1919-இல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக்கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரை சுட்டுக் கொன்றார்.

1921ல் காந்தி ‘ஓராண்டிற்குள் சுயாட்சி’ என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 காவலர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின்மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.

தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924-இன் இறுதியில் சசீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர். இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.

இந்தத் தேக்க நிலையில், 1926-இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் ‘நவஜவான் பாரத் சபா’ எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப் பினரால் நிகழ்த்தப்பட்டன. 1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப் பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.

1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிச கருத்துக்களையும், இதர ஐரோப்பிய கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்னணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை ‘நான் நாத்திகன் ஆனது ஏன்?’ எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.

“அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாத புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பது கூட அசாத்தியமென்று தோன்றியது…. எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக்கூடிய ஒருநாள் வரக்கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாகும். ‘கற்றுணர்’ எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது…

”நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம் பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம் பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.

”களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாத தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிச தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாக தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்…

தொடரும்…

முந்தைய பதிவு

விடுதலைப் போரின் வீரமரபு -25 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here