னியார் பள்ளி முதலாளிகள் கல்வி என்பதை கடைச் சரக்காக்கி வியாபாரம் செய்து பல கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள்.

நாமக்கல், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள “பிராய்லர் கோழி” பள்ளிகள் மாடலில் விழுப்புரம் மாவட்டத்திலும் ஏ கே டி, மவுண்ட் பார்க், சக்தி மெட்ரிக் போன்ற பள்ளிகள் உருவாகி வருகின்றன.

மாணவர்களை சமூக சிந்தனையற்ற, சுயநலமிக்க பாசிச உளவியலை போதிக்கும் இத்தகைய தனியார் பள்ளிகள் மற்றும்  அதன் கல்வி கொள்ளையிலிருந்து மாணவர் சமுதாயத்தையும் கல்வியையும் பாதுகாக்க தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குவது தான் ஒரே தீர்வு.

அறம் இணைய இதழ் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் முன்வைக்கும் தீர்வுகளில் எமக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் தனியார் பள்ளி என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் இந்த கட்டுரையை நன்றியுடன் வெளியிடுகிறோம்.

000

குற்றவாளிகளை ஆதரித்த காவல்துறை! கொதித்து எழுந்த மக்கள்!

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது.

அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை.

ஆனால், பொதுவாகவே இது போன்ற பிரச்சினைகளில் சக்தி வாய்ந்த தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே காவல்துறையும், அரசு நிர்வாகமும் பிரச்சினையை அணுகுகிறார்களே அன்றி, சட்டப்படியும், மனித நேயத்துடனும் செயல்படுவதில்லை.

பொதுவாகவே பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் சர்வாதிகாரத்துடனும்,முரட்டுத் தனத்துடனும் தான் செயல்படுகின்றனர் அவர்கள் தங்கள் கல்விச் சுரண்டலை செய்வதற்கு இந்த மூர்க்க முகமுடி அவர்களுக்கு தேவைப்படுகிறது. வெளிப்படை தன்மையற்ற நிர்வாகம், இறுக்கமான நிர்வாக கட்டமைப்பு, ஆசிரியர்களையே அடிமைகளாக நடத்தும் மனோபாவம், கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதும் போக்கு, பெற்றோர்கள் சுலபத்தில் சந்திக்க முடியாத அதிகாரமையமாக தங்களை நிலை நிறுத்தும் போக்கு ஆகியவை…பொதுமக்களின் சப்கான்ஸியஸ் உணர்வில் நீண்ட நாட்களாக வெளிப்படாத கோபமாக புதைந்து இருந்துள்ளது. அது வெளிப்படுவதற்கான தக்க தருணமாக மாணவி மரணம் அமைந்துள்ளது. தன் எழுச்சிமிக்க இந்த அறச் சீற்றத்தின் பின்னணியில் அந்தப் பள்ளியின் கடந்த கால கசப்பான பல குற்றப் பின்னணி நிறையவே இருக்க வாய்ப்பு உள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவி மர்மமான முறையில் 12 ஆம் தேதி இரவு இறந்துள்ளார். அது 13 ஆம் தேதி தான் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெற்றோரிடம் முன்னுக்கு பின் முரணாக நிர்வாகத் தரப்பில் சொன்ன பொய்கள் வந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளன!

பெற்றோர் பள்ளி நிர்வாகிகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த மாணவி சாவுக்கு காரணமான ஆசிரியையையிடம் உண்மை என்னவென்பதை பேசவும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. சக மாணவிகளிடம் பேசவும் மறுக்கப்பட்டு உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறை முற்றிலும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக நின்று உரிய விசாரணையை நடத்தாமல் பள்ளி நிர்வாகத்தின் பக்கம் நின்றது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

இந்தப் பள்ளி மாணவியின் மரணம் குறித்து நான்கு நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்த போதும் மெயின் ஸ்டிரீம் மீடியாக்களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பாலிமார் தொலைகாட்சி தவிர வேறு முக்கிய ஊடகங்கள் மவுனம் சாதித்தது ஏன் என்பது விளங்கவில்லை. சமூக ஊடகங்களில் இது பெரும் விவாத பொருள் ஆனபிறகு தான் முக்கிய ஊடகங்கள் இந்த செய்தியை தவிர்க்க முடியாமல் போட முன் வந்தன என்பது கவனத்திற்கு உரியது. எனில், இந்தப் பள்ளியின் செல்வாக்கு எத்தகையதாக இருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி உதயநிதி பின்பாக சுற்றுவதற்கு தான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். இது போன்ற விவகாரங்களில் உடனடியாக கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பள்ளிக் கல்விதுறை சார்பில் இந்த பள்ளியிடம் என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது…?

மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் சரி, கொலை செய்யப்பட்டு இருந்தாலும் சரி இதற்கு நிர்வாகம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். விசாரிக்காமலே சென்னையில் இருந்து கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிர்வாகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை எப்படி புரிந்து கொள்வது. ”பள்ளி நிர்வாகம் மீது எந்தத் தவறும் இல்லை” என அவரது கருத்து மீடியாக்களில் பரவிய போது தான் மக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்றனர். குறிப்பாக தந்தி டிவி இவ்வாறு செய்தி சொன்ன போது, அது மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! தமிழக காவல்துறையின் தலைமை பதவிக்கு முற்றிலும் தகுதியற்ற ஒரு நபர் தான் தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் பிடிவாதமாக இருப்பதன் விளைவை இன்னும் நிறைய அனுபவிப்பார்! நாமும் அனுபவித்தே ஆக வேண்டும்.

இதையும் படியுங்கள்: தமிழக அரசே, வன்முறை தீ வைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனே விடுதலை செய்!

இதற்கிடையே கொடைக்கானல் அருகே பாச்சலூர் என்ற சிற்றூரில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மைதானத்திலேயே எரித்து கொல்லப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. இதன் முழு பரிமாணம் தெரியவில்லை. எதுவும் மக்கள் போராட்டமாக வெடித்தால் தான் மெயின்ஸ்டீரிம் ஊடகங்களும், அரசு நிர்வாகமும் திரும்பி பார்க்குமோ என்னவோ..? இது குறித்த உண்மைகள் முறையாக வெளியானால் மட்டுமே மேற்கொண்டு தெரிய வரும்.

மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை கண்டறிய சி.பி.சிஐடிவிசாரணை வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையாவது ஏற்கப்பட்டு இருந்தால் கலவரம் இந்த அளவுக்கு போய் இருக்காது.

பொதுமக்களின் கோபம் விஸ்வரூபம் எடுக்கும் வரை தமிழக உளவுத்துறை தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறதே! மாணவியின் உடலை வாங்க மறுத்து பொது மக்கள் தீவிரம் காட்டும் போதாவது சுதாரித்து, அரசு நிர்வாகம் தன்னை நேர்படுத்திக் கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க முன் வந்திருக்கலாமே! மாணவியின் தாயார் கதறிய வீடியோ பதிவு வைரலான போது கூட அசைந்து கொடுக்கவில்லையே!

நடைபெற்றதை வெறும் வன்முறை கண்ணோட்டத்துடன் மட்டுமே அணுகுவது பாசிச நிர்வாக அணுகுமுறையாகத் தான் இருக்கும். ”ஒரு அநீதியை அரசு நிர்வாகம் தட்டிக் கேட்காது, தண்டிக்காது என்ற எண்ணத்திற்கு மக்கள் வந்ததன் விளைவு தான் அறச் சீற்றமாக வெடித்துள்ளது” என்ற படிப்பினையை ஆட்சியாளர்கள் பெறுவார்களா?

”மூன்று நாட்களுக்கும் மேலாக  சாம்பலுக்குள் புதைந்து இருக்கும் நெருப்பு போல விஷயத்தை அப்படியே வைத்திருந்தவர்கள் தான் இன்றைய கலவரத்தின் சூத்திரிதாரிகள்” என மூத்த பத்திரிகையாளர் சேதுராமன் சரியாகவே கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களை அணுகும் விதத்தில் ஆசிரியர்களும் தங்களை முதிர்ச்சியானவர்களாக தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

  • சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here