகாரளித்துள்ள அனைவரும் சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என வழக்கு தொடுத்தவர்களுக்கே தண்டனை வழங்கி ‘வரலாற்று சிறப்புமிக்க’ தீர்ப்பு வழங்கியுள்ளனர். மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள், சமர்பிக்கப்பட்ட ஆதாரங்கள் எதையும் கணக்கில் எடுக்காமல் ஒரு முன்முடிவின்படி இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்புதான் இப்படியென்றால், இந்த தீர்ப்பு வழங்கிய விதம் நாட்டின் உச்சபட்ச நீதித்துறையின் பாரம்பரியம் குறித்த கேள்வியை கூடவே எழுப்ப வைக்கிறது. பொதுவாக உயர் / உச்ச நீதிமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கினால், உண்மையில் அந்த தீர்ப்பை எழுதும் நீதிபதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். முதல் முறையாக இந்த பாரம்பரிய மரபானது 2009 நவம்பர் 9 அன்று வழங்கப்பட்ட அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் மீறப்பட்டது. ஐந்து நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயர் வெளியாக வில்லை. அதேபோல இப்போதைய இந்த வழக்கின் தீர்ப்பில் இரண்டாவது முறையாக இந்த நீதிமன்ற விதிமீறல் நடந்துள்ளது.

N.V. ஷர்மா (நுபுர் ஷர்மா) வழக்கில் நீதிமன்ற உத்தரவு:


வ்வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய முதல் கேள்வி,” ஏன் இங்கு அவர் ஏமாற்றும் வகையில் வேறு பெயரை பதிவு செய்துள்ளார்?” என்பதே. அதற்கு நுபுர் சர்மாவின் வழக்கறிஞர் “அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்றார். இந்த கேள்வியில் தொடங்கி அடுத்தடுத்து பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளையும், கருத்துக்களையும் அடுக்கடுக்காக நீதிமன்றம் தொடுத்தது. “அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா அல்லது அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி விட்டாரா?” “நாடுமுழுவதும் உணர்ச்சியை தூண்டி விட்டு, இப்பொழுது நடப்பவை அனைத்துக்கும் அந்தப் பெண்மணிதானே பொறுப்பேற்க வேண்டும்?” ” இவ்வளவையும் செய்துவிட்டு தான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் கூறியது வெட்கக்கேடானது. அவர் இந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” “நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது அது குறித்த விவாதம் தொலைக்காட்சியில் ஏன் நிகழ்த்தப்பட்டது?”.. “அவரது கருத்துக்கள் அவரது பிடிவாதமான மற்றும் திமிர் பிடித்த தன்மையைக் காட்டுகின்றன.” “மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு நடந்தால் அங்கு செல்ல வேண்டியதுதானே?” “அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால், நாட்டின் சட்டத்தை மதிக்காமல் எப்படியும் பேசலாம், அறிக்கை விடலாம், அதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என நினைக்கிறாரா?”

நுபுர் சர்மாவின் வழக்கறிஞர், “தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள் அப்படி ஒரு கேள்வியை கேட்டதற்கு பதிலாக தான் இப்படி மனுதாரர் கூறினார்” என்றவுடன் அதிரடியாக “அப்படியானால் நிகழ்ச்சி நடத்தியவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்” என்றது நீதிமன்றம். பேச்சுரிமை பற்றி மனுதாரரின் வக்கீல் பேசியதற்கு, “ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு. புல் வளர உரிமை இருப்பதைப் போல, கழுதை அதை மேயவும் உரிமை உண்டு” என பதிலளித்தது நீதிமன்றம். வழக்கறிஞர், பத்திரிகை சுதந்திரம் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்த அர்னாப் கோஸ்வாமியின் வழக்கின் தீர்ப்பில் சில பகுதிகளை வாசித்தார். அதற்கு நீதிமன்றம்,. நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் வகையில் சட்டத்தின் கொள்கை என்று எதுவுமில்லை என்று பதிலடி கொடுத்தது.

மேற்கூறிய தீர்ப்பில் ஒரே வழக்குக்காக பல FIR பதியப்பட்டது குறித்து வழக்கறிஞர் தெரிவித்தார். “ஊடகவியலாளரின் சுதந்திரத்தை தொலைக்காட்சியில் ஒரு கருத்தை தெரிவித்து நாடு முழுவதும் உணர்ச்சிகளை தூண்டும் அரசியல் செய்தித் தொடர்பாளரின் சுதந்திரத்தோடு ஒப்பிட முடியாது” என்றது நீதிமன்றம். சளைக்காத வக்கீல், மேலும் ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி, சதிந்தேர் சிங் என்பவர் பத்திரிக்கையாளர் அல்ல, அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு எதிரான பல FIR – கள் ஒன்றாக இணைக்கப்பட்டன என்றார். மேலும், இந்த நீதிமன்றம் பல FIR- களுக்கு ஒரு அளவுகோலை வகுத்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.


இதையும் படியுங்கள்: நுபுர் சர்மாவுக்கு ஒரு நீதி! தீஸ்தாவுக்கு ஒரு நீதி!. இதுதாண்டா பார்ப்பன மனுநீதி!


 

இதற்கு, “நீங்கள் யார் மீதாவது ஒரு FIR பதிவு செய்தால், உடனே அவர்கள் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை கைது செய்யப் படவில்லையே, இது உங்கள் செல்வாக்கைதானே காட்டுகிறது?” என காட்டமாக கேள்வி எழுபிய நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தின் மனசாட்சி திருப்தியடையவில்லை எனும்போது சட்டத்தை அதற்கேற்ப மாற்றியமைக்க முடியும் என தெரிவித்தனர். அப்படியானால் நான் மனுவை வாபஸ் பெறுகிறேன் என்று பின்வாங்கினார் வக்கீல். இவ்வளவு நீண்ட விவாதத்திற்குப் பிறகு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, “மனுதாரருக்கான கற்றறிந்த மூத்த வழக்கறிஞர் சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய மாற்று வழிகளைப் பெறும் சுதந்திரத்துடன் தற்போதைய ரிட் மனுவை திரும்பப் பெற அனுமதி கோருகிறார். ரிட் மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது.” ஜாஃப்ரி வழக்குடன் ஒப்பிடும்போது, ஆளும் பாஜக- வுக்கு எதிராக அரிதினும் அரிதாக இப்படியான உத்தரவுகள் வந்ததுதான் இந்த தீர்ப்பின் சிறப்பு.

மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளும் நீதிமன்றத்தின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகளை கொண்டிருக்கின்றன. அரசியல் தலையீடுகள் உள்ள வழக்குகளை கையாள்வதில் நீதித்துறை தயக்கம் காட்டுவது புதிதல்ல. எனினும், இதற்கு எதிராக 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மிக சமீபத்தில் கூட ஜுலை 1 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா இது குறித்து பேசியுள்ளார்.


இதையும் படியுங்கள்: சிஸ்டம் சரியில்லை! என் வி ரமணா தலைமை நீதிபதி.


 

சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்திய அமெரிக்கர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பேசும்போது, சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அரசியலமைப்பால் ஒதுக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை நாங்கள் இன்னும் முழுமையாக கடைபிடிக்க கற்றுக் கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நீதித்துறையின் அங்கீகாரம் கிடைக்கும் என்று அதிகாரத்தில் உள்ள கட்சி நம்புகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளையும் காரணங்களையும் நீதித்துறையும் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே சரியான புரிதல் இல்லாத நிலையில் அனைத்து செயல்களையும் பற்றிய தவறான சிந்தனை செழித்து வளர்கிறது. பொதுமக்களிடையே வலுவாக வேரூன்றியுள்ள அறியாமைதான் நாட்டின் சுதந்திரமான உறுப்பை சீர்குலைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இத்தகைய சக்திகளுக்கு உதவி வருகிறது என தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் நீதித்துறை என்பது, அரசியலமைப்பு மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே பதில் அளிக்கக் கடமைப் பட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பாத்திரங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப வேண்டிய தேவை நமக்கு உள்ளது. ஜனநாயகம் என்பது பங்கேற்பதில் தான் அடங்கியுள்ளது என்று விரிவாக விளக்கினார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், ராஜஸ்தானில் 16/7 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றிய சட்ட அமைச்சரின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அவர், நமக்கு முன் இருக்கும் சவால்கள் மிகப்பெரியவை. நமது குற்றவியல் நீதி அமைப்பில் தண்டனை என்பது மட்டுமே செயல்முறையாக உள்ளது. அவசர மற்றும் கண்மூடித்தனமான கைதுகளில் தொடங்கி ஜாமீன் பெறுவதில் உள்ள சிரமம் வரை விசாரணை கைதிகளை நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கும் இன்றைய நடைமுறையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி தனது வார்த்தைகளை செயலாக மாற்றுவாரா அல்லது நமக்கெதற்கு வம்பு என பேச்சோடு நிறுத்திக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி செயலில் இறங்கினால், ஒருவேளை அவர் சிக்கலை சந்திக்கலாம். எனினும் நாட்டை ஆளும் காவி பாசிஸ்டுகளை எதிர் கொள்ள வேண்டுமெனில், இது போன்ற ஜனநாயகத்துக்கான குரல்கள் பெருமளவில் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.

செய்தி மூலம்:

https://m.thewire.in/article/law/zakia-jafri-nupur-sharma-judgments-contrast

தமிழில் ஆக்கம்: குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here